ஹெல்த்
Published:Updated:

டாக்டர் நியூஸ்!

டாக்டர் நியூஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
டாக்டர் நியூஸ்!

டாக்டர் நியூஸ்!

டாக்டர் நியூஸ்!

தியானம் செய்வதால் பல நன்மைகள் உண்டு என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். ஆன்மிகரீதியில் இல்லாவிட்டாலும், உடல்நலத்துக்காகவேனும் தினமும் தியானம் செய்யப் பரிந்துரைக்கிறார்கள். ஆனால், அதெல்லாம் மிகுந்த முனைப்பெடுத்துக் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயமில்லையா? தியானம் என்று உட்கார்ந்தால் நம் எண்ணங்கள் எங்கெங்கோ ஓடுகின்றன. பல வாரங்கள், பல மாதங்கள் முயற்சிசெய்து மனத்தைக் கட்டுப்படுத்தப் பழகினால்தானே நன்மைகள் கிடைக்கும்?

அப்படியெல்லாம் நினைத்துத் தயங்கவேண்டிய தில்லையாம். ஒரே ஒருமணிநேரம் தியானம் செய்தாலும் நன்மையுண்டு என்கிறது ஒரு சமீபத்திய ஆராய்ச்சி. மிச்சிகன் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தப்பட்டுள்ள இந்த ஆராய்ச்சியில், பதற்றக்குறைபாடு உள்ள பலரைத் தியானம் செய்யவைத்து, அதனால் அவர்களிடம் என்ன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்று கவனித்திருக்கிறார்கள். ஒருமணிநேரத் தியானத்தின்மூலம் அவர்களுடைய இதயத்திற்கும் மனநலத்துக்கும் மிகுந்த நன்மைகள் கிடைத்திருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். தியானம் செய்து ஒருவாரத்துக்குப் பிறகும், அவர்களுடைய பதற்ற அளவு கணிசமாகக் குறைந்திருந்ததாம்.

டாக்டர் நியூஸ்!

ஒருநாள் தியானத்திலேயே இத்தனை நன்மையென்றால், தொடர்ந்து தியானம் செய்தால் இன்னும் நல்ல பலன்கள் இருக்கும் என்று வலியுறுத்துகிறது இந்த ஆராய்ச்சி!

நீரிழிவுப் பிரச்னை கொண்டவர்கள் தங்களுடைய ரத்தத்தில் சர்க்கரை அளவை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டியிருக்கும். இதற்காக உடலில் ஊசி குத்தி ரத்தத்தை எடுக்கவேண்டியிருக்கிறது.
வலிமிகுந்த இந்தப் பரிசோதனைக்கு ஒரு மாற்று வந்திருக்கிறது. மனித உடலில் ஒட்டக்கூடிய ஒரு பட்டையைக்கொண்டு ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கண்டறியும் நுட்பத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கிறார்கள்.

இங்கிலாந்திலுள்ள பாத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கும் இந்தப் பட்டை, தோலில் துளையிடுவதில்லை, ரத்தத்தை உறிஞ்சுவதில்லை, அதற்குப் பதிலாக, மயிர்க்கால் செல்களுக்கிடையே இருக்கும் திரவத்திலிருந்து சர்க்கரையை அளவிடுகிறது. இந்த அளவு, ரத்தப் பரிசோதனைக்கு இணையான துல்லியத்துடன் உள்ளது.

இன்னொரு நன்மை, இந்தப் பட்டையை ஒருமுறை ஒட்டிவிட்டால் போதும், அடுத்த பலமணி நேரத்துக்கு ரத்தச் சர்க்கரை அளவைக் காணலாம். வருங்காலத்தில், இந்தப் பட்டையில் கூடுதல் நுட்பங்களைச் சேர்த்துச் சர்க்கரை அளவை நேரடியாக ஸ்மார்ட்போனுக்கோ மருத்துவருக்கோ அனுப்பலாம், பிரச்னைகளை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கலாம்.

லகெங்கும் பலவிதமான விவசாயப்பொருள்களின் உற்பத்தியின்போது பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்படுகின்றன. இந்த ரசாயனங்களால் வேறு பின்விளைவுகள் ஏற்படலாம் என்பது தெரிந்தபோதும் பலர் இதனைப் பயன்படுத்திவருகிறார்கள். இப்படி விளைவிக்கப்பட்ட பொருள்களை வாங்குகிறவர்களுக்கும் வேறுவழியில்லை, தங்களால் இயன்றவரை அவற்றைச் சுத்தப்படுத்திப் பயன்படுத்துகிறார்கள்.

இப்படி ரசாயனப் பொருள்களின் பயன்பாட்டால் அதிகம் பாதிக்கப்படும் பொருள்களை ‘Dirty Dozen’ என்ற பெயரில் பட்டியலிடுகிறது EWG (Environmental Working Group) அமைப்பு. அந்தப் பட்டியலில் இந்த ஆண்டு இடம்பெற்றுள்ள பொருள்களில் சில: ஸ்ட்ராபெர்ரி, ஆப்பிள், திராட்சை, பீச், செர்ரி, பேரிக்காய், தக்காளி, செலரி, உருளைக்கிழங்கு.

தூய்மையற்றவற்றைச் சொன்னால் போதுமா? தூய்மையானவற்றையும் சொல்ல வேண்டாமா? இவர்களே வெளியிடும் Clean Fifteen, அதாவது, குறைந்த ரசாயனங்களைக் கொண்ட பொருள்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள சில: அவகேடோ, ஸ்வீட் கார்ன், கத்தரிக்காய், கிவி, காலிஃப்ளவர், புரோகோலி.

நெடுநேரம் உட்கார்ந்துகொண்டே வேலைசெய்தால் என்ன ஆகும்?

உடல் எடைபோடும், வேறுபல பிரச்னைகள் வரும், இது எல்லாருக்கும் தெரியுமே! ஆனால், பலருக்கும் தெரியாத ஒரு புதுத் தகவலைக் கண்டறிந்திருக்கிறது சமீபத்திய ஆராய்ச்சியொன்று: நெடுநேரம் உட்கார்ந்து வேலை பார்க்கிறவர்களின் மூளையில் குறிப்பிட்ட சில பகுதிகள் மெலிந்துவிடுகின்றன. அதனால் அவர்களுடைய நினைவுத்திறனும் கற்கும் ஆற்றலும் பாதிக்கப்படலாம்.

UCLAவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் நிகழ்த்தியுள்ள இந்த ஆராய்ச்சியில், தினமும் உட்கார்ந்துகொண்டே வேலை செய்கிறவர்களுடைய மூளையிலுள்ள Temporal Lobe பகுதி, அதிகம் எழுந்து நடமாடுகிறவர்களுடைய மூளையைவிட அதிகம் மெலிந்திருப்பது தெரியவந்துள்ளது. சரியாகச் சொல்வதென்றால், ஒருவர் 1 மணிநேரம் அதிகம் உட்கார்ந்து வேலைசெய்கிறார் என்றால், இந்தப் பகுதி சுமார் 2% மெலிந்துவிடுகிறதாம். 5 மணிநேரம் என்றால் 10%. மூளையைப் பொறுத்தவரை இந்த வித்தியாசம் மிக அதிகமானது, பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கக்கூடியது.

உட்கார்ந்துகொண்டேயிருந்தால் பாதிக்கப்படப்போவது உடல்மட்டுமல்ல, மூளையும்தான். உங்கள் வேலை எதுவானாலும் சரி, அடிக்கடி எழுந்து நடமாடும் வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ளுங்கள், அதனால் உடலும் மெலியும், மூளையும் சுறுசுறுப்பாக இருக்கும்!

ந்தக்காலக் கதைகள், திரைப்படங்களில், கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தங்கள் குழந்தைக்கு ஸ்வெட்டர் பின்னுவதுபோன்ற காட்சியைப் பார்க்கலாம். ‘ஆஹா, இந்தப் பெண்ணுக்குதான் தன் பிள்ளைமீது எவ்வளவு அன்பு!’ என்று வியக்கலாம்.

சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஓர் ஆராய்ச்சியைப்பற்றிக் கேள்விப்படும்போது, அந்த ஸ்வெட்டருக்கு இன்னொரு காரணமும் உண்டோ என்கிற ஐயம் வருகிறது: கைகளைப் பயன்படுத்திச் செய்யக்கூடிய பொழுதுபோக்கு வேலைகள் நம்முடைய உடலுக்கும் உள்ளத்துக்கும் பலவிதமான நன்மைகளைத் தருகின்றனவாம்!

ஆடைகள், அலங்காரப் பொருள்கள், பைகள் போன்றவற்றைப் பின்னுதல், படம் வரைதல், கைவினைப்பொருள்களை உருவாக்குதல், மரவேலைகள், இசைக்கருவிகளை வாசித்தல், அவ்வளவு ஏன், பாத்திரம் தேய்ப்பதுகூட நம்முடைய மூளையில் நல்லவிதமான தாக்கங்களை உண்டாக்குவதாக ஆராய்ந்து கண்டுபிடித்திருக்கிறார் ரிச்மண்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் கெல்லி லாம்பெர்ட். பதற்றமான நேரங்களில், கைகளைப் பயன்படுத்திச் செய்யக்கூடிய இதுபோன்ற வேலைகளில் ஈடுபட்டால் மனநலம் மேம்படும், மகிழ்ச்சி பெருகும் என்கிறார் இவர்.

ரோக்கியமான வாழ்க்கைக்கு உடற்பயிற்சி அவசியம் என்பது தெரியும். ஆனால், அந்த உடற்பயிற்சியிலிருந்து தப்பிக்கப் பல சாக்குப்போக்குகள் இருக்கின்றன: நான் காலையில் அதிகம் தூங்கிவிடுகிறேன், நான் அடிக்கடி வெளியூருக்குச் செல்லவேண்டியிருக்கிறது, எனக்கு வேலை அதிகம், உடற்பயிற்சிக்கூடத்தில் சேருமளவு எனக்கு வசதி இல்லை... இதுபோன்ற காரணங்களையெல்லாம் ஒரு ஸ்மார்ட்போன்மூலம் தீர்த்துவிடலாம் என்கிறது NBC நியூஸ். உடற்பயிற்சிப் பழக்கத்தை எளிதாக்கும் பல மொபைல் அப்ளிகேஷன்களை அலசிப்பார்த்துச் சிறந்தவற்றைத் தொகுத்திருக்கிறார்கள். அவற்றில் சில:

* Aaptiv: இருந்த இடத்திலேயே நம் தேவைக்கேற்ப உடற்பயிற்சிகளைத் தருகிறது

* 7-Minute Workout: வெறும் ஏழே நிமிடங்களில் உடலுக்கு நல்ல வலுவூட்டக்கூடிய உடற்பயிற்சிகளின் தொகுப்பு

* Fitplan: உங்கள் மொபைலில் இருந்தபடியே பயிற்சி தரக்கூடிய virtual trainer

* 30 Day Fitness App: உடற்பயிற்சியைத் தினசரிப் பழக்கமாக்கிக்கொள்ள உதவும்

இப்படி இலவசமாகவும் விலைக்கும் இன்னும் பல அப்ளிகேஷன்கள் இருக்கின்றன. உங்கள் ஸ்மார்ட்ஃபோனின் செயலிக்கடையில் தேடிப்பாருங்கள்.

 - என். ராஜேஷ்வர்