ஹெல்த்
Published:Updated:

கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்
பிரீமியம் ஸ்டோரி
News
கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்

என் தம்பியின் மகனுக்கு 6 வயது. ‘டான்சில்ஸ் பஸ் பாக்கெட்’ (Tonsils Pus Pocket)  என்ற தொண்டைப் பிரச்னை இருக்கிறது. ஆங்கில மருத்துவ முறைகளுக்கு அவனது உடல் ஒத்துழைக்கவில்லை. சித்த மருத்துவத்தில் இதற்குத் தீர்வு இருக்கிறதா? இருந்தால், அதுபற்றிச் சொல்லுங்களேன்.

- ஜெரோலின், மாயவரம்

கன்சல்ட்டிங் ரூம்

‘டான்சில்ஸ் பஸ் பாக்கெட்’ பிரச்னையை சித்த மருத்துவத்தின் மூலம் சரிசெய்யலாம். பாதிக்கப்பட்டவரை நேரில் கண்டு,  உடல்நிலை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அறிந்த பிறகே தேவையான சிகிச்சைகள் மூலம் தீர்வு காண முடியும். பொதுவாக, இந்தப் பிரச்னைக்கு,  வெள்ளைப்பூண்டை இடித்து, தீயில் நன்றாக வாட்டிச் சாறு பிழிந்து அதனுடன் தேன் சேர்த்து பிரச்னை இருக்குமிடத்தில் ஒரு நாளைக்கு இரண்டுமுறை தடவி வரலாம். தினமும் காலை, மாலை, இரவு என மூன்றுவேளை சுடுநீரில் கல் உப்பு சேர்த்துக் கரைத்து வாய் கொப்பளிக்கலாம். சுக்கு, வால்மிளகு, திப்பிலியை வறுத்துப் பொடித்துத் தேன் கலந்து சாப்பிடுவதும் நல்லது. தகுதிவாய்ந்த சித்த மருத்துவரின் ஆலோசனையுடன் குழந்தைக்கு ஆடாதொடை மணப்பாகு கொடுக்கச் சொல்லுங்கள்.

செந்தில் கருணாகரன், சித்த மருத்துவர்.

கன்சல்ட்டிங் ரூம்

கடந்த சில மாதங்களாக, எனக்கு வலது கால் தொடையில் தசைப்பிடிப்பு இருந்தது. இதனால் சில நேரங்களில் தொடைப்பகுதி மரத்துப்போய்விடும். வெந்நீர் ஊற்றுவது, ஒத்தடம் தருவது, எண்ணெய் தேய்ப்பது போன்ற வீட்டு வைத்தியங்களைச் செய்துவந்தேன். இப்போது, மரத்துப்போவது சரியாகிவிட்டது என்றாலும், குடைச்சல் தொடர்கிறது. இது, ‘சியாட்டிக்கா’ பிரச்னையாக இருக்குமோ என்ற பயம் உள்ளது. இது எதனால் ஏற்படுகிறது?

- சரண்யா, நாமக்கல்.


இடுப்பிலிருந்து தொடைக்கு வரும் நரம்பில் அதிக அழுத்தம் ஏற்படுவதால் வரக்கூடிய பிரச்னையே இது. நடக்கவும், நிற்கவும் முடிகிறது என்றால் கவலைப்பட வேண்டாம். நீங்கள் `சியாட்டிக்கா’ பிரச்னையா என்று கேட்டிருக்கிறீர்கள். முதுகு முதல் காலின் பின்பகுதியில் குதிகால் வரை நீளக்கூடிய நரம்பே `சியாட்டிக்கா’. அந்த நரம்பு பாதிக்கப்பட்டால்,  தொடை முதல் பாதம் வரையிலான பகுதி முழுவதும் இழுத்துக் கொள்ளும். ஆனால், உங்களுக்குத் தொடைப்பகுதியில் பிரச்னை இருக்கிறது. எனவே, இது `சியாட்டிக்கா’ பிரச்னையாக இருக்க வாய்ப்பில்லை. சில நேரங்களில் சர்க்கரை நோய்க்கான அறிகுறியாகக்கூட  இருக்கலாம் என்பதால் அதற்கானப் பரிசோதனையைச் செய்து கொள்ளவும். இல்லாதபட்சத்தில், எலும்பு மருத்துவரை அணுகி, ஸ்கேன் எடுத்துக் காலில் வேறு ஏதும் பிரச்னை உள்ளதா என்று தெரிந்து கொள்வது நல்லது.

- மணிமாறன், எலும்பு மருத்துவர்

கன்சல்ட்டிங் ரூம்

எனக்கு, கை கால் மற்றும் முகத்தில் முடி வளர்ச்சி சற்று அதிகமாக இருக்கிறது. 10 நாள்களுக்கு ஒருமுறை பார்லர் சென்று ‘திரெடிங்’ செய்கிறேன். இதற்கு ஹார்மோன் குறைபாடு காரணமா? அதை எப்படிச் சரிசெய்வது?

- வித்யா, அருப்புக்கோட்டை.


ஆண்களைப் போல் பெண்களுக்கும் முடி வளரும் இந்தப் பிரச்னைக்கு,  ‘ஹிர்சுட்டிசம்’ (Hirsutism) என்று பெயர். நீர்க்கட்டி, பரம்பரை வியாதி மற்றும் ஹார்மோன் அதிகமாகச் சுரப்பது  போன்ற காரணங்களால் பெண்களுக்கு இது ஏற்படுகிறது. கருப்பையில் ஏற்படும் நீர்க்கட்டியை முறையான உடற்பயிற்சி, சரியான தூக்கம், சாப்பாட்டு முறைகள் மூலம் கட்டுப்படுத்தலாம். பரம்பரை காரணமாக இருந்தால் மட்டுமே கட்டுப்படுத்துவது சிரமம். ‘டெஸ்டோஸ்டீரோன்’ (Testosterone) ஹார்மோன் அதிகமாகச் சுரப்பதால் இந்தப் பிரச்னை வந்தால், அதைக் கட்டுப்படுத்தும் சிகிச்சைகள் செய்ய வேண்டியிருக்கும். பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் ரத்தப் பரிசோதனை செய்து சரியான காரணத்தை அறிந்துகொள்ள வேண்டும்.

கன்சல்ட்டிங் ரூம்

- ஸ்ருதி சந்திரசேகரன், நாளமில்லா சுரப்பியல் நிபுணர்

உங்கள் கேள்விகளை அனுப்பவேண்டிய முகவரி: கன்சல்ட்டிங் ரூம், டாக்டர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.