Published:Updated:

"தீக்‌ஷா, தக்‌ஷன் இறப்புக்கு டெங்கு மட்டும் காரணமில்ல..!" அப்பா சந்தோஷ்குமார் ஷாக்

மகன் ஒரு பக்கம், மகள் ஒரு பக்கம் என அலைந்தவர்களுக்கு மகளின் இறப்பு பேரதிர்ச்சியாக இருந்தது. மகனையாவது காப்பாற்றிவிட வேண்டுமென்று தவித்திருக்கிறார்கள். ஞாயிறு இரவு முழுக்க தூங்காமல் கிடந்தவர்களுக்கு, திங்கள் விடியாமலேயே இருந்திருக்கலாம். ஆமாம், தக்‌ஷனின் இறப்புச் செய்தியுடன் திங்கள் பொழுது விடிந்தது. 

"தீக்‌ஷா, தக்‌ஷன் இறப்புக்கு டெங்கு மட்டும் காரணமில்ல..!" அப்பா சந்தோஷ்குமார் ஷாக்
"தீக்‌ஷா, தக்‌ஷன் இறப்புக்கு டெங்கு மட்டும் காரணமில்ல..!" அப்பா சந்தோஷ்குமார் ஷாக்

ரணம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சில, வாழ்க்கையின்மீது நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையை வேருடன் பிடுங்கி எறிந்துவிடும். குறிப்பாக, குழந்தைகளின் மரணங்கள்... இயற்கையின் சதி', `விதி' என்றெல்லாம் சொல்லி அவற்றை அவ்வளவு எளிதாகக் கடந்துவிட முடியாது. டெங்கு காரணமாக இறந்த சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்த தீக்‌ஷா, தக்‌ஷன் என்ற இரட்டைக்குழந்தைகளின் மரணம், அந்தக் குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினர்களை மட்டுமின்றி மொத்த தமிழகத்தையும் கலங்கவைத்திருக்கிறது. அதே நேரத்தில், அந்தக் குழந்தைகளின் மரணப் பின்னணியில் நிகழ்ந்த சில விஷயங்களை நாம்  அறிய வேண்டியதும் அவசியம்.

மாதவரம், பொன்னியம்மன் மேடு பகுதியே சோகத்தில் ஆழ்ந்து கிடக்கிறது. குழந்தைகளைப் பறிகொடுத்த வீடு மௌனத்தில் உறைந்துள்ளது. தந்தை சந்தோஷ்குமார் ஓரளவுக்கு மீண்டிருக்கிறார். 

"எல்லாமே கனவு மாதிரியிருக்கும்மா... ரெண்டு பிள்ளைகளும் எழுந்து வீட்டுக்கு வந்து அப்பான்னு கூப்பிட மாட்டாங்களான்னு இருக்கு.  என் மனைவி, ரெண்டு நாளா எதுவுமே சாப்பிடலை... சரியா பேசக்கூட மாட்டேங்குறா. பித்துப்பிடிச்ச மாதிரி இருக்கா. அழுது அழுது, கண்ணீர் விடக்கூட அவ உடம்புல தெம்பில்ல. வீட்டைச் சுத்தி எங்க பார்த்தாலும், பிள்ளைங்க ஓடி ஆடி விளையாடுன தடம்தான் இருக்கு. தீக்‌ஷாவும், தக்‌ஷனும் யூஸ் பண்ணின ஸ்கூல் பேக், லஞ்ச் பாக்ஸ், அவங்களோட  பாடப் புத்தகங்கள், நோட்டு, அவங்க வாங்கிட்டு வந்த சர்ட்டிஃபிகேட் எல்லாம் அலமாரில அப்படியே இருக்கு. ஆனா, புள்ளைக இல்லையே..." - அவரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை.  

அவர்களுக்கு சிகிச்சையளித்த எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை தரப்பிலோ, "அந்தக் குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதித்து, ஐந்து நாள்கள் கழித்து வந்ததால், எவ்வளவோ முயன்றும் பாதிப்பின் தீவிரத்தை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை" என்று கூறியிருந்தார்கள். 

அதுகுறித்து சந்தோஷ்குமாரிடம் கேட்டோம். "காய்ச்சல் வந்தவுடனே குழந்தைங்களை மருத்துவமனைக்கு அழைச்சுக்கிட்டுப் போயிருக்கலாமே... ஏன் காலதாமதம்..?"

மிகவும் ஆதங்கமாகவும் கோபமாகவும் பேசினார் சந்தோஷ்குமார். 

 " 'அஞ்சு நாள் கழிச்சு வந்ததால்தான் குழந்தைங்களைக் காப்பாத்த முடியல'ன்னு ஹாஸ்பிட்டல்ல இருந்து ஒருத்தர் சொன்னதை         டி.வி-யில பார்த்தேன். அதுல துளியளவும் உண்மை இல்லைம்மா; எல்லாம் பொய். வியாழக்கிழமை ராத்திரி தீக்‌ஷாவுக்கு மட்டும் லேசா காய்ச்சல். பதறிப்போய், அப்பவே பக்கத்துல இருக்கிற டாக்டர்கிட்ட காட்டினோம். 'சாதாரண காய்ச்சல்'தான்னு சொல்லி அவர் மாத்திரை கொடுத்தார். ஆனா, மறுநாளும் காய்ச்சல் குறையல. மறுநாள் வேற ஒரு டாக்டரைப் போய்ப் பார்த்தோம். அவர்தான், 'டெங்குவா இருக்க வாய்ப்பிருக்கு'ன்னு சொல்லி பெரம்பூர் பெரியார் நகர் ஆஸ்பத்திரிக்கு எங்களை போகச்சொன்னாரு. அதுவரைக்கும் பையன் நல்லாதான் இருந்தான். வெள்ளிக்கிழமை மதியத்துக்கு மேல, அவனுக்கும் லேசா உடம்பு சூடா இருந்துச்சு. ரெட்டைப் புள்ளைங்களாச்சே... ஒருத்தருக்கு வந்தா இன்னொரு பிள்ளைக்கும் வந்துடுமோங்குற பயத்துல, ரெண்டு புள்ளைங்களுக்கும் டெங்கு டெஸ்ட் பண்ண நானும் என் மனைவியும் முடிவு பண்ணினோம். 

சனிக்கிழமை விடிஞ்சதும், பெரியார் நகர் ஹாஸ்பிட்டல்ல சேர்த்தோம். தீக்‌ஷாவுக்கு டெங்கு காய்ச்சல்தான்னு ரிப்போர்ட் வந்துச்சி. அவங்கதான் எங்களை எக்மோர் குழந்தைங்க ஆஸ்பத்திரிக்கு போகச்சொன்னாங்க. உடனே, எக்மோர் வந்து பிள்ளைகளைச் சேர்த்துட்டோம். எக்மோர் ஆஸ்பத்திரியிலதான் தக்ஷனுக்கும் டெங்கு இருக்கிறது தெரியவந்திச்சி. டாக்டர்கள்கிட்ட கேட்டா, 'தொடக்கநிலைதான்'னு சொன்னாங்க. 'ஒண்ணும் பிரச்னையில்லை'னு அவங்க சொன்னதால ரொம்ப நம்பினோம்.

'தக்க்ஷனுக்கு ஒரு பிரச்னையும் இல்ல, சரியாகிடும்'னு டாக்டருங்க ரொம்ப நம்பிக்கையா சொன்னாங்க. டெங்குன்னு தெரியவந்தப்பகூட, அவனோட பிளேட்லெட்ஸ் எண்ணிக்கையைப் பார்த்துட்டு, 'டிரிப்ஸ் ஏத்துனா போதும்'னு சொன்னாங்க. சனிக்கிழமை முழுக்க தக்‌ஷன் ரொம்ப ஆக்டிவா இருந்தான். ஞாயிற்றுக்கிழமைதான் பிரச்னை. பிளேட்லெட்ஸ் ரொம்ப வேகமா குறைய ஆரம்பிச்சுடுச்சு. ஆனாலும், டிரிப்ஸ் மட்டும்தான் ஏத்தினாங்க. ஒரு கட்டத்துல, டிரிப்ஸை நிறுத்திட்டாங்க. அடுத்த அஞ்சாவது நிமிஷத்துல, எம்புள்ளைக்கு வலிப்பு வர ஆரம்பிச்சுடுச்சு. குளிர்ல நடுங்க ஆரம்பிச்சுட்டாம்மா அவன். அவனோட அந்த நடுக்கம், இன்னமும் என் கண்ணுக்குள்ளயே இருக்கு. பதறிப்போய் டாக்டர்கிட்ட சொன்னதுக்கு, 'காய்ச்சல் அதிகமா இருக்கும்போது டிரிப்ஸ் ஏத்தினா இப்படித்தான் ஆகும். நீங்க ஒண்ணும் பதறாதீங்க'னு சொல்லிட்டாங்க. அடுத்த சில நிமிஷங்கள்ல, எம்புள்ள கோமா ஸ்டேஜுக்குப் போயிட்டான். 

ஒருபக்கம் தக்‌ஷன், இன்னொரு பக்கம் தீக்‌ஷானு ஞாயிற்றுக்கிழமை முழுக்க நாங்க தவிச்ச தவிப்பு எங்களுக்குத்தான் தெரியும். தக்‌ஷன் ஐ.சி.யுல இருக்கும்போது, இந்தப் பக்கம் பொண்ணு எப்படியிருக்கான்னு பார்க்கப்போனேன். அவ ரொம்ப நார்மலாகி, நல்லா பேச ஆரம்பிச்சிருந்தா. அப்போதான் கொஞ்சம் நம்பிக்கை வந்துச்சு. டாக்டருங்களும் 'பொண்ணுக்கு 24 மணி நேரத்துல சரியாகிடும். பையனுக்கு 48 மணி நேரத்துல சரியாகிடும்'னு சொன்னாங்க. ரெண்டு நாள்ல எல்லாம் சரியாகிடும்னு சொன்னதால ரொம்ப நம்புனேம்மா.

ஞாயித்துக்கிழமை ராத்திரி... தீக்‌ஷா ரூம்ல இருந்தேன். 'ஆக்சிஜன் மாஸ்க், மருந்து, மாத்திரைலாம் எனக்கு வேணாம்பா. இங்க ஊசிலாம் போடுறாங்கப்பா, பயமாயிருக்கு. நம்ம வீட்டுக்குப் போகலாம் வாங்கப்பா.  இங்க இருக்க வேண்டாம்'னு சொல்லிட்டே இருந்தா. ஒருகட்டத்துக்கு மேல, 'தம்பி எங்கப்பா'னு கேட்டு அவனைத் தேட ஆரம்பிச்சுட்டா. நானும், அவங்க அம்மாவும்தான் சமாதானப்படுத்தி ஜூஸ் குடிக்க வச்சோம். 'எல்லாம் ரெண்டு நாள்ல சரியாகிடும்டா, நீ ஜூஸ் குடி'னு சொல்லி ரொம்ப கஷ்டப்பட்டு அவளை சமாதானப்படுத்தினேன். அதே நம்பிக்கையோட, அந்த வார்டுல இருந்து வெளிய வந்தேன். பத்து நிமிஷத்துல, என் மனைவிக்கிட்ட இருந்து ஃபோன் வந்துச்சி. 'பொண்ணு ரத்தவாந்தி எடுக்குறா... சீக்கிரம் வாங்க'ன்னு சொன்னதும், அந்த நிமிஷம், என் உயிரே நின்னுடுச்சிம்மா. உள்ள போய் பார்த்தேன்... அதுதான் நான் அவளை உசுரோட கடைசியா பார்த்தது." 

இதற்குமேல் பேச சந்தோஷ்குமாரிடம் வார்த்தைகள் இல்லை. ஞாயிறு அவர்களுக்கு இப்படியாகத்தான் முடிந்தது. 

மகன் ஒரு பக்கம், மகள் ஒரு பக்கம் என அலைந்தவர்களுக்கு மகளின் இறப்பு பேரதிர்ச்சியாக இருந்தது. மகனையாவது காப்பாற்றிவிட வேண்டுமென்று தவித்திருக்கிறார்கள். ஞாயிறு இரவு முழுக்க தூங்காமல் கிடந்தவர்களுக்கு, திங்கள் விடியாமலேயே இருந்திருக்கலாம். ஆமாம், தக்‌ஷனின் இறப்புச் செய்தியுடன் திங்கள் பொழுது விடிந்தது. 

சந்தோஷ்குமாரிடமும், அவரது மனைவியிடமும் எந்தவிதமான நம்பிக்கை வார்த்தைகளைச் சொல்ல..? மனைவி கஜலட்சுமியைக்காட்டிலும் சந்தோஷ்குமார் ஓரளவு இயல்பைப் புரிந்துகொண்டிருக்கிறார். 

வியாழக்கிழமை காய்ச்சல் வருவதற்கு முன், வீட்டருகே உள்ள கோயில் திருவிழாவில் நடனமாடியிருக்கிறாள் தீக்‌ஷா. தக்க்ஷன் ஸ்லோகம் சொல்லியிருக்கிறான். அந்தப் பகுதியில் உள்ளவர்கள், அதையே சொல்லிச் சொல்லி கண்ணீர் வடிக்கிறார்கள்.

"என் புள்ளைகளை நான் இழந்ததுக்கு டெங்கு காரணம்தான். ஆனா அதையும்தாண்டி, ஆஸ்பத்திரியில காட்டுன அலட்சியம்தான் முக்கியக் காரணம். கொஞ்சம் சீரியஸா ட்ரீட்மென்ட் கொடுத்திருந்தா, எம்புள்ளைங்களைக் காப்பாத்தியிருக்கலாம்... அங்க வைத்தியம் பார்த்த ஒரு டாக்டர் என்கிட்ட 'இங்க நான் டாக்டரா, நீங்க டாக்டரா'னு கேட்டாரு... நான் டாக்டர் இல்ல, எம்புள்ளைங்களுக்கு அப்பா. அதனாலதான், மறுபடி மறுபடி எம்புள்ளைங்களுக்கு சரியாகிடுமான்னு அவர்கிட்ட கேட்டேன். எம்புள்ளைங்க சரியாகிடுவாங்கன்னு நம்புனேன். என்னை மாதிரி அங்க நெறைய அப்பாக்கள் இருக்காங்க. தக்‌ஷன், தீக்‌ஷா மாதிரி டெங்குவால பாதிக்கப்பட்ட நிறைய குழந்தைகள் இருக்காங்க. குழந்தைகளுக்கு சிகிச்சை கொடுக்கும்போது அக்கறையோட இருங்க... தயவுசெஞ்சு அலட்சியமா இருக்காதீங்க. இன்னொரு தக்‌ஷனையோ, தீக்‌ஷாவையோ இழந்துடக் கூடாதுன்னுதான் இதைச் சொல்றேன்" என்றார் சந்தோஷ்குமார்.