பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

நீட் முடிவுகள்: உணர்த்துவது என்ன?

நீட் முடிவுகள்: உணர்த்துவது என்ன?
பிரீமியம் ஸ்டோரி
News
நீட் முடிவுகள்: உணர்த்துவது என்ன?

வெ.நீலகண்டன், எஸ்.முத்துகிருஷ்ணன் - ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி

சென்ற ஆண்டு அனிதா என்றால் இந்த ஆண்டு பிரதீபா.தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல பகுதிகளிலும் நீட் தேர்வு முடிவுகளை யொட்டி, தற்கொலைகள் நிகழ்ந்திருக்கின்றன. நீட் தேர்வு என்பது உண்மையில் தகுதியை உறுதிசெய்கிறதா, தாழ்வுமனப்பான்மையையும் ஏற்றத்தாழ்வையும் அதிகரிக்கிறதா?

இந்த ஆண்டு, நாடு முழுவதும் 12,69,922 மாணவர்கள் நீட் தேர்வெழுதினார்கள். 7,14,562 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். தமிழகத்தில் தேர்வெழுதிய  1,14,602 பேரில் 45,336 பேர் தேர்ச்சி பெற்றவர்கள்.  அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 1,337 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். தமிழ் வழியில் தேர்வு எழுதிய 24,720 பேரில் தேர்ச்சி பெற்றவர்கள் 460 பேர்.

நீட் தேர்வைப் பொறுத்தவரை தேர்ச்சி பெற்ற எல்லோருக்கும் இடம் கிடைக்கப் போவதில்லை என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மை. தமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,900 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன.  இவற்றில் 455 இடங்கள் மத்தியத் தொகுப்புக்குத் தரப்பட்டுவிடும். மீதமிருக்கும் 2445 இடங்களும் தமிழக மாணவர்களுக்கே.  

நீட் முடிவுகள்: உணர்த்துவது என்ன?

இங்குள்ள 10 தனியார் மருத்துவக் கல்லூரிகளில்  1300 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இவற்றில் 783 இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும். மீதமிருக்கும் 517 இடங்களை நிர்வாகம் நிரப்பிக்கொள்ளும். அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 100 இடங்களில் 85 இடங்கள் தமிழக மாணவர்களுக்கு; 15 இடங்கள் மத்தியத் தொகுப்புக்கு.  இவைதவிர, 8 நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் உள்ளன.   சித்தா, யுனானி உள்ளிட்ட ஆயுஷ் படிப்புகளும் நீட் தேர்வின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. எல்லாம் சேர்த்து தமிழகத்தில் உள்ள இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் 9,451. ஆனால், இங்கு,  நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பவர்களின் எண்ணிக்கை 45,336.  இவர்களில் சிலர் அகில இந்திய ஒதுக்கீட்டில் இடம்பெறமுடியும். அதிக மதிப்பெண் பெற்ற சிலர், வெளிமாநிலங்களில் உள்ள புகழ்பெற்ற கல்லூரிகளைத் தேர்வு செய்யலாம். எல்லாம் கழித்தாலும் சுமார் 30 ஆயிரம் பேரின் நிலை என்ன, எதிர்காலம் என்னவாகும்? - விடை தெரியாத கேள்விகள் இவை.

தேர்ச்சி பெற்றுள்ள  45,336  பேரில் சரிபாதிப் பேர், ஓராண்டோ,  இரு ஆண்டுகளோ நீட் தேர்வுக்காகத் தனிப்பயிற்சி பெற்றவர்கள் என்கின்றன ஆய்வுகள். தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 70-க்கும் மேற்பட்ட நீட் பயிற்சி மையங்கள் முளைத்திருக்கின்றன. ஆண்டுக்கு 70 ஆயிரம் முதல் 4 லட்சம் வரை பயிற்சிக் கட்டணம் பெறப்படுகிறது.  நீட் தேர்வுக்கான பயிற்சி என்பது வளம் கொழிக்கும் தொழிலாக மாறியிருக்கிறது. 

2017-ல்  நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் 400 பேர் மட்டுமே 400-க்கும் மேல் மதிப்பெண் பெற்றார்கள். இந்த ஆண்டு 800 பேர் பெற்றுள்ளார்கள். அதேநேரம், கேரளாவில்  6,000 பேர் இந்த ஆண்டு 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். இப்படி அதிக மதிப்பெண்கள் பெற்ற அண்டை மாநிலத்தவர்கள்தான் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அகில இந்திய மருத்துவ இடங்களை நிரப்பப்போகிறார்கள்.

தமிழகத்தில் ’தொடுவானம்’ என்ற பெயரில்  அரசு ஒரு போட்டித்தேர்வுப் பயிற்சி மையத்தை நடத்தியது. அதில் படித்த 1,337 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என்று பெருமிதமாக அறிவித்திருக்கிறார் கல்வி அமைச்சர். ஆனால் அதில் ஏகப்பட்ட குளறுபடிகள். 300-க்கும் மேற்பட்ட பயிற்சி மையங்கள் காலதாமதமாகவே தொடங்கப்பட்டன. இரண்டு மாதங்கள் மட்டுமே அவகாசம் இருந்த நிலையில், சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வினாத்தொகுப்புகளை மாணவர்களுக்கு வழங்கினார்கள். மாநிலப் பாடத்திட்டத்தில் தயாரான மாணவர்களுக்கு இது மிகப்பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. எல்லாம் கடந்து 1,337 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்பது பாராட்டப்பட வேண்டியதுதான்.

“தமிழகத்தில் இப்போதும் 60 சதவிகிதக் குழந்தைகள் அரசுப்பள்ளியில்தான் படிக்கிறார்கள். நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த மாணவியின் பெற்றோர் மருத்துவர்கள். பள்ளி நிர்வாகம், தனிப்பயிற்சிக்குப் போக  ஒத்துழைத்திருக்கிறது. பிரதீபாவுக்கு அப்படியல்ல. அவரது அப்பா கொத்தனார். அம்மா தினக்கூலி.    இரண்டு பேருக்கும் ஒரேமாதிரி தேர்வை எப்படி நடத்த முடியும்? கடந்த கல்வியாண்டில், மூன்று லட்சம் பேர் பயாலஜி பிரிவு படித்தார்கள். இவர்களில் அரசுப்பள்ளியில் படித்த ஒருவரோ, இருவரோதான் மருத்துவப் படிப்பில் சேர்கிறார்கள் என்றால் அது எவ்வளவு பெரிய அநீதி?” என்று ஆதங்கமாகக் கேட்கிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.  

ஆனால், “நீட் தேர்வு வருவதற்கு முன்பாகவும் இதே அநீதிதான் நிகழ்ந்தது” என்று சுட்டிக்காட்டுகிறார்கள் வேறுசில கல்வியாளர்கள்.

“கடந்த 10 ஆண்டுகளில், மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்திருக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள் வெறும் 2 சதவிகிதம் தான். பெரிய அளவில் பணம் கட்டி நாமக்கல், கிருஷ்ணகிரி பக்கமிருக்கும் கோழிப்பண்ணைப் பள்ளிகளில் படித்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள்தான் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார்கள்...” என்கிறார் முன்னாள் துணை வேந்தரும் ‘பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்க’த்தின் தலைவருமான முனைவர் வசந்திதேவி.

“அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இம்மாதிரியான நுழைவுத்தேர்வுகள் உண்டு. ஆனால், பிளஸ்டூவில் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள், தனித்திறன்கள், ஆளுமைத்தன்மை என அனைத்தையும் உள்ளடக்கிய தேர்வாகத்தான் அவை இருக்கின்றன. இங்கும் அப்படித்தான் இருக்க வேண்டும். அதேநேரம், நம் பள்ளிக்கல்வி முறையையும் நாம் பரிசீலனை செய்ய வேண்டும். நீட் தேர்வு வருவதற்கு முன்பு வரை, நாமக்கல்,  ஈரோடு, சேலம், தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களே அதிக அளவில் எம்பிபிஎஸ் சேர்ந்துள்ளார்கள். இது எப்படி சாத்தியம்?” என்று கேள்வி எழுப்புகிறார் அவர்.

கல்வியாளர் ‘ஆஹா குரு’  பாலாஜி சம்பத், “நீட் தேர்வைத் தவிர்க்க முடியாது. இனிவரும் காலங்களில் இது மாதிரி நிறைய தேர்வுகள் வரும். நாம் எவ்வளவு காலத்துக்குப் பின்தங்கியிருக்க முடியும்?  இந்த சூழலைப் பயன்படுத்தி நாம் பள்ளிகளைத் தரமுயர்த்த வேண்டும்” என்கிறார்.

 “நவோதயா பள்ளியில் ஒரு பிளஸ் டூ மாணவனுக்கு 73 ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்படுகிறது. தமிழக அரசுப்பள்ளியில் 23,000 ரூபாய் தான் செலவு செய்கிறார்கள். இது சமமானதா? ஒரு மாணவனுக்கு சிறப்பு வாய்ப்புகளையும் இன்னொரு மாணவனுக்கு குறைந்த வாய்ப்புகளையும் தருவது, இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி குற்றம்.   இதை உள்வாங்காமல் இந்தப் பிரச்னையைப் புரிந்துகொள்ள முடியாது” என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

“முன்னர், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்புக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வாங்குவதாகக் குற்றச்சாட்டு இருந்தது. இப்போது, நிகர்நிலைப்பல்கலைக்கழகங்களுக்கு ஆண்டுக்கட்டணமாக 18 லட்சம் முதல் 22.50 லட்சம் என அரசே அறிவித்துவிட்டது.  விடுதிக்கட்டணம், போக்குவரத்துக் கட்டணம் எல்லாம் சேர்த்தால் முன்பு திரைமறைவில் வாங்கியதை விட அதிகமாகும்.  நீட் தேர்வின் விதிமுறைகள், தேர்வுமுறைகள் அனைத்தும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்குச் சாதகமாகவே இருக்கின்றன.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களை தரவரிசைப் பட்டியலில் முன்னிலையில் உள்ளவர்கள் பெற்று விடுவார்கள். ஏழை மாணவர்களுக்கு அரசு ஒதுக்கீட்டில் தனியார்க் கல்லூரிகளில் இடம் கிடைத்தாலும் கூட, எல்லாம் சேர்த்து படிப்பை முடிக்க 40 லட்சத்துக்கு மேல் செலவாகும் என்பதால், யாரும் சேரப்போவதில்லை.  96 மதிப்பெண் பெற்று பார்டரில் தேர்ச்சி பெற்றவர் கூட, பணமிருந்தால் மருத்துவப் படிப்பில் சேர்ந்து மருத்துவராகி விட முடியும். கடந்த ஆண்டு இதுதான் நடந்தது. தனியார் மற்றும் நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகளில் வெறும் 10 சதவிகித இடங்கள் மட்டுமே நிரம்பின. அதனால், 55,000 மாணவர்கள் மீண்டும் கவுன்சிலிங் அழைக்கப்பட்டார்கள். 125 மதிப்பெண் பெற்றவர்கள் கூட மருத்துவப் படிப்பில் சேர்ந்தார்கள். ஆனால் 300  மதிப்பெண் எடுத்த ஏழை மாணவனுக்குப் பணம் இல்லாததால் மருத்துவ வாய்ப்பு பறிபோனது.  பிறகு எப்படி, நீட்தேர்வால் மருத்துவப் படிப்பின் தரம் உயர்ந்ததாகச் சொல்ல முடியும்? முழுக்க முழுக்கப் பணம் படைத்தவர்களுக்கு வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கவே  நீட் தேர்வு கொண்டுவரப்பட்டுள்ளது” என்கிறார் மருத்துவச் செயற்பாட்டாளர் டாக்டர் எழிலன்.

இந்தியாவிலேயே, தமிழகத்தில் தான்  அதிக மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. காமராஜர் தொடங்கி கருணாநிதி, ஜெயலலிதா வரை தமிழகத்தை ஆட்சிசெய்த அத்தனை தலைவர்களும், நம் மாணவர்களுக்காக திட்டமிட்டு மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கினார்கள்.  அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் அரசு சுகாதாரத்துறைக்குள்ளாகவே இருந்தார்கள். அதனால் தான், சுகாதாரத்துறையில், இந்தியாவிலேயே சிறந்த நிலையில் இருக்கிறது தமிழகம். 50 சதவிகிதம் தொற்றுநோய்களைத் தமிழகத்தில் இருந்து விரட்டி விட்டோம். 10 கிராமங்களுக்கு ஒன்று என்ற அடிப்படையில் 1400-க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார மையங்கள் செயல்படுகின்றன.  குழந்தை இறப்பு விகிதம், தாய் இறப்பு விகிதம் குறைந்த மாநிலங்களில் இந்தியாவிலேயே இரண்டாமிடத்தில் இருக்கிறோம். ஆனால் இதையெல்லாம் நீட் நீர்த்துப் போகச் செய்துவிடும் என்கிறார்கள் மருத்துவ செயற்பாட்டாளர்கள்.

“தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில், எம்.டி., எம்.எஸ் போன்ற மருத்துவ முதுநிலைப் படிப்புகளுக்கு 1585 இடங்கள் உள்ளன. எம்பிபிஎஸ் முடித்து, அரசு மருத்துவமனைகளில் சேர்ந்து பணியாற்றும் மருத்துவர்களுக்கு இந்த உயர்படிப்புகளில் 50 சதவிகிதம் ஒதுக்கீடு இருந்தது. கிராமப்புறப் பகுதிகள், மலைக்கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் பணியாற்று வோருக்கு சிறப்பு மதிப்பெண்கள் தரப்பட்டு முன்னுரிமையும் வழங்கப்படும். முன்னுரிமையில் சேர்பவர்கள், குறிப்பிட்ட ஆண்டுகள் அரசு மருத்துவமனையில் பணியாற்றியாக வேண்டும் என்று ஒப்பந்தமும் உண்டு.  இந்த ஒதுக்கீட்டையும், முன்னுரிமையையும் விரும்பி ஏராளமான இளநிலை மருத்துவர்கள் அரசு மருத்துவமனை களுக்குப் பணிக்கு வந்தார்கள்.

இப்போது இந்த ஒதுக்கீட்டை எடுத்துவிட்டார்கள். நீட் தேர்வு மூலம் தான் இந்த இடங்கள் நிரப்பப்படும். இனிமேல், எம்பிபிஎஸ் முடிக்கும் ஒரு மருத்துவர், அரசு மருத்துவமனைக்குப் பணிக்கு வரமாட்டார். ஏதேனும் ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை செய்துகொண்டே அவர் நீட் தேர்வுக்குத் தயாராவார்.

டி.எம், எம்.சிஹெச் போன்ற உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் தமிழகத்தில் 192 இடங்கள் உள்ளன. முன்பு இந்த இடங்கள் தமிழக அரசு நடத்தும் நுழைவுத்தேர்வு மூலம் நிரப்பப்பட்டன.  இதிலும் 50 சதவிகித இடங்கள் அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கப்படும். பிற 50 சதவிகித இடங்கள் ’ஓபன் கோட்டா’ மூலம் நிரப்பப்படும். இதனால், சிறுநீரக சிகிச்சை, மூளை சிகிச்சை, இதய சிகிச்சை என சிறப்பு மருத்துவ நிபுணர்கள் நிறையபேர் அரசு மருத்துவமனைகளுக்கு வந்தார்கள். தஞ்சாவூர் மாதிரி ஒரு நகரத்தில் இருக்கிற மருத்துவக் கல்லூரியில், இன்று ரத்தக்குழாய் அறுவை சிகிச்சை போல நுட்பமான சிகிச்சைகள் எல்லாம் செய்ய முடிகிறதென்றால் அதற்குக் காரணம், இந்த வாய்ப்புதான். இந்த உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கான ஒதுக்கீட்டை நீக்கி விட்டார்கள்.  நீட் மூலமாகவே இந்த இடங்களும் நிரப்பப்படும்.

‘தமிழ்நாடு முழுவதும் டயாலிசிஸ் மையங்கள் திறக்க வேண்டும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையங்கள் திறக்க வேண்டும்’ என்றெல்லாம் தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்கிறது. ஆனால், தமிழகத்தில் இருக்கிற உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகள் வெளி மாநிலத்தவர்களுக்குப் போகிறது. இதனால், அடுத்த 15 வருடத்தில் கடும் மருத்துவர் பற்றாக்குறை ஏற்படும். சுகாதாரக் கட்டமைப்பு சரிந்துபோகும்” என்று எச்சரிக்கிறார் சென்னை மருத்துவக் கல்லூரி ரத்தக்குழாய் அறுவைச் சிகிச்சைத்துறை முன்னாள் இயக்குனர் டாக்டர் அமலோற்பவநாதன். 

 தமிழகத்தில்  அரசு மருத்துவக் கல்லூரிகளில் படித்த  51 சதவீதம் மருத்துவர்கள், தமிழக சுகாதாரத்துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்கிறது ஹைதரபாத் ஜவர்கஹால் நேரு பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஓர் ஆய்வு.  நுழைவுத்தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்று எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்த 51 சதவீத மாணவர்கள் இந்தியாவில் இல்லை. வெளிநாடுகளுக்குச் சென்று விட்டார்கள் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. அனிதா போல, பிரதிபா போல அடித்தட்டுக் குடும்பத்தில் பிறந்து வருபவர்கள்தான் தங்கள் மக்களுக்காக சிந்திப்பார்கள். அவர்களைப் போன்றவர்களால்  தான் தமிழகம் சுகாதாரத்துறையில் முன்னிலையில் இருக்கிறது. அவர்களுக்கான வாய்ப்புகள் பறிக்கப்படும்போது தேசத்தின் மருத்துவக் கட்டமைப்பு பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் நியாயமிருக்கிறது.

இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு மாற்றாக,  தேசிய மருத்துவ ஆணையம் என்ற பெயரில் புதிய அமைப்பை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது மத்திய அரசு. இந்த ஆணையம் உருவாக்கப்பட்டால், நீட் தேர்வு சட்டபூர்வமாகிவிடும், மருத்துவப் படிப்பை முடித்தவர்கள், அகில இந்திய அளவில் நடக்கும் உரிமத்தேர்வு ஒன்றை எழுதித் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவராகப் பணியாற்ற முடியும். இது நடைமுறைக்கு வரும்வரை, எம்பிபிஎஸ் படிப்பின் இறுதியாண்டுத் தேர்வையே அகில இந்திய உரிமத் தேர்வாக நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். நீட் தேர்வில் இருந்து விலக்குகோரி தமிழக சட்டமன்றம் ஒருமனதாக உருவாக்கி அனுப்பிய இரண்டு சட்டமசோதாக்களை ஒரு ஆண்டுக்கும் மேலாக உள்துறை அமைச்சகம் கிடப்பில் போட்டுள்ளது. தேசிய மருத்துவ ஆணைய சட்டம் நிறைவேற்றப்படுமானால் இந்த இரண்டு மசோதாக்களும் காலாவதியாகிவிடும். அதற்காகவே, உள்துறை அமைச்சகம் காலதாமதம் செய்கிறது என்று குற்றம் சாட்டுகிறார்கள் மருத்துவச் செயற்பாட்டாளர்கள்.

இந்திய மருத்துவக் கவுன்சிலின்  எதிர்ப்பால் இந்த தேசிய மருத்துவ ஆணைய மசோதா நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. தற்போது நிலைக்குழு அறிக்கையை சமர்ப்பித்துவிட்டது. மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கிவிட்டது. இந்த மசோதாவை எதிர்க்காவிட்டால், நீட் தேர்வு நிரந்தரமாகிவிடும் என்கிறார்கள்.

எல்லாவற்றையும் கவனத்தில் கொண்டு, பிரச்னைகளைத் தீர்க்காவிட்டால், வஞ்சிக்கப்பட்ட மாநிலமாகிவிடும் தமிழகம்.

நீட் முடிவுகள்: உணர்த்துவது என்ன?

முதலில் அனிதா... இப்போது நான்கு உயிர்கள்!

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் இந்த ஆண்டு 4 மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்கள்.  விழுப்புரம் மாவட்டம் பெருவளூர் கிராமத்தைச் சேர்ந்த பிரதீபா  அரசுப்பள்ளியில் 10-ம் வகுப்பு வரை படித்தார். 490 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார்.   அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களைத் தனியார் பள்ளியில் சேர்க்கும் அரசின் திட்டத்தின் மூலம்  கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் +1 சேர்ந்தார். +2-வில் 1125 மதிப்பெண்கள் பெற்றார். கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய பிரதீபா 155 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். ஆனால், அவருக்கு அரசுக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை.

நீட் முடிவுகள்: உணர்த்துவது என்ன?

இந்த ஆண்டு மீண்டும் நீட் தேர்வை எழுதிய பிரதீபா 39 மதிப்பெண்களே பெற்றார். அதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். திருச்சி உத்தமர்சீலி பகுதியைச் சேர்ந்த சுபஸ்ரீயின் அப்பா அரசுப் போக்குவரத்துக்கழகத்தில் ஓட்டுநர். தனியார்ப் பள்ளியில் படித்த சுபஸ்ரீ +2-வில் 907 மதிப்பெண்கள் பெற்றார். நம்பிக்கையோடு நீட் தேர்வு எழுதியவருக்கு, 24 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்தன. இந்த அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஐதராபாத்தைச் சேர்ந்த பிரணவ் மெஹந்திரத்தா, மூன்று முறை நீட் தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறமுடியாத வருத்தத்தில் தனது வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். தெலங்கானா மாநிலம் , கச்சிக்குடாவைச் சேர்ந்த  ஜஸ்லீன் கவுர், நீட் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறாத அழுத்தத்தில் ஒரு வணிக வளாகத்தின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

நீட் முடிவுகள்: உணர்த்துவது என்ன?

ஒரு தேர்வில் தோல்வியடைவது என்பது வாழ்க்கையில் தோல்வியடைவதல்ல. அதனால் மாணவர்கள் தற்கொலை முடிவெடுப்பதைக் கைவிட வேண்டும். அதற்கான போதுமான உளவியல் ஆலோசனைகளைப் பெற்றோர்களும் பள்ளி நிர்வாகமும், முக்கியமாக அரசும் வழங்க வேண்டும்.

நீட் முடிவுகள்: உணர்த்துவது என்ன?

தேர்வில் குழப்பம்

இந்த ஆண்டு நீட் தேர்வு அறிவிக்கப்பட்டதில் இருந்தே கடும் குழப்பம் ஏற்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த  பல மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான், சிக்கிம் மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது. கடைசி நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியானதால் மாணவர்கள் திகைத்து நின்றார்கள். பல்வேறு தரப்பிலிருந்தும் அவர்களுக்கான உதவிகள் கிடைக்க, ஒருவழியாகத் தேர்வில் பங்கேற்றார்கள்.  தமிழ் வழி வினாத்தாளில் இருந்த 180 கேள்விகளில் 49 கேள்விகள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டிருந்தன. மதுரையில் தேர்வெழுதிய தமிழ்வழி மாணவர்களுக்கு இந்தி வினாத்தாள் வழங்கப்பட்டது. நீட் தேர்வை ஒருங்கிணைத்து நடத்திய,  அமெரிக்காவைச் சேர்ந்த ‘புரோ மெட்ரிக் டெஸ்டிங் பிரைவேட் லிமிட்டெட்’  நிறுவனத்தின் கம்ப்யூட்டரில் இருந்து கேள்விகள்  திருடப்பட்டதாக புகார்கள் எழுந்தன.  இது தொடர்பாக  30 டாக்டர்கள், கம்ப்யூட்டர் இன்ஜினீயர்கள், தேர்வு நடத்திய கண்காணிப்பாளர்களிடம் விசாரணை நடந்தது. மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நீட் முடிவுகள்: உணர்த்துவது என்ன?

கட்டணம் எவ்வளவு? (ஓராண்டுக்கு)

அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ்- ரூ.13,600,  பிடிஎஸ்  -ரூ 11,600

சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டு இடத்தில் எம்பிபிஎஸ்- ரூ.3.85 லட்சம், பிடிஎஸ்-   ரூ.2.50 லட்சம்

சுயநிதிக்  கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடத்தில் எம்பிபிஎஸ்- ரூ.12.50 லட்சம், பிடிஎஸ்- ரூ.6 லட்சம்

நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் எம்பிபிஎஸ்- ரூ.18 லட்சம் முதல் 22.50 லட்சம்

இதுதவிர, சுயநிதி மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஓதுக்கீட்டில் சேரும் அனைத்து மாணவர்களும்  விடுதிக் கட்டணம், உணவுக் கட்டணம், பஸ் கட்டணம் உள்பட ஆண்டுக்குப் 10 லட்சம் செலவிட வேண்டியிருக்கும்.