Published:Updated:

'ஏபிசி' ஃபார்முலாவை பின்பற்றினாலே... எய்ட்ஸ் வராமல் தடுக்கலாம்! #WorldAidsDay

"எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சமூகக் கூச்சத்தால் சிகிச்சையைத் தவிர்ப்பது ஒருபுறமிருக்க, இந்த நோய் இருப்பதே தெரியாமல் 20 சதவிகித நோயாளிகள் உலகெங்கும் இருக்கிறார்கள் என்பதும் மறுக்கமுடியாத உண்மையாகும்"

'ஏபிசி' ஃபார்முலாவை பின்பற்றினாலே... எய்ட்ஸ் வராமல் தடுக்கலாம்! #WorldAidsDay
'ஏபிசி' ஃபார்முலாவை பின்பற்றினாலே... எய்ட்ஸ் வராமல் தடுக்கலாம்! #WorldAidsDay

வாழ்க்கையில் எல்லாமே பாசிட்டிவ்வாக இருக்க வேண்டுமென்று நாம் வேண்டிக்கொள்வதுண்டு. ஆனால், ஹெச்.ஐ.வி பரிசோதனை செய்யும்போதுமட்டும் அது பாசிட்டிவ்வாக வந்துவிடக் கூடாது என்பதில் நாம் அதிக கவனமாக இருக்கிறோம். ஹெச்.ஐ.வி என்பது ஒரு வைரஸ். (Human Immunodeficiency Virus). எய்ட்ஸ் என்பது அந்த வைரஸ் மூலம் உண்டாகும் பாதிப்பு மற்றும் நோயாகும். அதைத்தான் `AIDS' (Acquired Immunodeficiency Disease Syndrome)  என்று குறிப்பிடுகிறார்கள். பெரும்பாலும் எய்ட்ஸ் நோயை, ஒழுக்கக்கேடு சார்ந்த ஒரு நோயாக சமூகம் கருதுவதால், எய்ட்ஸ் என்ற பெயரைக் கேட்டதும் முகம் சுழிப்பதும், நோயாளிகளைத் தனிமைப்படுத்துவதும் இயல்பான ஒன்றாகிவிட்டது. எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினால் தனிமைப்படுத்துதலைத் தவிர்க்கவும், சமூகத்தின் பார்வையை மாற்றவும் முடியும் என்பதுடன், எய்ட்ஸ் நோயால் ஏற்படும் உயிரிழப்புகளை பெருமளவில் தவிர்க்க முடியும். ஆகவேதான் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1-ந்தேதி `உலக எய்ட்ஸ் நாள்' அனுசரிக்கப்படுகிறது.

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சமூகக் கூச்சத்தால் சிகிச்சையைத் தவிர்ப்பது ஒருபுறமிருக்க, இந்த நோய் இருப்பதே தெரியாமல் 20 சதவிகித நோயாளிகள் உலகெங்கும் இருக்கிறார்கள் என்பதும் மறுக்கமுடியாத உண்மையாகும். இந்நிலையில் உலக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (UNAIDS) எய்ட்ஸ் நோயால் ஏற்படும் பாதிப்புகளையும், இழப்புகளையும் கட்டுப்படுத்த `90-90-90' என்ற இலக்கை 2020-ம் ஆண்டுக்குள் அடைய வேண்டுமென வலியுறுத்தி வருகிறது.

`ஏபிசி தெரிந்தால் எப்படி எய்ட்ஸ் நோயிலிருந்து தப்பிக்கலாம், அதேபோல் `90-90-90' என்பது என்ன இலக்கு என்பதை அறிந்து கொள்வதற்குமுன், எய்ட்ஸ் நோய் பற்றி தெரிந்து கொள்வோம்.

மனித உடலில் மட்டுமே உயிர்வாழக்கூடியது ஹெச்.ஐ.வி வைரஸ். காற்றில், நீரில், உலர்ந்த ரத்தத்தில், மண்ணில் என அனைத்து இடங்களிலும் சில நிமிடங்களிலேயே அழிந்துவிடும் என்பதால் இது கண்ணீர், வியர்வை, உமிழ்நீர், சளி, கொசுக்கடி மூலம் பரவாது. பெரும்பாலும் (80 சதவிகிதம்) உடலுறவின்போது ஏற்படுகிறது என்றாலும், பரிசோதனை செய்யப்படாத ரத்தம், சுத்திகரிப்பு செய்யப்படாத ஊசிகள் மற்றும் தாயிடமிருந்து சேய்க்கும் இது பரவக்கூடும். 

மேலும் இந்த ஹெச்.ஐ.வி கிருமி, உடலில் நுழைந்ததும் வெள்ளை அணுக்களைப்போல தன்னை உருமாற்றிக் கொள்வதுடன், நோய் எதிர்ப்புக்குக் காரணமாக விளங்கும் வெள்ளை அணுக்களை (CD4) அழிக்கத் தொடங்குகிறது. இதனால் உடலில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைவதுடன் மெள்ள மெள்ள நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. அதாவது, தொடர் காய்ச்சல், பசியின்மை, காரணமில்லாத சோர்வு, இரவில் வியர்வை, தீராத இருமல், தொடர் வயிற்றுப்போக்கு, திடீர் எடை இழப்பு, நாள்பட்ட நிணநீர் சுரப்பிகளின் வீக்கம், சருமத்தில் கரும்பிளவுகள், வாய், நாக்கு மற்றும் பிறப்புறுப்பில் புண் போன்ற பல்வேறு அறிகுறிகளைக் கொண்டது. நோய் எதிர்ப்பு ஆற்றலை நேரடியாகக் குறைப்பதால், நோய் முற்றிய நிலையில் காசநோய், நிமோனியா, சிறுநீரக நோய், நுரையீரல், குடல், தோல் மற்றும் ரத்தப் புற்றுநோய்கள் போன்ற பல்வேறு சந்தர்ப்பவாத நோய்களை உருவாக்கி உயிரிழப்புக்குக் காரணமாக விளங்குகிறது.

பெண்களைக் காட்டிலும் ஆண்களை சற்று அதிகம் பாதிக்கிறது எய்ட்ஸ். இந் நோயால் உலகளவில் இதுவரை, இறந்தவர்களின் எண்ணிக்கை மூன்று கோடிக்கும் அதிகம் என்று சொல்லப்படுகிறது. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 3.7 கோடி. அதிலும் குழந்தைகள் மட்டும் 20 லட்சம் இருக்கலாம் என்கிறது உலக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு. எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையில் மூன்றாம் இடத்தில் உள்ள இந்தியாவில், மணிப்பூர், மிசோரம், நாகலாந்து, தெலங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில், எய்ட்ஸ் நோயின்  தாக்கம் தொடர்ந்து நீடிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும்  தற்போது 21.40 லட்சம் பேர் ஹெச்.ஐ.வி நோயுடன் காணப்படுவதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பான `என்ஏசிஓ' (NACO) கூறுகிறது.

கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இந்தியாவில் 87 ஆயிரத்து 580 புதிய எய்ட்ஸ் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர் என்றும், 69 ஆயிரத்துக்கும் அதிகமான உயிரிழப்புகளை எய்ட்ஸ் நோய் ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுவரை ஹெச்.ஐ.வி நோய்த் தொற்றை, முழுமையாகத் தடுக்கவும், நோயை முற்றிலும் குணப்படுத்தவும் தடுப்பூசி அல்லது தடுப்பு மருந்துகள் எதுவும் இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனாலும், எய்ட்ஸ் நோயுடன் தொடர்புடைய மரணங்கள் கடந்த பத்தாண்டுகளில் பாதியாகக் குறைந்துள்ளதாக விரல்களை உயர்த்துகிறது BMJ என்ற பிரிட்டனின் மருத்துவ ஆய்வுப் பத்திரிக்கை.

தொடக்கக் காலத்தில், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ஆயுள்காலம் 12 ஆண்டுகளைத் தாண்டாது என்ற நிலை இருந்தது. ஆனால் இப்போது தீவிர விழிப்பு உணர்வாலும், தொடர் சிகிச்சையாலும் சராசரி வாழ்க்கையை எய்ட்ஸ் நோயாளிகள் வாழ முடிகிறது. இந்த நிலைக்கு பெரிதும் உதவுவது ART (Anti RetroViral Therapy) என்று அழைக்கப்படும் எய்ட்ஸ் நோய்க்கு எதிரான மருந்துகளாகும். இவை, ஹெச்.ஐ.வி வைரஸ்களின் வளர்ச்சியையும் எண்ணிக்கையையும் வெகுவாகக் குறைப்பதுடன், எய்ட்ஸ் நோயால் ஏற்படும் உயிரிழப்பைப் பெருமளவில் தவிர்க்கும். மேலும், நோயின் வீரியத்தைக் குறைத்து நீண்ட வாழ்க்கையை வாழ உதவுகிறது என்கிறது ஒரு லான்செட் ஆய்வு.

 நமது நாட்டில் 2008-ம் ஆண்டு முதல், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஏஆர்டி (ART) மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. அத்துடன், இதற்கான பரிசோதனைகளும் இலவசமாக மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில்தான், #இலக்கு 90-90-90 என்பது 2020-ம் ஆண்டுக்குள் ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட 90 சதவிகிதம் பேரைக் கண்டறிந்து, கண்டறியப்பட்ட 90 சதவிகிதம் பேருக்கு, `ஏஆர்டி' என்ற தொடர்சிகிச்சையை அளித்து 90 சதவிகிதம் பேரின் நோய்த்தொற்றை ஒடுக்குவது என்ற தொடர் இலக்குகளை, ஒவ்வொரு நாட்டுக்கும் முன் வைத்துள்ளது உலக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு.

ஹெச்.ஐ.வி பாசிட்டிவ் என்றாலும் `ஏஆர்டி' மருந்துகளால், மனிதன் ஒரு பாசிட்டிவ்வான வாழ்க்கையை வாழ முடியும் என்னும்போது, எதற்காக 90-90-90 இலக்கை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு ஏன் நிர்ணயித்துள்ளது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனென்றால் கடந்த 10 வருடங்களில் எய்ட்ஸ் நோயால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைந்தபோதும், உண்மையில் ஹெச்.ஐ.வி கிருமிகள் சமூகம் மற்றும் குடும்பங்களிடையே உழன்று கொண்டேதான் இருக்கிறது. இந்த நோயாளிகளை சமூகம் புறக்கணிப்பதால் வெளியே சொல்லத் தயங்கி 50 சதவிகிதத்துக்கும் குறைவான நோயாளிகள்தான் இந்த மருந்துகளைப் பயன்படுத்துகிறார்கள். அதனால்தான் நோயின் தாக்கம் குறையாமல் இருக்கிறது. மேலும் இந்த விலையுயர்ந்த மருந்துகள் அனைத்தும் இலவசமாக கிடைத்தாலும், அவற்றின் பக்கவிளைவுகள் குறைவாக இருந்தாலும், அவற்றை வாழ்நாள் முழுவதும் முறையாக, தொடர்ச்சியாக உட்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. அதனால் தொடர்ந்து சிகிச்சை பெறாதவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

இவற்றைத் தடுக்கவும், எய்ட்ஸ் நோயை வெளியேற்றி நல்ல வாழ்க்கை வாழவும் `90-90-90' என்ற இலக்கை வலியுறுத்துகிறது, உலக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு. ஜீரோ எய்ட்ஸ், ஜீரோ இறப்புகள், ஜீரோ டிஸ்கிரிமினேஷன் (Zero AIDS, Zero Deaths, Zero Discrimination) என்ற நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இலக்கு `90-90-90' என்பதன் தொடர்ச்சியாக, நமது நாட்டில் கர்ப்ப காலத்தில், ஒவ்வொரு கர்ப்பிணி மற்றும் அவரது கணவருக்கு ஹெச்.ஐ.வி பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஹெச்.ஐ.வி என்டீமிக் எனப்படும் பகுதிகளிலும், ஓரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் பாலியல் தொழிலாளர்களிடமும் `பரிசோதனை செய். உடன் சிகிச்சை செய்' என்ற `பாஸ்ட் டிராக்' (Fast track) கட்டுப்பாட்டு முறைகள் நிர்ணயிக்கப்பட்டு, அவர்களுக்கு `ஏஆர்டி' மருந்துகள் தொடர் கண்காணிப்புடன் வழங்கப்படுகின்றன..

எளிய வாழ்க்கைமுறை மாற்றங்களால் சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் போலவே, எய்ட்ஸ் நோயாளிகளும் தகுந்த சிகிச்சைகள் மூலம் சராசரி வாழ்க்கையை வாழ முடியும் என்றாலும், எய்ட்ஸ் என்ற நோயே வராமல் தடுக்க நல்லொழுக்கம் சார்ந்த  வாழ்க்கைமுறைதான் வழி என்பதை முதலில் சொன்ன `ஏபிசி' சொல்கிறது.

A= Abstain (தவிர்த்தல்)

B= Be faithful (உண்மையாக இருத்தல்)

C= Condomise (தடுப்புறை பயன்படுத்துதல்) 

இதுபோன்ற எளிய `ஏபிசி' (ABC), எய்ட்ஸ் என்ற நோயிலிருந்து காக்கவும், அதன் களங்கத்திலிருந்து தப்பிக்கவும் வழிவகுக்கிறது. ஆம், இந்த `ஏபிசி' நமது எய்ட்ஸ் இல்லா எதிர்காலத்துக்கான இனிய தொடக்கமாக அமையட்டும்!