Published:Updated:

இளைஞர்களைக் குறிவைத்துத் தாக்கும் மனஎழுச்சி நோய்... அறிகுறிகள், சிகிச்சைகள்! #BipolarDisorder

பைபோலர் டிஸ்ஆர்டரால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ஒரு வாரத்திலேயே அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும். மனஎழுச்சி நோய் உள்ளவர்கள் மூன்றாம் நபரிடம் பேசும்போது பிரச்னைகள் உருவாகும்.

இளைஞர்களைக் குறிவைத்துத் தாக்கும் மனஎழுச்சி நோய்... அறிகுறிகள், சிகிச்சைகள்! #BipolarDisorder
இளைஞர்களைக் குறிவைத்துத் தாக்கும் மனஎழுச்சி நோய்... அறிகுறிகள், சிகிச்சைகள்! #BipolarDisorder

ங்களுடைய நட்பு வட்டத்தில் அல்லது நெருக்கமான உறவுகளில் யாரோ ஒருவர் ஒரு கேள்விக்கு பத்து விதமான பதில்களை சொல்வார்கள். ஆனால், நேரிடையான பதில் அவர்களிடம் இருந்து வராது. உங்களை அடுத்த கேள்விக்கு நகர்த்தவே விடமாட்டார்கள். `ப்பா... போதுமடா சாமி' என்று விலகி ஓடிவந்திருப்பீர்கள். இன்னொரு விதமும் உண்டு. பத்துக் கேள்விகள் கேட்டாலும் அவர்கள் ஏதேனும் ஒரு கேள்விக்குத்தான் பதில் சொல்வார்கள். அதுவும் `ஆமாம்.. இல்லை' என்பதில் ஏதோ ஒன்றாக இருக்கும். மேற்கண்ட இருவருமே ஒரே பாதிப்பு உடையவர்கள்தான். அதை மனநல மருத்துவத்தில் `பைபோலர் டிஸ்ஆர்டர்' (Bipolar disorder) என்கிறார்கள்.

சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், `ஒரே விஷயத்தையே திருப்பி திருப்பிப் பேசுவது...அது சார்ந்து மட்டுமே சிந்திப்பது’. 
இயக்குநர் மிஷ்கின் இயக்கிய `யுத்தம் செய்’ படத்தில் கூட லஷ்மி ராமகிருஷ்ணன் பைபோலர் டிஸ்ஆர்டர் நோயால் பாதிக்கப்பட்டவராக நடித்திருப்பார். ``இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் பிரச்னை இல்லை. நோயின் தாக்கம் தீவிரமானால் பல பிரச்னைகளில் போய் முடியும்'' என எச்சரிக்கிறார் மனநல மருத்துவர்  வி.கே.அரவிந்த். 

பைபோலர் டிஸ்ஆர்டர் நோயின் அறிகுறிகள், பாதிப்புகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து இங்கே விளக்குகிறார். 

``பைபோலர் டிஸ்ஆர்டர் என்பதை `இருதுருவ நோய்' என்று குறிப்பிடுவோம். மனஎழுச்சி, மனஅழுத்தம் உள்ளிட்ட இரண்டும் சேர்ந்ததுதான் பைபோலர் டிஸ்ஆர்டர். அதனால்தான், இரு துருவங்கள் என்கிறோம். ஒருவருக்கு அதிகமான சந்தோஷம் ஏற்படும்போது மனஎழுச்சி ஏற்படும். அதேபோல, பல பிரச்னைகளுக்கு ஆளாகும்போது மனஅழுத்தம் உருவாகும்.

அறிகுறிகள்!

பைபோலர் டிஸ்ஆர்டரில் முதன்மையானது மனஎழுச்சி நோய் தான். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தூக்கம் வராமல் அவதிப்படுவார்கள். தெரிந்த நபர்கள், தெரியாத நபர்கள் என்று எந்த பாகுபாடுமின்றி அளவுக்கு அதிகமாகப் பேசுவார்கள். ஒரு கேள்வி கேட்டால் அதற்கு நேரடியாக `ஆம்/இல்லை’ என்று பதில் சொல்லமாட்டார்கள். தலையைச் சுற்றி பதில் சொல்வார்கள். இதை `பிரஷர் ஆஃப் ஸ்பீச் (pressure of speech) என்போம். இப்படியானவர்கள் பதில் சொல்லிய பிறகும் பேச்சை நிறுத்தமாட்டார்கள். அடுத்த கேள்வியைக் கேட்கவும் விடமாட்டார்கள்.

அதிகப்படியான கற்பனைகள், சிந்தனைகளில் மூழ்கியிருப்பார்கள். ஒரு சாதாரண விவசாயிக்கு இந்தப் பாதிப்பு ஏற்படும்போது, அவர் திடீரென்று தனக்கு ஏராளமான நிலங்கள் இருப்பதாகவும், வங்கியில் கோடிக்கணக்கில் பணம் உள்ளதென்றும் கூறுவார். இதை `டெலுயஷன் ஆஃப் கிராண்ட்யோசிட்டி’ (Delusion of grandiosity)  என்று அழைப்போம். இல்லாததை இருப்பது போல நினைத்துக்கொண்டே, யோசித்துக்கொண்டே பல மணி நேரம் இருப்பதால் அவர்களுக்குத் தூக்கமின்மை ஏற்படும். குடும்பத்தில் சண்டனைகளும் சச்சரவுகள் ஏற்படும். தொடர்ச்சியாக, அவர்களால் வேலைகளுக்குச் செல்ல முடியாது. ஒரு கட்டத்தில் தனக்குத்தானே பேசிக்கொள்வதும் சிரித்துக்கொள்ளவும் செய்வார்கள். இவையெல்லாம் மனஎழுச்சி நோய்க்கான அறிகுறிகளாகக் குறிப்பிடலாம்.

இவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும்போது அப்படியே இன்னொரு துருவமான மனஅழுத்தத்தை நோக்கிச் சென்றுவிடுவார்கள். முன்பு அளவுக்கதிகமாக பேசிக்கொண்டிருந்தவர் அப்படியே நேரெதிராக பேசாமல் மௌனமாகிவிடுவார்கள். தனிமையை அதிகம் விரும்புவார்கள். நான்கு கேள்வி கேட்டால், ஒரு கேள்விக்குத்தான் பதில் சொல்வார்கள். அதுவும் `ஆம்/இல்லை’ என்று சுருக்கமாகவே வரும். பயப்படுவார்கள். எதையுமே தன்னால் செய்ய முடியாது என்று நினைப்பார்கள். அலுவலகத்தில் சிறிய பிரச்னையாக இருந்தாலும் அதனால் தன்னுடைய எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் என்றெல்லாம் நினைத்துக்கொண்டு கவலைப்படுவார்கள். ஒரு சிலர் குடும்ப நண்பர்களிடம் விவாதிப்பார்கள். இன்னும் சிலர், எதையும் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள். மனஅழுத்தம் அதிகமாகும்போது அழுவார்கள்.

பாதிப்புகள்!

பைபோலர் டிஸ்ஆர்டரால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ஒரு வாரத்திலேயே அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும். மனஎழுச்சி நோய் உள்ளவர்கள் மூன்றாம் நபரிடம் பேசும்போது பிரச்னைகள் உருவாகும். சில நேரங்களில் கைகலப்பில் கூட அதுபோய் முடிய வாய்ப்புகள் உண்டு.

பெரும்பாலும் ஒரு வாரத்துக்குப் பிறகே சிகிச்சைக்காக மருத்துவரை நாடுவார்கள். சிலர் நோய் முற்றிய நிலையில் வருவார்கள். வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தினாலும் அவர்கள் கேட்க மாட்டார்கள். `நான் நார்மலாகத்தானே இருக்கிறேன்...' என்று சொல்லிவிட்டு, அலுவலகம் கிளம்பிப் போவார்கள். ஆனால், கவனத்தோடு வேலையில் ஈடுபட முடியாமல் தவிப்பார்கள். அவர்களுக்குப் பலவிதமான யோசனைகள், கற்பனைகள் வந்தபடியே இருக்கும்.

இந்தப் பாதிப்பு உள்ளவர்கள், தங்களுடைய மேலதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவார்கள். `இதைச் செய்கிறேன்... அதைச் செய்கிறேன்' என்று, அவர்களுக்குச் சம்பந்தமில்லாத வேலைகளில் எல்லாம் தலையிடுவார்கள். அதிகாரி, 'இவர் இந்தவகையான நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்' என்பதை அறிந்திருக்க மாட்டார். எனவே, நோயினால் பாதிக்கப்பட்டவர் வேலையிழக்கும் அபாயம் கூட நேரிடலாம். ஒரு குடும்பம் ஒருவரை மட்டுமே நம்பியிருக்கும் பட்சத்தில், அவர் இந்த நோயினால் பாதிக்கப்படும்போது, அவருடைய குடும்பம் பொருளாதாரரீதியான நெருக்கடிகளுக்கு ஆளாக நேரிடலாம்.

சிகிச்சைகள்!

பைபோலர் டிஸ்ஆர்டரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரு வகையில் சிகிச்சை அளிக்கலாம். ஒரு வழி, மருந்து, மாத்திரைகள். இரண்டாவது, மனஉளவியல் எனும் கவுன்சலிங் டெக்னிக் மூலமாகச் சிகிச்சை தரலாம். மனஎழுச்சி, மனஅழுத்தத்தின் பாதிப்புக்கு ஏற்றவாறு தேவையான நாள்களுக்கு மருந்துகளை உட்கொள்ள வலியுறுத்துவோம். பாதிப்பு ஏற்பட்டு ஒருவாரத்தில் வருபவர்களுக்கு மாத்திரைகள் தந்து, ஆலோசனைகள் வழங்குவோம்.

அதேபோல, மனஅழுத்தத்தில் சிக்கியிருக்கும் நோயாளிகளுக்கு, சில நேரங்களில் தற்கொலை எண்ணம் கூட வரும். அது ஒரு தீப்பொறி மாதிரி வந்துபோகும். அந்தமாதிரியான நோயாளிகள் எங்களிடம் வந்தால், அவர்களை உள்நோயாளிகளாக வைத்து, சிகிச்சை அளிப்போம். இவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மனநல மருத்துவமனையானது பொது மருத்துவமனை போல இருக்காது. இங்கே, பாதுகாப்பு ஏற்பாடுகள் உரியமுறையில் செய்திருப்பார்கள். அறையில் லாக்கிங் சிஸ்டம் மற்றும் கண்ணாடிகள் இருக்காது. கம்பிப் போட்ட ஜன்னல் அமைத்திருப்பார்கள். அவர்கள் வெளியில் பார்க்கலாம்... ஆனால், குதிக்க முடியாது. அறையில் எந்தவிதமான கூர்மையான பொருள்களும் இருக்காது. அதேபோல, நோயாளியின் பாதுகாப்புக்காக மருத்துவமனையில் பாதுகாவலர்களை நியமித்திருப்பார்கள். 

சில நேரங்களில் நோயாளியின் பாதிப்புக்கு ஏற்றவாறு, இ.சி.பி (Electro convulsive therapy) சிகிச்சை தருவோம். இது ஷாக் ட்ரீட்மெண்ட்தான். ஆனால், நோயாளிகள் இப்படிச் சொன்னால் பயப்படுவார்கள் என்பதால் இ.சி.பி என்று குறிப்பிடுகிறோம். ஒரு நோயாளிக்கு இ.சி.பி தர வேண்டுமானால் சட்ட விதிகளின்படியே செய்ய வேண்டும். இப்படித் தருவதால், எந்தப் பக்கவிளைவுகளும் ஏற்படாது!’’ என்கிறார் அரவிந்த்.