மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாண்புமிகு மருத்துவர்கள்! - டெனிஸ் முக்வெகே

மாண்புமிகு மருத்துவர்கள்! - டெனிஸ் முக்வெகே
பிரீமியம் ஸ்டோரி
News
மாண்புமிகு மருத்துவர்கள்! - டெனிஸ் முக்வெகே

சேவை - 6

“இங்கே பலாத்காரம் என்பது ஓர் ஆயுதமாகப் பிரயோகிக்கப்படுகிறது. ஆண்கள் இந்தக் குற்றத்துக்கு எதிராக எழுந்து நிற்க வேண்டும். குரல் எழுப்ப வேண்டும். இந்தக் குற்றத்தைச் செய்பவர்களிடம், ‘இது தவறு, ஏற்றுக்கொள்ளவே முடியாத கொடுமை’ என்று அழுத்தமாக எடுத்துரைக்க வேண்டும். நீங்கள் அந்தக் குற்றத்தைச் செய்யவில்லை என்றாலும், அமைதி காக்கிறீர்கள் எனில், நீங்கள் பெண்கள் மீது நடத்தப்படும் பலாத்காரத்தை ஏற்றுக்கொள்கிறீர்கள் என்றே அர்த்தம்.”

மாண்புமிகு மருத்துவர்கள்! - டெனிஸ் முக்வெகே

காங்கோவின் புகாவு என்ற நகரத்தில் 1955-ம் ஆண்டில் டெனிஸ் முக்வெகே பிறந்தார். இவர் மூன்றாவது குழந்தை. இவரையும் சேர்த்து மொத்தம் ஒன்பது குழந்தைகள். அவரின் தந்தை கிறிஸ்துவ மதபோதகர். அவரைத் தேடி பலரும் நோயுடன் வருவார்கள். அவர்களுக்காக கர்த்தரிடம் இறைஞ்சுவார் அந்தத் தந்தை. அன்றாடம் காணும் இந்தக் காட்சிகளே டெனிஸுக்குள் மருத்துவராக வேண்டும் என்ற கனவை வளர்த்தன.

அந்த லட்சியத்துடனேயே படித்தார். 1983-ம் ஆண்டில் புருண்டி பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்றார். டெனிஸ் முதலில்  புகாவு அருகிலுள்ள லெமெரா என்ற கிராமத்திலுள்ள மருத்துவமனையில் குழந்தைகளுக்கான மருத்துவராகப் பணியாற்ற ஆரம்பித்தார். அந்தப் பணி பிடித்திருந்தது. நோயிலிருந்து மீண்ட குழந்தைகள் மீண்டும் புன்னகைக்கும்போது மனத்துக்கு நிறைவாகவும் இருந்தது.

மாண்புமிகு மருத்துவர்கள்! - டெனிஸ் முக்வெகேஅதே நேரத்தில் வீட்டுப் பிரசவத்தில் பல பெண்கள் இறப்பது அங்கே சகஜமாக இருந்தது. அவசர அவசரமாக அப்போதுதான் பிரசவித்த பெண்ணை மருத்துவமனைக்குக் கொண்டு வருவார்கள்.  குழந்தை பிழைத்திருக்கும். ஆனால், அதிகமான உதிரப்போக்கால் அந்தத் தாய், மருத்துவமனைக்குக் கொண்டுவரும் முன்னரே இறந்து போயிருப்பாள். அந்தச் சிறிய மருத்துவமனையில் பிரசவத்துக்கான வசதிகளும் இல்லை. பிரசவம் பார்க்க மருத்துவரும் இல்லை. அடிக்கடி இது போன்ற இறப்புகளை டெனிஸ் சந்தித்தார். மகப்பேறியல் மற்றும் மகளிர் நோய் மருத்துவ இயல் படிக்க ஃபிரான்ஸுக்குச் சென்றார். அங்கே அங்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் அதற்கான படிப்பை  முடித்து, காங்கோவுக்குத் திரும்பினார். லெமெரா மருத்துவமனையில் பெண்களுக்கும் தாய்மார்களுக்கும் மருத்துவம் பார்க்கத் தொடங்கினார். 1996-ம் ஆண்டில் முதல் காங்கோ போர் தொடங்கியது. நிலைமை கொடூரமாக மாறியது.

மாண்புமிகு மருத்துவர்கள்! - டெனிஸ் முக்வெகே

இங்கே காங்கோவின் வரலாற்றையும் அரசியல் சூழலையும் புரிந்துகொள்வது அவசியம். 75 ஆண்டுகள் பெல்ஜியத்தின் காலனியாதிக்கத்தில் இருந்த காங்கோ, 1960-ம் ஆண்டில் சுதந்திரம் பெற்றது. அதன் பின்னர் ஏகப்பட்ட அரசியல் குழப்பங்கள். காங்கோவின் கனிம வளங்கள் மீதும் இயற்கை வளங்கள் மீதும் அமெரிக்கா கண்வைத்தது. இன்னொரு பக்கம் அவற்றை அபகரிக்க, சோவியத் ரஷ்யா மறைமுக அரசியல் செய்துகொண்டிருந்தது. சோவியத் ஆதரவு பெற்ற லுமும்பா, காங்கோவின் அதிபரானார். அவரை வீழ்த்திவிட்டு அமெரிக்காவின் பினாமியான மொபுட்டு புதிய அதிபரானார். அவர் கடைந்தெடுத்த சர்வாதிகாரியாக, கொடுங்கோல் ஆட்சி நடத்தினார். ஊழல் தலைவிரித்தாடியது. அமெரிக்காவுக்குத் தன் தேசத்தின் வளங்களைச் சுரண்டிக் கொடுத்தார். மொபுட்டுவின் ஆட்சிக்கு எதிராக, புரட்சிப்படைகள் உருவாக ஆரம்பித்தன.

1996-ம் ஆண்டில் கபிலா என்பவரது புரட்சிப்படை, ருவாண்டா, உகாண்டா, அங்கோலா மற்றும் எரிட்ரியா தேசங்களின் உதவியுடன் மொபுட்டுவின் ஆட்சிக்கு எதிராகப் போரில் குதித்தது. இதுவே முதல் காங்கோ போர். 1997, மே மாதம் மொபுட்டுவின் ஆட்சி முடிவுக்கு வந்தது. கபிலாவும் உத்தமர் அல்ல. சர்வாதிகாரிதான். 1998, ஆகஸ்ட்டில் காங்கோ புரட்சிப்படை என்ற அமைப்பு, கபிலாவுக்கு எதிராகக் களமிறங்கி, காங்கோவின் பெரும் பகுதியைக் கைப்பற்றியது. அதை கபிலாவின் அரசுப்படை, அங்கோலா, நமீபியா மற்றும் ஜிம்பாப்வே படைகளுடன் சேர்ந்து எதிர்த்தது. இந்த இரண்டாவது காங்கோ போர்தான் ஆப்பிரிக்காவின் பெரும் போர்.

இந்தச் சூழலில்தான் டெனிஸ் மீண்டும் புகாவு-வுக்கு வந்தார். அங்கே பான்ஸி என்ற பிரசவத்துக்கான மருத்துவமனையைத் தொடங்கினார். முதல் பேஷன்ட்டாக ஒரு பெண் கொண்டு வரப்பட்டாள். அவள் போரில் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு பெண். அவளது நிலையைக் கண்ட டெனிஸ் உறைந்து போனார். உடலெங்கும் காயங்களுடன், பெண்ணுறுப்பு சிதைக்கப்பட்ட நிலையில் அவர் ஒரு பெண்ணை எதிர்கொண்டது அதுவே முதன்முறை. பின்னர் அப்படிப்பட்ட பெண்களுக்குத்தான், டெனிஸ் அதிக அளவில் சிகிச்சையளிக்கவேண்டியிருந்தது.

மாண்புமிகு மருத்துவர்கள்! - டெனிஸ் முக்வெகே

2001-ம் ஆண்டில் கபிலா கொல்லப்பட்டார். தற்காலிகப் போர் நிறுத்தம் உண்டானது. அதுவரை சுமார் 25 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருந்தனர். மீண்டும் காங்கோ போராளிகளுக்கு ருவாண்டா உதவி செய்ய, போர் மீண்டும் தொடர்ந்தது. மேலும் உயிரிழப்புகள். 2003, ஜூலையில் இரண்டாம் காங்கோ போர் முடிவுக்கு வந்தாலும், ஆங்காங்கே மோதல்கள் தொடர்ந்துகொண்டுதான் இருந்தன. 2008-ம் ஆண்டுவரை இந்த மோதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார்           50 லட்சத்துக்கும் மேல் இருக்கலாம். பான்ஸி மருத்துவமனைக்கு நோயாளிகள் வந்த வண்ணம் இருந்தனர். வந்த பெண்களில் பெரும்பாலோனோர், போரின் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள். வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டவர்கள். பெண்ணுறுப்பும் மலத்துவாரமும் கத்தியால் கிழிக்கப்பட்ட, ஆயுதங்களால் சிதைக்கப்பட்ட நிலையில் அங்கே பெண்கள் கொண்டு வரப்படுவார்கள். சில பெண்களின் உடலில் ஒட்டுத்துணிகூட இருக்காது. போர் நடந்த ஆண்டுகளில் இதெல்லாம் அன்றாடக் காட்சிகளாகின. டாக்டர் டெனிஸும் அவருடைய குழுவினரும் அர்ப்பணிப்புடன் இயங்கினர். அந்தப் பெண்கள் பிழைத்தால் அது அவர்களுக்கு மறுபிறவி. சிதைந்த உறுப்புகள் சரியான பின்னர், ஒரு பெண் தானாகச் சிறுநீர் கழித்தால்கூட அதுவே மிகப்பெரிய ஆறுதல். அந்தப் பெண்களின் முகத்தில் கொஞ்சம் நிம்மதி மீண்டும் தெரிந்தால் அதுதான் தனக்கான வெகுமதியாக டாக்டர் டெனிஸ் நினைத்தார்.

இப்படிப் போரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நான்கு கட்டங்களில் உதவிகள் செய்யப்பட்டன. முதலில் அவர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்து பிழைக்கவைப்பது. அடுத்து, மனதளவில் முற்றிலும் பாதிக்கப்பட்ட அவர்களை நம்பிக்கை கொடுத்துத் தேற்றுவது. இயல்புநிலைக்குக் கொண்டுவருவது. அவர்களது வாழ்வாதாரத்துக்கான தொழில் கற்றுக்கொடுப்பது. அவர்களுக்குச் சட்டரீதியாக உதவுவது. இவை அனைத்தையுமே மேற்கொண்டு வருகிறார் டாக்டர் டெனிஸ். அவருக்கு,  ‘The German Institute for Medical Mission’ (DIFAEM) பண உதவி செய்தும், மருந்துகள் வழங்கியும் உதவுகிறது.

`பெண்களை வன்புணர்வதை போரின் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தும் கொடுமை காங்கோவில்தான் அதிகம் நடக்கிறது.  இதன் வேர் என்ன, அதை எப்படி அகற்றுவது என்பதை நோக்கிப் போராட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் குரல் மேலெழும்ப வேண்டும். அது உலகத்தினரால் கேட்கப்பட வேண்டும். அந்தக் கொடூரமான வலி உணரப்பட வேண்டும். பெண்கள் இப்படிச் சிதைக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக் கூடாது. மண்டிக்கிடக்கும் இந்த வெறுப்பை நாம் நம் அன்பால்தான் மாற்ற வேண்டும்.’-  பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை செய்வதோடு நிறுத்திக்கொள்ளாமல், அவர்களது குரலாக டெனிஸின் குரல் உலகமெங்கும் ஒலித்து வருகிறது. 2012, செப்டம்பரில் டாக்டர் டெனிஸ், ஐ.நா சபையில் இது குறித்து வீரியமான உரை ஒன்றை நிகழ்த்தினார். காங்கோ அரசின் செயல்பாடுகளைக் கண்டித்தார். ‘காங்கோவும் பிற தேசங்களும் பெண்களுக்கெதிரான வன்முறையைப் போரின் உத்தியாகப் பயன்படுத்துவது மிகப் பெரிய அநீதி’ என்று அழுத்தமாகப் பதிவுசெய்தார்.

மாண்புமிகு மருத்துவர்கள்! - டெனிஸ் முக்வெகே

2012, அக்டோபர். ஆயுதமேந்திய நான்கு பேர் டாக்டர் டெனிஸின் வீட்டுக்குள் புகுந்தனர். அவரின் மகளைப் பணயக்கைதியாகப் பிடித்து வைத்தனர். அப்போது டெனிஸ் வீட்டில் இல்லை. அவர் வீட்டுக்குத் திரும்பியபோது, அவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. டெனிஸின் பாதுகாவலர் குறுக்கே புகுந்து, அவர் மீது பாயவிருந்த தோட்டாக்களை வாங்கிக்கொண்டார். அந்தப் பாதுகாவலரின் உயிர் பிரிந்தபோது, அந்த நான்கு பேரும் தப்பித்திருந்தனர். மனம் முழுக்க வேதனையுடன் நாட்டைவிட்டே வெளியேறினார் டாக்டர் டெனிஸ். பான்ஸி மருத்துவமனை செயல்பட இயலாமல் ஸ்தம்பித்துப் போனது. ஐரோப்பிய நாடுகளில் கொஞ்ச காலத்துக்குத் தலைமறைவாக இருந்தார் டெனிஸ். அப்போது அவருக்கு காங்கோவுக்கான விமான டிக்கெட் ஒன்று வந்து சேர்ந்தது. அவரால் மறுவாழ்வு பெற்ற பெண்கள், அன்னாசி விற்றும், வெங்காயம் விற்றும் கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்த்து, அதைக் கொண்டு டாக்டர் டெனிஸுக்கு விமான டிக்கெட் எடுத்து அனுப்பியிருந்தார்கள். டெனிஸ் நெகிழ்ந்து போனார்.

2013, ஜனவரி 14 அன்று காங்கோவின் கவுமு விமான நிலையத்தில் வந்திறங்கினார். அங்கே இருந்து புகாவு நகரம் செல்லும்வரை, சுமார் 20 மைல்கள் தொலைவுக்கு மக்கள் கூடி நின்று தங்கள் டாக்டரை உற்சாகமாக வரவேற்றனர். இன்றைக்கு சுமார் 300 ஊழியர்களுடன் 450 படுக்கைகளுடன் பான்ஸி மருத்துவமனை இயங்கி வருகிறது. அதில் 60 சதவிகிதப் படுக்கைகள் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கானவை. இதுவரை ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட பெண்கள், டாக்டர் டெனிஸால் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

பல்வேறு சர்வதேச விருதுகள் பெற்றுள்ள டாக்டர் டெனிஸுக்கு, 2018-ம் ஆண்டுக்கான நோபல் அமைதிப்பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. நாடியா முராட் என்ற ஜெர்மனியில் வாழும் மனித உரிமைப் போராளியுடன், டெனிஸ் இந்தப் பரிசைப் பகிர்ந்துகொள்ளவிருக்கிறார். வன்புணர்ச்சியாலும், போர் வன்முறையாலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்குச் சிகிச்சையளிப்பதில், இன்றைக்கு உலகின் மிகச்சிறந்த டாக்டர் டெனிஸ் முக்வெகேதான். ஆம், அவர் மட்டுமே காங்கோ பெண்களின் ஒரே நம்பிக்கை!

சேவை தொடரும்...

- ஓவியம்: பாலன்