Published:Updated:

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 25

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 25
பிரீமியம் ஸ்டோரி
நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 25

குடும்பம்

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 25

குடும்பம்

Published:Updated:
நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 25
பிரீமியம் ஸ்டோரி
நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 25

ணிகத்தை முதன்மைத் தொழிலாகக்கொண்டிருக்கும் சிறுபான்மையினரான சமணர்கள் இன்றளவும் தங்களது மத விதிகளைத் தொடர்ந்து பின்பற்றிவருகிறார்கள். அதில் ஒரு நல்லம்சம் விரதமிருத்தல். அவர்களது விரதமென்பது கற்பனைக்கும் எட்டாத ஒன்று. நினைவு நிற்கும் நான்கைந்து வயதில் தொடங்கி வாழ்நாளின் இறுதி நாள் வரைக்கும் சூரிய மறைவுக்குப் பின்னர் உணவு மட்டுமல்ல, நீரும் உட்கொள்ளாத பழக்கம் உள்ளவர்கள் நிறைய உண்டு. சூரிய மறைவுக்குப் பின்னர் உணவு உண்பதை தெய்வ நிந்தனையாகக் கருதுகிறவர்களும் உண்டு.  

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 25

வேட்டைச் சமூகமாக வாழ்ந்த மனிதன் பல்லாயிரம் ஆண்டுகளாக சூரிய மறைவுக்குப் பின்னர் உணவு, நீர் எதையும் அருந்துவதற்குச் சாத்தியமே இல்லை. மின்சார வசதி கடைக்கோடி கிராமத்தை எட்டிவிட்ட இன்றும்கூட இரவு எட்டு மணிக்குள் மொத்த கிராமமும் அடங்கிவிடுகிற பகுதிகள் பல இருக்கின்றன.

சூரியன் மறைந்த பிறகு எதையும் உண்பதில்லை என்ற பழக்கத்தை பழங்குடிச் சமூகங்கள் உட்பட பலரும் விடாமல் கடைப்பிடித்துவருகிறார்கள். இதன் அடிப்படை என்னவென்றால், உடலுக்குள் செலுத்தப்படும் உணவைச் செரிக்க வெப்பம் தேவை. சூரியன் மறைந்த பிறகு புறச் சூழலில் வெப்பம் இருக்காது. ஆகவே, அதற்குப் பின்னர் உண்ணும் உணவைச் செரிக்க உடல் நிறைய ஆற்றலைச் செலவிடவேண்டியிருக்கும். ஆக, உண்பதால் கிடைக்கும் ஆற்றல் குறைந்துவிடும்.

அதனால்தான் பின்னிரவில் உண்கிற பழக்கம் உடையவர்களுக்கு  காலையில் எழுந்தவுடன் தூக்கத்தின் மூலம் ஆற்றலைப் பெற்ற நிறைவு இல்லாமல் படுக்கையிலேயே சோம்பிக் கிடக்கத் தோன்றுகிறது.  காபியோ, டீயோ ரொம்பவும் உடலில் அக்கறையோடும்கூட ஒரு கிரீன் டீயோ சூடாகக் குடித்து உடல் இன்ஜினுக்கு வெப்பமூட்டவேண்டியிருக்கிறது. இயல்பான இயக்கத்துக்கே செல்ஃப் ஸ்டார்ட்டர் இல்லாமல் வெப்பமூட்டவேண்டிய நிலையிருக்கும்போது, உள்ளுறுப்புகள் எப்படி தமக்கான ஆற்றலைத் தூக்கத்தின் மூலம் பெற்றிருக்க முடியும். வயிற்றில் உணவோடு படுக்கைக்குச் சென்றால், உள்ளுறுப்புகள் உணவைச் செரிக்குமா அல்லது தம்மைத் தூய்மைப்படுத்தி அடுத்த நாளுக்குத் தயார்ப்படுத்திக்கொள்ளுமா?

நம் உள்ளுறுப்புகள் பகல் முழுவதும் நமது இயக்கத்துக்கு ஈடு கொடுத்துவிட்டு, தூங்கும் நேரத்தில் தம்மைத் தூய்மைப்படுத்தும் பராமரிப்புப் பணியைச் செய்துகொள்கின்றன. இரவு உணவு, உள்ளுறுப்புகளின் தூய்மைப் பணிக்கு தடா போட்டுவிடுகிறது. எனவே, ஆயுள் முழுவதும் உள்ளுறுப்புகள் சரிவர இயங்க வேண்டுமென்றால், ஒவ்வொரு நாளும் அவற்றை மிகுந்த எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும். அடிப்படையான தேவைகளுக்கு மட்டுமே அவற்றைப் பயன்படுத்தினால், நோய்கள் தோன்றுவதற்கான வாய்ப்பு குறையும். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 25

ரத்த அழுத்தம், தைராய்டு, நரம்பியல் பிரச்னைகள் போன்ற பல நோய்களுக்கு இரவு உணவு மற்றும் இரவுத் தூக்கமின்மை மட்டுமேகூடக் காரணங்களாகிவிடக்கூடும். தூக்கம் என்பது வெறுமே கைகால்கள், கண்கள் கொள்ளும் ஓய்வு மட்டுமே அல்ல. மெலட்டோனின் போன்ற சுரப்பிகள் சுரத்தல் தொடங்கி, உடலின் வெப்பச் சமநிலை, செல்கள் இறத்தல் - புதுப்பிக்கப்படுதல் எனப் பல்வேறு புத்தாக்கப் பணிகள் தூக்கத்தின்போது உடலுக்குள் நடக்கின்றன. எனவே, தூங்குவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்னரே நீரருந்துவது உட்பட அனைத்து உள்ளீடுகளையும் நிறுத்திவிட வேண்டும். படுக்கைக்குச் செல்லும் முன்னர் உண்பதை நிறுத்துவதை விரதக் கணக்கில் வைக்க முடியாது. குறைந்தபட்ச உணவும்கூட மறுக்கப்பட்ட மக்கள் ஒரு பிரிவினர் பசியோடு பட்டினி கிடக்கிறார்கள். அதுவும் விரதக் கணக்கில் சேராது. பசித்து உண்ண முடிந்தும், உணவை மறுத்து இருப்பதை மட்டுமே விரதம் என்று கருத முடியும்.

சிலர் சோறு சாப்பிடாமல் இட்லி, தோசை, உப்புமா போன்ற சிற்றுண்டிகளைப் பொறுக்க அடைத்துவிட்டு காற்றுக்கும்கூட இடமின்றி `ஏவ்...’ என்று ஏப்பம் விட்டுவிட்டு `இன்றைக்கு நான் விரதம். அதனால் சோறு, குழம்பு சாப்பிடுவதில்லை’ என்று சொல்லிக்கொள்வார்கள். இதைவிடத் தேவலாம் ரகம் இரண்டு வடை, ஒரு காபி சாப்பிட்டுவிட்டு விரதம் இருப்பதாகச் சொல்லிக்கொள்வது. சிலருக்கோ காபி கன்வேயரில் வந்துகொண்டேயிருக்கும்... சாரும் விரதத்தைக் குஜாலாக கன்டினியூ செய்வார். 

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 25

உண்மையில் விரதம் என்பதன் பொருளே வேறு. அது இரைப்பையின் மற்றும் செரிமான மண்டலத்தின் வேலையை முழுவதுமாக நிறுத்திவிடுவது. செரிமானம் என்பது சிலர் நினைப்பதுபோல ஏதோ இரைப்பை மற்றும் சிறுகுடலோடு மட்டும் தொடர்புடையது அல்ல. உணவின் வாசம் நாசியில் ஏறும்போதே அது நுரையீரலுடன் தொடர்புடையதாகிவிடுகிறது.

நுரையீரல், வழக்கமான சுவாசத்துக்கு மாறாக, உண்ணத் தகுந்த பொருளின் வாசத்தை நுகர்ந்து விழிப்படைகிறது. நுரையீரலின் ஆற்றலைப் பெற்று இயங்கும் அதன் குழந்தையான சிறுநீரகம், உணவைச் செரிப்பதற்கான நொதிகளைச் சுரந்து வாயில் ஈறுக்கும் பற்களுக்கும் இடையில் உமிழ்நீராகச் சுரந்தளிக்கிறது. பற்கள் அசைபோட மூளையின் உத்தரவு இல்லாமலேயே நாக்கு, உணவைப் புரட்டித் தருகிறது. நாக்குச் சுழலும்போது இதயம் தனக்குப் புதிய ரத்தம் வரவிருப்பதை உணர்ந்து, இருப்பிலுள்ள ரத்தத்தின் கழிவை உணவின் தன்மைக்கு ஏற்ப வியர்வையாக வெளியேற்றுகிறது.

சொட்டச் சொட்ட வியர்வையை வழித்தெறிந்துவிட்டு ஆவேசமாக உண்பதெல்லாம் வேற லெவல். நம் உணர்வுக்கு எட்டாமல் வியர்வை, காற்றில் கலக்கும்விதமாக மிதமாக உண்பது இன்னிசையை ரசிப்பதைப் போன்ற சுகானுபவம். உண்பதை நாவின் இன்பமாகவும், வயிற்றை நிரப்பும் திருப்தியாகவும் மட்டும் கருதக் கூடாது. மாறாக, அதை ஒரு சுகானுபவமாக மாற்றிக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்யும்போது வயிற்றுக்கு, செரிமான மண்டலத்துக்கு அவ்வப்போது விடுப்பு கொடுப்பதையும் சுகானுபவமாக மாற்றிக்கொள்ள முடியும்.

விரதம் என்பது நாவுக்கும் வயிற்றுக்கும் அளிக்கும் தண்டனை அல்ல. மதக் கோட்பாடுகளை வலிந்து பின்பற்றும் கடமையும் அல்ல. மாறாக, நமக்கு நாமே மேற்கொள்ளவேண்டிய ஒழுங்குணர்வு; உள்ளுறுப்புகளுக்கு அளிக்கும் ஓய்வு. நிறைவான தூக்கத்தின் மூலம் அடைவதைப் போன்ற சுகானுபவம். நமது உள்ளுணர்வில் அறிந்தோ, அறியாமலோ அன்றாடம்  ஒழுங்குமுறையைப் பின்பற்றுகிறோம். அப்படிச் சிலவற்றை சிறு வயதிலேயே பழக்கப்படுத்திவிட்டால், அது வாழ்நாள் முழுமைக்கும் தொடரும். வாழ்நாள் முழுதும் தொடரும் இப்பழக்கத்தால் உடல் எப்போதும் ஆரோக்கியமாக இருப்பதோடு தோற்றமும் கவர்ச்சிகரமாக இருக்கும், ஆளுமைத் திறனும் மேம்படும்; மருத்துவப் படுக்கையில் தலைவைத்துப் படுப்பதற்கான அவசியமும் நேராது.  விரதங்களில் வெள்ளிக்கிழமை விரதம், அமாவாசை விரதம், பகல் விரதம், பழ விரதம், தண்ணீர் விரதம், நாற்பது நாள்கள் விரதம் எனப் பல வகைகள் உள்ளன.

தொடக்கத்தில் சொன்ன சமணர்கள் விரதம், பகலில் உண்பது; இரவில் முற்றாக நீர் உட்பட எதையும் உட்கொள்ளாமல் இருப்பது. இது, ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்கும் பழக்கம். இதைச் சொன்னால் `ஏன் சார் ராத்திரி ஒரு வேளைதான் நாங்க மனைவி மக்களோடு ஆற அமர உண்பது. அந்த ஒரு வேளை உணவிலேயும் கை வைக்கிறீங்களே...’ என்று உரிமைக் குரல் எழுப்பலாம்.

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 25பணி முடித்து வீட்டுக்கு வந்து உண்பது ஒன்றுதான் என்ஜாய்மென்ட்டா... எதுவெல்லாம் கொண்டாட்டம் என்பதை அப்புறம் பார்க்கலாம். முதலில் இரவு உணவுக் கொண்டாட்டமானது போர் அடிமைகளுக்காக மன்னர்களாலும் பிற்காலத்திய நாடுபிடி காலனிய அரசுகளாலும் உருவாக்கப்பட்டது என்ற வரலாற்று உண்மையை மனதின் ஓரத்தில் ஆழப்பதிந்து வைத்துக்கொள்வோம்.

இரவுக் களிப்புக்காக ஏங்கத் தொடங்குகிறோம் என்றால், நாம் ஏதோ ஒன்றுக்கு அடிமையாகிவிட்டோம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். சரி, இப்போது விரதத்துக்கு வருவோம். பல வகையான விரத முறைகளைத் தெரிந்துவைத்துக்கொண்டால் நமக்குப் பொருத்தமானதைப் பின்பற்ற வசதியாக இருக்கும். ஆக மொத்தத்தில் விரதமிருப்பதே உணவை முழுமையாகச் செரிப்பதற்கும்,  செரிமானத்தின் மூலம் ஆற்றலை முழுமையாகப் பெறுவதற்கும் உதவியாக இருக்கும். இங்கு பின்பற்றப்படும் பல விரதங்கள் பெரும்பாலும் போங்காட்டங்களாகவே இருக்கின்றன. குறிப்பிட்ட ஒரு மதத்தில் மட்டும், அதிலும் மிகச் சிலர் மட்டும் நாற்பது நாள்களுக்கு வெறும் நீரை மட்டும் அருந்திக்கொண்டு விரதம் இருப்பதை அரிதாகக் காண முடிகிறது.

மிகவும் சிறுபான்மையினராக உள்ள சமணர்கள் மட்டுமே ஆண்டுக்கு சுமார் இரண்டு மாதங்களுக்கு விரதம் மேற்கொள்கிறார்கள். தொடக்கத்தில் ஒரு வேளை உண்டால், அடுத்த வேளை விரதம் என்று ஆரம்பித்து ஒரு நாள் உண்பது மறுநாள் விரதம் என்று இருக்கிறார்கள். பிறகு இரண்டு நாள்கள் உண்பது, இரண்டு நாள்கள் விரதம். அடுத்து ஒரு நாள் உண்பது, இரண்டு நாள்கள் என்று படிப்படியாக உயர்ந்து இறுதியாக எட்டு நாள்கள் எதையும் உண்பதில்லை என்ற நிலைக்கு நீடிக்கிறார்கள். அதிலும் இறுதி நாள்களில் அவரவர் சக்திக்கு ஏற்ப, மூன்று, நான்கு நாள்கள் நீரும் அருந்துவது இல்லை.

கடந்த பத்தியில் சொன்ன எதையும் நீங்கள் பின்பற்ற வேண்டும் என்பதற்காகக் கூறவில்லை. எட்டு நாள்கள் முழு விரதம் இருந்தாலும், உடலுக்கு ஆபத்து நேர்ந்து விடாது என்பதைப் புரிந்துகொள்வதற்காகச் சொல்லப்படுகிறது. மற்றபடி இது போன்ற விரதங்களைப் பயிற்சி உள்ளவர்களின் வழிகாட்டுதலுடன்தான் ஆரம்பிக்க வேண்டும். நாள்பட்ட நோயாளிகள் விரதம் மேற்கொள்வதன் மூலம் வெகு விரைவாகவே நோயிலிருந்து விடுபடலாம். ஆனால், கண்டிப்பாகப் பயிற்சி பெற்றவர்களின் துணையுடன்தான் மேற்கொள்ள வேண்டும். 

அவ்வப்போது 24 மணி நேரம் விரதம் மேற்கொள்வது என் வாடிக்கை. முதல் ஆறு மணி நேரம் மட்டும் நீர் அருந்தி, பின்னர் அதையும் நிறுத்திவிடுவது உண்டு. விரதப் பயிற்சி மேற்கொள்ளத் தொடங்கும்போது உடலின் எடை குறையும். உடலில் இருந்து மிகுதியாகத் தேங்கியிருக்கும் காற்றும் நீரும் வேகமாக வெளியேறும். அப்போது எடை குறைவதுபோலவும் சோர்வும் உணரப்படும். இந்த எடை குறைவு ஓரிரு நாள்களிலேயே நீங்கிவிடும். அடுத்தடுத்த விரதங்களில் நீரும் காற்றும் வெளியேறினாலும், எடை குறைவு ஏற்படாது. ஏனென்றால், விரதம் தொடங்கிய பிறகு எலும்பின் எடை அதிகரிக்கத் தொடங்கிவிடும்.

எனது ஒன்றரை ஆண்டு விரதப் பயிற்சியில் இப்போது இரண்டு நாள்களுக்கு மூன்று வேளை உணவு மட்டுமே உட்கொண்டு வருகிறேன். அதிலும் ஒவ்வொரு வேளை உணவும் சுமார்
300 கிராம் அளவு மட்டுமே. சோதனைக்காக ஒரு வார காலமாக தினமும் ஒரு வேளை உண்டு வந்த நாள்களில் ஒன்றரை கிலோ எடை கூடியது.  பழம், பழச்சாறு, காபி, டீ போன்ற அனைத்தையுமே உணவு என்றே கணக்கில்கொள்ள வேண்டும். நம்முடைய இரைப்பை, சிறுகுடல் ஆகிய உணவைச் செரிக்கும் இரண்டு பாகங்களும் சுருங்கி விரியும் தன்மை உடையவை. நம்மில் பலரும் உணவு மீது கொண்ட வேட்கையினால் அதன் இயல்பான அளவை விரித்தும், சுருங்கும் தன்மையைக் குறைத்தும் வைத்துள்ளோம்.

அவை சுருங்குகிற அளவு, ஆகக் குறைந்த அளவுக்கு எட்டும்போது  மட்டுமே உணவைச் செரித்துக் கிடைக்கும் பலனை முழுமையாகப் பெற முடியும். மிகை உணவு மூலம் செரிமான உறுப்புகளை விரித்துவிட்ட பிறகு, காலப்போக்கில் உண்கிற உணவின் அளவும் குறைந்து, செரிமான அளவும் குறைந்து, உடலுக்குத் தேவையான ஆற்றலைப் பெற முடியாமல் போய்விடுகிறது. அதனால் உடலிலேயே தொடர்பு எல்லைக்கு அப்பாலான பகுதிகள் கட்டுப்பாட்டை இழந்து தொல்லை தரக்கூடியதாக மாறிவிடுகின்றன.

எல்லோரும் தமது உடலை சிக்ஸ்-பேக் ஆக வைத்திருக்க முடியாது. அது பெரும் பயிற்சி. ஆனால் ஒற்றை பேக் ஆக வைத்திருப்பது மிகவும் ஆபத்தானது. விரதம், பத்தியம், உணவுக் கட்டுப்பாடு என்ற வார்த்தைகளைக் கண்டு மிரளவேண்டியதில்லை. காலை எழுந்தவுடன் பல் துலக்குதல்போல, குளித்து முடித்து துவைத்த துணியை அணிவதுபோல உடல் செலவிடும் ஆற்றலுக்கு ஏற்ற உணவு முறையை வகுத்துக்கொள்வது எளிய பயிற்சிதான்.

அந்தப் பயிற்சியை இடையில் பானம் அருந்துவதை, இடையில் பலகாரம் உண்பதை தவிர்ப்பதிலிருந்தே மிக எளிமையாகத் தொடங்குவது எப்படி என்பதைத் தொடர்ந்து பார்க்கலாம்.

நிலாச்சோறு ஊட்டுவோம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism