Published:Updated:

மாண்புமிகு மருத்துவர்கள்! - ஜிம் ஓ கான்னெல்

மாண்புமிகு மருத்துவர்கள்! - ஜிம் ஓ கான்னெல்
பிரீமியம் ஸ்டோரி
மாண்புமிகு மருத்துவர்கள்! - ஜிம் ஓ கான்னெல்

சேவை - 7

மாண்புமிகு மருத்துவர்கள்! - ஜிம் ஓ கான்னெல்

சேவை - 7

Published:Updated:
மாண்புமிகு மருத்துவர்கள்! - ஜிம் ஓ கான்னெல்
பிரீமியம் ஸ்டோரி
மாண்புமிகு மருத்துவர்கள்! - ஜிம் ஓ கான்னெல்

‘வளர்ந்த நாடு ஒன்றைச் சொல்லவும்’ என்று கேட்டால், அனிச்சையாக வரும் சொல், அமெரிக்கா. அங்கே குடிமக்கள் அனைவரும் சுபிட்சமாக வாழ்கிறார்களா என்றால் ‘இல்லை’ என்று கொட்டைஎழுத்தில் எழுதலாம். அமெரிக்காவிலும் மூன்றாம் உலக நாடுகளில் வாழும் மக்கள்போல தெருவில்திரியும் வீடற்ற பிரஜைகள் இருக்கிறார்கள். அவர்கள் வறுமைக்கு வாக்கப்பட்டவர்கள். ஆதரவற்றவர்கள். வஞ்சிக்கப்பட்டவர்கள். வாழ்வில் பலவற்றை இழந்தவர்கள். முன்னாள் குற்றவாளிகள். முகவரி அற்றவர்கள். அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் இந்தத் தெருவோரவாசிகளை கூகுள் இன்றியே கண்டுபிடிக்கலாம். பாஸ்டனில் இப்படிப்பட்டவர்கள் அதிகம் உண்டு. அவர்களுக்கெல்லாம் ஆபத்பாந்தவனாக ஒரு மனிதரும் அங்கு உண்டு. அவர் பெயர் டாக்டர் ஜிம் ஓ கான்னெல்.

மாண்புமிகு மருத்துவர்கள்! - ஜிம் ஓ கான்னெல்

வாழ்வில் எந்த இலக்கும் இல்லாத ஒரு முரட்டு இளைஞனாகத்தான் ஜிம் ஓ கான்னெல் வளர்ந்தார்.

எதிர்காலம் குறித்த கவலைகள் ஏதுமின்றி, அந்தந்தத் தருணங்களைச் சந்தோஷமாக அனுபவித்துக்கொண்டு ஊர் சுற்றுவதுதான் ஜிம்முக்குப் பிடித்திருந்தது. அவரால் எதையும் அதிகபட்சம் ஒரு வருடத்துக்கு மேல் செய்ய முடியவில்லை. நியூயார்க்கில் ஒரு கல்லூரியில் ஒரு வருடம் படித்தார். பின் அதை நிறுத்திவிட்டு, ‘சட்டம் படிக்கிறேன்’ என்று சில காலம் திரிந்தார். அதிலும் ஈடுபாடு இல்லாமல், தன் சொந்த ஊரான நியூபோர்ட்டில் ஒரு ரெஸ்டாரன்ட்டில் சில மாதங்கள் உணவு பரிமாறும் வேலை பார்த்தார். அவருக்கென்று எந்த லட்சியமும் இருக்கவில்லை. எதிலும் மனம் லயிக்கவில்லை.

அப்போது ஜிம் தனது இருபதுகளின் இறுதியில் இருந்தார். சாலைப் பயணமொன்றில் மோட்டார் சைக்கிள் விபத்து ஒன்றைக் கண்டார். விபத்துக்குள்ளானவரின் கால் எலும்பு முறிந்து, உடைந்த பகுதி தனியே தொங்கிக்கொண்டிருந்தது. வலியில் அவர் கதறிக்கொண்டிருக்க, ஜிம் கையறு நிலையில் தவித்தார். அது ஆள் அரவமற்ற இடம். அருகில் மருத்துவமனை கிடையாது. அப்போது அந்த விபத்துக்குள்ளான நபர், தான் வாழ்வில் சாதிக்க நினைத்த விஷயங்களையெல்லாம் சொல்லிப் புலம்பியபோது ஜிம்முக்குள் ஏதேதோ மனமாற்றங்கள் நிகழ்ந்தன. “நான் இந்த நபரின் உடைந்த காலைச் சரிசெய்ய விரும்புகிறேன். ஆனால், என்னால் முடியாதல்லவா?” இந்த அசாதாரணமான சூழல் ஜிம்முக்குள் ஒரு துளி நெருப்பைப் பற்றவைத்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாண்புமிகு மருத்துவர்கள்! - ஜிம் ஓ கான்னெல்“நான் மருத்துவர் ஆகப்போகிறேன்...” வாழ்வில் முதன்முறையாக ஒரு லட்சியத்துடன் தன் பயணத்தைத் தொடங்கினார் ஜிம் ஓ கான்னெல். நண்பர்கள் பலரும் அதைரியப்படுத்தினார்கள். கேலிசெய்தார்கள். ஆனால், 30 வயது ஜிம், அதற்காக ஒவ்வொரு கல்வி நிறுவனமாக ஏறி இறங்கினார். அவமதிப்புகளைக் கண்டுகொள்ளவில்லை.

இறுதியாக ஹார்வர்டில் இடம் கிடைத்தது. முனைப்புடன் படித்து, மருத்துவர் பட்டம் பெற்றார் (1982). நியூயார்க்கின் ஸ்லோயன் கெட்டரிங் கேன்சர் சென்டரில் (Sloan-Kettering Cancer Center) புற்றுநோய் மருத்துவத்துக்கான படிப்பை முடித்தார். அப்போது அவருடைய தலைமை மருத்துவர், ஜிம்முக்கு ஒரு பணியை வழங்கினார். “பாஸ்டன் நகரில் வீடற்றவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு வருடம் நீ மருத்துவச் சேவை செய்ய வேண்டும்.” ஜிம்முக்குத் தயக்கமாக இருந்தாலும், தலைமை மருத்துவரின் சொல்லைத் தட்ட முடியாமல் ஒப்புக்கொண்டார்.

1985. பாஸ்டன் நகரத்தில் பைன் தெருவில் வாழும் நடைபாதைவாசிகளுக்கு மருத்துவம் பார்க்கும் பணி ஜிம்முக்கு வழங்கப்பட்டிருந்தது. அந்த அழுக்கான தெருவுக்குச் சென்று இறங்கினார். ஒரு சேவை அமைப்பைச் சேர்ந்த நர்ஸ்கள் சிலர் ஏற்கெனவே அங்கே பணியில் இருந்தனர். அவர்களிடம் ஸ்டெதஸ்கோப்கூட இல்லை. ஏதோ கடமைக்கு அங்கே பணியாற்றிக் கொண்டிருந்தனர். மருத்துவத் தொழிலின் மீதே அவருக்கு வெறுப்பு உண்டானது.

ஒருநாள், ஆதரவற்ற முதியவர் ஒருவரிடம் ஜிம் சென்றார். அந்த முதியவர், “நீ டாக்டர்தானே?” என்றார். ஆனால், மருத்துவச் சிகிச்சை எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டார். ஜிம், அந்த முதியவரைத்தான் அடுத்தடுத்த நாள்களிலும் சந்தித்தார். ஓர் இரவில் அந்த முதியவர், “தூங்குவதற்கு ஏதாவது மாத்திரை தருகிறாயா?” என்று கேட்டார். அந்த முதியவரே ஜிம்மின் முதல் பேஷன்ட். தெருவோர மக்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்க வேண்டுமெனில் முதலில் அவர்களது நம்பிக்கையைப் பெற வேண்டுமென்ற மிகப் பெரிய உண்மை ஜிம்முக்குப் புரிந்தது. 

மாண்புமிகு மருத்துவர்கள்! - ஜிம் ஓ கான்னெல்

இன்னோர் எதார்த்தமும் புரிந்தது. ஒரு நோயாளிக்கு நிமோனியோ. இன்னொரு நோயாளிக்கு காலில் ஆறாத புண்கள். இன்னொருவர் மனநிலை பாதிக்கப்பட்டவர். மற்றொருவர் சர்க்கரை நோயாளி. வேறொருவர் போதைக்கு அடிமையானவர். இப்படி விதவிதமான மனிதர்களுக்குச் சிகிச்சையளிக்க ஹார்வர்டு படிப்பு உதவப்போவதில்லை என்பதை உணர்ந்துகொண்டார். சாதாரண உடைகளை அணிந்துகொண்டு அந்த மக்களைத் தேடி பாலங்களின் அடிவாரம், பார்க், நடைபாதைகள் என்று அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்றார். தன் பேச்சில் கனிவைக் கூட்டினார். அவர்களுக்குத் தன் மீது நம்பிக்கை வரவழைத்தார். ஓராண்டின் முடிவில் ஜிம்மின் மனம் அமைதியாகச் சொன்னது, “இதுதான் நீ விரும்பிய வாழ்க்கை!”

 ‘Boston Health Care for Homeless Program (BHCHP)’ அமைப்பை ஆரம்பித்தார். தன்னைப்போலவே எண்ணம் கொண்ட பல்துறை மருத்துவர்களை உதவிக்கு இணைத்துக் கொண்டார். பெரிய மருத்துவமனைகளுடன் இணைந்து, இம்மாதிரியான மக்களுக்கான இலவச மருத்துவச் சேவைகளுக்கு வழி ஏற்படுத்தினார். பாஸ்டன் நகரம் மட்டுமன்றி, அதன் சுற்றுவட்டார மக்களும் இந்த அமைப்பின் மருத்துவச் சேவையால் பயன்பெறும்படி பல இடங்களில் மருத்துவ முகாம்களை அமைத்தார்.

மாண்புமிகு மருத்துவர்கள்! - ஜிம் ஓ கான்னெல்

இந்த அமைப்பில் இன்று மருத்துவர்கள், செவிலியர்கள், தன்னார்வலர்கள் என்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஜிம்முடன் இணைந்து பணியாற்றுகின்றனர். இந்த அமைப்புக்கென பெரிய மருத்துவ வளாகம் இருக்கிறது. அங்கே தெருவோரவாசிகளுக்கு சாதாரண தலைவலி, பல்வலி சிகிச்சைகள் முதல் சிக்கல் நிறைந்த அறுவை சிகிச்சைகள்வரை பல சேவைகள் செய்யப்படுகின்றன. ஆதரவற்றவர்களுக்கான இறுதிச் சடங்குகளையும் அமைப்பே பார்த்துக்கொள்கிறது.

33 வருடங்கள் இந்தச் சேவையில் இருக்கும் டாக்டர் ஜிம் ஓ கான்னெல், இப்போதும் இரவு வேளைகளில், ஆதரவற்றவர்களைத் தேடிச் சென்று அவர்களுக்கான மருத்துவச் சேவையைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார். இனம், மதம், நிறப் பாகுபாடு இன்றி அவரது அமைப்பு பணியாற்றிக்கொண்டிருக்கிறது. ஜிம் தன் முயற்சியால் ஆதரவற்ற மக்களின் விவரங்கள் அடங்கிய டேட்டாபேஸைக்கூட உருவாக்கியிருக்கிறார். அதனால் அந்த மக்கள் இவரை இப்படித்தான் சொல்கிறார்கள் - “He is Jesus!”

சேவை தொடரும்...

- ஓவியம்: பாலன் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism