Published:Updated:

"பிரேதப் பரிசோதனையில் சாமான்யர்களுக்கு மட்டும் பாகுபாடு காட்டுவது ஏன்?" - கேள்வி எழுப்பும் கட்சி பிரமுகர்

குருபிரசாத்

குமட்டும் நாற்றம், உள்ளே நமக்குத் தெரிந்தவரின் உயிரற்ற உடல், அவரது உடலை பிரேத பரிசோதனை செய்யும் நடைமுறைக்காக காவல்நிலையத்துக்கும், மருத்துவமனைக்கும் நடையோ நடை என்று நடப்பது. எதிர்பாராத விதமாக விபத்திலோ, தற்கொலையாகவோ நமக்கு வேண்டியவர்கள் உயிர் பிரியும் போது, அரசு மருத்துவமனைகளின் பிணவறை முன்பு நம்மில் பலர் இந்த ரணங்களை அனுபவித்திருப்போம்.

"பிரேதப் பரிசோதனையில் சாமான்யர்களுக்கு மட்டும் பாகுபாடு காட்டுவது ஏன்?" - கேள்வி எழுப்பும் கட்சி பிரமுகர்
"பிரேதப் பரிசோதனையில் சாமான்யர்களுக்கு மட்டும் பாகுபாடு காட்டுவது ஏன்?" - கேள்வி எழுப்பும் கட்சி பிரமுகர்

குமட்டும் நாற்றம், உள்ளே நமக்குத் தெரிந்தவரின் உயிரற்ற உடல், அவரது உடலைப் பிரேதப் பரிசோதனை செய்யும் நடைமுறைக்காகக் காவல் நிலையத்துக்கும், மருத்துவமனைக்கும் நடையோ நடை என்று நடப்பது; எதிர்பாராத விதமாக விபத்திலோ, தற்கொலையாகவோ நமக்கு வேண்டியவர்கள் உயிர் பிரியும் போது, அரசு மருத்துவமனைகளின் பிணவறை முன்பு நம்மில் பலர் இந்த ரணங்களை அனுபவித்திருப்போம். இதைக் கடக்காதவர்கள் மிகவும் குறைவுதான்.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிரேதப் பரிசோதனை செய்வதற்குக் குறிப்பிட்ட நேரம் கடைப்பிடிக்கப்படுகிறது. 24 மணி நேரம் சிகிச்சை அளிக்கப்படக்கூடிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில்கூட, காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரைதான் இந்தப் பரிசோதனை செய்யப்படுகிறது. இதனால், பல கிலோ மீட்டர் தொலைவு சென்று, இறுதிக் காரியங்களைச் செய்பவர்கள்கூட, பல மணி நேரம் பிணவறை முன்பு காத்திருக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. இந்நிலையில், தமிழக அரசு மருத்துவமனைகளில் இந்தப் பரிசோதனை செய்யும் நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, ம.தி.மு.க மாநில இளைஞர் அணிச் செயலாளர் வே.ஈஸ்வரன், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், சுகாதாரத் துறை அரசுச் செயலாளர், கோவை மாவட்ட ஆட்சியர், கோவை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆகியோருக்கு மனு அனுப்பியிருந்தார்.

ஆனால், இரவு நேரங்களில் பிரேதப் பரிசோதனை செய்வதற்கு அனுமதி ரத்து செய்து அரசாணை வெளியிட்டிருப்பதாலும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படியும் இரவு நேரங்களில் இந்தப் பரிசோதனை செய்வதற்கு அனுமதி இல்லை என்று மருத்துவக் கல்வி இயக்குநர் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் இந்தப் பரிசோதனை செய்யக் கூடாது என்பதற்குத் தெளிவான மருத்துவக் காரணங்கள் சொல்லப்படவில்லை. மேலும், பல அரசு மருத்துவமனைகளில் மாவட்ட ஆட்சியரின் சிறப்பு அனுமதி பேரில், இரவு நேரங்களில் இந்தப் பரிசோதனை செய்யப்பட்டுள்ள சம்பவங்களும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

அதன்படி, திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2018-ம் ஆண்டு மார்ச் வரை 9 பிரேதப் பரிசோதனைகள் சிறப்பு அனுமதியின் பேரில் நடந்துள்ளன. மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அதே 2017 ஏப்ரல் முதல் 2018 மார்ச் வரை 4 பிரேதப் பரிசோதனைகள்  மாவட்ட ஆட்சியரின் ஆணையின் பேரில் நடந்துள்ளன. இதில் ஒரு பிரேதப் பரிசோதனை நள்ளிரவு 12.10 மணிக்கு நடத்தப்பட்டுள்ளது. அதேபோல, கடந்த ஜூலை மாதம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இப்படி, ஒவ்வோர் அரசு மருத்துவமனையிலும் சிறப்பு அனுமதியின் பேரில் இரவு நேரங்களில் தொடர்ந்து இந்தப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அரசு வெளியிட்டுள்ள அரசாணையை, அதே அரசு மருத்துவமனைகளில் அதிகாரிகளின் சிறப்பு அனுமதியின் பேரில் மீறப்பட்டுள்ள நிலையில், சாமான்யர்களுக்குப் பாகுபாடு காட்டி வருகிறது.

இதுகுறித்து ம.தி.மு.க மாநில இளைஞரணிச் செயலாளர் வே.ஈஸ்வரன், ``இரவு நேரங்களில் பிரேதப் பரிசோதனை செய்யக் கூடாது என்பதற்குப் பெரிய மருத்துவக் காரணங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி, இரவு நேரங்களில் இந்தப் பரிசோதனை செய்யக் கூடாது என்றால், பல இடங்களில் எப்படிச் சிறப்பு அனுமதியின் பேரில் பிரேதப் பரிசோதனை செய்ய முடியும்?. மேலும், அரசு மருத்துவமனைகளில் இந்தப் பரிசோதனை செய்வதற்கு மிகவும் நீண்ட நடைமுறைகள் உள்ளன. உயிரிழந்தவரின் உறவினர்கள், காவல் நிலையத்துக்குச் சென்று புகாரளித்து, பின் அவர்கள் அதன்பேரில் நடவடிக்கை எடுத்து மருத்துவமனைக்கு வந்து மற்ற நடைமுறைகளைச் செய்வதற்கு அதிக நேரம் எடுக்கிறது. இதனால், பல நேரங்களில் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய முடியாமல் போகிறது.  நம் வாழ்வில் பலரும் எதிர்கொள்ளும் பிரச்னை இது.

இரவு நேரங்களில் இந்தப் பரிசோதனை செய்யக் கூடாது என்று டாக்டர் மதிஹரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்திருந்தார். அவரின் மனுவைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம், இந்த விவகாரத்தில் அரசையே முடிவெடுக்கச் சொல்லிவிட்டது. எனவே, விருப்பப்படுபவர்களுக்கு உடனடியாகப் பிரேதப் பரிசோதனை செய்து கொடுக்க வேண்டும். முதல்கட்டமாக, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் பிரேதப் பரிசோதனை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துவிட்டு, படிப்படியாக மற்ற அரசு மருத்துவமனைகளிலும் இதைச் செயல்படுத்த வேண்டும். இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளேன்" என்றார்.

இதுதொடர்பாக விளக்கம் கேட்க தமிழகச் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணனைத் தொடர்புகொண்டோம். அவர் மருத்துவக் கல்வி இயக்குநரிடம் பேசச் சொன்னார்.

இதையடுத்து, தமிழக மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோவை தொடர்புகொண்டபோது, ``அறிவியல்பூர்வமாகப் பிரேதப் பரிசோதனை செய்வதற்குச் சூரிய ஒளி இருக்க வேண்டும் என்று ஆங்கிலேயர் கால புத்தகங்களில் கூறப்பட்டுள்ளது. அறிவியல்பூர்வமாக இந்தப் பரிசோதனை செய்ய, பகல் நேரம்தான் உகந்தது என்றும், காலை 6 முதல் மாலை 6 மணிவரைதான் இந்தப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது. நீதிமன்றமும் அதை ஏற்றுக்கொண்டுவிட்டது. உயிரிழந்த உடலை எவ்வளவு நேரம் வைத்தாலும், அதற்கு மீண்டும் உயிர் வரப்போவதில்லை. எனவே, அதற்காக நடு ராத்திரியில் மருத்துவர்களை அழைத்து இந்தப் பரிசோதனை செய்யச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

பேரிடர் காலங்களில் மட்டும்தான், ஆட்சியரின் சிறப்பு அனுமதிப்படி இரவு நேரங்களில் பிரேதப் பரிசோதனை செய்யலாம். மற்ற நேரங்களில் இந்தப் பரிசோதனைக்குச் சிறப்பு அனுமதியளித்தால் அது தவறு. நாம் சராசரியாக ஒரு பிரேதப் பரிசோதனைக்கு ஒன்றரை மணி நேரம் எடுத்துக் கொள்கிறோம். உலகில், அறிவியல்பூர்வமாக நடத்தும் இந்தப் பரிசோதனையில், இவ்வளவு விரைவாகச் செய்வது நாம் மட்டும்தான். இதைவிட விரைவாகச் செய்தால் அது அறிவியல்பூர்வமாக இருக்காது" என்றார்.

சட்டம் என்பது அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். குறிப்பாக, அது சாமான்யர்களைக் காப்பதாக இருக்க வேண்டும்.