Published:Updated:

ஹெபடைடிஸ் பி' க்கு  உரியச் சிகிச்சை அவசியம்... தாமதித்தால் புற்றுநோய்’- மருத்துவர் எச்சரிக்கை!

ஹெபடைடிஸ் பி' க்கு  உரியச் சிகிச்சை அவசியம்... தாமதித்தால் புற்றுநோய்’- மருத்துவர் எச்சரிக்கை!
ஹெபடைடிஸ் பி' க்கு  உரியச் சிகிச்சை அவசியம்... தாமதித்தால் புற்றுநோய்’- மருத்துவர் எச்சரிக்கை!

``ஹெபடைடிஸ் பி' தொற்றுநோய்க்கு நீண்ட காலமாக உரியச் சிகிச்சை எடுக்காவிடில் கல்லீரல் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் உண்டு’’ என்று  மூத்த மருத்துவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

 சென்னை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் கல்லீரல் நோய் துறை சார்பில் திங்கள்கிழமை கலந்துரையாடல் நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்துகொண்டனர்.  கல்லீரல் நோய் துறையின் இயக்குநரும், மூத்த பேராசிரியருமான நாராயணசாமி பங்கேற்றுப் பேசுகையில்,``கல்லீரல் நம் உடலிலுள்ள மிகப்பெரிய உள்ளுறுப்பு.  நாம் சாப்பிடும் உணவிலுள்ள புரதம், கொழுப்பு, மாவுப்பொருள் ஆகியவற்றிலிருந்து நம் உடலுக்குத் தேவைப்படும் சத்துகளைச் சேமித்து வைத்துக்கொள்ளும். பித்தநீரை உருவாக்கும். ரத்தம் உறைவதற்குத் தேவையான பொருளை உருவாக்கும். உடலுக்குள் சென்றுவிட்ட மருந்துகளின் தேவையில்லாத நச்சுப்பொருள் போன்றவற்றை வெளியேற்றும். கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் அதை வெளியேற்றும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கல்லீரலுக்கு பல பாதிப்புகள் ஏற்படுகின்றன.

வைரஸ் நுண்கிருமிகள், அதிகமாக மது அருந்துதல், மருந்துகளின் நச்சுத்தன்மை போன்றவற்றால் கல்லீரலுக்குப் பாதிப்பு ஏற்படும். மேலும், ரத்தத்தின் மூலம் ஹெபடைடிஸ் மற்றும் சி வகை வைரஸ்களால் கல்லீரல் பாதிக்கப்படும். இது கவனிக்கப்படாவிட்டால் மரணம் கூட நேரிடலாம்.

லேசான காய்ச்சல், பசியின்மை, குமட்டல், வாந்தி, தசைவலி மற்றும் மூட்டுவலி போன்றவை இந்த நோயின் முதல் நிலை அறிகுறிகளாகும். கண், தோல் மற்றும் சிறுநீர் மஞ்சள் நிறத்துடன் காணப்பட்டு மஞ்சள் காமாலையாக இரண்டாம் நிலை அறிகுறியாகவும் மற்றும் மஞ்சள் காமாலையிலிருந்து விடுபட்டு உடல்நிலை தேறிவரும் நிலையை மூன்றாவது அறிகுறியாகவும் காணப்படும். ஹெபடைடிஸ் பி என்பது ஒரு தொற்றுநோய். இதற்கு அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இலவசமாகத் தடுப்பூசி போடுகிறோம். 

இந்த நோய்க்கு நீண்ட காலமாக உரியச் சிகிச்சை எடுக்காவிடில் கல்லீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. எனவே, கல்லீரலைப் பாதுகாப்பதற்கு கீழ்க்காணும் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். நிறையத் தண்ணீர் குடித்தல், புத்தம் புது பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுதல், எண்ணெயில் வறுக்கப்பட்ட மற்றும் கொழுப்புள்ள உணவுப் பொருள்களை சாப்பிடுவதைக் குறைத்தல், கல்லீரலுக்கு ஒவ்வாத மருந்துகளைத் தவிர்த்தல், நன்கு ஆழ்ந்த உறக்கம் கொள்ளுதல், மனஅழுத்தத்தைக் குறைத்தல், புகைப்  பிடிப்பதைத் தவிர்த்தல்,மது அருந்துவதைத் தவிர்த்தல் போன்றவற்றினைப்  பின்பற்றினாலே நம் உடலின் முக்கியமானதும், பெரிய உள்ளுறுப்புமான கல்லீரலுக்கு ஆபத்து இல்லை. கல்லீரலைப்  பாதுகாப்பது உடல் ஆரோக்கியத்தைக் காத்து நீண்ட ஆயுளுக்கு வழிவகுக்கும்’’ என்கிறார் நாராயணசாமி.