சமூகம்
Published:Updated:

சோதனை எலிகளா மனிதர்கள்? - பகீர் பரிசோதனைகள்... ஒரு திகில் ரிப்போர்ட்

சோதனை எலிகளா மனிதர்கள்? - பகீர் பரிசோதனைகள்... ஒரு திகில் ரிப்போர்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
சோதனை எலிகளா மனிதர்கள்? - பகீர் பரிசோதனைகள்... ஒரு திகில் ரிப்போர்ட்

ஜீ.வி ஸ்பெஷல் ஸ்டோரி

ருத்துவத்துறையில் தினந்தோறும் புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. ஒரு நோயை அழிக்க மருந்து கண்டுபிடித்த நொடியில், இன்னொரு புதிய வைரஸ் உயிர்பெறுகிறது. மருத்துவம் மற்றும் புதிய மருந்துகளின் தேவை பல மடங்கு அதிகரித்துவிட்டது. இப்படி கண்டுபிடிக்கப்படும் புதிய மருந்துகளை எலி, முயல், குரங்குகள் போன்ற விலங்குகளுக்குக் கொடுத்து ஆராய்ச்சி செய்வது வழக்கம். விலங்குகளில் அந்த மருந்துகள் ஏற்படுத்தும் விளைவுகளைக் கணித்து, அடுத்தகட்டமாக மனிதர்களுக்கும் தந்து சோதிப்பார்கள். விலங்குகளையும் மனிதர்களையும் இதுமாதிரியான மருந்து ஆராய்ச்சிகளுக்குப் பயன்படுத்தக்கூடாது என்று உலகெங்கும் குரல் எழுந்துவருகின்றன. இதற்கான மாற்று வழிகள் குறித்தும் ஆராய்ச்சிகள் நடக்கின்றன.

இப்படியான சூழலில்தான், கோவையில் இருக்கும் ஒரு மருந்து நிறுவனம், அப்பாவி மனிதர்களைச் சோதனை எலிகளாகப் பயன்படுத்துவதாக பகீர் புகார் எழுந்துள்ளது

கோவை மேட்டுப்பாளையும் சாலையில் இருக்கிறது ஸ்பினோஸ் மருந்து ஆராய்ச்சி நிறுவனம். இந்த நிறுவனம் விளிம்பு நிலை மக்களைக் குறிவைத்து மருத்துவப் பரிசோதனையைச் செய்கிறது; இதற்காக மிகப் பெரிய  நெட்வொர்க்கே இயங்குகிறது என்று நமக்குத் தகவல் கிடைத்தது. இதுபோன்ற ஆராய்ச்சிகளுக்குச் சென்றவர்கள் மாரடைப்பு, புற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருக்கி றார்கள் என்கிற தகவல்களும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

சோதனை எலிகளா மனிதர்கள்? - பகீர் பரிசோதனைகள்... ஒரு திகில் ரிப்போர்ட்

இப்படியான பாதிப்புக்கு உள்ளானவர்களில் ஒருவர்தான் கிருஷ்ணமூர்த்தி. அவரிடம் பேசினோம். 

“பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பகுதியைச் சேர்ந்தவன் நான். கோவையில் கூலி வேலை செய்தேன். திடீரென என் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. கையில் பணம் இல்லாததால் நண்பர் ஒருவரிடம் கடன் கேட்டேன். அவர்தான் இந்த ஆராய்ச்சி மையத்தைக் கை காட்டினார். ஆரம்பத்தில் தயக்கமாக இருந்தாலும் பணத் தேவை காரணமாக வேறு வழியில்லாமல் 2017-ம் ஆண்டு இறுதியில் அங்கு சென்றேன். முதலில் என் உடலைப் பரிசோதித்து, நான் முழு ஆரோக்கியத்துடன் இருப்பதை உறுதிசெய்து கொண்டனர். ‘கொழுப்பைக் குறைப்பதற்குப் புதிய மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும், என் உடலில் கொழுப்பின் அளவை அதிகப்படுத்தி, பின்பு அதைக் கரைப்பதற்கு அந்தப் புதிய மருந்தைக் கொடுப்போம்’ என்றும் தெரிவித்தனர். இதற்காக மூன்று நாள்கள் அங்கு தங்கியிருக்க வேண்டும். அதற்கு எட்டாயிரம் ரூபாய் தருவதாகவும் சொன்னார்கள். வெறும் வயிற்றில் மாத்திரை கொடுத்தனர். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை பரிசோதனைக்காக ரத்தம் எடுத்தனர். இப்படியாக மூன்று நாள்கள் கழிந்த பின்பு என்னை அனுப்பிவிட்டார்கள்.

2018, ஜனவரியில் என்னைத் தொடர்பு கொண்டவர்கள், மீண்டும் வரச்சொன்னார்கள். என் உடலைப் பரிசோதனை செய்துவிட்டு, ‘உடலில் சிறிய பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. அதைச் சரிசெய்ய மீண்டும் அங்கு தங்க வேண்டும்’ என்றனர். அங்கு தங்கியிருந்து அவர்கள் கொடுத்த மாத்திரைகளை மீண்டும் சாப்பிட்டேன். பிறகு அனுப்பிவிட்டார்கள். அடுத்தடுத்த நாள்களில் எனக்குக் கடுமையான உடல் அசதி ஏற்பட்டது. படிக்கட்டுகள் ஏற முடியவில்லை. சிறிய வேலை செய்யவே மூச்சு வாங்கியது. ஒரு கட்டத்தில் முடியாமல் போகவே, கடந்த மே மாதம் அங்கு சென்று என் உடல்நிலை குறித்துச் சொன்னேன்.  ‘மூன்று நாள்கள் தங்கினால் சரியாகிவிடும்’ என்று சில பரிசோதனைகளைச் செய்துவிட்டு அனுப்பி விட்டனர். பிறகு ஒருவழியாகச் சமாளித்துவந்தேன். கடந்த ஜூலை மாதம் எனக்குக் கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டது. அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்றபோது, ‘ஹார்ட் அட்டாக்’ என்றவர்கள், ‘தாமதித்து வந்திருந்தால் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கும்’ என்றார்கள். அப்போதுதான் எனக்கு விபரீதம் உறைத்தது.

சோதனை எலிகளா மனிதர்கள்? - பகீர் பரிசோதனைகள்... ஒரு திகில் ரிப்போர்ட்

மாரடைப்புக்கான சிகிச்சைக்குப் பின்னர் ஸ்பினோஸ் நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு இதுகுறித்து தெரிவித்தேன். இதய மருத்துவரிடம் அழைத்துச்சென்று காண்பித்துவிட்டு ஒரு மாதத்துக்கு மாத்திரை வாங்கிக்கொடுத்தனர். தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் எனக்கு இரண்டாவது முறையாக ஹார்ட் அட்டாக் ஏற்பட்டது. ‘இதயத்தில் அதிகப்படியாகக் கொழுப்பு சேர்ந்திருப்பதாகவும் புதுச்்சேரி ஜிப்மர் அல்லது சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்குச் சென்று சோதனை செய்ய வேண்டும்’ என்றும் மருத்துவமனையில் கூறினர். ஆரோக்கியமாக இருந்த எனக்கு ஸ்பினோஸ் நிர்வாகத்தால்தான் இந்த நிலைமை ஏற்பட்டது” என்று கண்கலங்கினார்.

இதே மையத்துக்கு மருத்துவப் பரிசோதனைக்குச் சென்ற லதா என்ற பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய் வந்து, மார்பகத்தையே எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இப்படி பட்டியல் நிள்கிறது. ராஜேஸ்வரி என்பவரோ, “ஒரு அவசரப் பணத் தேவைக்காக அங்கே போனேன். ஆனா, எடை குறைவாக இருக்கறது னால என்னை வேண்டாம்னு சொல்லிட்டாங்க. அதனால, என் கணவர் சோதனைக்குத் தேர்வானார். அங்கே கொடுத்த மாத்திரைகளை எல்லாம் சாப்பிட்டாரு. ஒரு கட்டத்துல ரத்த வாந்தி எடுத்து, இறந்துட்டாரு” என்று விம்முகிறார்.

ஆராய்ச்சிக்காக ஆட்களை அழைத்து வருவதற்கென்றே புரோக்கர்கள் இருக்கிறார்கள். பணப் பிரச்னையில் இருக்கும் அப்பாவிகளை அடையாளம் கண்டு அவர்களை மூளைச்சலவை செய்து ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பி வைக்கின்றனர் புரோக்கர்கள். ஆண் ஒருவருக்கு 300 ரூபாய், பெண்ணுக்கு 1000 ரூபாய் என்று இவர்களுக்கு கமிஷன் வழங்கப்படுகிறது.

மகளிர் சுய உதவிக் குழு மூலம் பல்வேறு பணிகளைச் செய்துவரும் ராணி என்பவர் நம்மைத் தொடர்புகொண்டு பேசினார். “எங்கள் குழு மூலமாக நிறைய சமூகச் சேவைகள் செய்துவருகிறோம். ஒருமுறை ரத்த தானம் செய்ய முடிவு செய்தபோது, ஸ்பினோஸ் நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த பாலா என்பவர், ‘எங்க நிறுவனத்துக்கு வந்து ரத்தம் கொடுங்க’ என்று அழைத்தார். முதல் நாள் அங்கே போய், டெஸ்ட் எடுத்தோம். அடுத்த நாள் காலையில மாத்திரை கொடுத்தாங்க. அப்பவே, எங்களோட வந்த ஒரு பெண்ணுக்குத் தலைசுத்தல் வந்துடுச்சு. அங்கு போய் வந்த பிறகு, எனக்கு மாதவிடாய் நேரத்துல ரத்தம் அதிகமாக வெளியேறுச்சு. மருத்துவப் பரிசோதனையில எனக்குக் கர்ப்பப்பையில சதை வளர்ந்திருக்கிறது தெரியவந்துச்சு. அதை நீக்குறதுக்காக ஆபரேஷன் பண்ணிக்கிட்டேன்.

அதுக்கு அப்புறமும்கூட, அந்த கம்பெனில இருந்து ஒரு பெண் வந்து, ‘எங்ககிட்ட வெளி மாநிலத்தைச் சேர்ந்தவங்கதான் அதிகம் வராங்க. நம்ம ஊர் பெண்கள் வர்றது இல்ல. சில பரிசோதனைகளைச் செய்ய நம்ம ஊர் பெண்கள்தான் தேவைன்னு சொல்றாங்க. நீங்க நம்ம ஊர் பெண்களைக் கூப்பிட்டு வாங்க. உங்களுக்கு மாசம் முப்பதாயிரம் ரூபாய் வாங்கித் தர்றேன்’ன்னு சொன்னாங்க. ‘ஆளை விடுங்க’னு நான் ஒதுங்கிட்டேன்’’ என்றார் பீதி விலகாமல்.

‘‘இங்கு 28 நாள்கள் பேக்கேஜ் எல்லாம் உண்டு. 28 நாள்கள் தங்கியிருந்தால் 32 ஆயிரம் ரூபாய் கொடுப்பார்கள். நடுவில் வீட்டுக்குப் போக அனுமதி இல்லை. வாரத்துக்கு ஒரு முறை உறவினர்களுடன் பேசலாம். உள்ளே நுழைந்த உடனேயே  கொண்டு செல்லும் உடைமைகளை ஓர் அறையில் வைத்துப் பூட்டிவிடுவார்கள். அவர்கள் கொடுக்கும் உடைகளைத்தான் அணிய வேண்டும். அந்த உடையில்  நம்பர் எழுதப்பட்டிருக்கும். அந்த எண்ணுடன் சேர்த்து ‘சப்ஜெக்ட்’ என்றுதான் அழைப்பார்கள். கிட்டத்தட்ட பிக்பாஸ் வீடு போலத்தான். நேரம் காலம் கூடத்தெரியாது’’ என்று தங்கள் பகீர் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர் பெயர் சொல்ல விரும்பாத சிலர்.

ஸ்பினோஸ் நிறுவனத்துக்குச் சென்றோம். வளாகம் முழுவதும் சி.சி.டி.வி கேமராக்கள் உள்ளன. நாம் சென்றபோது ஆந்திரத்தைச் சேர்ந்த இருவர் சோதனையை முடித்துவிட்டு வெளியில் வந்திருந்தனர். அவர்களிடம் பேச்சுக் கொடுத்தோம். “ஏஜென்ட் ரெட்டி மூலம் இங்க வந்தோம். காசெல்லாம் கரெக்டா கொடுத்துடுவாங்க. போக்குவரத்து செலவுக்கும் பணம் கொடுப்பாங்க” என்றவர்களிடம் ரெட்டியின் மொபைல் போன் எண் வாங்கி, அவரை அழைத்தோம். வேறு பெயர் மற்றும் ஊர் பெயர் சொல்லி அடையாளப்படுத்திக்கொண்டு, “அவசரமாகப் பணம் தேவைப்படுகிறது. சோதனைக்கு வரலாமா?” என்று கேட்டோம். “நாளைக்கு காலையில வாங்க. செக் அப் முடிச்சதும், நைட் உள்ள போயிடலாம். ரெண்டு நாள் கழிச்சு வெளியே வந்திடலாம். அஞ்சு நாள் கழிச்சு மறுபடியும் ரெண்டு நாள் தங்கணும். ஏழாயிரம் ரூபாய் ப்ளஸ் டிராவல் அலவென்ஸ் கொடுப்போம்” என்றார்.

தொடர்ந்து அவர் எண்ணிலிருந்து குறுந்தகவல் வந்தது. அதில், ‘ஐயாம் பி.கே.ரெட்டி. ஸ்பினோஸ் லேப். கோயம்புத்தூர். 2 பீரியட். 24 மணி நேரம். 5 நாள்கள் கேப். 252 மில்லி லிட்டர் லாஸ். பி.எம்.ஐ 18. பே 7,000 ரெஃபரன்ஸ் பி.கே. ரெட்டி’ என்று இருந்தது. மறுநாள் மற்றொரு எண்ணிலிருந்து பி.கே.ரெட்டி மீண்டும் குறுந்தகவல் அனுப்பினார். அதில், ‘2 பீரியட். 72 மணி நேரம். 3 நாள்கள் கேப். 378 மில்லி லிட்டர் லாஸ். பி.எம்.ஐ 18. பே 12,000’ என்று இருந்தது.

சோதனை எலிகளா மனிதர்கள்? - பகீர் பரிசோதனைகள்... ஒரு திகில் ரிப்போர்ட்

இதைத் தொடர்ந்து ஜூனியர் விகடனிலிருந்து வருகிறோம் என்று சொல்லி அங்கு சென்றபோது, உள்ளே அனுமதிக்கவில்லை.  நாம் தொடர்ந்து முயற்சி செய்த பிறகு, அந்த மையத்தின் இயக்குநர் கிருஷ்ணராஜ் நம்மைத் தொடர்புகொண்டு சந்திக்க வருமாறு கூறினார்.

“நாங்கள் மத்திய அரசிடம் அனுமதி பெற்று இயங்கிவருகிறோம். அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றுகிறோம். இங்கு வருவோருக்கு முழுப் பரிசோதனை செய்துவிட்டு, ஆரோக்கியமாக இருந்தால்தான் சோதனைக்கே உட்படுத்துவோம். சோதனை செயல்முறைகளை வீடியோவில் பதிவு செய்கிறோம். எலி, குரங்கு உள்பட விலங்குகளுக்கு வெற்றிகரமாக சோதனை செய்து முடித்தபிறகுதான் மனிதர்களைச் சோதனை செய்வோம். என்ன செய்யப்போகிறோம் என்பது குறித்து வீடியோ காட்சிகள் மூலம் அவர்களுக்கு விளக்குவோம். நிறுவனத்தில் நெறிமுறைகள் குழு (Ethics Committee) உள்ளது. அதில், மருத்துவ நிபுணர்களும் ஆலோசகர்களும் உள்ளனர். அந்தக் குழுவினரின் அறிவுரைக்குப் பின்பே சோதனைகள் நடக்கும்.  அமெரிக்கா போன்ற நாடுகளில் புழக்கத்தில் உள்ள சிறந்த மருந்துகளை, நம் நாட்டு மக்களும் பயன்பெற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இயங்கிவருகிறோம். ‘இங்கு சோதனைக்கு வந்ததால் மாரடைப்பு ஏற்பட்டது’ என்று சொல்லும் கிருஷ்ணமூர்த்திக்கும் விதிமுறைப்படி தான் சோதனை செய்தோம். அவருக்குக் கொழுப்பைக் குறைக்க மருந்து கொடுக்கவில்லை. அமெரிக்காவில் புழக்கத்தில் உள்ள புற்றுநோய் தடுப்பு மருந்தைத்தான் (Anti Cancer drug) கொடுத்தோம்.  அந்த மருந்தால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அவரது குற்றச்சாட்டில் உண்மை இல்லை” என்றார்.

ஏழை மக்கள் ஒருபோதும் சோதனை எலிகள் அல்ல... அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும்.

- இரா.குருபிரசாத், படங்கள்: தி.விஜய்

தவறு இருந்தால் நடவடிக்கை

இதுகுறித்து இந்தியப் பொது மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பின் தெற்கு மண்டலத் துணை இயக்குநர் டாக்டர் சாந்தி குணசேகரனின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். அவர், “மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்கள்மீது நாடு முழுவதும் இதுபோன்ற புகார்கள் எழுந்துள்ளன. புகாரின் பேரில் ஆய்வு நடத்தி, விதிமுறைகளை மீறிச் செயல்படும் நிறுவனங்களுக்கு அனுமதியை ரத்துசெய்து வருகிறோம். ஸ்பினோஸ் நிறுவனத்தின்மீதும் பல்வேறு குளறுபடிகள் நிலவுவதாகப் புகார்கள் வந்துள்ளன. விசாரணை நடத்தி, தவறுகள் நடந்திருந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

15 கோடி விலங்குகள்

மனிதர்களுக்காகத் தயாரிக்கப்படும் மருந்துகள், ஆபத்தானவையா இல்லையா என்பது குறித்துச் சோதனை நடத்த இதுவரை 15 கோடி விலங்குகள் ஆய்வுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில், 90 சதவிகிதம் எலிகள், சுண்டெலிகள். நாய்கள், சிம்பன்சிகள், குரங்குகளும் இதில் ஈடுபடுத்தப்படுகின்றன. சோதனைக்குப் பெண் மற்றும் வயதான விலங்குகள் பயன்படுத்தப்படுவதில்லை. ஆண் மற்றும் குட்டி விலங்குகளே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.