அரசு அவசர சிகிச்சைப் பிரிவில் போலி டாக்டர்! - பின்னணியில் முன்னாள் அமைச்சரின் மகன்?

அரசு அவசர சிகிச்சைப் பிரிவில் போலி டாக்டர்! - பின்னணியில் முன்னாள் அமைச்சரின் மகன்?
அலோபதி தொடங்கி அக்குபஞ்சர் மருத்துவம் வரைக்கும் போலி டாக்டர்கள் சர்ச்சைகளே தீராத நிலையில், ‘நெடுஞ்சாலை விபத்துக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட தமிழக அரசின் உயிர் காக்கும் அவசர சிகிச்சை மையத்தில் போலி மருத்துவர் பணியாற்றிவருகிறார்’ என்று பகீர் தகவலை வெளியிட்டிருக்கிறது சட்டப் பஞ்சாயத்து இயக்கம்.

இதுகுறித்து சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் வழக்கறிஞர் பாலாஜி கூறுகையில், ‘‘சென்னை ஈஞ்சம்பாக்கத்தில், நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்குவோருக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதற்கான அரசு அவசரச் சிகிச்சை மையம் இயங்கிவருகிறது. அங்கு இறப்புகள் அதிகம் நேரிடுவதாக எங்களுக்குத் தகவல் வந்தது. எனவே, அது குறித்து விசாரித்தோம். சென்னையில் இயங்கி வரும் ‘GVK EMRI’ என்ற நிறுவனம், ஒப்பந்தம் அடிப்படையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமனம் செய்துவருகிறது. அவர்கள்தான் ரேச்சல் ஜெனிபர் என்பவரை அந்த மருத்துவமனையில் வேலைக்குச் சேர்த்துள்ளனர். அவர் செவிலியர் பணிக்கான தகுதி மட்டுமே கொண்டவர். ஆனால், தான் ஒரு மருத்துவர் என்று சொல்லி வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். அதை நாங்கள் ஆதாரங்களுடன் கண்டுபிடித்தோம். அவர் மீது நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தவுடன், ‘GVK EMRI’ நிறுவனத்தினர் என்னைத் தொடர்புகொண்டு சமாதானம் செய்ய முயன்றனர். ஜெனிபர் தற்போது தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்” என்றார்.
ஜெனிபர், அப்போலோ மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றியவர். மீன்வளத் துறை முன்னாள் அமைச்சர் ஜெயபாலின் மகன் தினேஷின் சிபாரிசில்தான் மருத்துவர் என்று சேர்க்கப் பட்டதாகச் சொல்லப்படுகிறது. இப்போது ஜெனிபர் மீது, ‘GVK EMRI’ நிறுவனத்தின் சார்பிலும் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தைச் சேர்ந்த செல்வகுமாரிடம் பேசினோம். “மருத்துவம் படித்ததற்கான சான்றிதழ்களை எங்களிடம் காட்டித்தான் ஜெனிபர் மருத்துவர் வேலைக்குச் சேர்ந்தார். அப்போது சந்தேகம் எழாததால், சான்றிதழை உடனடியாகச் சரிபார்க்க வில்லை. இப்போது சான்றிதழைச் சரிபார்த்தபோது ஜெனிபர் போலி மருத்துவர் என்று தெரிந்தது. யாருடைய சிபாரிசின் பேரிலும் நாங்கள் ஜெனிபரை வேலைக்குச் எடுக்கவில்லை’’ என்றார்.

இந்தச் சர்ச்சையில் சிக்கியிருக்கும் மருத்துவர் தினேஷிடம் பேசியபோது, ‘‘ஜெனிபரை எனக்கு மருத்துவர் என்றுதான் தெரியும். அப்போலோவில் இருந்து வந்துவிட்டதாகவும், வேலை வேண்டும் என்று அவரது பயோடேட்டாவை எனக்கு மின்னஞ்சலில் அனுப்பினார். ஆனால், நான் அவருக்கு சிபாரிசு செய்யவில்லை. மீண்டும் ஒருமுறை என்னைத் தொடர்புகொண்டார். அப்போதும் நான் கண்டுகொள்ளவில்லை. அதன் பிறகு அவர் என்னைத் தொடர்புகொள்ளவில்லை. 2017-ல் அக்டோபரில் நான் அரசு அவசர சிகிச்சை மையத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். ஜெனிபர் அதே ஆண்டு டிசம்பரில் வேலைக்குச் சேர்ந்தார். மூன்று மாதங்களுக்குள் என்னால் எப்படி அவருக்கு சிபாரிசு செய்திருக்க முடியும்? யார் சிபாரிசு செய்தார்கள் என்பதை நீங்கள் நிர்வாகத்திடம்தான் கேட்கவேண்டும்.
ஜெனிபர் அங்கு வேலைக்குச் சேர்ந்தது முதல் மருத்துவர்களுடன் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. அங்கிருந்த ஒருவர் ஜெனிபருக்கு பக்கபலமாக இருந்தார். ஒருகட்டத்தில் அவரது சிகிச்சை உள்ளிட்டவற்றைக் கவனித்தபோது, ஜெனிபர் மருத்துவராக இருக்க மாட்டார் என்று தோன்றியது. நான் சந்தேகப்பட்டது இப்போது உறுதியாகி இருக்கிறது. என் தந்தை முன்னாள் அமைச்சர் என்பதால், இப்படிச் சித்திரிக்கிறார்கள். இதுபற்றி நான் எங்கு வேண்டுமானாலும் விளக்கம் தரத் தயாராக இருக்கிறேன்’’ என்றார் உறுதியாக.

போலி டாக்டர் சர்ச்சையில் சிக்கியிருக்கும் ஜெனிபரிடம் பேசினோம். ‘‘பி.எஸ்.சி நர்சிங் படித்தவர்கள் அவசரச் சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும்போது பிரிஷ்க்ரிப்ஷன் எழுதலாம் என்று சொல்லி, என்னை தினேஷ் வேலைக்குச் சேர்த்தார். அவர் எனக்கு அனுப்பிய மெயிலும் என்னிடம் இருக்கிறது. என்னிடம் உரிய முறையில் விளக்கம் கேட்காமல் போலீஸில் புகார் செய்திருக்கின்றனர். இதுகுறித்து வேறு எதையும் பேச விரும்பவில்லை’’ என்று முடித்துக்கொண்டார்.
உயிர்காக்கும் மருத்துவத் துறையில் உள்ள போலி மருத்துவர்களை அரசு உடனடியாக அடையாளம் காணவேண்டும். அவர்கள்மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- இ.லோகேஷ்வரி