Published:Updated:

`கிரெடிட் கார்டுகள் வேண்டவே வேண்டாம்... ஏன்? மாற்று என்ன?’ - சேமிப்பு வழிகாட்டி

தற்கொலை செய்துகொள்பவர்களில் பெரும்பாலானவர்கள் வருமானத்துக்கு ஒருவரை மட்டுமே நம்பியிருக்கும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்.

`கிரெடிட் கார்டுகள் வேண்டவே வேண்டாம்... ஏன்? மாற்று என்ன?’ - சேமிப்பு வழிகாட்டி
`கிரெடிட் கார்டுகள் வேண்டவே வேண்டாம்... ஏன்? மாற்று என்ன?’ - சேமிப்பு வழிகாட்டி

``வேலையில் பாதுகாப்பு இல்லை. என் குடும்பத்தை நினைத்து எனக்கு பயமாக இருக்கிறது. என் குடும்பத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள். எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது. நாம் (ஐ.டி ஊழியர்கள்) வலுவாக இல்லை'' - இப்படி எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்டார், புனேவைச் சேர்ந்த ஐ.டி ஊழியர் துர்காபிரசாத். இந்தச் சம்பவம் நடந்தது கடந்த ஆண்டில். அவரைத் தொடர்ந்து, பெங்களூரைச் சேர்ந்த பவேஷ் ஜெய்ஷ்வால், வொய்ட் ஃபீல்டிலிருக்கும் தனது அலுவலகத்தின் 12-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். 

அதற்கடுத்த மாதமே, ஆந்திராவைச் சேர்ந்த ஐ.டி ஊழியர் பிரியங்கா சென்னைத் துரைப்பாக்கத்தில் உள்ள தன் அலுவலகத்தின்

9 வது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டார். இவர்கள் மட்டுமல்ல, இப்படிப் பல வழிகளில் தங்கள் உயிர்களை மாய்த்துக்கொள்கிறார்கள் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் இளம் வயதினர். குறிப்பாக ஐ.டி. ஊழியர்கள். ஒருசிலர், தான் மட்டுமல்லாமல், தங்களின் குடும்பத்தினரையும் தற்கொலைக்கு உட்படுத்திவிடுகிறார்கள்.

``குளிரூட்டப்பட்ட அறை, கம்யூட்டரில் வேலை, கை நிறைய சம்பளம் அதனால் மிக சந்தோஷமாக வாழ்ந்துவருகிறோம் என்றுதான் வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்குத் தோன்றும். நாங்கள் அனுபவிக்கும் மன வேதனைகள், நெருக்கடிகள் வெளியில் தெரியாது. பெருகிவரும் தற்கொலைகள், இளம்வயது மரணங்கள் என ஐ.டி உள்ளிட்ட தனியார் நிறுவன ஊழியர்கள் பலரைத் தொடர்ச்சியாக இழந்துவருகிறோம்'' என்கிறார் தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கான மன்றத்தின் தலைவர் வசுமதி வசந்தி.

தேசியக் குற்றப்பதிவுகள் ஆணையத்தின் கணக்கீட்டின்படி, 2010 முதல் 2015 வரையான ஐந்தாண்டுக் கால இடைவெளியில், சுமார் 60,000 தனியார் நிறுவன ஊழியர்கள் தற்கொலை செய்து இறந்து போயிருக்கிறார்கள். அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கிட்டத்தட்ட 8,000 பேர். இதற்குக் காரணம் என்ன?

``பெரும்பாலான ஐ.டி ஊழியர்கள் பணமாகச் சேமிப்பதைவிட சொத்துகளாக வாங்குவதற்கே ஆசைப்படுகிறார்கள். அதற்குத் தேவையான பணம் கையில் இல்லாவிட்டாலும், கடனாகக் கொடுப்பதற்கு வங்கிகள் தயாராக இருப்பதால் லோன் போட்டுக்கொள்ளலாம் எனத் தைரியமாக இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்தவர்களில் பலர் ஒருமுறை `ஆன் சைட்' போய் வந்தால் போதும், ஹோம் லோனை அடைத்துவிடலாம்' என்ற நம்பிக்கையிலேயே வீடு வாங்கிவிடுகிறார்கள். ஆனால், அவர்கள் நினைக்கும் நேரத்தில் `ஆன் சைட்' போவதற்கு வாய்ப்பில்லாமல் போகிறது. அதனால் மிகப்பெரிய கடன் சுமை, அவர்களின் கண் முன்னால் நிற்கிறது. திடீரென வேலையை விட்டு நீக்கப்பட்டால், மாதம் பிறந்தவுடன் வரிசை கட்டி நிற்கும் இ.எம்.ஐக்களை நினைத்து மலைத்துப் போய், மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். மனஅழுத்தம் தாங்காமல் தற்கொலையும் செய்துகொள்கிறார்கள்.

தற்கொலை செய்துகொள்பவர்களில் பெரும்பாலானவர்கள் வருமானத்துக்கு ஒருவரை மட்டுமே நம்பியிருக்கும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். இரண்டு, மூன்று நபர்கள் சம்பாதிக்கும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் தற்கொலை செய்துகொள்வதில்லை. மற்ற உறுப்பினர்களின் வருமானத்தின் மூலம் நெருக்கடிகளைச் சமாளிக்கமுடிகிறது. 

இது ஒருபுறமிருக்க, தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு கலர் கலராக பல கிரெடிட் கார்டுகள் வீடு தேடி வந்துவிடுகின்றன. யாரோ ஒருவர் நமக்காகப் பணம் கட்டுகிறார்கள் என்று நினைத்துக்கொண்டே செலவு செய்துவிடுகிறார்கள். அதனால் சம்பளம் வாங்கினால் கிரெடிட் கார்டுகளுக்குப் பணம் கட்டுவதற்கே சரியாக இருக்கிறது. கையிலிருந்து பணம் எடுத்துக்கொடுத்து ஒரு பொருள் வாங்கும்போதுதான் பணத்தின் அருமையும் மதிப்பும் புரியும். கையிலிருந்து பணம் செலவழிகிறது என்ற எண்ணம் ஏற்படும். கார்டுகளை ஸ்வைப் செய்து பொருள்கள் வாங்கும்போது இந்தப் புரிதல் ஏற்படுவதில்லை. அதனால் மனம்போல் செலவழிக்கும் போக்கு அதிகமாக உள்ளது'' எனும் வசுமதி தனியார் நிறுவன ஊழியர்களுக்குச் சில வேண்டுகோள்களையும் முன்வைக்கிறார்.

``அதிக முதலீட்டில் வீடு, கார் என என்ன வாங்கினாலும் அதற்குச் செலவாகும் தொகையில் பெரும்பகுதியைக் கையிருப்பில் இருந்தே செலுத்த வேண்டும். குறைந்த பகுதியை மட்டும் லோன் மூலமாகச் செலுத்தலாம். அதன்மூலம் மன அழுத்தத்தையும், அதனால் உண்டாகும் தற்கொலை எண்ணங்களையும் தவிர்க்கமுடியும். அதற்கு, சேமிப்பு மிகவும் அவசியம்'' என்கிறார் வசுமதி.

இதுகுறித்து மனநல மருத்துவர் குறிஞ்சியிடம் பேசினோம்.

``திடீரென வேலையிழக்கும் ஒருவர், புதிய வேலையைத் தேடிக்கொள்வதற்கு சில மாதங்கள் ஆகும். அதுவரை குடும்பத்தைச் சமாளிக்க போதிய கையிருப்பு இல்லாததால் மன நெருக்கடிகளுக்கு ஆளாகிறார்கள். அவர்களால் நிம்மதியாக வேலை தேடவும் முடிவதில்லை. அப்படியே முடங்கிப் போய்விடுகிறார்கள். தேவையற்ற மனநல பாதிப்புகளுக்கு ஆளாகி தற்கொலையும் செய்துகொள்கிறார்கள்.

குறைந்தது ஆறு மாதகாலம், அவர்களின் குடும்பச் செலவைச் சமாளிப்பதற்குத் தேவையான பணம் கையிருப்பு இருந்தால், அவர்களால் நிம்மதியாக வேலை தேட முடியும். அதற்குச் சேமிப்பு மிகவும் அவசியம். பொருள்களாக இல்லாமல் பணமாகவே வங்கிக் கணக்குகளில் குறிப்பிட்ட தொகையைப் பராமரித்து வரவேண்டும். கையில் பணம் இருக்கும்போது தன்னம்பிக்கை பிறக்கும். எவ்வித மன நெருக்கடியும் இல்லாமல் அடுத்தகட்டத்தை நோக்கி நகர முடியும்'' என்கிறார் அவர்.

ஆசை எல்லோருக்கும் இயல்பானதுதான். அதேசமயம் அதைக் கடன் வாங்கித் தீர்த்துக்கொள்ளத் தேவையில்லை. சிறுகச் சிறுகச் சேமித்து நம் ஆசைகளைப் பூர்த்தி செய்துகொள்ளலாம். அப்படிச் செய்தால் நாம் வாங்கிய பொருள் எப்போதும் நம் கையை விட்டுப் போகும் என அச்சப்படத் தேவையில்லை. நிம்மதியாகவும், ஆரோக்கியமாகவும் வாழலாம்.