அரசியல்
சமூகம்
Published:Updated:

“குணமாகிட்டோம் கூட்டிட்டுப்போக ஆளில்லை!”

“குணமாகிட்டோம் கூட்டிட்டுப்போக ஆளில்லை!”
பிரீமியம் ஸ்டோரி
News
“குணமாகிட்டோம் கூட்டிட்டுப்போக ஆளில்லை!”

கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவக் காப்பகம் ஒரு லைவ் ரிப்போர்ட்...

“குணமாகிட்டோம் கூட்டிட்டுப்போக ஆளில்லை!”

பெரு வணிகம், நட்சத்திர விடுதிகள், சாலையோர உணவகங்கள், அரசியல் மேடைகள், அரிதாரம் பூசிய மேடைகள், கேளிக்கைகள், கொண்டாட்டங்கள், போராட்டங்கள், அடிதடிகள், நிழல் உலகக் குற்றங்கள், நடுத்தர வர்க்க இயலாமைகள், மேல்தட்டு ஆடம்பரங்கள்... என எப்போதும்போல இயங்கிக்கொண்டிருக்கிறது சென்னை மாநகரம். அது இயங்குகிற வேகத்தில் நாம் காண மறந்த, காண விரும்பாத சில பகுதிகள் இருக்கலாம். அந்தப் பகுதியைப் பற்றி மேலோட்டமாக அறிந்துகொண்டு அதன்மீது நாம் எழுப்பும் பொதுப் பிம்பங்கள் நிறைய. அப்படியான ஓர் இடம்தான் சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவக் காப்பகம். வெளியாட்கள் நுழையக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பகுதி. இப்படியான நிலையில்தான் பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகு உள்ளே நாம் அனுமதிக்கப்பட்டோம். இது பரபரப்பு தேடும் முயற்சி அல்ல... உண்மையைத் தேடும் பக்குவப்பட்ட முயற்சி!

“குணமாகிட்டோம் கூட்டிட்டுப்போக ஆளில்லை!”

கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பகத்தில் நுழைந்ததும், பசுமையான கானகத்தில் நுழைந்து விட்டது போன்ற உணர்வு. நோயாளிகள் காலையில் சீக்கிரமே எழுந்துவிடுகிறார்கள். காலை உணவுக்குப் பின்பு, மருந்து மாத்திரைகளை உட்கொண்டு, தோட்டத்தைச் செப்பனிடு கிறார்கள். இனிமையாக இருக்கிறது அந்தச் சூழல்... அதுவும் இயற்கை விவசாயம்! உண்மையில், அவர்களைப் பார்க்கும்போது மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போலத் தெரியவில்லை. யாரையும் பொருட்படுத்தாது செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டும், லாவகமாக களைகளைப் பிடுங்கிக்கொண்டும், மண்ணைக் கிளறிக்கொண்டும் இருந்தார்கள். சிலர் காய்கறி செடிகளுடன் வாஞ்சையுடன் பேசியபடியே அவற்றைப் பராமரித்த காட்சியைப் பார்க்க மனம் லேசாகிப்போனது. ஒருகாட்சி கண்ணை உறுத்தியது. அங்கே வடஇந்தியாவைச் சேர்ந்தவர்கள் அதிகம் தென்பட்டார்கள். “ஏன்?” என்று உடன் வந்த நர்ஸ் சாந்தியிடம் கேட்டோம்

“வட இந்தியாவுல இருக்கிறவங்க தங்களோட பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள், உறவினர்கள் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால் ஒருகட்டத்துக்கு மேல பார்த்துக்க முடியாம... ஒண்ணு, சென்ட்ரலுக்கு ரயில் ஏத்தி அனுப்பிடுவாங்க... இல்லை, கன்னியாகுமரிக்கு அனுப்பிடுவாங்க. ரயில்ல வர்றவங்க, வர்ற வழியில எங்க இறங்கணும்னு தோணுதோ அங்க இறங்கிடுவாங்க. அங்க இங்க சுத்தி, அடிபட்டு, உதைப்பட்டு, பிரச்னையாகி கடைசியில மனநலம் பாதிக்கப்பட்டவங்கன்னு தெரிஞ்சு, போலீஸ் இங்க வந்து சேர்த்துடும். கடந்த பத்து வருஷமா இப்படியான நிகழ்வுகள் அதிகரிச்சு இருக்கு. அதனாலதான் இங்க வட இந்தியாவைச் சேர்ந்தவங்க நிறையபேர் இருக்காங்க” என்று அவர் சொன்னபோது சமூக, பொருளாதார, மனித உறவுகள் சார்ந்த நெருக்கடிகளில் மரத்துப்போன உணர்வுகளின் யதார்த்தம் முகத்தில் அறைந்தது.  

“குணமாகிட்டோம் கூட்டிட்டுப்போக ஆளில்லை!”

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அங்கே அளிக்கப்படும் சிகிச்சைகளில் ஒன்று, தொழில்முறை மருத்துவச் சிகிச்சை. மனநலம் ஓரளவு குணமானவர்களுக்கு, சில தொழில்களைக் கற்றுக்கொடுக்கிறார்கள். அவர்கள் இங்கிருந்து வெளியே போகும்போது ஏதாவது வேலை செய்தோ அல்லது தொழில் செய்து பிழைக்கும் அளவுக்கு நம்பிக்கை அளிக்கிறார்கள். வேறொரு விஷயத்தில் தொடர்ந்து கவனம் செலுத்துவதன் மூலம் இதொரு சிகிச்சை முறையாகவும் அவர்களுக்கு இருக்கிறது.

அங்கிருந்து ஒவ்வொரு வார்டாகச் சென்று பார்வையிட்டோம். ஏழாம் எண் வார்டுக்குள் எட்டிப் பார்த்தபோது அதிர்ந்துவிட்டோம். இரும்புக் கதவால் பூட்டப்பட்ட அறையில் உடம்பில் ஆடையின்றி ஆதி மனிதர்களைப் போன்ற காட்சியைக் அங்கே கண்டோம். தன்னிலை மறந்து சிரித்துக்கொண்டும் அழுது கொண்டும் தனியாகப் பேசிக்கொண்டும் பாடிக் கொண்டும் இருந்தார்கள் அவர்கள். இவர்களைப் பற்றி அறிந்துகொள்ள கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவக் காப்பகம் மற்றும் மருத்துவமனை முதல்வர் பூர்ணசந்திரிகாவிடம் பேசினோம். “ஏழாவது வார்டுல இருக்கிற பேஷன்ட்ஸ் ரொம்பத் தீவிரமாக மனநிலை பாதிக்கப்பட்டவங்க. உடம்புல துணிகூடப் போட்டுக்க மாட்டாங்க. போட்டுவிட்டாலும் கழட்டிடுவாங்க. சில நேரங்கள்ல வன்முறையாக நடந்துக்கவும் வாய்ப்பு இருக்கு. அவங்களை அடைச்சு வெச்சிருக்கிறோம்ன்னு சொல்றதைவிட அவங்களைப் பாதுகாப்பாகப் பேணிக் காக்கிறோம்னு சொல்றதுதான் சரி. இவங்களை வெளியிலிருந்து பார்க்கிறவங்களுக்குதான் பலதும் தோணும். ஆனா, உண்மையில் எங்களுக்கு அவங்க, குழந்தைங்க மாதிரிதான்” என்றார் பரிவுடன்.

“குணமாகிட்டோம் கூட்டிட்டுப்போக ஆளில்லை!”

அடுத்து சிறைவாசிகள் வார்டுக்குச் சென்றோம். கொலை, கொள்ளைபோன்றக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் அதைச் செய்திருக்கிறார் என்றாலும் அல்லது அதற்குப் பிறகு மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்றாலும் அவர்கள் இங்கு கொண்டுவரப்படுகிறார்கள். அங்கே உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை. “உங்களுக்குப் பாதுகாப்பானது அல்ல” என்று அறிவுறுத்தப் பட்டதால் அங்கிருந்து கிளம்பினோம். வெளி நோயாளிகள் பிரிவுக்குச் சென்றோம். சமீபத்தில்தான் அவர்களின் மனநிலை பாதிக்கப் பட்டிருப்பதால் மூர்க்கம் குறையாமல் இருந்தனர்.

பாதிக்கப்பட்டவர்களின் உடன் இருப்பவர்களின் அனுபவங்களும் வலிமிகுந்த தாகவே இருக்கின்றன. இந்த வார்டில் மதுவால் பாதிக்கப்பட்ட குடிநோயாளிகளே அதிகம். தமிழக அரசின் கேடுகெட்ட மதுக்கொள்கை தினம் தினம் எத்தனை எத்தனை குடும்பங்களை நடைப்பிணங்களாக மாற்றிக்கொண்டிருக்கிறது என்பதற்காகக் கண்முன் சாட்சியாக இருக்கிறது இந்த வார்டு. குடிநோயாளிகளின் உறவுகள் சொல்லும் கண்ணீர் சிந்தும் கதைகள் நம் ரத்தத்தை உறைய வைக்கின்றன. ஆட்சியாளர்களை அங்கே அமர வைத்து இந்தக் கதைகளைக் கேட்க வைக்க வேண்டும் என்று தோன்றியது.

“குணமாகிட்டோம் கூட்டிட்டுப்போக ஆளில்லை!”

மனநலக் காப்பகத்தின் பெண்கள் பகுதிக்குச் சென்றோம். தொழில்முறை மருத்துவச் சிகிச்சையாகப் பெண்களுக்குக் கைவினைப் பொருள்கள் செய்யக் கற்றுக்கொடுக்கிறார்கள். நம்மைப் பார்த்ததும் ஒரு பெண்ணுக்குத் தன்னுடைய யார் நினைவு வந்தது என்று தெரியவில்லை... ‘மாமா... மாமா...’ என்று கண்ணீர் பெருக்குடன் தொண்டை நரம்பு புடைக்க அவர் தேம்பித் தேம்பி அழுதார். மனமெல்லாம் ரணமாக... அங்கிருந்து நகர்ந்தோம். கடைசி வரை அந்தப் பெண் பார்த்த பார்வையைக் காலத்துக்கு மறக்க முடியுமா என்று தெரியவில்லை. முதியவர் ஒருவர் வந்திருந்தார். எழுபது வயது இருக்கும். அவரைப் பார்த்ததும், வெடித்த அழுத அந்தப் பெண், “Daddy, nobody’s recoginze me... nobody’s recoginze me...” என்பதைத் திரும்பச் திரும்பச் சொல்லித் தந்தையின் சட்டையைப் பிடித்து உலுக்கினார். அங்கீகாரம் மறுக்கப்பட்ட துயரத்தின் வலியை அங்கே நாம் உணர முடிந்தது.

மனநல மருத்துவமனையில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இதுகுறித்தும் முதல்வர் பூர்ணசந்திரிகாவிடம் கேட்டோம். ஒரு கணம் உற்று ஆழமாகப் பார்த்தவர் பெருமூச்சுடன் பேசினார். “ஆண்களைவிட பெண்களுக்கு உளவியல்ரீதியானப் பிரச்னைகள் அதிகம். வேலைக்குப் போகிற ஆண்கள் அவங்களோட மனப்பாரத்தை இறக்கி வைக்க ஆயிரம் வழிகளை வெச்சிருக்காங்க. ஆனா, பெண்களுக்கு அப்படி இல்லை. பலநூறு கனவுகளுடன் கணவன் வீட்டுக்கு வர்றவங்களுக்கு, எல்லாம் கனவுகளும் பொய்த்துப்போய்.... கடைசியாகத் தன்னோட மனம் விட்டுப் பேசவும் தன்னோட பேச்சைக் கேட்கவும் ஒரு ஜீவன் இருக்காதான்னு ஏங்குறாங்க. அதுவும் கிடைக்காத நிலையில்தான் இப்படி உடைஞ்சுப் போய், மன அழுத்தத்துக்கு ஆளாகி, அதன் அடுத்த கட்டமாக மனப் பிறழ்வு, மனச் சிதைவுன்னு பாதிக்கப்படுறாங்க. அதனோட முடிவுதான் இங்க நீங்க பார்க்கிற பெண்கள். நான் சொல்றது பொதுவான காரணிகள். இது தவிர்த்துப் பல்வேறு தனிப்பட்ட சூழல், நெருக்கடிகளாலும் பாதிக்கப்பட்ட இங்கே பெண்கள் வருகிறார்கள்” என்றார்.

“குணமாகிட்டோம் கூட்டிட்டுப்போக ஆளில்லை!”

அமைதி, ஆச்சர்யம், கோபம், வெறுப்பு, ஆனந்தம், வீரம், அருவருப்பு, நகைச்சுவை, கருணை என எல்லா உணர்வுகளும் நம்மைப் போலவே இவர்களுக்கும் இருக்கிறது. ஆனால் அதை வெளிப்படுத்துவதில் அவர்களிடம் இருக்கும் வெகுளித்தனமே நம்மிடமிருந்து அவர் களை வேறுபடுத்திக் காட்டுகிறது. இன்னொரு பக்கம் ஒரு உண்மை மனதை வெகுவாகப் பாதிக்கிறது. மனநலக் காப்பகத்தில்
இருப்பவர்களில் கணிசமானவர்கள் மனநலம் குணமானவர்கள்.

“எனக்கு நல்லா குணமாயிடுச்சுங்க. ஆனா, கூட்டிட்டுப் போக  யாரும் இல்லை. சொந்த ஊருகூட மறந்துடுச்சு. அப்படியே விசாரிச்சு, அங்கே போனாலும் நம்மை சேர்த்துக்கிடுவாங் களான்னுத் தெரியலை” என்று சொன்ன ஒரு பெரியவரிடம், “உங்க குழந்தைங்க, உடன் பிறந்தவங்களைக்கூட நினைவு இல்லையா?” என்றோம். விரக்தியாகச் சிரித்தவர், “அதெல்லாம் மறக்க முடியுமா தம்பி... இங்க வந்து 15 வருஷமாகுது. ரெண்டொரு முறை வந்து என்னை பார்த்ததோட சரி... அவங்களுக்கே நான் தேவையில்லாத சுமையாகிட்டேன். அதேசமயம் மனநலம் பாதிக்கப்பட்ட எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமச் சிகிச்சை கொடுத்து, என் அசிங்கத்தை எல்லாம் வாரி துடைச்சு, என்னை ஒரு குழந்தையாட்டம் இங்கிருக்கிறவங்க பார்த்துக்கிட்டாங்க. அவங்களை விட்டுப்போக மனசில்லை. இதுதான் என் உலகம். வெளியே போனாச் செத்துடுவேன் தம்பி...” என்று குரல் கம்ம அவர் பேசியபோது நமக்கும் கண்கள் குளமாகின.

இதுபோன்ற பலரது அழுகைகளைக் கேட்டுக் கேட்டு இறுகிக்கிடக்கின்றன கண்ணீர் கோட்டையின் சுவர்கள். இந்த உலகம் இயங்கிக்கொண்டிருப்பது அன்பு என்கிற அச்சாணியில்தான். அதன் கண்ணிகள் எங்கோ அறுபடுகிறபோது மனிதர்களை நாம் இழக்கிறோம். ‘என்னைக் கை விட்டுவிட்டீர்களே’ என்று இருகரம் விரித்துக் கூக்குரலிடுகிறார்கள் அந்த மனிதர்கள். அத்தனையும் அறிந்தே பரபரப்பின் வழித்தடத்தில் கண்டும் காணாமல் கடந்துச் செல்கிறோம். ஆனால், எதை நோக்கிச் செல்கிறோம் என்பதற்கான விடை நம்மிடம் இருக்கிறதா?

- தமிழ்பிரபா