Published:Updated:

`இரைப்பைப் புற்றுநோய் அறிகுறிகள் தெரிந்தால் அலட்சியம் வேண்டாம்!’ - மருத்துவர் எச்சரிக்கை

முதல்முறையாக உணவு எடுத்த தருணத்தை என்னால் மறக்கவே முடியாது. அந்தத் தருணத்தை செல்ஃபி எடுத்து உடனே எனது மருத்துவருக்கு அனுப்பி வைத்தேன். இன்று நலமுடன் இருக்கிறேன். எந்தப் பிரச்னைக்கும் தற்கொலை செய்யும் முடிவை மட்டும் எடுக்காதீர்கள்.

`இரைப்பைப் புற்றுநோய் அறிகுறிகள் தெரிந்தால் அலட்சியம் வேண்டாம்!’ - மருத்துவர் எச்சரிக்கை
`இரைப்பைப் புற்றுநோய் அறிகுறிகள் தெரிந்தால் அலட்சியம் வேண்டாம்!’ - மருத்துவர் எச்சரிக்கை

ந்திய உணவுக்குழாய் சங்கம் (ஈசோ - இந்தியா) சார்பில் `விழித்தெழு' என்ற விழிப்புஉணர்வு நிகழ்ச்சி சென்னைக் கலைவாணர் அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 16-ஆவது ஆண்டாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் புற்றுநோய், அமிலம் அருந்தியது உள்ளிட்டப் பல்வேறு காரணங்களால் உணவுக்குழாய் பாதிக்கப்பட்டு, அறுவைச் சிகிச்சை மூலம் தற்போது இயல்புநிலைக்குத் திரும்பியவர்கள் பங்கேற்று தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

மன்னார்குடியைச் சேர்ந்த 22 வயது பொறியாளர் முகிலன், ``ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் அமிலம் குடித்துவிட்டேன். உணவுக்குழாய் முற்றிலும் சேதமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். தொடர்ந்து பல அறுவை சிகிச்சைகள் நடைபெற்றன. இறுதியாக சேதமடைந்த உணவுக்குழாயை அகற்றிவிட்டு, பெருங்குடலின் ஒரு பாகம் உணவுக்குழாயாக மாற்றிப் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை நடைபெற்ற சமயம் சுமார் 13 மாதங்கள் எச்சில்கூட விழுங்க முடியாத நிலையில் இருந்தேன்.

கண் முன்னால் உணவு இருந்தும், சாப்பிட முடியாமல் நரக வேதனை அனுபவித்தேன்”என்று கண் கலங்கினார். ``அறுவை சிகிச்சைக்குப் பின்னர் முதல்முறையாக உணவு எடுத்த தருணத்தை என்னால் மறக்கவே முடியாது. அந்தத் தருணத்தை செல்ஃபி எடுத்து உடனே எனது மருத்துவருக்கு அனுப்பி வைத்தேன். இன்று நலமுடன் இருக்கிறேன். எந்தப் பிரச்னைக்கும் தற்கொலை செய்யும் முடிவை மட்டும் எடுக்காதீர்கள். எனது இறப்புக்குப் பின்னர் உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு வழங்கத் தீர்மானித்திருக்கிறேன்" என்றதும் அரங்கமே நிசப்தத்தில் மூழ்கியது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கானோரில் பண்ருட்டியைச் சேர்ந்த ரூபாவாணியின் அனுபவம் மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது. இவர் 15 ஆண்டுகளுக்கு முன்பாக இரைப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். நோய் பாதித்த சமயத்தில் அவரது இரு மகள்களும் பள்ளிப் படிப்பைக்கூடத் தாண்டவில்லை. சிகிச்சைக்காக ரூபவாணி அனுமதிக்கப்பட்டதும் அவரது கணவர், `எனது மனைவி நடமாடும் நிலையில் இல்லாமல் இருந்தாலும் பரவாயில்லை, அவர் என்னுடன் இருந்தால் போதும். அதற்கு ஏதாவது பண்ணுங்க’ என்று மருத்துவரிடம் கதறியுள்ளார். ரூபவாணியோ, `எனது இரண்டு மகள்களுக்காக நான் வாழ வேண்டும்’ என்றிருக்கிறார். அறுவைச் சிகிச்சை உள்ளிட்டப் பல்வேறு சிகிச்சைகளுக்குப்பின் பூரண குணமடைந்து 15 ஆண்டுகளாக நலமுடன் வாழ்ந்து வருகிறார். இரண்டு மகள்களுக்கும் திருமணத்தை நடத்தி, பேரன், பேத்திகளையும் எடுத்துவிட்டார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தன்னம்பிக்கையும் ஊக்கமும் அளிக்கும் தொண்டையும் செய்து வருகிறார்.

ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்வை ஒருங்கிணைத்த ஈசோ இந்தியாவின் தலைவரும் இரைப்பைக் குடல் அறுவை சிகிச்சை நிபுணருமான எஸ்.எம். சந்திரமோகனிடம் பேசினோம்.

``புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர்கள் இந்த அமைப்பின் தன்னார்வலர்களாகச் செயல்பட்டு வருகின்றனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தத் தன்னார்வலர்கள் நம்பிக்கையையும், தேவையான ஆலோசனைகளையும் அளித்து வருகின்றனர். சென்னையை மட்டுமே மையமாக வைத்து நிகழும் இந்த நிகழ்வை ஓர் இயக்கமாக மாற்றி, கிராமம், நகரம் எனத் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டுசெல்லத் திட்டமிட்டிருக்கிறோம். 

இந்த அமைப்பு மூலமாக நாங்கள் மக்களுக்குத் தெரிவிக்க விரும்புவது எளிய அறிவுரைகள்தான். எவ்வளவு பெரிய பிரச்னையாக இருந்தாலும் தற்கொலையைத் தீர்வாக நினைக்க வேண்டாம். தற்கொலை செய்யத் தோன்றும் நேரங்களில் அமிலத்தை எடுத்துக் குடிக்காதீர்கள். மிகப்பெரிய மோசமான விளைவுகளை அது ஏற்படுத்திவிடும். மேலும் இரைப்பை புற்றுநோய் அறிகுறிகள் ஏதேனும் தெரிந்தால் அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்" என்று நிறைவு செய்தார்.