Published:Updated:

“இசைக்கலைஞரும் மருத்துவரே!”

“இசைக்கலைஞரும் மருத்துவரே!”
பிரீமியம் ஸ்டோரி
News
“இசைக்கலைஞரும் மருத்துவரே!”

ஹெல்த்

சை. இதை ரசிக்காதவர்களே இருக்க முடியாது; நம் மனதுக்கும் மூளைக்கும் புத்துணர்ச்சியை ஏற்படுத்துவது. மனித மூளையின் வலது, இடது புறங்கள் இரண்டுமே தனித் தனிச் செயல்பாடுகளைக்கொண்டவை. இடது பக்க மூளை அறிவியல், கணிதம் போன்றவற்றில் சிறப்பாகச் செயல்படும்; பேச்சுத்திறனைக் கட்டுப்படுத்தும். வலது பக்க மூளைதான் கற்பனைத்திறனைத் தருகிறது; நம் மொழித்திறனை கட்டுப்படுத்துகிறது. இந்த இரு பக்கங்களுமே ஒன்றுக்கொன்று ஒத்துழைத்து இயங்கிக்கொண்டிருக்கும். ஆனால், ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு இரண்டு பக்க மூளைகளுக்கும் இடையில் அந்த ஒத்துழைப்பு இருக்காது. இசை, அந்த ஒத்துழைப்பை ஏற்படுத்தும் பாலமாக இருக்கும் என்பதை மருத்துவரீதியாக நிரூபித்துக் காட்டியிருக்கிறார் முனைவர் ரமேஷ். 

“இசைக்கலைஞரும் மருத்துவரே!”

1990-ம் ஆண்டு ஐ.ஐ.டி-யில் ஃப்ளூயிட் மெக்கானிக்ஸ் துறையில் (Fluid Mechanics) எம்.எஸ் படிப்பை முடித்தவர், ஒரு கன்சல்டன்ஸி நிறுவனம் நடத்திவருகிறார். இவர் பல வருடங்கள் ஆய்வுசெய்து, இசைச் சக்கரம் ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார். இதைக்கொண்டு யார் வேண்டுமானாலும் கர்னாடக இசையைக் கற்றுக்கொள்ளலாம். இவரும் குரு இல்லாமலேயே இசை கற்றுக்கொண்டவர் என்பது கூடுதல் சுவாரஸ்யம். இவரின் ஆய்வு, இன்றைக்கு ஆட்டிசம் பாதித்த பல குழந்தைகளின் வாழ்வுக்கு உதவிக்கொண்டிருக்கிறது.

ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் கர்னாடக இசை கற்றுக்கொள்ள இவரின் இசைச்சக்கரம் உதவுவதாக இசைக்கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா இவரை அங்கீகரித்திருக்கிறார்.

அரசு மருத்துவமனைகளில் பிரசவத்துக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்து தாய்மார்களிடம் சில எளிமையான ராகங்களை தினமும் சில நிமிடங்கள் வாசிக்கச் சொல்லி ஓர் ஆய்வு நடத்திப் பார்த்ததில், முன்பைவிட ஆட்டிசம் குறைபாட்டோடு பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்திருந்ததாம். ரமேஷைச் சந்தித்துப் பேசினோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“இசைக்கலைஞரும் மருத்துவரே!”“ஐ.ஐ.டி-யில் படித்துக்கொண்டிருந்த எனக்கு இசை பயிலும் வாய்ப்பு அமையவில்லை. ஆனால், நூலகங்களுக்குச் சென்று இசை குறித்த புத்தகங்களைப் படிப்பது, கர்னாடக இசை நிறைய கேட்பதன் மூலம் கொஞ்சம் கற்றுக்கொண்டேன். 

கர்னாடக இசை நூல்களில் 72 மேளகர்த்தா ராகங்கள் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்கள். `ராகம் என்றால் என்ன, மேளகர்த்தா என்றால் என்ன?’- விடை தேடினேன். எல்லாவற்றிலும் சக்கரங்கள் முதன்மையாக இருந்தன. மேளகர்த்தா என்றால் தாய் ராகங்கள். அவற்றிலிருந்து வந்த சேய் ராகங்களை `ஜன்ய ராகம்’ என்பார்கள். தாய் ராகங்கள்தான் கர்னாடக இசைக்கு மட்டுமின்றி ஹிந்துஸ்தானி, மேற்கத்திய இசை அனைத்துக்கும் அடிப்படை. அவற்றை மொத்தமாகச் சக்கரங்களாகக் குறிப்பிட்டிருந்தார்கள். அந்தச் சக்கரத்துக்கு வடிவம் கொடுத்தால் அனைவரும் இசை கற்றுக்கொள்ள வசதியாக இருக்கும் என்று நினைத்தேன். அதுதான் இந்த இசைச் சக்கரம். இதை எல்லோரும் எளிமையாகப் புரிந்துகொள்ளும்படி வடிவமைத்தேன். 72 ராகங்களை 360 டிகிரிக்குள் அடக்கிவைத்தால், ஒரு கணக்குப்படி இசை கற்றுக்கொள்ளலாம். மருத்துவப் பயன்களைப் பெற இந்த 72 ராகங்களே போதுமானவை.

“இசைக்கலைஞரும் மருத்துவரே!”

இசை மருத்துவத்தை ‘ராக சிகித்ஷா’ என்று கூறுவார்கள். `சிகித்ஷா’ என்றால் சிகிச்சை. தஞ்சாவூர் சரஸ்வதி மஹாலில் உள்ள நூலகத்தில் எந்த ராகம், எந்தக் குறைபாட்டுக்கான சிகிச்சை தரும், எந்த வாத்தியத்தை எவ்வளவு நேரம் வாசிக்க வேண்டுமென்றெல்லாம் குறிப்புகள் உள்ள நூல்கள் இருக்கின்றன.  பேச முடியாதவர்கள், காது கேளாதவர்களால் இசையைக் கேட்க முடியாது. ஆனால், வாசிப்பதைப் பார்க்க முடியும். அதன் அதிர்வுகளை உணர முடியும். இந்தச் சக்கரத்தில் குறிப்பிட்டிருக்கும் புள்ளிகளை வைத்து அவர்களாலும் இதை வாசிக்க முடியும். அவர்களைப்போலவே ஆட்டிசம் பாதித்த குழந்தைகளாலும் நாம் சொல்வதை எளிதில் புரிந்துகொள்ள முடியாது. ஆனால், கண்களால் பார்ப்பதைப் புரிந்துகொள்வார்கள். அவர்களின் உலகத்துக்குள் நாம் நுழைய இசை ஒரு பாலமாக இருக்கும். அதன் மூலம் அவர்களை மனோரீதியாக அமைதிப்படுத்த முடியும். இரண்டு பக்க மூளைகளுக்குள்ளும் அற்றுப் போயிருக்கும் தொடர்பை இசை சரிசெய்யும். ஆட்டிச பாதிப்பைக் குறைந்தபட்சம் ஐம்பது சதவிகிதம் குணப்படுத்த இசை உதவும்.

ஆட்டிசம் பாதிப்புக்கு உள்ளானவர்கள், தங்கள் உலகத்துக்குள் அனைவரையும் அனுமதிப்பதில்லை. ஆனால், அவர்களின் உலகில் இசை இருந்துகொண்டே இருக்கும். சொல்லித் தருவதைவிட, புள்ளிகளைவைத்துக் கற்றுக்கொள்ளத் தூண்டினால், உற்சாகமாகக் கற்றுக்கொள்வார்கள். அவர்களிடம் மகிழ்வான இசையை வாசியுங்கள், சந்தோஷப்படுவார்கள்; சிரிப்பார்கள். சோகமான இசையை வாசித்தால், அழத் தொடங்கிவிடுவார்கள். அந்த அளவுக்கு அவர்கள் ஒன்றிப்போவது இசையில் மட்டுமே. இசையை சிகிச்சையாகப் பயன்படுத்தினால், அவர்களை குணப்படுத்துவது சாத்தியமே’’ என்கிறார் ரமேஷ். 

“இசைக்கலைஞரும் மருத்துவரே!”

இசைச் சக்கரத்தின் மூலம் ஆட்டிசம் பாதித்த, பல குழந்தைகளுக்கு இசை பயிற்றுவித்துக் கொண்டிருக்கிறார் ரமேஷ். இசைச் சக்கரம் இந்தியாவில் 1,000 ரூபாய்க்கும் வெளிநாடுகளில் ஐம்பது டாலருக்கும் விற்கப்படுகிறது. அதன் மூலம் வரும் வருமானத்தை ரமேஷும் அவருடைய மனைவி ஸ்ரீதேவி ரமேஷும் நடத்தும் `ஃபேசஸ்’ என்ற அமைப்பின் மூலம் ஆதரவற்ற குழந்தைகளுக்குக் கொடுத்து உதவுகிறார்கள். அண்மையில், சென்னை கலை மற்றும் கலாசார மையம் அவருடைய கண்டுபிடிப்பையும், அவர் செய்துவரும் சேவையையும் பாராட்டும்விதமாக `ஹீரோஸ் ஆஃப் சென்னை-2018’ என்ற விருதை வழங்கி கௌரவித்திருக்கிறது. பல மருத்துவர்களும், இவருடைய அரசு மருத்துவமனை ஆய்வுக்குப் பின்னர் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு இசைச் சக்கரத்தைப் பரிந்துரைக்கிறார்கள்.

``நம் சமூகத்தில் இசை ஒரு வட்டத்துக்குள்ளேயே அடைத்துவைக்கப்படுகிறது. அதன் மருத்துவப் பயன்களை அனைவரும் அனுபவிக்க வேண்டும் என்று நினைத்தேன். எல்லோரும் இசை கற்றுக்கொள்ளும் எளிய வடிவம் இந்த இசைச் சக்கரம். ஒவ்வோர் இசையும் சிகிச்சையே. ஒவ்வோர் இசைக்கலைஞனும் மருத்துவனே’’ நெகிழ்ந்து சொல்கிறார் ரமேஷ்.

க.சுபகுணம் - படங்கள்: வீ.நாகமணி

“இசைக்கலைஞரும் மருத்துவரே!”

உளவியல் உண்மைகள்!

ஒருவா், உங்களிடம் ஒரு விஷயத்தைப் பகிர்ந்துகொள்ளும்போது, கடைப்பிடிக்கவேண்டிய உடல்மொழிகள்...

* கண்களைப் பார்ப்பது

* தலையை ஆமோதிப்பதுபோல் ஆட்டுவது

* சற்றே தலையை முன்வைத்து அதிக கவனம் செலுத்துவதுபோல் காட்டிக்கொள்வது

* சரியான முகபாவனை

* அவர் பேசும் சொற்களின் கடைசி வார்த்தையைத் திரும்பச் சொல்வது. இந்த உத்தியை தொழிலிலோ, வேலையிலோ, வீட்டில் உங்கள் வாழ்க்கைத் துணையிடமோ கடைப்பிடித்தால் நன்மைகள் கோடி.