Published:Updated:

பன்றிக்காய்ச்சல் பாதிப்பில் ராஜஸ்தான் முதலிடம் - தேசிய நோய் தடுப்பு மையம் அறிக்கை!

விகடன் விமர்சனக்குழு
பன்றிக்காய்ச்சல் பாதிப்பில் ராஜஸ்தான் முதலிடம் - தேசிய நோய் தடுப்பு மையம் அறிக்கை!
பன்றிக்காய்ச்சல் பாதிப்பில் ராஜஸ்தான் முதலிடம் - தேசிய நோய் தடுப்பு மையம் அறிக்கை!

உலகம் முழுவதும் பருவநிலை மாற்றம் பல விளைவுகளை ஏற்படுத்திவருகிறது. அந்த வகையில், இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளான ராஜஸ்தான், குஜராத் மற்றும் தலைநகர் டெல்லி போன்ற பகுதிகளில் கடுமையான குளிர் நிலவிவருகிறது. இதன் காரணத்தால், மக்கள் H1N1 வைரஸ்  (பன்றிக்காய்ச்சல்) நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பரிசோதனையின் முடிவில், ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும்  1700-க்கு மேற்பட்டவர்கள் தீவிர நிலையில் உள்ளனர். இம்மாதம் மட்டும், நாட்டிலேயே அதிகபட்சமாக ராஜஸ்தானில் 76 பேர் உயிரிழந்துள்ளனர். 

தேசிய நோய் தடுப்பு மையம் (NCDC) அறிக்கையின்படி, ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்டம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில், 23 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மோசமான காலநிலை மாற்றமே வைரஸ் தாக்குதலுக்கான காரணமாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். மேலும்,  நாடுமுழுவதும் 4571 நபர்களுக்கு H1N1 வைரஸால் நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், 169 பேர் உயிரிழந்தளதாகவும்தேசிய நோய் தடுப்பு மையம் குறிப்பிட்டுள்ளது. 

இரண்டாவது அதிக தாக்கமாக, குஜராத் மாநிலத்தில் 600 நபர்கள் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளனர். 24 பேர் உயிரிழந்துள்ளனர். மூன்றாவதாக, டெல்லியில் 532 நபர்களுக்கு சிகிச்சை மேற்கொண்டுவருகின்றனர். நாளுக்கு நாள் அதிகரிக்கும் உயிரிழப்புகளால் அந்தந்த மாநிலங்களில் முன்னெச்சரிக்கையுடனும், மருத்துவமனைகளில் தனியாக கண்காணிக்குமாறும் மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.