Published:Updated:

ஏன் வருகிறது புற்றுநோய்... தடுப்பது எப்படி? #WorldCancerDay

ஏன் வருகிறது புற்றுநோய்... தடுப்பது எப்படி? #WorldCancerDay
ஏன் வருகிறது புற்றுநோய்... தடுப்பது எப்படி? #WorldCancerDay

கூர்மையான கொடுக்குகளையும், அகன்ற கால்களையும் கொண்டு மணலைப் பறித்து உள்ளே செல்லும் நண்டைப்போல, உடலின் உள்உறுப்புகளைப் பறித்தபடி பரவும். ஓரிடத்தில் அடித்தால், மறைந்து மற்றோர் இடம் வழியாக வெளியே வரும் நண்டினைப் போல புதிதாக ஓரிடத்தில் தோன்றும். உட்கூறு மற்றும் புற்று உயிரணுக்களின் வளர்ச்சி விகிதத்தைப் பொறுத்து ஏறத்தாழ 200 வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`தூள்' படத்தில் சொப்னாவுக்கு `கேன்சர்' வந்தது பற்றி விவேக்கும், மயில்சாமியும் காமெடியாகப் பேசிக்கொள்வதைக் கேட்கும்போது நமக்குச் சிரிப்பு வரும். காமெடியாகப் பேசப்பட்ட  அந்த விஷயம், இன்றைக்குப் பெரிய `டிராஜிடி'யாக உருவெடுத்து நிற்கிறது.

ஆம்... இதுவரை 50-60 வயதில் உள்ளவர்களை மட்டுமே பாதித்த புற்றுநோய், கடந்த 15 ஆண்டுகளாக சொப்னாவின் வயதையொத்த இளைஞர்களையும் ஆண், பெண் பாகுபாடின்றி பாதிக்கத் தொடங்கிவிட்டது. அதுமட்டுமன்றி நகர்ப்புறவாசிகளையே புற்றுநோய் அதிகம் பாதிக்கும் என்ற நிலைமாறி, கிராமப்புறங்களில் வாழ்பவர்களையும் பாதிக்கிறது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இந்நிலை என்றால், வளர்ந்த நாடுகளில் சிறு வயதுக் குழந்தைகளும் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 

இத்தகைய மாற்றங்கள் நிகழக் காரணம் என்ன..? அவற்றுக்கான தீர்வு என்ன என்பதை அறிவதற்குமுன் புற்றுநோய் பற்றி அறியவேண்டியது அவசியம். 

5,000 ஆண்டுகளுக்கு முன்பே, எகிப்து மற்றும் கிரேக்க மருத்துவர்களால் புற்றுநோய் அடையாளம் காணப்பட்டது. நமது உடலில் சீராக இயங்கும், செல் சைக்கிள் (Cell cycle) என்ற உயிரணு ஃபேக்டரியானது, சாதாரணமாக நமது உடல் வளர்ச்சிக்கு உதவும் உயிரணுக்களின் உற்பத்தியை டி.என்.ஏ-க்கள் மூலம் நிர்வகிக்கிறது. இந்த உயிரணுக்கள் வளர்ந்து பெருகி, மேலும் பல உயிரணுக்களை உருவாகச் செய்து, நமது திசுக்களின் வளர்ச்சியையும், உடல் ஆரோக்கியத்தையும் காக்கின்றன.

இந்த உற்பத்திப் பணியின்போது டி.என்.ஏ-க்களில் ஏற்படும் மிகச் சிறிய தவறு (DNA error) புதிய உயிரணுக்களை மிக அதிகமாக உருவாக்குவதுடன் அவற்றைக் கட்டுப்பாடு இல்லாமல் வளரச் செய்கிறது. இதனால் உருவாகும் புற்றுநோய், அருகிலுள்ள திசுக்களை (Local spread) ஆக்கிரமித்து அழிப்பதுடன் ரத்தம் மற்றும் நிணநீர் வழியாக உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவுகிறது.

கூர்மையான கொடுக்குகளையும், அகன்ற கால்களையும் கொண்டு மணலைப் பறித்து உள்ளே செல்லும் நண்டைப்போல, உடலின் உள்உறுப்புகளைப் பறித்தபடி பரவும். ஓரிடத்தில் அடித்தால், மறைந்து மற்றோர் இடம் வழியாக வெளியே வரும் நண்டினைப் போல புதிதாக ஓரிடத்தில் தோன்றும். உட்கூறு மற்றும் புற்று உயிரணுக்களின் வளர்ச்சி விகிதத்தைப் பொறுத்து ஏறத்தாழ 200 வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. புற்று அணுக்கள், அருகிலுள்ள திசுக்களை ஆக்கிரமித்து அழிப்பதுடன் ரத்தம் மற்றும் நிணநீர் வழியாக உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவுகிறது. இப்படியாகப் பரவும் புற்று அணுக்கள் சில, அறிகுறிகளாக வெளிப்படவும் செய்கின்றன.

- திடீர் எடையிழப்பு 
- பசியின்மை
- வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல்
- தொடர் இருமல்
- குரல் மாற்றம்
- காரணமற்ற ரத்தசோகை
- ஆறாத புண் அல்லது வடுக்கள்
- சிறுநீர் கழிப்பதில் மாற்றங்கள்
- வெள்ளைப்படுதல் 
- மாதவிடாய் நின்ற பிறகு வரக்கூடிய ரத்தப்போக்கு 

இப்படிப் பாதிப்புக்குள்ளாகும் இடம் மற்றும் உறுப்பைப் பொறுத்து, இவை ஒவ்வொன்றும் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளாக அறியப்படுகின்றன.

புற்றுநோயை ஒற்றை நோயாக விளக்க முடியாது. ஒவ்வோர் உறுப்பின் புற்றுநோய்க்கும் ஒவ்வொரு காரணி இருக்கக்கூடும். கூரான சொத்தைப் பல்லின் உராய்வுகூட வாய்ப்புற்றுக்குக் காரணமாகலாம். பிளாஸ்டிக் பையில் சேமிக்கப்பட்ட உணவு, இரைப்பைப் புற்றுக்கு காரணமாகலாம். மரபணுக்கள், பெருங்குடல் புற்றுக்குக் காரணமாகலாம். கதிரியக்கச் சூழலில் பணிபுரிவது ரத்தப் புற்றுக்கு காரணமாகலாம். இவைதவிர நுரையீரல், மார்பகம், இரைப்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புற்றுநோய் ஏற்படலாம் என்றாலும் நுரையீரல், குடல், இரைப்பை மற்றும் மார்பகத்தில் ஏற்படும் புற்றுநோய்களே மிகப்பெரும் உயிர்க்கொல்லியாக உருவெடுக்கின்றன.

உலக அளவில் ஆண்டுதோறும் 18.1 மில்லியன் மக்களிடையே பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் இந்தப் புற்றுநோய், அவற்றில் ஏறத்தாழ 9.6 மில்லியன் மக்களைக் கொன்றுவிடுகிறது. அதாவது, ஆறு மரணங்களில் ஒரு மரணம் புற்றுநோயால் ஏற்படுகிறது. இந்த இறப்பு விகிதங்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களிடம் அதிகம் காணப்படுகிறது என்பதும், பாதிக்கப்பட்ட ஐந்து பேரில் ஒருவர் வறுமையால் தக்க சிகிச்சை எடுக்க முடியாத நிலைக்கு ஆளாகின்றனர் என்பதும் பெருந்துயரம்.

இந்திய அளவில் பெண்கள் மார்பகப் புற்றுநோயாலும், ஆண்கள் வாய்ப் புற்றுநோயாலும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதாவது, ஆண்டுக்குச் சராசரியாக 8 லட்சம் பேர் பாதிக்கப்படுவதாக இந்திய மருத்துவ ஆய்வுக் குழுவின் (ICMR) புள்ளி விவரங்கள் கூறுகின்றன. புற்றுநோய் குறித்த சரியான விழிப்புஉணர்வு இல்லாததால் ஆரம்பகட்டத்தில் (ஸ்டேஜ் I & II) வெறும் 26 சதவிகிதத்தினர் மட்டுமே சிகிச்சைக்காகச் செல்கிறார்களாம். ஆனால், ஸ்டேஜ் III & IV நிலையில் பலருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுவதால் ஆண்டுதோறும் 3 லட்சம் பேர் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர் என்று இந்திய மருத்துவ ஆய்வுக் குழு கூறுகிறது. கடந்த 25 ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் 39 சதவிகிதம் புற்றுநோய் அதிகரித்துள்ளது என்பது அதிர்ச்சி தருகிறது.

அதிகரித்து வரும் மனிதனின் வாழ்நாள், மேம்படுத்தப்பட்ட மருத்துவத் தொழில்நுட்பங்கள், கேன்சர் ஸ்கிரீனிங் (Cancer Screening) எனப்படும் பிரத்யேகப் பரிசோதனைகள் என மருத்துவ முன்னேற்றங்கள் அனைத்தும் புற்றுநோயை அதிகளவில் கண்டறியச் செய்துள்ளன. ஆனாலும் ஆண், பெண், ஏழை, பணக்காரன் என எந்தவித பேதமுமின்றி அனைத்து தரப்பு மக்களிடையே புற்றுநோய் பெருகக் காரணம் என்ன..? என்ற கேள்விகளுக்கு பதிலாகக் கிடைப்பது, `மனிதன்' என்ற ஒற்றைச் சொல்தான். 

ஆமாம். புற்றுநோய் வர தனித்தனியாகக் காரணங்கள் கண்டறியப்படவில்லை என்றாலும், `கார்சினோஜென்ஸ்' (Carcinogens) என்ற புற்று ஊக்கிகளைக் காரணிகளாகக் கைகாட்டுகிறது மருத்துவ உலகு. புற்றுநோய் ஊக்கிகள் என்ற இந்த கார்சினோஜென்களில் முன்னிற்பது, புகையிலை. அதாவது, புகையிலையைக் கொண்டு தயாரிக்கப்படும் சிகரெட், சுருட்டு, பீடி ஆகியவற்றில் ஆயிரக்கணக்கான ரசாயனப் பொருள்கள் நிறைந்துள்ளன. அவற்றில் நிக்கோட்டினைத் தவிர, ஆர்சனிக், அமோனியா, பென்சீன், நைட்ரோஸமைன்கள், அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்கள் மற்றும் புகைக்கும்போது காற்றில் கலக்கும் `கானிகோடின்' (Conicotine), `கார்பன் மோனாக்சைடு' (Carbon Monoxide), `தையோசயனேட்ஸ்' (Thiocyanates) ஆகிய நச்சுப்பொருள்கள், புகைப்பவருக்கு மட்டுமல்லாமல் அருகில் உள்ளவர்களுக்கும் (Passive Smoking) புற்றுநோயை ஏற்படுத்துகின்றன.

நுரையீரல், நாக்கு, தொண்டை, உணவுக்குழாய், இரைப்பை, கல்லீரல், சிறுநீரகம் என அனைத்து உறுப்புகளிலும் புகையிலை புற்றுநோயைத் தோற்றுவிப்பதுடன், 8 விநாடிகளுக்கு ஒரு மரணத்தையும் ஏற்படுத்துகிறது. 
புகையிலை மட்டுமன்றி வாகனங்களின் புகையில் நிறைந்துள்ள வேதிப் பொருள்கள், CFC, கதிர் இயக்கம், செயற்கை உரங்கள், ஆஸ்பெஸ்டாஸ், ஆர்சனிக், மரத்துகள்கள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, செயற்கை நிறசேர்க்கைகள், சுவையூட்டிகள் மற்றும் மதுபானங்கள், ஹெச்.ஐ.வி, ஹெச்.பி.வி, ஹெபடைட்டிஸ் போன்ற நோய்த்தொற்றுகள், புற ஊதாக் கதிர்கள் என இந்தக் கார்சினோஜென்களின் பட்டியல் நீளும்.

இவற்றுடன் போதுமான உடற்பயிற்சியின்மை, உடல் பருமன், மேற்கத்திய உணவுகள், சமச்சீரற்ற உணவுமுறை, தூக்கமின்மை, மன அழுத்தம் ஆகியவையும் புற்றுநோய் வருவதற்கான காரணங்களாகக் கூறுகின்றனர் புற்றுநோய் சிறப்பு மருத்துவர்கள். ஆக, 5 முதல் 10 சதவிகிதம் மட்டுமே பாரம்பர்ய மரபணுக்கள் வாயிலாகவும், பெரும்பான்மை சதவிகிதம் சுற்றுச்சூழல் மாசு காரணமாகவும் புற்றுநோய் பாதிக்கிறது. அதைத் தவிர்ப்பது மனிதனின் கைகளில்தான் உள்ளது.

புற்றுநோய் பாதிக்காமல் தடுப்பதற்கான முறைகள் பற்றிப் பார்ப்போம்.

- புகையிலை மற்றும் மதுப்பழக்கத்தை அறவே கைவிடுவது.
- காற்று, மண், நீர் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தவிர்ப்பது.
- உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பதுடன், நார்ச்சத்து, நீர்ச்சத்து நிறைந்த இயற்கை உணவுகளை அதிகம் உட்கொள்வது.
- கதிரியக்கம் உள்ள இடங்களில் தகுந்த பாதுகாப்புடன் பணியாற்றுவது.
- ஹெச்.பி.வி (HPV), ஹெபடைட்டிஸ் போன்ற வைரஸ் நோய்களைத் தடுக்க, மருத்துவரின் பரிந்துரைப்படி தகுந்த இடைவெளியில்தடுப்பூசி போட்டுக்கொள்வது என இவையனைத்தும் முதன்மைத் தடுப்புமுறைகளாகும்.

கேன்சர் ஸ்கிரீனிங் (Cancer Screening) எனப்படும் மாமோகிராம் (Mammogram), `பாப் ஸ்மியர்' (Pap Smear), பி.எஸ்.ஏ (PSA), சி.இ.ஏ (CEA) போன்ற ரத்தப் பரிசோதனைகளை மேற்கொண்டு, புற்றுநோய் அறிகுறிகளைத் தொடக்கத்திலேயே கண்டுபிடித்துச் சிகிச்சை மேற்கொள்வது இரண்டாம் தடுப்பு நிலையாகும். இவைஅனைத்துக்கும் மேலாக, வாழ்க்கைபற்றிய உறுதியான நம்பிக்கையுடனும், நல்ல உணர்வுடனும் இருப்பது முழுமையான நிலையாகும்.

புற்றுநோயை வெல்ல மன உறுதியும் முறையான சிகிச்சையும் எவ்வளவு முக்கியமோ, அதேபோல, விழிப்புஉணர்வும் மிக அவசியம்.
இன்று பிப்ரவரி 4... உலகப் புற்றுநோய் விழிப்புஉணர்வு நாள்!

உலகத்தினர் அனைவரும், ஒன்றுகூடி புற்றுநோயை வென்றிடப் போராடும் நாள் இது. புற்றுநோய் குறித்த விழிப்புஉணர்வை அனைவருக்கும் ஏற்படுத்தவும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊக்கமளிக்கவும் கடைப்பிடிக்கப்படும் இந்நாளில், `முற்றிலுமாக என்னால், நம்மால் அழிக்க முடியும்' என்று ஒன்றுபடுவோம். புற்றுநோயை வெல்வோம்..!

I AM..!
AND...
I WILL..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு