Published:Updated:

கை கொடுத்த கை மாற்று அறுவைசிகிச்சை! ஸ்டான்லி மருத்துவமனையின் சாதனை

கை கொடுத்த கை மாற்று அறுவைசிகிச்சை! ஸ்டான்லி மருத்துவமனையின் சாதனை
கை கொடுத்த கை மாற்று அறுவைசிகிச்சை! ஸ்டான்லி மருத்துவமனையின் சாதனை

திடீர்னு ஒருநாள், 'உங்க மகனுக்கு கை கிடைச்சுடுச்சு'னு சொல்லி டாக்டரம்மா எங்களை வரசொன்னாங்க. மதுரையிலருந்து, ப்ளேன்ல வந்து இறங்குனோம். ஒரு வருஷம்  கழிச்சு, இன்னைக்குத் திருப்தியா ஊருக்குத் திரும்பப் போறோம். அவனுக்கு கை வந்ததுல, எனக்கும் என் வீட்டுக்காரருக்கும் ரொம்ப சந்தோஷம்.

ருத்துவத் துறையின் வளர்ச்சியில் விஞ்ஞானம் சேரும்போது, அந்த வளர்ச்சி அடுத்தகட்டத்தை சென்றடையும். அப்படித்தான் சாத்தியமாகியுள்ளது,  'உடல் உறுப்பு தானம்' என்ற துறையின் வளர்ச்சியும்.

`இதயம், சிறுநீரகம், கண் போன்றவை மட்டுமல்ல... ரத்த நாளங்கள், குடல், நுரையீரல், கல்லீரல், தோல், எலும்பு, கை எனப் பல உறுப்புகளைத் தானமாக அளிக்கலாம். ஒருவர் உடலுறுப்பு தானம் செய்வதன் மூலம், ஒன்பது பேருக்கு மறுவாழ்வு கொடுக்க முடியும்’ என்கின்றனர் மருத்துவர்கள். உடலுறுப்பு தானத்தைப் பொறுத்தவரையில் இந்திய அளவில், தமிழகத்துக்குத்தான் முதலிடம். 

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நாராயணசாமிக்கு கை மாற்று அறுவைசிகிச்சை  வெற்றிகரமாகச் செய்யப்பட்டது. கை மாற்று அறுவைசிகிச்சை என்பது, மூளைச்சாவு அடைந்தவரிடமிருந்து கைகளை எடுத்து, கைகள் இல்லாதவருக்குப் பொருத்துவது. இந்திய அளவில், ஓர் அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாகச் செய்த முதல் கை மாற்று அறுவை சிகிச்சை இதுதான். 

திண்டுக்கல்லைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியான நாராயணசாமி, 2015-ம் ஆண்டு வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்ட மின்சார விபத்தில் தன் இரண்டு கைகளையும்  இழந்தார். கைகளை இழந்த நிலையில் சில தனியார் மருத்துவமனைகளை நாடினார். கை மாற்று அறுவை சிகிச்சைக்கு ரூ.20 லட்சம் வரை செலவாகும் என்று  தெரிவித்தனர். இதனால் சில மாதங்கள் சிகிச்சையே மேற்கொள்ளாமல் இருந்துள்ளார். அதன்பிறகு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் சென்று இதுகுறித்து முறையிட்டுள்ளார். பின்னர், மாவட்ட ஆட்சியர் பரிந்துரையோடு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு வந்தார்.

மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பொருத்தமான கை கிடைப்பதற்காகக் காத்திருந்தவருக்கு, இரண்டு வருடங்கள் கழித்து 2018-ம் ஆண்டு பிப்ரவரியில் மூளைச்சாவு அடைந்தவரிடமிருந்து கை கிடைத்தது. சென்னை மணலி பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்ற 39 வயது நபர்தான் நாராயணசாமிக்கு கைகளைத் தானமளித்து அவருக்கு மறுவாழ்வு அளித்தவர். 

தானம் பெறப்பட்ட கைகளைப் பொருத்துவதற்கான அறுவைசிகிச்சை நடைபெற்று, ஏறத்தாழ ஒருவருடமாக மருத்துவமனையிலேயே தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்தார் நாராயணசாமி. பூரண குணமடைந்து மருத்துவமனையில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 

அவருக்குச் செய்யப்பட்ட அறுவைசிகிச்சை குறித்தும், அவரின் தற்போதைய நிலை குறித்தும் ஸ்டான்லி அரசு மருத்துவமனை பிளாஸ்டிக் சர்ஜரி துறைத் தலைவர் டாக்டர் ரமாதேவி நம்மிடம் பேசினார். 

``2011-ம் ஆண்டு முதல் கை மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான உரிமத்தைப் பெற்று வைத்திருந்தது, சென்னை ஸ்டான்லி மருத்துவமனை. ஆனாலும், கையைத்  தானமளிக்க யாரும் முன் வராததால் அறுவை சிகிச்சைகள் செய்யப்படவில்லை. மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து எப்படி மற்ற உறுப்புகள் அனைத்தும் தானம் பெறப்படுமோ, அப்படித்தான் கைகளும். ஆனால் கை, கால் போன்ற வெளிப்புற உறுப்புகளைத் தானமளித்தால், இறுதிச்சடங்கின்போது சங்கடமாக இருக்குமோ என்று நினைத்து தானமளிக்கத் தயங்குகின்றனர். அதனாலேயே கை தானம் பெறப்பட்டபோது செயற்கை கை பொருத்தி, உடலை ஒப்படைத்தோம். 

இந்திய அளவில் சில தனியார் மருத்துவமனைகள் மட்டுமே மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து பெறப்பட்ட கைகளை மாற்றிப் பொருத்தும் அறுவை சிகிச்சையை  வெற்றிகரமாகச் செய்துள்ளன. அரசு மருத்துவமனைகளில், இதுவே முதன்முறை. மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் உள்ள அரசு மருத்துவமனையில் இதுபோன்ற முயற்சி  மேற்கொள்ளப்பட்டது. ஆனால், தோல்வியடைந்துவிட்டது. எங்களுடைய முதல் முயற்சியே வெற்றிபெற்றதில், பெருமகிழ்ச்சி. என்றாலும், இந்த மகிழ்ச்சி தந்த  பெருமையைக் காட்டிலும், அழுத்தம் அதிகம். காரணம், இதற்குமுன்பு இப்படியான அறுவை சிகிச்சைகள் அதிகம் செய்யப்படாததால், இதன் பக்கவிளைவுகள் குறித்தோ, பிரச்னைகள் குறித்தோ அதிகம் தெரியவில்லை. நோய்த்தொற்று ஏதேனும் ஏற்படக்கூடுமோ என்ற பயமும் இருந்தது. அதனால்தான் அவரை கடந்த ஒரு வருடமாக எங்கள் மருத்துவமனையிலேயே சிறப்பு வார்டு ஒன்றை அமைத்து தங்க வைத்திருந்தோம்!’’ என்றார். 

நாராயணசாமியின் சிகிச்சையின்போது, அவரின் அம்மா வசந்தாதான் உடனிருந்தார். அப்பா ராமசாமி, திண்டுக்கல்லில் கூலி வேலை செய்து, இவர்களுடைய செலவுகளுக்குப் பணம் அனுப்பி வந்தார். நாராயணசாமி வீட்டுக்கு ஒரே மகன். எல்லோருமே கூலி வேலைக்குச் செல்பவர்கள்தான். கழிப்பறை வசதிகூட இல்லாத மண் வீடு அவர்களுடையது. மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகிச் சென்ற பிறகு, அறுவைசிகிச்சை செய்யப்பட்ட பகுதியில் நோய்த்தொற்று ஏற்பட்டுவிடக் கூடாதே என, அரசு சார்பில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் கழிப்பறையோடுகூடிய பசுமை வீடு ஒன்றை இவர்களுக்குக் கட்டித்தர ஏற்பாடு செய்திருக்கிறார். அந்த வீட்டில், நாராயணசாமி  தங்குவதற்கென தனி அறை ஒன்றும் ரெடி ஆகிவருகிறதாம். நோய்த்தொற்றை ஏற்படுத்தாத ஆன்டி ஃபங்கல் பெயிண்ட் அடிக்கப்பட்டு அறை தயாராகிறதாம். 

நாரயணசாமியின் அம்மா வசந்தாவிடம் பேசினோம். ``2015-ல அவனுக்கு அடிபட்ட பிறகு ரெண்டு வருசம், என் புள்ளைய குழந்தை மாதிரி பார்த்துக்கிட்டேன். சின்னச் சின்ன கூலி வேலைகளுக்குப் போற ஆளு நான். என் வேலையையும் பார்த்துட்டு, இவனையும் பார்த்துக்க வேண்டிய சூழல். ரொம்ப கஷ்டமா இருக்கும். எதையுமே தானா செஞ்சுக்க முடியாது அவனால. 

திடீர்னு ஒருநாள், `உங்க மகனுக்கு கை கிடைச்சுடுச்சு'னு சொல்லி டாக்டரம்மா எங்களை வரச்சொன்னாங்க. மதுரையிலருந்து, ப்ளேன்ல வந்து இறங்குனோம். ஒரு வருஷம் கழிச்சு, இன்னைக்குத் திருப்தியா ஊருக்குத் திரும்பப் போறோம். அவனுக்கு கை வந்ததுல, எனக்கும் என் வீட்டுக்காரருக்கும் ரொம்ப சந்தோஷம். என்னோட ஆசையெல்லாம், எம்புள்ள யாரையும் எதுக்காகவும் எதிர்பார்த்து நிக்கக் கூடாது. முதல்முறை இங்க வரும்போது, கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரிங்கள்ல தமிழ்நாட்டுலயே முதல்முறை இவனுக்குத்தான் இந்த சிகிச்சை செய்றாங்கன்னுலாம் தெரியாது. `என் மவனுக்கு மறுபடியும் கை கிடைக்கப்போவுது'னு மட்டும்தான் யோசிச்சேன். இப்போ பழங்கள், பிஸ்கட் மாதிரியான உணவுகளை அவனாவே எடுத்து சாப்பிட்டுக்குறான். சாதம் மட்டும் சாப்பிட முடியல. முழுசா குணமாக இன்னும், கொஞ்ச நாள் ஆகும்னு டாக்டருங்கலாம் சொன்னாங்க’’ என்றார்.

நாராயணசாமியின் உடல்நிலையைப் பொருத்தவரையில், எந்தவித கடினமான வேலையும் செய்யக் கூடாது என்பதே மருத்துவர்களின் அறிவுரையாக இருக்கிறது. திண்டுக்கல் அரசு மருத்துவமனையில், நாராயணசாமிக்கு வார்டு மேலாளர் வேலை அளிக்கப்பட்டுள்ளது. மாதம் ஒருமுறை பரிசோதனைக்காக அவர் ஸ்டான்லி மருத்துவமனைக்கு வர வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்தக் கை மாற்று அறுவை சிகிச்சை நாராயணசாமிக்குத் திருப்பிக் கொடுத்தது, கைகளை மட்டுமல்ல. அவர் இழந்திருந்த வாழ்க்கை மீதான நம்பிக்கையையும்தான்!  

அடுத்த கட்டுரைக்கு