Published:Updated:

சருமத்தைப் பாதிக்கும் 'பெர்ஃப்யூம்'... வியர்வை நாற்றத்தைப் போக்கும் 10 எளிய வழிகள்!

ஆதிகாலத்திலிருந்தே மனிதர்கள் தங்கள் உடலை நறுமணத்துடன் வைத்துக்கொள்ள பூக்கள், மஞ்சள், சந்தனம் என இயற்கையான நறுமணப் பொருள்களைப் பயன்படுத்தி வந்தனர். நாகரிகம் வளர வளர செயற்கையான வாசனை தரும் ரசாயனங்கள் நிறைந்த பாடிஸ்ப்ரே ,பெர்ஃபியூம் ஆகியவற்றின் பயன்பாடு அதிகரித்துவிட்டது.

சருமத்தைப் பாதிக்கும் 'பெர்ஃப்யூம்'... வியர்வை  நாற்றத்தைப் போக்கும் 10 எளிய வழிகள்!
சருமத்தைப் பாதிக்கும் 'பெர்ஃப்யூம்'... வியர்வை நாற்றத்தைப் போக்கும் 10 எளிய வழிகள்!

‘யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே' என்ற பழமொழிக்கு ஏற்ப சிலர் அருகில் வருவதற்கு முன்னரே அவர்கள் பயன்படுத்தியிருக்கும் பெர்ஃபியூம், டியோடரன்ட் வாசனை சுவாசத்துக்குள் சென்று தலைக்குள் ஏறிவிடுகிறது. குளிப்பதற்கு மறந்தாலும் பெர்ஃபியூம், டியோடரன்ட்களில் குளிக்க மறப்பதில்லை இன்றைய நவநாகரிக இளைஞர்கள். வியர்வை நாற்றத்தோடு வாசனைத் திரவியங்களின் வாசனையும் கலந்து வீசுவது, அருகில் இருக்கும் பலருக்குத் தலைவலியை ஏற்படுத்திவிடும். ஒரு நாளைக்கு ஐந்தாறு முறை வாசனைத் திரவியங்கள் பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள். பெரியவர்கள் வாசனைத்  திரவியங்களை பயன்படுத்தும்போது குழந்தைகளும் ‘எனக்கும் அடி' என்று கையைத் தூக்கிக்கொண்டு அடம்பிடிக்கின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினசரி வாழ்க்கையின் அங்கமாக மாறிவிட்டன இந்த வாசனைத் திரவியங்கள். 

வியர்வை நாற்றத்தைப் போக்குவதற்காக பாடி ஸ்ப்ரே, டியோடரன்ட், சென்ட், பெர்ஃபியூம் எனப் பல பெயர்களில் ரசாயனங்கள் நிறைந்த வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்துகிறோம். மனித சருமத்தில் எக்ரைன்  (Eccrine), அபோக்ரைன் (Apocrine) என இரண்டுவகையான வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன. கை, கால், முகம் என உடல் முழுவதும் 'எக்ரைன்' சுரப்பிகள் செயல்படுகின்றன. அக்குள், நெஞ்சுப் பகுதி, அந்தரங்க  உறுப்புகளில் 'அபோக்ரைன்' சுரப்பி காணப்படும். அபோக்ரைன் சுரப்பியானது, பருவம் அடைந்த பிறகே செயல்படத் தொடங்கும் என்பதால் குழந்தைகளின் வியர்வையில் நாற்றம் ஏற்படுவதில்லை.

அபோக்ரைன் சுரப்பியால் சுரக்கும் வியர்வையில்தான் நாற்றம் ஏற்படுகிறது. வியர்வையில் கொழுப்பு, புரதங்களுடன், பாக்டீரியா போன்ற நுண்கிருமிகளும் சேர்வதால்தான் நாற்றம் வீசுகிறது. அந்தரங்கப் பகுதிகள் ஈரப்பதத்துடனும் காற்றோட்டம் இல்லாமலும் இருப்பதால், சரியான பாரமரிப்பு இல்லாதபட்சத்தில் கிருமித்தொற்று ஏற்படும்.

ஆதிகாலத்திலிருந்தே மனிதர்கள் தங்கள் உடலை நறுமணத்துடன் வைத்துக்கொள்ள பூக்கள், மஞ்சள், சந்தனம் என இயற்கையான நறுமணப் பொருள்களைப் பயன்படுத்தி வந்தனர். நாகரிகம் வளர வளர செயற்கையான  வாசனை தரும் ரசாயனங்கள் நிறைந்த பாடிஸ்ப்ரே, பெர்ஃபியூம் ஆகியவற்றின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. ரசாயனங்கள் நிறைந்த வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்துவதால் உடலுக்கு ஏற்படும் பிரச்னைகள் பற்றி சரும மருத்துவர் ரேணுகா விளக்குகிறார்.

``சென்னை போன்ற வெப்பம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் வசிப்போருக்கு வியர்வை அதிகமாகச் சுரக்கும் என்பதால் வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்துவது சரிதான். ஆனால், பலர் வாசனைத் திரவியங்களை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். அதனால் ஒவ்வாமை ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். ஒருநாளைக்கு ஒருமுறை பயன்படுத்தினால் போதும். அதேநேரம், வியர்வை அதிகமாகவும் நாற்றத்துடனும் வெளியேறுகிறது என்றால் மருத்துவரை அணுக வேண்டும்.

ஒருவர் பயன்படுத்தும் பெர்ஃபியூம் நல்ல வாசனையுடன் இருந்தால் மற்றவர்களும் அதே பெர்ஃபியூமைப் பயன்படுத்தத்  தொடங்குகின்றனர். தற்போது, ரசாயனங்கள் நிறைந்த 25,000-க்கும் மேற்பட்ட வாசனைத் திரவியங்கள் விற்பனையில் உள்ளன. 

வாசனைத் திரவியங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தும் ரசாயன மூலப்பொருள்களான `பாராபென்ஸ்’ (Parabens), `டிரைகுளோசன்’ (Triclosan) போன்றவை  மனித உடலில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. வாசனைத் திரவியங்களை நேரடியாக உடலில் பயன்படுத்துவதால் பாக்டீரியா, பூஞ்சைத் தொற்றுகள் ஏற்படுவதோடு சருமத்தில் கொப்புளங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.  

தற்போது பெண்கள் வேக்ஸிங் செய்துகொள்வதால் சருமத்தில் துளைகள் (Pores) ஏற்படுகின்றன. துளைகள் இருக்கும் இடத்தில் வாசனைத் திரவியங்கள் படுவதால் அந்த இடம் கறுப்பாக மாறிவிடும். மேலும், அந்த ரசாயனங்கள் சருமத்தில் உள்ள துளைகள் வழியாக உடலுக்குள் சென்று அரிப்பு போன்ற ஒவ்வாமைப் பிரச்னைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

உடலில் நேரடியாகப் பயன்படுத்தும் `பாடிஸ்ப்ரே’வை அதிகம் பயன்படுத்துவதால் அந்த இடங்களில் சீழ் பிடிக்கும் அளவுக்குப் பாதிப்பு ஏற்படலாம். அதனால் நேரடியாக உடலில் அடிப்பதைக் காட்டிலும் உடையில் பூசிக்கொள்வது சற்று பாதுகாப்பானது. குளிப்பதற்கு முன்பு, சந்தனத்தை நன்றாகத் தண்ணீரில் கரைத்து உடலில் வியர்வை அதிகமாக சுரக்கும் இடங்களில் தடவி 10 நிமிடங்கள் கழித்து குளித்தால் வியர்வை நாற்றம் வராது’’ என்கிறார் டாக்டர் ரேணுகா.

வியர்வை நாற்றத்தை இயற்கையாகக் கட்டுப்படுத்தும் வழிகள் குறித்து விளக்குகிறார் சித்த மருத்துவர் தமிழ்க்கனி. 

• ஒருநாளைக்கு இரண்டு முறை குளிக்க வேண்டும்.  

• ஒருநாளைக்குக் குறைந்தபட்சம் 2 - 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

• பித்தம் அதிகமாக இருப்பதால்தான் வியர்வை சுரக்கிறது. எனவே, பித்தத்தை அதிகப்படுத்தும் உணவுகளைச் சாப்பிடக் கூடாது.

• பதப்படுத்திய உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

• வெங்காயம், பூண்டு, மசாலாப் பொருள்களை அளவாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

• மதுப்பழக்கம், புகைப்பழக்கம் வியர்வை நாற்றத்தை அதிகரிக்கும் என்பதால் அவற்றைத் தவிர்க்க வேண்டும்.

• வைட்டமின் பி, சி நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது நல்லது. மக்னீசியம் நிறைந்த உணவுகளான கீரைகள், நட்ஸ், விதைகள், முழுமையான தானியங்கள், சிறுதானியங்கள், மீன், பப்பாளி, தர்பூசணி, வெள்ளரி, பீட்ரூட், எலுமிச்சை, தக்காளி, வெந்தயம் ஆகியவற்றை உணவில் அதிக அளவில் சேர்த்துக்கொள்ளலாம்.

• நன்னாரி, வெட்டிவேர் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை குடிக்கும் நீரில் போட்டுவைத்து அந்த நீரை அருந்தலாம்.

• நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் கடுக்காய்ப் பொடி மற்றும் பற்படாகத்தை அக்குள் பகுதியில் பூசி, அரைமணி நேரம் கழித்து குளிக்கலாம். 

• குளியலுக்கு சோப்பு பயன்படுத்துவதைவிட நலுங்குமாவு பயன்படுத்துவது, தலைமுடிக்கு சீயக்காய் பயன்படுத்துவது நல்லது. இவை இயற்கையான வாசனைத் திரவியங்களாகச் செயல்படும்.

வியர்வை என்பது மனித உடலில் இயற்கையாக நிகழும் கழிவு வெளியேற்றமே. அதை நிர்வகிக்கவும் இயற்கையான வழிமுறைகளைக் கையாள்வதே நல்லது.