மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: ‘வாட்ஸ்அப்’ சித்தர்களும் உணவு மருத்துவமும்!

மண்புழு மன்னாரு: ‘வாட்ஸ்அப்’ சித்தர்களும் உணவு மருத்துவமும்!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு: ‘வாட்ஸ்அப்’ சித்தர்களும் உணவு மருத்துவமும்!

மாத்தியோசிஓவியம் வேலு

ப்போதாவதுதான் தொலைக்காட்சியில படம் பார்ப்பேன். அப்படி ஒருமுறை பார்த்துக்கொண்டிருக்கும்போது, ஒரு விஷயத்தைக் கவனிக்க முடிஞ்சது. கறுப்பு வெள்ளைக் காலத்து பழைய படம் அது. திடீரென ஒருவர் மயங்கி விழுந்துவிட்டார். உடனே, தொலைபேசியில மருத்துவரை அழைத்தார்கள். சில நிமிடங்களில், கழுத்தில் டையுடன் கையில் மருந்து பெட்டியுடன் மருத்துவர் வந்து பரிசோதனை செய்துவிட்டு, ‘‘பயப்படறத்துக்கு ஒன்றுமில்லை. மாத்திரை எழுதித் தருகிறேன். அதை இரண்டு நாள்களுக்குச் சாப்பிட்டால், சரியாகிவிடும்’’னு  சொல்லிவிட்டுச் சென்றுவிடுவார். உடனே, தொலைக்காட்சியை அடுத்த அலைவரிசைக்கு மாற்றினேன். சமீபத்துல திரைக்கு வந்த வண்ணமயமான படம் ஓடிக் கொண்டிருந்தது. திடீரென, ஒருவர் நெஞ்சில் கையை வைப்பார். உடனே, ஆம்புலன்ஸை அழைத்து, மருத்துவமனைக்குத் தூக்கி செல்வார்கள். ‘‘நிறைய பரிசோதனை செய்ய வேண்டும். பணத்தைத் தயார் செய்யுங்கள்’’னு சொல்வாங்க. 

மண்புழு மன்னாரு: ‘வாட்ஸ்அப்’ சித்தர்களும் உணவு மருத்துவமும்!

அந்தக் காலத்துல நோயாளியைத் தேடி மருத்துவர் வந்தபோது, மருத்துவம் நேர்மையாக நடந்தது. இன்று மருத்துவமனையைத் தேடி, நோயாளிகள் செல்வதால், சில மருத்துவமனைகளில் அறத்தை மீறி, பணம் வசூல் செய்யும் அவலம் நடக்கிறது. ஆங்கில மருத்துவம் படித்தாலும், சித்த மருத்துவத்தின் மகிமைகளைச் சொல்லி, மருத்துவம் பார்த்த டாக்டர் தெய்வநாயகம், கொடிய நோய்களையும் எளிமையாகத் தீர்த்து வைக்கும் கொடுமுடி ‘பஞ்சகவ்யா’ டாக்டர் நடராஜன்... போன்றவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆங்கில மருத்துவத்தைக் காட்டிலும் அதிகக் கட்டணம் வாங்கி, தன்னை நாடி வந்தவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் சித்த மருத்துவர்களும் உலாவிக் கொண்டுதான் இருக்குறாங்க. இவர்களுக்கு மத்தியில் ‘நோய்’, ‘நோயாளி’ என்று வன்மையாகச் சொல்வதைக்கூட மென்மையாகக் கண்டிக்கும் சித்த மருத்துவர்களும் இருக்குறாங்க.

‘‘அவிழ்தம்’ என்ற சொல், ஒரு வேர்ச்சொல் ஆகும். உள்ளத்தின் துன்பங்களைக் குறிப்பது நோய், உடலின் துன்பங்களைக் குறிப்பது பிணி. இது நமது பழந்தமிழரின் தொல்மரபு. பிணி எனும் சொல்லின் பொருள் தேடும்போதுதான், தமிழரின் தொல்லறிவியல் நமக்குப் பின்வருமாறு விளக்குகிறது. ஐங்காற்கள், மூன்று உயிர்தாதுக்கள், ஏழு உடற்கட்டுகள் தன்னிலையில் நடந்தால் இயல்புநிலை, அவை ஒன்றுடன் ஒன்று பிணித்தால் அதுவே நோய்களுக்கு வழிவகுக்கும். அவ்வாறு பிணிவதே பிணி ஆகும். அந்தப் ‘பிணி’யை அவிழ்ப்பதே அவிழ்தம் ஆகும். அவிழ்தம் என்பது மூலிகை, தாது மற்றும் உயிர்ப்பொருள்களிலிருந்து தயாரிக்கப்படும் பல்வேறு மருந்துகளைக் குறிப்பதோடு மட்டுமில்லாமல், ஆசனம் முதலான அனைத்து நோயணுகா வழிமுறைகளையும் குறிப்பதாகும்’’னு பாபநாசத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர், மைக்கேல் செயராசுதான், இப்படி ஒரு விளக்கத்தைத் தெளிவாகச் சொன்னார்.

‘உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று
உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே’

‘உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே

உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே’ங்கிற சித்தர் திருமூலர் பாடல்களைப் படிச்சிட்டு, காயகற்பம் சம்பந்தமா, சித்த மருத்துவர் மைக்கேல் செயராசுவோட பேசிக்கிட்டிருந்தேன்.

அந்த உரையாடல்ல, வாட்ஸ்அப்பில் வலம் வந்து கொண்டிருக்கும் ‘காயகற்பம்’ பற்றியும் கேட்டேன். ‘‘ஐயா, வந்த நோய்களைக் குணமாக்குவது மருத்துவம், நோய்கள் வராமல் காப்பது காயகற்பம். இதை மருத்துவரின் அறிவுரைப்படி உண்ண வேண்டும். வாட்ஸ்அப்பிலும் இணையதளத்திலும் உள்ள மருத்துவத் தகவல்களைப் படித்துவிட்டு, அதன்படி மருந்து சாப்பிட்டு, வருத்தப்பட்டுப் பாரம் சுமப்பவர்களைத் தொடர்ந்து சந்தித்து வருகிறேன். சமீபத்தில்கூட, இளைஞர்  ஒருத்தர் கடுமையான வயிற்றுவலியில் வந்தார். என்னவென்று விசாரித்துப் பார்த்தபோது, ஒரு நாளைக்கு ஒரு மிளகு, இரண்டாம் நாள் இரண்டு மிளகு என்று நாற்பத்து எட்டு நாள் மிளகைச் சாப்பிட்டுள்ளார். உடலைக் காயகற்பம் ஆக்க வேண்டிய மிளகு, வயிற்றைப் பதம் பார்த்துவிட்டது. இப்படிச் சுயமாக மருந்து சாப்பிட்டால், பாதிப்புகள் உண்டாகும். காயகற்பம் சாப்பிட வேண்டும் என்றால், சித்த மருந்துக் கடைகளில் எளிதாகக் கிடைக்கும், நெல்லிக்காய் அடங்கிய சயவன்பிராஸ் (Chyawanprash) லேகியத்தைச் சாப்பிடலாம்’’னு தெளிவா சொன்னாருங்க. இப்படித்தான் ஒரு நண்பர், கூகுள் ஆண்டவர் துணையோடு, எல்லோருக்கும் மருத்துவ ஆலோசனை சொல்லி வந்தார்.

சிலமாத இடைவெளியில அவரைச் சந்திக்கும்போது, தலையில முடிக்கொட்டி, முன் வழுக்கையுடன் இருந்தார். ‘முடி’ இழந்த கதையைக் கேட்டபோது, தூக்கி வாரிப்போட்டது. ‘அஸ்வகந்தா’னு சொல்லப்படுற, அமுக்கிரா சூரணத்தைச் சாப்பிட்டால் உடல் பலமாகும்னு இணையத்தில படிச்சிருக்காரு. உடனே, ஒரு மண்டலம் அமுக்கிரா சூரணத்தைச் உற்சாகமாக உண்டுருக்காரு. உடல் பலமானது என்னவோ உண்மைதான். ஆனா, தலைமுடிக்கொட்டியிருக்கு. உடனே, சித்த மருத்துவரைத் தேடி ஓடியிருக்கிறாரு. ‘‘தம்பி, சித்த மருந்துகளைச் சாப்பிடும்போது கவனமாக இருக்கணும். சித்த மருத்தும் தானேன்னு அலட்சியம் வேண்டாம்.

அமுக்கிரா சூரணத்தைச் சாப்பிடும்போது, தவறாமல் பால் குடிக்க வேண்டும். காரணம், அமுக்கிரா கிழங்கு, உடலில் வெப்பத்தை உருவாக்கும். அந்த வெப்பத்தைச் சமநிலைப்படுத்த அனுபானமாகப் பாலைக் குடிக்கச் சொல்வோம். நீங்கள் சூரணம் சாப்பிட்டவுடன், பால் குடிக்காமல் விட்டதால், உடல் வெப்பம் அடைந்து, தலைமுடிக் கொட்டத் தொடங்கிவிட்டது’’னு சொல்லி அனுப்பியிருக்காரு. பல ஆண்டுகளுக்கு முன்பு, திருவண்ணாமலை பகுதியில சுற்றி திரிந்தபோது, உணவு மருத்துவத்தில் ஆர்வம் உள்ள நண்பர் ஒருவரைச் சந்திச்சேன். ‘‘உணவு மருத்துவம்’னு ஒரு புத்தகத்தைக் சென்னையில வாழ்ந்த கந்தசாமி முதலியார் என்பவர் எழுதியுள்ளார். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை உள்ளவர்கள், படிக்க வேண்டிய புத்தகம் அது’’னு குறிப்போடு சொன்னாரு.

அந்த புத்தகத்தைச் சென்னை பாரிமுனையிலிருந்த கடையில தேடிப்பிடிச்சு வாங்கினேன். கந்தசாமி முதலியார், முறையாகச் சித்த மருத்துவம் கற்கவில்லை. ஆனா, அனுபவம் மூலமும் சித்தர்களிடம் குருகுலக்கல்வி மூலமும், சித்த மருத்துவத்தைக் கற்றுத் தேர்ந்திருக்கிறாரு. அந்தக் காலத்துல, கந்தசாமி முதலியாருக்குப் பெரிய மதிப்பும் மரியாதையும் இருந்திருக்கு. ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ங்கிற எளிய விஷயம்தான் இவரோட சித்தாந்தம்.

‘உடம்பைச் சரியாக வைத்துக்கொள்ள வைத்தியத்தைப் பொறுத்தமட்டில், அறுசுவைக்கு மேல் தெரிந்துகொள்ள வேண்டுவது ஒன்றுமில்லை. ஆறாதாரமும் கடந்தால் அப்பால் ஒரு செயலுமில்லை. ஏ, பி, சி, டி (A,B,C,D) என்று கண்டுபிடிக்கப்பட்ட வைட்டமின்களும் அறுசுவையில் அடங்கும். நோய் நீக்கும் சாதனம் வேறு எது இருந்தாலும் அறுசுவையில் அடங்கும். உதாரணம், அசீரணத்தினால், புளிப்பினால் (Hyper Acidity) உண்டாகும் மார்பு எரிவு, மார்புநோய் முதலியவற்றைப் பிராணாயாமத்தாலும் போக்கிக்கொள்ள முடிகிறது. பி வைட்டமின் சாப்பிட்டும் போக்கிக்கொள்ள முடிகிறது.

உப்புச் செந்தூரம் அல்லது உப்புச் சாப்பிட்டும் போக்கிக்கொள்ள முடிகிறது. பிராணாயாமம், பின்னர் வைட்டமின், உப்புச் செந்தூரம், உப்பு முதலியவற்றால் சில நிமிடங்களில் நோய் நீங்குகிறது...’

-இப்படி அந்தப் புத்தகம் முழுக்க உணவின் அருமை, உணவுகள் போக்கும் பிணிகள் சம்பந்தமான தகவல்களைக் கந்தசாமி முதலியார், சொல்லியிருக்காருங்க.