Published:Updated:

குழந்தை கடத்தலைத் தடுக்க கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் `புதிய டெக்னிக்' !

குழந்தை கடத்தலைத் தடுக்க கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் `புதிய டெக்னிக்' !
குழந்தை கடத்தலைத் தடுக்க கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் `புதிய டெக்னிக்' !

சென்னைக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் திருடப்படுவதைத் தடுக்க அடையாளப்படுத்தும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இன்னும் 10 நாள்களில் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரவிருக்கிறது. 

இது குறித்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் வசந்தாமணியிடம் கேட்டோம். ``அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகள் திருட்டைத் தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, குழந்தை பெற்ற தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் கைகளில் சாஃப்ட்வேர் தொழில்நுட்பத்துடன் கூடிய பட்டை கட்டி கண்காணிக்கும் புதியமுறை தற்காலிகமாகப் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இந்தச் செயல்பாடு திருப்தி அளிக்கும்பட்சத்தில், இன்னும் பத்து நாள்களில் இந்த மருத்துவமனையில் செயல்பாட்டுக்கு வந்துவிடும். அதன் பிறகு மற்ற மருத்துவமனைகளில் செயல்படுத்தும் திட்டம் இருக்கிறது. 

இந்தத் திட்டத்தின்படி குழந்தையின் தாய்க்கு ஐ.டி டேக்(I.T.Tag)  போன்ற பச்சை வண்ணப் பட்டையும், உடனிருக்கும் உதவியாளருக்கு ஆரஞ்சு வண்ணப் பட்டையும் கழுத்தில் அணிவிக்கப்படும். குழந்தைக்குக் கையில் பட்டை அணிவிக்கப்படும், குழந்தையின் தாய், குழந்தை மற்றும் உதவியாளரின் புகைப்படங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்படும்.

 அந்தப் பட்டையில் எலக்ட்ரானிக் சென்சார் (electronic sensor) பொருத்தப்பட்டு அதன் மூலம் கண்காணிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனை பிரசவ வார்டின் நுழைவு மற்றும் வெளியேறும் வாசல்களில் பெரிய மால்கள், விமான நிலையங்களில் அமைக்கப்பட்டிருக்கும் `மெட்டல் டிடெக்டர்' பரிசோதனை போன்று இந்தப் பட்டையில் சென்சாரை உணரும் கருவி பொருத்தப்பட்டிருக்கும். 

அந்த வாசல் வழியாக குழந்தையுடன் தாய் சென்றால் திரையில் பச்சை வண்ண விளக்கும், குழந்தையுடன் உதவியாளர் சென்றால் ஆரஞ்சு வண்ண விளக்கும் ஒளிரும். 3 வது நபர் யாராவது குழந்தையைத் தூக்கிச்சென்றால் சிவப்பு வண்ண விளக்கு ஒளிர்வதுடன், அலாரமும் ஒலிக்கும். இதன்மூலம் குழந்தையைத் திருடிச்செல்பவரைக் காட்டிக் கொடுத்துவிடும். " என்கிறார் டீன் வசந்தாமணி.