மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: உணவு மருத்துவமும் தரமான சம்பவங்களும்!

மண்புழு மன்னாரு: உணவு மருத்துவமும் தரமான சம்பவங்களும்!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு: உணவு மருத்துவமும் தரமான சம்பவங்களும்!

மாத்தியோசிஓவியம் வேலு

டந்த இதழ்ல கந்தசாமி முதலியாரைப் பத்தி சொல்லியிருந்தேன். அதைப்படிச்ச பலரும், அவரைப்பத்தி இன்னும் சொல்லுங்களேன்னு... கோரிக்கை வைச்சாங்க. அதனால, கந்தசாமி முதலியாரைப் பத்தி, இந்த இதழ்லயும் சிந்திக்க இருக்கிறோம். 

மண்புழு மன்னாரு: உணவு மருத்துவமும் தரமான சம்பவங்களும்!

கந்தசாமி முதலியார், சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள இந்து உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக இருந்திருக்கிறாரு. 1925-ஆம் ஆண்டு வாக்கில், ஆங்கில மருத்துவத்தில் பட்டம் பெற்ற ஜீவா என்பவருடன் நட்பு ஏற்படுது. இரண்டு பேரும், பேசிக்கொண்ட சம்பவங்கள், உணவு மருத்துவத்தின் அருமை, ஆறுசுவை, ஆறாதாரம்னு ‘உணவு மருத்துவம்’ நூல்ல நல்ல தரமான சம்பவங்கள் கொட்டிக்கிடக்குது. 1957-ஆம் ஆண்டு, பாரி நிலையம், வெளியிட்ட இந்த நூலுக்கு நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்த முதலியார் முகவுரையும் தமிழ் அறிஞர் மு.வ மதிப்புரையும் வழங்கியிருக்கிறதை வெச்சே, இந்த நூலுக்கான தரத்தை மதிப்பிடலாம்.

இனி நூலுக்குள்ள போவோம்...

‘‘டாக்டர் ஜீவா நான் கண்ட அரிய மனிதர்களுள் ஒருவர். என் வாழ்க்கையில் நான் அவரைச் சந்திக்க நேர்ந்து, பெற்ற அறிவுக்காக மிக மிக மகிழ்கின்றேன். எம் ஆசிரியர் கோ.வடிவேலு செட்டியாரவர்களுடைய ஆப்த நண்பரும், கோமளேசுவரன் பேட்டையில் வசித்தவரும் ஆகிய மங்கலம் சண்முக முதலியார் அவர்கள் வீட்டில், அவர் அடிக்கடி வந்து தங்குவார். நீண்ட ஒரே மல் துணியை இடுப்பில் சுற்றிக் கட்டி, கழுத்திலும் போட்டுக் கொள்வார்... அவரோடு நெருங்கிப் பழகுபவர்கள், அவரை வைத்தியர் என்று சொல்லமாட்டார்கள். சித்தர் என்றே வழங்குவர். ஞான நூல்கள் ஆத்மாவை அறிந்தவனைச் சித்தன் என்று கூறும். மக்கள், தம் போன்றவர்களால் செயற்கரிய செயல்களைச் செய்பவரைச் சித்தர் என்று கூறுவர். திருவிளையாடற் புராணத்தில், எல்லாம் வல்ல சித்தரான படலம், கல்லானைக்குக் கரும்பு அருத்திய படலம் ஆகிய இரு படலத்தாலும், தாயுமானவர் பாடலில் சித்தர் கணம் என்னும் தலைப்பில் வரும் பத்துப் பாடல்களாலும், செயற்கருஞ் செயல் செய்ய வல்லவர் சித்தர் என்னும் பொருள் பொருத்தமானது என்று பெறப்படுகின்றது.

ஜீவா இரசவாதம் வல்லவர்; மற்ற உலோகங்களை வெள்ளியாக ஆக்குவார்; பொன்னாகவும் செய்வார். ஆங்கில வைத்தியத்தில் பட்டம் பெற்றுச் சேனைகளுக்கு வைத்தியராய் உலகம் சுற்றியவர். ஆங்கில வைத்தியமேயன்றிச் சித்த வைத்தியம் முதலிய பல்வேறு வைத்தியங்களிலும் வல்லவர். நடந்து செல்கின்ற ஒருவனைப் பார்த்து, அவன் போய்க்கொண்டிருக்க, தம்மிடம் பேசுபவர்களிடம் அவன் இன்னின்ன நோய் உடையவன், இன்ன காரணத்தால் என்று சொல்லுவார். பொது அறிவு மிக்கவர்; உலாந்தா வீரம் (மிக்கக் கொடிய மருந்து) ஒரு பலம் சாப்பிடுவார்; அதற்குப் பிறகு அவரைப் பார்த்தால் உருத்திரன் போல இருப்பார். அவர் ஒரு வைத்திய நூலாவது மருந்தாவது கையில் வைத்துக் கொண்டிருப்பதில்லை. அவர் சொல்லுவதெல்லாம் வைத்தியம். சில சரக்குகளின் பெயரைச் சொல்லி, ‘இவற்றைக் கஷாயம் போட்டு ஆறு மாதம் சாப்பிடு’ என்று ஒருவனுக்குச் சொல்லுவார். எந்த உலோகத்தையும் மூலிகையோடு சேர்த்துப் புடம் வைத்து அரைமணி நேரத்தில் பஸ்பம் செய்து தருவார். நாக்கை அடக்க வல்லவர்க்கு இந்தப் பொருள்களை நீக்கி இந்தப் பொருள்களை உண்ணுங்கள் என்று சொல்லி அனுப்புவார். உணவை மாற்றி அமைத்துக்கொண்டால் தீராத நோய் இல்லை என்பது அவர் கண்டறிந்த உண்மை.

ஒருநாள் கோமளேசுவரன் பேட்டை வாராவதியிலிருந்து மேற்கே செல்லும் சாலையில் அவரும் நானும் சென்றுகொண்டிருந்தோம். அவர், “ஆறாதாரமும் கடந்தால் அப்பால் ஒரு செயலும் இல்லை” என்று மறுபடி அவர் பேச ஆரம்பித்து, ஆறாதாரம் பாடினார். சில விநாடிகள் சும்மா இருந்தார். ‘மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞா என்பவை ஆறாதாரங்கள் என்று நினைக்கிறீர்களோ? அன்று துவர்ப்பு, உப்பு, இனிப்பு, புளிப்பு, கசப்பு, காரம்.. இவைதாம் ஆறாதாரம்.

உடலில் ரத்தம், எலும்பு, தசை, கொழுப்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை என்று ஏழு தாதுக்கள் இருக்கின்றன. இவ்வேழு தாதுக்களால் கட்டப்பட்டிருந்தலின் - யாக்கப் பட்டிருத்தலின் - உடலுக்கு ‘யாக்கை’ என்று பெயர். ஏழு தாதுக்களில் ஆறு தாதுக்கள் உடலில் வேண்டிய அளவு இருந்தால் மூளை என்னும் ஏழாவது தாது சரியாகவே இருக்கும். மூளைக்கு என்று தனியாக ஒன்றும் செய்ய வேண்டாம். ஆறு தாதுக்களில் ரத்தத்தை உண்டாகக் துவர்ப்பும், எலும்பை வளர்க்க உப்பும், தசையை வளர்க்க இனிப்பும், கொழுப்பைத் தரப் புளிப்பும், நரம்பைப் பலப்படுத்த கசப்பும், உமிழ்நீரைச் சுரப்பிக்கக் காரமும் என் ஆறு வகைகள் உணவில் உள்ளன. அந்தச் சுவையுணவை உண்டு அந்தந்தத் தாதுவை வளர்த்துக் கொள்ளலாம். உடலில் ஆறு தாதுக்கள் உள. அவற்றை வளர்க்க உணவில் ஆறு சுவைகள் உள்ளன.

மருத்துவனிடம் உள்ள மருந்தும் இந்த ஆறு சுவையில் அடங்கும். அடுக்களையில் ஐந்தறைப் பெட்டியில் உள்ளதுதான் மருத்துவன் மருத்துவப் பெட்டியிலும் இருக்கிறது. உலகத்துப் பொருள்கள் எல்லாம் இந்த ஆறில் அடங்கும். உணவு மருந்தாம்; மருந்து உணவாம். ஆறு வகையாக அனைத்தையும் பகுத்துணர வல்லவன். ‘சித்தன், சிறந்த வைத்தியன்’ எல்லாவற்றையும் ஆறில் அடக்கி அறிவது அரிது. நான் அறிந்திருக்கிறேன். இது நூல்களில் இல்லை; நான் சொல்லும் அளவு விளக்கமாக இல்லை. வைத்திய நூல்களை ஆராய்ந்து கடைந்தெடுத்த உண்மைதான் என் அறிவு...’ என்று சொல்மாரி பொழிந்தார். இன்னும் அவரை நான் சந்தித்த நிகழ்ச்சிகளை எல்லாம் நினைத்து எழுத எனக்கு நினைவாற்றலும் இல்லை. நேரமுமில்லை. நினைத்து எழுதினால் நூலும் பெருகும். அவரைச் சந்தித்ததனால் நான் பெற்ற அறிவை, ‘உணவு மருத்துவம்’ என்னும் நூலாகத் தருகின்றேன். நூலின் பெருமை அவருடையது. அவர்க்கு முன் இருந்த சித்தர்களுடையது. குற்றங் குறைகள் அவசியம் இருக்கும். அவை என்னுடையவை. ‘அறிஞர் குற்றம் நீக்கிக் குணம் கொள்க’ என்று வேண்டுகிறேன்’’னு அடக்கமாக எழுதியிருக்காரு கந்தசாமி முதலியார்.

‘‘ஆர்மோனியம் வாசிக்கத் தெரியாதவர் இசை அமைப்பாளராக ஆக முடியாது; ஆகக்கூடாது’’னு இசைஞானி இளையராஜா, ஒருமுறை சொல்லியிருந்தார். இது மாதிரி, நாடிப்பார்க்க தெரியாத நபர் மருத்துவரா இருக்ககூடாது. கசடற நாடிப்பார்க்கும் கலையைக் கத்துகிட்டவங்களாத்தான் சித்த மருத்துவத்துல சிறப்பா விளங்க முடியும். எனக்குத் தெரிஞ்சி, ஆங்கில மருத்துவம் படிச்ச சில டாக்டர்கள் கூட, நாடிப்பிடிச்சு பார்த்து, மருத்துவம் பார்க்கிறதை பார்த்திருக்கேன்.

பல ஆண்டுகளுக்கு முன்னாடி, சின்னசேலம் பக்கம, வீனைத்தீர்த்தாபுரம் கிராமத்து உள்ள உறவினர் வீட்டுக்குபோயிருந்தேன். அந்த ஊர் முழுக்க நிலக்கடலை சாகுபடி செய்திருந்தாங்க. பச்சை நிலக்கடலையை, வகை, தொகை தெரியாம சாப்பிட்டேன். அன்னைக்குச் சாயந்திரமே, உடம்பு சரியில்லாம துடிச்சிப் போயிட்டேன். அக்கம், பக்கத்துல இருந்தவங்க ‘‘உடனே, தொட்டியம் வாத்தியார் கிட்ட கூட்டிக்கிட்டுப்போய்க் காட்டுங்க’’னு சொன்னாங்க. உடம்பு நலமில்லாம துடிக்கிறோம். மருத்துவர் கிட்ட அழைச்சிக்கிட்டுப்போகாம, வாத்தியார்க்கிட்ட போகச் சொல்றாங்களேனு மனசுக்குள்ளயே, நொந்துகிட்டேன்.

அதுக்குள்ள வண்டியை தயார்ப்படுத்தி, பக்கத்து ஊரான தொட்டியத்துக்குக் கூட்டிக்கிட்டுப்போனாங்க. அங்க போனவுடனேத்தான் தெரிஞ்சது, அந்தப் பள்ளிக்கூட வாத்தியார்தான் மருத்துவம் பார்க்கப்போறாருன்னு தெரிஞ்சிக்கிட்டேன். மேல் சட்டைக்கூடப் போடாம, ஒரு துண்டைப் போர்த்தியிருந்தாரு, அந்த வாத்தியாரு.

நான் பேசுறதுக்கு முன்னாடியே, என்னோட கையைப்பிடிச்சி, நாடிப்பார்த்துட்டு, “தலைசுத்தும், வாந்தி வரும், வாய் குமட்டும்”ன்னு, தெளிவா சொன்னாரு. ஸ்கேன் பண்ண மாதிரி உடம்புல உள்ள பிரச்னையைப் படம்பிடிச்சி சொன்னதைப் பார்த்தப் பிறகு, நம் ‘நாட்டு’ மருத்துவர்கள் மீது, மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கத் தொடங்குச்சி. இப்படி ஒரு மருத்துவக் கலை, வெளிநாட்டுல இருந்தா, அதைத் தலையில தூக்கி வைச்சிக் கொண்டாடுவாங்க.