Published:Updated:

வார்த்தை வன்முறை தீவிர மனஉளைச்சலுக்கு ஆளாக்கும்! - அலெர்ட் #Verbal abuse

நமக்கு விளையாட்டாகத் தெரிகிறது என்பதற்காக, நம்மைச் சார்ந்தவர்களுக்கும் அப்படித்தான் இருக்க வேண்டும் என எண்ணுவது தவறு. ஒருவரின் உணர்ச்சியைக் காயப்படுத்துவது உறவைக் கெடுக்கும். மாறாக, உணர்ச்சியை மதிப்பது, உறவை மேலும் நெருக்கமாக்கும்.

வார்த்தை வன்முறை தீவிர மனஉளைச்சலுக்கு ஆளாக்கும்! - அலெர்ட் #Verbal abuse
வார்த்தை வன்முறை தீவிர மனஉளைச்சலுக்கு ஆளாக்கும்! - அலெர்ட் #Verbal abuse

ங்கிலத்தில், `Just because a person doesn't put hands on you, That doesn't mean they aren't abusive'என்றொரு சொலவடை உண்டு. ஒருவரை உடல் ரீதியாக துன்புறுத்துவது மட்டுமே வன்முறை இல்லை, வன்முறைக்கு வேறு சில வடிவங்களும் இருக்கின்றன என்பதுதான் இதன்  உள்ளர்த்தம். `வன்முறையிலேயே மிகக்கொடுமையானது, வார்த்தை வன்முறை'தான் என்கிறார்கள் மனநல ஆலோசகர்கள். வார்த்தை வன்முறைக்கு நீண்ட காலமாக உட்படுத்தப்படுபவர்கள், நிம்மதியற்ற ஆரோக்கியமற்ற வாழ்க்கையைத்தான் எதிர்கொள்கின்றனர் என்கின்றன சில ஆய்வுகள். 

பலருக்கும் வார்த்தை வன்முறை பற்றிய சரியான புரிதல் இருப்பதில்லை. `விளையாட்டா சொன்னேன், நீ சீரியஸா எடுத்துகிட்டா நான் என்ன பண்ண முடியும்' என்று தீவிரமான விஷயத்தைச் சட்டெனச் சுருக்கமாக முடித்துவிடுகிறார்கள். அப்படியானவர்கள், `எல்லோருக்கும் வாழ்க்கையைப் பற்றிய ஒரு பார்வை இருக்கும். ஒவ்வொருவருக்கும் அவர்கள் கடந்து வந்த விஷயங்கள் இருக்கும். அதை வார்த்தைகளால் புண்படுத்தவோ, கேலி செய்யவோ நமக்கு அதிகாரம் இல்லை' என்பதை அவசியம் உணர வேண்டும். 

சமீபத்தில் உச்சநீதிமன்றம் வெளியிட்ட ஒரு தீர்ப்பு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. 17 ஆண்டுகளுக்கு முன்னர், ஊட்டி அருகே மனைவியே கணவனைக் கொலை செய்துவிட்டதாகச் சொல்லி தொடுக்கப்பட்ட வழக்கின் முடிவுதான் அது. கணவரை கொலை செய்ததற்கான காரணமாக, அப்பெண் சொல்லியது, `அவர் என்னிடத்தில் தகாத வார்த்தைகளை உபயோகப்படுத்தினார். அது என்னை அதிகம் காயப்படுத்தியது. அதனால் ஆத்திரப்பட்டு, அவரைக் கொன்றுவிட்டேன்' எனத் தெரிவித்திருந்தார். `கணவர்  வெளிப்படுத்திய வார்த்தை அந்தப் பெண்ணை மிகவும் காயப்படுத்தியுள்ளது, ஆத்திரமூட்டியுள்ளது என்பதால்தான் அவர் தன்னிலை மறந்து கொலை செய்துள்ளார்' எனக்கூறி 17 வருடங்களுக்குப் பிறகு அவரை விடுதலை செய்திருக்கிறது உச்சநீதிமன்றம். 

வார்த்தை வன்முறையால் பாதிக்கப்படுபவர்கள் குறித்தும், அதன் பின்னணி குறித்தும் மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கத்திடம் பேசினோம். விரிவாகப் பேசினார் அவர்.

``உடல் சார்ந்த வன்முறையைக் காட்டிலும், வார்த்தைகளால் நிகழ்த்தப்படும் வன்முறை எந்த விதத்திலும் குறைந்ததில்லை. ஒவ்வொருவருக்கும், சிறுவயதிலிருந்து அவர்கள் எதிர்கொண்ட சூழல், கடந்து வந்த விஷயங்கள் போன்ற பல நிகழ்வுகள் மனதில் கோர்வையாக பதிந்திருக்கும். அதைப்பொருத்தே பிற்காலத்தில் அவர்களின் செயல்பாடுகளும், நிலைகளும் அமையும். அதுதான், குறிப்பிட்ட வார்த்தையைத் தாங்க முடியாதவர்களாக அவர்களை மாற்றுகிறது. நமக்கு இயல்பாக, விளையாட்டாகத் தெரியும் வார்த்தைகள் மற்றொருவருக்கு மிகவும் ஆழமான சொல்லாகத் தெரியக்கூடும். வார்த்தை வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அப்பாதிப்பை  ஏற்படுத்துபவர்கள், அவர்களின் நெருங்கிய வட்டத்திலுள்ள நண்பராகவோ, பெற்றோராகவோ, சகோதரராகவோ அல்லது நெருங்கிய உறவுக்காரராகவோத்தான் இருக்கின்றனர். 

தனக்கு மிகவும் நெருங்கிய நபரே அப்படியான தகாத வார்த்தைகளைச் சொல்லும்போது, தன்னிலை மறந்து ஆவேசப்படத் தொடங்கிவிடுவார்கள். எல்லா இடங்களிலும் பாதிக்கப்பட்டவரை நியாயப்படுத்திவிட முடியாது என்றாலும் வார்த்தைகளில் கவனம் அவசியம். தகராறு ஏற்படும்போது இருவரில் யாராவது ஒருவரேனும், சூழலைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும், பொறுத்துப்போக வேண்டும். சூழலைச் சமாளிக்க முடியாவிட்டால், `இப்போதைக்கு இதைப் பற்றிப் பேச வேண்டாம்' என்று சொல்லிவிட்டு, அந்தச் சமயத்தில் அதைக் கடந்துவிடலாம். சில நாள்களுக்குப் பிறகு, பொறுமையாகப் பேசி புரிய வைக்கலாம்.

வார்த்தை வன்முறையால் பாதிக்கப்படுபவர்களில், பெரும்பாலானோர் 14 வயதுக்குப்பட்ட குழந்தைகள்தாம் என்பதால், அறிவுரைகள் பலவும் அவர்களைச் சுற்றியே இருக்கும். படிப்பு சார்ந்த பிரச்னைக்காக திட்டு வாங்குவது, நடத்தை மற்றும் ஒழுக்கம் தொடர்பாக பெற்றோராலேயே அடிக்கடி தவறாக விமர்சிக்கப்படுவது, செய்யாத தவறுக்கு தண்டனை பெறுவது, பாராட்டுக்காக ஏங்கிப்போய் இருப்பது, அன்பைவிடவும் வெறுப்பையே அதிகம் பெறுவது என வளரிளம் பருவத்தில் பல்வேறு மோசமான சம்பவங்களை எதிர்கொள்ளும் குழந்தைகள்தாம், சமூகத்துக்குள் வரும்போது பல்வேறு உறவுமுறைச் சிக்கல்களைச் சந்திக்கின்றனர். 

மேலும் தீவிர மனஉளைச்சலுக்கும் ஆளாகின்றனர். `தீவிரமான மனஉளைச்சல்' என்பது எதிர் கேள்வி கேட்க இயலாத ஒருவராக, எதிரில் இருப்பவரின் மனநிலையைச் சரியாக உணர முடியாதவராக, ஆரோக்கியமான வாதங்களில் கூட பங்குபெற தயாராக இல்லாதவராக, தன்னைத்தானே உள்ளடக்கிக்கொண்டு தனக்குத்தானே அடிமைப்பட்டுக் கிடக்கும் நிலைதான்.

வார்த்தை வன்முறையால் பாதிக்கப்படுபவர்களுக்கு, மனிதர்களை மட்டுமன்றி வார்த்தைகளைக் கையாள்வதிலும் பெரும் சிக்கல் இருக்கும். வார்த்தை வன்முறையை  எப்படிக் கையாள வேண்டும், எப்படி மீண்டு வரவேண்டும் எனத் தெரியாது. இவர்களை முறையாகப் புரிந்துகொள்ளாமல் மேலும் சிரமப்படுத்தினால், பிரச்னையின் தீவிரம் அதிகரிக்கக்கூடும்.

வார்த்தைகளால் காயப்பட்டவர்கள், அந்த நிலையைவிட்டு வெளிவரமுடியாமல் திணறுவார்கள். குறிப்பாக, அன்றாடச் செயல்களில், முழு ஈடுபாட்டோடு பங்களிப்போடு  செயல்பட முடியாமல் போவது, அளவுக்கதிகமாக யோசிப்பது, மனஇறுக்கத்திலேயே காணப்படுவது எனத் தன்னிலை மறந்து இருப்பார்கள். இந்த நிலை வெகுநாள்களுக்குத் தொடர்ந்தால், தன்னிடம் அன்பு செலுத்த யாருமில்லை என நினைப்பது, இந்த உலகத்துக்குத் தன்னுடைய இருப்பு முக்கியமில்லை என எண்ணுவது, மற்றவர்களுக்கு நம்மால் எந்த உபயோகமும் இல்லை என்பது போன்ற எதிர்மறை எண்ணங்கள் ஏற்படத்தொடங்கிவிடும். எனவே, இதுபோன்ற நிலையில் இருப்பவர்களுக்கு அவர்களின் இருப்பை யாராவது ஒருவர் உணர்த்த வேண்டும். அதை உணர்த்துபவர், வார்த்தை வன்முறையை நிகழ்த்தியவராக இருப்பது மிகவும் நல்லது. நெருக்கமானவர்கள் தகாத வார்த்தைகளைப் பிரயோகிக்கும்போதுதான் அதிகம் உடைந்துபோவார்கள். எனவே, பாதிப்பை ஏற்படுத்திய நபரே முதலில் இறங்கிப்போய் தன் நிலையை உணர வைப்பது  நல்லது" என்கிறார் ஸ்வாதிக். 

நமக்கு விளையாட்டாகத் தெரிகிறது என்பதற்காக, நம்மைச் சார்ந்தவர்களுக்கும் அப்படித்தான் இருக்க வேண்டும் என எண்ணுவது தவறு. ஒருவரின் உணர்ச்சியைக் காயப்படுத்துவது உறவைக் கெடுக்கும். மாறாக, உணர்ச்சியை மதிப்பது, உறவை மேலும் நெருக்கமாக்கும். உறவுக்கு கை மட்டுமல்ல, செவியும் கொடுங்கள்!