Published:Updated:

பேருந்து ஓட்டும்போது மாரடைப்பு... ஓட்டுநர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பேருந்து ஓட்டும்போது மாரடைப்பு... ஓட்டுநர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
பேருந்து ஓட்டும்போது மாரடைப்பு... ஓட்டுநர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

பேருந்து ஓட்டும்போது மாரடைப்பு... ஓட்டுநர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ந்த நூற்றாண்டில் மனித குலத்தை அச்சுறுத்தும் மிகப்பெரிய ஆபத்தாக மாறியிருக்கிறது மாரடைப்பு. உலகளவில் நிகழும் மொத்த மரணங்களில் 25 முதல் 40 சதவிகிதம் இதய பாதிப்புகளால்தான் ஏற்படுகின்றன. மாரடைப்பால் இறப்பவர்களில் பாதிபேர் முதல் நிகழ்விலேயே மரணமடைகிறார்கள். குறிப்பிட்ட சதவிகிதத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் இறக்கிறார்கள். மனித உயிரைக் கண நேரத்தில் காவு வாங்கும் பாதிப்பாக, மக்களை அச்சப்படுத்தக்கூடிய பாதிப்பாக மாரடைப்பு இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. சமீபத்தில் சென்னை கோயம்பேட்டில் நடந்த சம்பவம் அதை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. 

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த ரமேஷ் தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். அவருக்கு வயது 55. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு திருப்பத்தூரில் இருந்து சென்னைக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தார். கோயம்பேடு நெற்குன்றம் பேருந்து  நிறுத்தம் அருகே வந்தபோது, நெஞ்சுவலிப்பதாகச் சொல்லி பேருந்தை சாலையோரத்தில் நிறுத்தியுள்ளார். உடனடியாக அவரை, நடத்துநரும் பயணிகளும், ஆம்புலன்ஸின்  உதவியுடன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள்  தெரிவித்துள்ளனர். லேசாக வலியை உணர்ந்தபோதே பேருந்தை நிறுத்திவிட்டதால் பயணிகள் அனைவரும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். 

இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது, இது முதல் முறையல்ல. பல ஓட்டுநர்கள் பணிச்சூழலில் மாரடைப்பு வந்து இறந்திருக்கிறார்கள். ``ஓட்டுநர்களுக்குக் கொடுக்கப்படும் நெருக்கடிகளும் பேருந்தில் போதிய முதலுதவி வசதிகள் இல்லாததுமே இந்த நிலைக்குக் காரணம்'' என்கிறார் இதய நோய் நிபுணர் ராஜேஷ் குமார். 

``ஓட்டுநர் பணி என்பதே சற்று சிரமமானதுதான். அதிலும், அதிக வேலைப்பளு, போதிய ஓய்வு இல்லாமல், நல்ல தூக்கம் இல்லாமல் தொடர்ந்து வேலை செய்ய  நிர்ப்பந்திக்கப்படும்போது மனஅழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். அது நீடிக்கும்பட்சத்தில் இதய சம்பந்தமான பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். 

இது ஒரு புறமிருக்க, ஓட்டுநர்கள் அதிக தூரங்களுக்குப் பயணிக்க வேண்டியதிருக்கும். சரியான நேரத்தில் சாப்பிட முடியாது. போகும் இடங்களில் கிடைக்கும் உணவுகளைத்தான் சாப்பிட முடியும். அது நல்ல எண்ணெயில், தரமான முறையில் தயாரிக்கப்பட்டதுதானா என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. பல இடங்களில் ஏற்கெனவே பலமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய்களில் தயாரித்த உணவுகளைத்தான் விற்பனை செய்கிறார்கள். அது போன்ற உணவுகளைச் சாப்பிடும்போது உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேர்ந்து விடுகின்றன. அது மாரடைப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. பெரும்பாலான ஓட்டுநர்களுக்குப் புகை, மதுப்பழக்கம் இருக்கிறது. அதன் காரணமாகவும் இதய சம்பந்தமான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. 

ஓட்டுநர்கள், சரியான உணவுப் பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். முடிந்த அளவு வீட்டில் தயாரிக்கும் உணவுகளைக் கொண்டுசென்று சாப்பிட வேண்டும். முடியாத பட்சத்தில் நல்ல தரமான முறையில் தயார் செய்யப்படும் உணவகங்களில் மட்டுமே சாப்பிட வேண்டும். புகை, மது போன்ற பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும். வருடத்துக்கு ஒருமுறை அவசியம் முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். வண்டி ஓட்டிக்கொண்டிருக்கும்போதோ, மற்ற நேரங்களிலோ லேசான நெஞ்சு வலி ஏற்படுவதுபோல உணர்ந்தால் உடனடியாக மருத்துவரைச் சந்தித்துப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.  

நிறுவனங்களைப் பொருத்தவரை ஓட்டுநர்களின் மீது அதிக வேலைப்பளுவைத் திணிக்கக் கூடாது. `டார்கெட்' கொடுத்து அவர்களுக்கு நெருக்கடி கொடுக்கக் கூடாது. போதிய ஓய்வு கொடுக்க வேண்டும். அரசு ஓட்டுநர்களுக்கும் தனியார் நிறுவன ஓட்டுநர்களுக்கும் வருடத்துக்கு ஒருமுறை இலவச உடல் பரிசோதனை செய்யும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மனஅழுத்தத்தைத் தவிர்ப்பதற்கான இலவச பயிற்சி முகாம்களை நடத்த வேண்டும். 

விமானிகளுக்கு இருப்பதுபோல் வருடத்துக்கு ஒருமுறை உடல் பரிசோதனையைக் கட்டாயமாக்க வேண்டும். அதேபோல, வாகனங்களில் இருக்கும் முதலுதவிப் பெட்டிகளில் `ஆஸ்பிரின்' போன்ற மாரடைப்பைத் தடுக்கும் அடிப்படை மாத்திரைகள் வைத்திருக்க வேண்டும்.
மேலை நாடுகளில் பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் `ஏ.ஈ.டி' (Automated External Defibrillators)  எனப்படும் முதலுதவி கருவி இருக்கும். நின்றுபோன இதயத் துடிப்பை மீட்டுருவாக்கம் செய்ய இந்தக் கருவி உதவும். நம் நாட்டிலும் இதுபோன்ற அடிப்படைவசதிகளை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு பேருந்திலும்கூட இந்த வசதியை ஏற்படுத்தலாம். 

அனைத்தையும்விட முக்கியமாக நாம் அனைவரும் சாலை விதிகளை மதித்து நடந்தாலே, ஓட்டுநர்களுக்கு ஏற்படும் தேவையற்ற மனஅழுத்தத்தைக் குறைக்கலாம் என்கிறார்'' இதய நோய் நிபுணர் ராஜேஷ்குமார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு