மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாண்புமிகு மருத்துவர்கள் - டேவிட் நாட்

மாண்புமிகு மருத்துவர்கள் - டேவிட் நாட்
பிரீமியம் ஸ்டோரி
News
மாண்புமிகு மருத்துவர்கள் - டேவிட் நாட்

சேவை - 16ஓவியம்: பாலகிருஷ்ணன்

‘The Killing Fields’ என்ற திரைப்படம் பார்த்தேன். ஒரே போர்க்களம். குண்டுவெடிப்பில் காயமடைந்த பலரை மருத்துவமனைக்குக் கொண்டு வந்துகொண்டிருப்பார்கள். அங்கிருக்கும் ஒரேயொரு பயிற்சிநிலை மருத்துவர் அத்தனை பேரின் உயிரையும் காப்பாற்றப் போராடுவதாக ஒரு காட்சி. நான் அந்த மருத்துவர்போல் ஆக விரும்பினேன். 1993-ம் ஆண்டில் போஸ்னியா மற்றும் ஹெர்ஸ்கோவினாவின் தலைநகரமான சராஜிவோவைக் கைப்பற்றத் தாக்குதல் நடத்தப்பட்டது. அது குறித்த செய்தி தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்தது. காயம்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த தன் மகளைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடுகிறார் ஒரு தந்தை. அங்கே அவருக்கு உதவ ஒரு மருத்துவர்கூட இல்லை. இதனால், அவர் பரிதவித்து அழுகிறார். நான் அவருக்காக அங்கே இருக்க விரும்பினேன்...’’

மாண்புமிகு மருத்துவர்கள் - டேவிட் நாட்

`போர்க்களங்களில், அசாதாரணமான சூழலில் மருத்துவராகப் பணிபுரிய வேண்டும் என்ற முனைப்பு உங்களுக்கு எப்படி வந்தது?’ என்ற கேள்விக்கு டாக்டர் டேவிட் நாட் அளித்த பதில் இது. கி.பி. 1956-ம் ஆண்டில் இங்கிலாந்தில் பிறந்தவர் டேவிட் நாட். அவரின் தந்தை மால்கம்   அறுவை சிகிச்சை நிபுணர். பர்மாவில் பிறந்த அவர் சென்னையில் படித்தவர். அரை இந்தியர் என்பதால், டேவிட் நாட்டின் தோற்றத்தில் ஓர் இந்தியருக்குரிய அம்சங்கள் தெரியும்.

மாண்புமிகு மருத்துவர்கள் - டேவிட் நாட்தந்தையின் வழிகாட்டுதலில் டேவிட் 1981-ம் ஆண்டில் லண்டனில் மருத்துவப் படிப்பை முடித்தார். வாஸ்குலர் அறுவை சிகிச்சை நிபுணராகப் பயிற்சிபெற்றார். 1993-ம் ஆண்டுவரை லண்டனில் அவரது மருத்துவப் பணி தொடர்ந்தது. அப்போதுதான் அவருக்குள் மேற்சொன்ன மனமாற்றம் நிகழ்ந்தது. விடுமுறைக் காலத்திலும் ஓய்வெடுக்காமல், போர்க்களங்களுக்குச் சென்று மருத்துவராகப் பணியாற்றத் தொடங்கினார். சராஜிவோவில் ஆரம்பித்த போர்க்கள மருத்துவப் பயணம் ஆப்கானிஸ்தான், சியாரோ லியோன், லிபெரியா, டார்ஃபர், காங்கோ, ஈராக், ஏமன், லிபியா, காஸா மற்றும் சிரியா என்று தொடர்ந்துகொண்டிருக்கிறது. இவை தவிர, எங்கெல்லாம் இயற்கைச் சீற்றங்கள், பேரழிவுகள் நடக்கின்றனவோ அங்கும் சென்று பணியாற்றுகிறார்.

சராஜிவோவில் டாக்டர் டேவிட்டை தோட்டா துளைத்திருக்கிறது. காங்கோவில் போராளிகள் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து மிரட்டியிருக்கிறார்கள். டார்ஃபரில் மரண பயம் காட்டி மிரட்டியிருக்கிறார்கள். சுற்றிலும் துப்பாக்கிச் சூடும், வெடிகுண்டுத் தாக்குதலும் நடக்கும் நேரத்திலும் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டிருக்கிறார். 2015-ம் ஆண்டில் எல்லியைச் சந்தித்தார். இருவருக்கும் மன அலைவரிசை ஒத்துப் போனது. திருமணம் செய்துகொண்டார்கள். இப்போது அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். போர்க்களத்தில் தான் சந்தித்த அனுபவங்களை, `War Doctor: Surgery on the Front Line’ என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார் டேவிட். அதில் அவரது சிரியா அனுபவங்கள், போரின் கோர முகத்தை உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டின.

மாண்புமிகு மருத்துவர்கள் - டேவிட் நாட்

`2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நான் சிரியாவின் கிழக்கு அலெப்போவுக்கு வந்தபோது, அங்கே இருந்த 95 சதவிகித மருத்துவர்களும், செவிலியர்களும் கிளம்பிச் சென்றிருந்தார்கள். நான் சென்ற முதல் நாள், 11 பேர் சுடப்பட்ட காயத்துடன் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டனர். 18 மணி நேரம் போராடி அத்தனை பேரின் உடலிலிருந்தும் தோட்டாக்களை அகற்றி, அவர்களைக் காப்பாற்றினேன். தினமும் மக்கள் சுடப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் கொண்டு வரப்பட்டார்கள். என் உடனிருந்த மருத்துவர் சொன்னார்... `தூரத்திலிருந்து பொதுமக்களைக் குறிபார்த்துச் சுடுவது தீவிரவாதிகளுக்கு ஒரு விளையாட்டு. நெஞ்சில் சுடு, காலில் சுடு என்று பந்தயம் கட்டுவார்கள். சரியாகச் சுட்டுவிட்டால் சிகரெட் பாக்கெட்டோ, பணமோ பரிசளித்துக்கொள்வார்கள்.’

மாண்புமிகு மருத்துவர்கள் - டேவிட் நாட்

ஒருநாள் ஒரு கர்ப்பிணியை ஆபத்தான நிலையில் கொண்டு வந்தார்கள். வயிற்றில் குண்டு பாய்ந்திருந்தது. சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுத்துவிட்டோம். குழந்தையைத் தோட்டா ஒன்றும் செய்யவில்லை. குண்டை அகற்றி அவளுடைய கர்ப்பப்பையும் காப்பாற்றிவிட்டோம். அன்றைக்கு ஏழு வயதுச் சிறுமி ஒருத்தி வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்தாள். அவளது குடல் வெளியே தொங்கிக் கொண்டிருந்தது. அப்போது இன்னும் ஐந்தே நிமிடத்தில் மருத்துவமனை தாக்கப்படவிருக்கிறது என்ற பதைபதைக்கும் தகவல் வந்தது. எல்லோரும் தப்பி ஓடத் தொடங்கினர். இன்னும் சில நிமிடங்களில் அவள் உயிர் பிரிந்துவிடும் என்ற  நிலையில் நான் அவளுக்கான அறுவை சிகிச்சையைத் தொடர்ந்தேன். 20 நிமிடங்களில் அறுவை சிகிச்சையை முடித்திருந்தேன். அதுவரை மருத்துவமனைமேல் குண்டு விழவில்லை. அந்தச் சிறுமி உயிர் பிழைத்து, புன்னகை செய்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. அவள் பெயர் ஆயிஷா.’

இதுபோல நெஞ்சை உலுக்கும் சம்பவங்கள் பலவற்றை டாக்டர் டேவிட், தனது புத்தகத்தில் விவரித்திருக்கிறார். அவற்றில், அவர் `ஐஎஸ்ஐஎஸ்’ தீவிரவாதிகளிடம் சிக்கிக்கொண்ட அனுபவமும் உண்டு. 25 ஆண்டுகளாக போர்க்களங்களில் பணியாற்றிய அனுபவமிக்க டாக்டர் டேவிட், தன்னைப்போலவே பல மருத்துவர்களை உருவாக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் `David Nott Foundation’ என்ற அமைப்பைத் தொடங்கினார். அதன் மூலம் போர்க்களத்திலிருக்கும் குறைவான மருத்துவ வசதிகளைக்கொண்டு, எப்படியெல்லாம் சிகிச்சை செய்து உயிர்களைக் காப்பாற்றலாம் என்ற பயிற்சிகளை பிற மருத்துவர்களுக்கு வழங்கி வருகிறார். தன்னைப்போலவே சேவை நோக்கத்துடன் பலரும் களமிறங்கிப் பணியாற்ற ஊக்கம் கொடுத்துவருகிறார். பல்வேறு சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ள டாக்டர் டேவிட் நாட்டின் செல்லப் பெயர் - Indiana Jones of Surgery.

சேவை தொடரும்...

மாண்புமிகு மருத்துவர்கள் - டேவிட் நாட்
மாண்புமிகு மருத்துவர்கள் - டேவிட் நாட்

னிதர்களைப் போல, விலங்குகளுக்கும் தூக்கத்தின்போது கனவு வருமா என்பது இன்னமும் கண்டறியப்படவில்லை.