Published:Updated:

நோய்நாடி நோய்முதல் நாடி

நோய்நாடி நோய்முதல் நாடி
பிரீமியம் ஸ்டோரி
News
நோய்நாடி நோய்முதல் நாடி

வாழ்வியல் - 9வேலாயுதம் சித்த மருத்துவர்

க்குவமாகச் சமைத்து, பாசத்துடன் பரிமாறி, குடும்பமாக அமர்ந்து சாப்பிடும் வழக்கம் கடந்த தலைமுறையுடன் மலையேறிவிட்டது. வாரம் ஒருமுறை ஹோட்டல் சாப்பாடு, உட்கார்ந்த இடத்திலேயே ஆர்டர் செய்து சாப்பிடுவது என மக்களின் அன்றாட  உணவுப் பழக்கம் அடியோடு மாறிவிட்டது. நாம் சாப்பிடும் உணவுகள் உடலுக்கு உகந்தவையா, அவற்றில் என்னவெல்லாம் சேர்த்திருக்கிறார்கள் என்பது பற்றியெல்லாம் இந்தத் தலைமுறையினருக்குக் கவலையில்லை. ஆபத்துகளை உணராமல் அவசரகதியில் சமைக்கும் உணவுகளை நோக்கியே பயணித்துக்கொண்டிருக்கிறார்கள். உடலுக்கு உகந்த, நலம் பயக்கும் பாரம்பர்ய உணவுகளின் மகத்துவத்தை இன்றைய இளம் தலைமுறையினர் முழுமையாக உணராததே இதற்குக் காரணம்.

நோய்நாடி நோய்முதல் நாடி

மனிதன் உயிர் வாழ்வதற்கு ஆதாரமான உணவு, ஆற்றலுடன் இயங்கவும் அடிப்படையாக இருக்கிறது. அப்படியான உணவின் முக்கியத்துவத்தை உணர்ந்த சித்தர்கள், மனிதனின் நலத்துக்கேற்ப சில வரையறைகளை வகுத்து நெறிப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.  ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்பது சித்த மருத்துவத்தின் கோட்பாடு. அதுமட்டுமல்ல, ஒருவருக்குச் சரியான மருந்து கொடுப்பது எப்படி அவசியமோ, அதுபோல உணவும் பொருத்தமானதாக இருக்க வேண்டும். அதுவும் வாழும் சூழலுக்கேற்றதாக இருக்க வேண்டும். இதை உணர்ந்த நம் முன்னோரின் வாழ்க்கையில், உணவு மருந்தாகப் பயன்பட்டதுடன் கலாசாரத்தோடு இரண்டறக் கலந்திருந்தது. நம் முன்னோருக்கு உணவு பற்றிய ஆழ்ந்த அறிவு இருந்தது. உணவு சார்ந்த மிகப்பெரிய ஆய்வுகள், தமிழர்களின் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, கலித்தொகை போன்ற சங்க இலக்கியங்களில் இருப்பதை நாம் கண்கூடாகப் பார்க்கலாம். குறிப்பாக, `ஆறு சுவையாகப் பிரித்து, அவற்றைச் சரிவிகிதமாக உட்கொண்டால், நலமுடன் வாழலாம்’ என்று வலியுறுத்துகிறது சித்த மருத்துவம். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நோய்நாடி நோய்முதல் நாடி

உணவும் உடல்நலமும்!

`அண்டத்தில் உள்ளதே பிண்டம்
பிண்டத்தில் உள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமும் ஒன்றே
அறிந்துதான் பார்க்கும் போதே...’ -


நம்  உடற்கூறுகள் இயற்கையைச் சார்ந்தேயிருக்கும் என்ற சித்த மருத்துவத்தின் கோட்பாட்டை உணர்த்தும் சட்டை முனி சித்தரின் பாடல் இது. பிரபஞ்சத்தில் பேரண்டம் என்பது பூமி என்றால், சிற்றண்டம் என்பது உடல்.  பிரபஞ்சமும் உடலும் நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய ஐந்து அடிப்படை தாதுக்களால் ஆனவை. பஞ்சபூதங்களின் கலவையாக நம் உடலின் உள்ளேயும் அவை வெவ்வேறு விகிதத்தில் அமைந்துள்ளன என்பதே அதன் பொருள். அதேபோல, நம் உடலை வாதம் (காற்று), பித்தம் (தீ), கபம் (நீர்) ஆகிய உயிர்த் தாதுக்கள்தாம் இயக்குகின்றன. இவற்றில், `வாதம் ஒரு பங்கும், பித்தம் அரைப் பங்கும், கபம் கால் பங்கும் இருக்க வேண்டும். அதாவது, 1:1/2:1/4 என்ற விகிதத்தில் அவை இருக்க வேண்டும். அவற்றின் விகிதம் மாறும்போதுதான் நோய் உண்டாகும்’ என்கிறது சித்த மருத்துவம். இவற்றில் ஒன்று மாறினால்கூட மற்ற இரண்டும் மாறிவிடும்.

நோய்நாடி நோய்முதல் நாடி

அறுசுவை உணவு

நம் உடலைப்போலவே உணவும் மேலே சொல்லப்பட்ட ஐந்து அடிப்படைக் கூறுகளால் உருவாக்கப்பட்டது. `ஒவ்வொரு தாவரமும் நிலத்தில் புதைந்துதான் வளர்கிறது. அப்போது நீர், நிலம், காற்று, ஆகாயம், சூரிய ஒளி ஆகியவற்றைப் பயன்படுத்தித்தான் வளர்கிறது. அதனால் அதிலும் பஞ்ச பூதங்களின் தன்மை இருக்கும்’ என்று குறிப்பிடுகின்றனர் சித்தர்கள். ஆக, உடலின் சமநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வலிமை நாம் உண்ணும் உணவுக்கு உண்டு. அதிலும் சித்த மருத்துவத்தில் ஐம்பூதங்களில் இரண்டு பூதங்கள் சேர்ந்து ஒரு சுவையைத் தரும். உதாரணமாக, `நெருப்பும், நீரும் சேர்ந்தால் உப்புச் சுவையையும், மண்ணும் நீரும் சேர்ந்தால் இனிப்புச் சுவையையும் தரும்’ என்கிறார்கள் சித்தர்கள். அதன்படி இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, கார்ப்பு, புளிப்பு ஆகிய ஆறு சுவைகளை வகுத்து வைத்திருக்கிறார்கள். நாம் உண்ணும் உணவுகளின் சுவை, அவற்றின் தன்மை, வீரியம் போன்றவற்றைப் பொறுத்தும் உடலின் மூன்று உயிர்த் தாதுக்களின் சமநிலை மாற்றத்தைப் பொறுத்தும்தான் நோய்கள் உண்டாகின்றன என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

`தலை தித்திப்பு, கடை கைப்பு’ என்று, இனிப்பை முதலில் சாப்பிடச் சொல்கிறது நம் பண்பாடு. செரிமானத்தின் முதல் படியான உமிழ்நீரை முதலில் சுரக்கவைக்கும் என்பதற்காகவே இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது. அத்துடன், வாய் முதல் வயிறுவரையுள்ள செரிமான உயிர் வேதியியல் சுரப்பு வேலைகளைத் தூண்டக்கூடிய ஆற்றலும் இனிப்புக்கு உண்டு. மதிய உணவில் அரிசி சாதம் பெரு உணவாக இருந்தாலும், அதனுடன் சரிவிகித சத்துகள் கிடைப்பதற்காகத்தான் அதிக அளவில் காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிட வேண்டும் என்று சொல்லப்பட்டது. குழம்பாக மட்டுமல்லாமல், கூட்டு, பொரியல் வடிவிலும் காய்கறிகள் இடம்பெறும். அத்துடன் வற்றல் குழம்பு, தயிர், ரசம், ஊறுகாய், பாயசம் போன்றவையும் இடம்பெறும். 

காலை உணவில் இட்லியைப் பெரு உணவாக எடுத்துக்கொண்டால் அதனுடன் இரண்டு வகையான சட்னி, சாம்பார், வடை போன்றவை சுவைகளை ஈடுசெய்யும். இப்படி ஒவ்வொரு வேளை உணவிலும் சரிவிகிதச் சத்துகள் கிடைக்கவும் அறுசுவை இடம்பெறவும் வழிவகை செய்திருக்கிறார்கள் முன்னோர். மசியல், வற்றல், ஊறுகாய், ஆப்பம், அடை, பணியாரம் என மரபுவழி உணவின் பட்டியல் மிக நீளம். அதேபோல, குறிப்பிட்ட நாள்கள் இடைவெளியில் சாப்பிடவேண்டிய உணவுகளையும் நெறிப்படுத்தி வைத்தனர். ஆனால், இன்றைக்கு துரித உணவுக் கலாசாரத்தின் காரணமாக நாம் அதிகம் சேர்த்துக்கொள்பவை இனிப்பு, உப்பு, காரம் ஆகிய மூன்று சுவைகள்தாம். கசப்பும் துவர்ப்பும் நாவுக்கு இனிமையாக இல்லாததால், அவற்றைத் தவிர்த்துவிடுகிறோம்.

“ஒன்றிய வாத பித்த கபமிவை யுயரா வண்ணம்

நன்றுறு கறிக ளெல்லா நாளுமே சமைப்ப ராய்ந்தோம்

தின்றிடு மிளகு மஞ்சள் சீரக முயர்ந்த காயம்

வென்றிகொள் சுக்கோ டேலம் வெந்தய முள்ளி சேர்த்தே”


என்ற `பதார்த்தகுண சிந்தாமணி’ பாடலில் சுக்கு, மிளகு, சீரகம், வெந்தயம், மஞ்சள், பெருங்காயம், வெள்ளைப்பூண்டு ஆகிய ‘திரிதோட சமப் பொருள்’களை வகுத்துக் கொடுத்திருக்கிறார்கள். இவை உயிர்த் தாதுக்களான வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றையும் சமப்படுத்தி, நலமோடு வாழ வழிவகுக்கும். எனவே, இவற்றை அவ்வப்போது உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அந்த நூலில் நாம் அருந்தும் பாலுக்கு என்ன குணம்... பருப்புக்கு என்ன குணம்... அரிசிக்கு என்ன குணம் என்று ஒவ்வொன்றையும் வகைப்படுத்தி, முழுமையாக எழுதியிருக்கிறார்கள். அந்த உணவுப் பொருள்களுக்கான குணத்தை வகுத்து, ஒரு மனிதன் தன்னுடைய உடல் கூறுக்குத் தகுந்த உணவும் பட்டியலிடப்பட்டது. எந்த உணவை, எந்தப் பருவகாலத்தில் சாப்பிட வேண்டும் என்பது பற்றிக்கூட தமிழர்களின் பழங்கால வாழ்வியல் முறைகளில் எழுதப்பட்டிருக்கிறது. அமாவாசை, கிருத்திகை நாள்களில் இந்தந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்று, சடங்குகள் மூலம் தவிர்க்கக் கூடாத உணவுகளின் அவசியத்தை உணர்த்தியிருக்கிறார்கள். உதாரணமாக வாரத்தில் இரண்டு நாள், அமாவாசை நாளில் வாழைப்பூவையும் அகத்திக்கீரையையும் சாப்பிட வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

எந்தெந்த உணவுகளால் என்னென்ன பலன்கள், எந்தெந்தச் சுவைகளால் என்னென்ன பலன்கள்? அடுத்தடுத்த பகுதிகளில் விரிவாகப் பார்ப்போம்.

தெளிவோம்...

ஜி.லட்சுமணன்

நோய்நாடி நோய்முதல் நாடி
நோய்நாடி நோய்முதல் நாடி

உளவியல் உண்மைகள்!

ரு விஷயம் / வேலை பிடிக்கவில்லையென்றால், அதைப் பற்றி குறைந்தபட்சம் நல்லவிதமாகப் பேசினாலோ அல்லது அது பிடிக்கும் என நினைக்க ஆரம்பித்தாலோ அதைப் பற்றிய உங்கள் எதிர்மறை சிந்தனை மாறுவதை உணா்வீா்கள். இதை உளவியல், `காக்னிடிவ் டிஸ்ஸொனன்ஸ்’ (Cognitive Dissonance) என்கிறது.

நோய்நாடி நோய்முதல் நாடி

உளவியல் உண்மைகள்!

ங்கள் கோரிக்கையைப் பிறா் ஏற்க வேண்டுமென்றால், அதன் காரணத்தைத் தெரிவியுங்கள். மனித மூளைக்குச் சரியான காரணம் தெரிவிக்கப்பட்டால், அது அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுவிடும். உதாரணமாக, ரயில் பயணத்தில் லோயா் பொ்த் வேண்டுமென்றால், ``எனக்கு உங்க பொ்த்தைக் கொடுக்க முடியுமா?’’ என்று கேட்பதைவிட, ``எனக்கு லோயா் பொ்த் கிடைக்குமா... ஏன்னா, எனக்கு முதுகுவலி’’ என்று கேட்டால், பிறா் அதை ஏற்றுக்கொள்வதற்கு சாத்தியக்கூறுகள் அதிகம்.