Published:Updated:

ஹெச்.ஐ.வி ரத்தம், அக்கறையில்லாத அறுவை சிகிச்சைகள்... இந்தியாவில் அதிகரிக்கும் மருத்துவ அலட்சியங்கள்!

தலையில் காயத்துடன் அனுமதிக்கப்பட்ட நபருக்குக் காலில் அறுவை சிகிச்சை செய்திருக்கின்றனர். இதுபோன்று மருத்துவமனைகளில் தவறுதலாகவும் கவனக்குறைவாகவும் சிகிச்சை அளிக்கப்படுவது நாடு முழுவதும் தொடர்கிறது.

ஹெச்.ஐ.வி ரத்தம், அக்கறையில்லாத அறுவை சிகிச்சைகள்... இந்தியாவில் அதிகரிக்கும் மருத்துவ அலட்சியங்கள்!
ஹெச்.ஐ.வி ரத்தம், அக்கறையில்லாத அறுவை சிகிச்சைகள்... இந்தியாவில் அதிகரிக்கும் மருத்துவ அலட்சியங்கள்!

போலியோ என்னும் இளம்பிள்ளைவாத நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்ட நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு உண்டு. உலகின் மிகப் பெரிய காப்பீட்டுத் திட்டமான `ஆயுஷ்மான் பாரத்' என்ற மருத்துவக் காப்பீடுத் திட்டத்தைக் கொண்டது நம் நாடு. தமிழக அளவில் எடுத்துக்கொண்டாலும் சுகாதாரத்துறையில் மற்ற மாநிலங்களைவிட மிகப்பெரிய முன்னேற்றங்களை அடைந்துள்ளது. இவற்றையெல்லாம் நினைத்து பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், அதற்கு இணையாக மருத்துவ அவலங்களும் தொடர்ந்து நிகழ்ந்து வருவது வேதனையாக உள்ளது. மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியப் போக்கால் அப்பாவி ஏழைகள் பாதிப்புக்குள்ளாகும் சம்பவங்கள் தொடர்கின்றன. அரசு மருத்துவமனைகள் மட்டுமல்ல, தனியார் மருத்துவமனைகளும் இதற்கு விதிவிலக்கில்லை. 

சாத்தூர் அரசு மருத்துவமனையில், கர்ப்பிணி ஒருவருக்கு ஹெச்.ஐ.வி பாதித்தவரின் ரத்தம் ஏற்றப்பட்டதால், அவர் பாதிப்புக்குள்ளானது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் சென்னைக் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில், மாங்காட்டைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி தொற்று உள்ள ரத்தம் ஏற்றப்பட்டதாகப் புகார் எழுந்தது. அந்த வரிசையில், இப்போது கோவை அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றப்பட்ட இரண்டு வயது குழந்தைக்கு ஹெச்.ஐ.வி தொற்று இருப்பதாகக் குழந்தையின் பெற்றோர் புகார் அளித்திருப்பது மருத்துமனைகளின் மீதான நம்பிக்கையைச் சிதைத்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்குமுன், மூச்சுத்திணறல் பிரச்னையால் அவதிப்பட்ட இரண்டு வயது குழந்தையை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள் விஸ்வநாதன் - சித்ரா தம்பதியர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தக் குழந்தைக்கு ஒருவாரம் சிகிச்சையளிக்கப்பட்டது. டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பிய சில மாதங்களில் குழந்தையின் உடல் முழுவதும் தடிப்புகளும், காதுகளின் பின்புறம் கட்டிகளும் ஏற்பட்டன. இதனால் பயந்துபோன விஸ்வநாதன் - சித்ரா தம்பதி மீண்டும் கோவை அரசு மருத்துவமனைக்குக் குழந்தையை அழைத்துச் சென்றனர். அப்போது குழந்தைக்கு ரத்தப் பரிசோதனை செய்து பார்த்ததில், குழந்தைக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

உடனடியாக குழந்தையின் பெற்றோர் மற்றும் அவர்களின் இன்னோர் ஆண் குழந்தைக்கும் ஹெச்.ஐ.வி பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், அவர்கள் மூன்று பேருக்கும் ஹெச்.ஐ.வி பாதிப்பு இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் ஏற்றப்பட்ட ரத்தத்தால்தான் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்டது என்று விஸ்வநாதனின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். இதையடுத்து உஷாரான மருத்துவமனை நிர்வாகம், இதுபற்றி மீடியாக்களிடம் பேசக் கூடாது என்று மிரட்டியிருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த விஸ்வநாதன் குடும்பத்தினர் இந்தச் சம்பவம் குறித்து கோவை மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். 

இதற்கிடையே கோவையில் செயல்பட்டுவரும் தனியார் மருத்துவமனை ஒன்றில் பிரசவத்தின்போது செவிலியரின் கை தவறி கீழே விழுந்த குழந்தை இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிலும் தொடர்கிறது. ஹைதராபாத்தில் உள்ள  நிஜாம் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில், அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்ணின் வயிற்றில், `ஃபோர்செப்ஸ்' எனப்படும் கத்தரி போன்ற மருத்துவக் கருவியையும் சேர்த்து வைத்துத் தைத்துவிட்டனர். தொடர்ச்சியான வயிற்று வலியால் அவதிப்பட்ட அந்தப் பெண்ணுக்கு எக்ஸ்ரே செய்து பார்த்தபோதுதான் தவறு நடந்தது தெரியவந்தது. 

வலது காலில் ஏற்பட்ட பிரச்னைக்காக சிகிச்சைக்குச் சென்றவரின் இடது காலில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர் மருத்துவர்கள். இந்தச் சம்பவம் ஒடிசா மாநிலம், கியோஜார் மாவட்டத்தில் உள்ள அனந்த்பூர் துணைத் தாலுகா மருத்துவமனையில் நடந்தது. தலைநகர் டெல்லியில் செயல்படும் `சுஷ்ருதா காய சிகிச்சை மையத்'தில் தலைக்காயத்தில் இருந்த ஈயை அகற்றாமல் சிகிச்சையளித்து புழுப்பிடித்துப் போனது. அதே மருத்துவமனையில் தலையில் காயத்துடன் அனுமதிக்கப்பட்ட நபருக்குக் காலில் அறுவை சிகிச்சை செய்திருக்கின்றனர். இதுபோன்று மருத்துவமனைகளில் தவறுதலாகவும் கவனக்குறைவாகவும் சிகிச்சை அளிக்கப்படுவது நாடு முழுவதும் தொடர்கிறது.

மருத்துவமனைகளில் நிகழும் இத்தகைய அவலங்களை முன்வைத்து `அபோர்ஷனில் நழுவிய காரிகை' என்னும் கவிதைத் தொகுப்பு சமீபத்தில் வெளியானது. மருத்துவமனைகளில் நிகழும் அவலங்களையும், வணிகத்தையும் மிக வெளிப்படையாகப் பதிவு செய்திருந்தார், அந்தப்  புத்தகத்தை எழுதிய கவிஞரும் மருத்துவச் செயற்பாட்டாளருமான சக்தி. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, விரிவாகப் பேசினார்.

``வெளியே தெரிந்தவை மிகக் குறைவு. தெரியாத சம்பவங்கள் இன்னும் ஏராளம். குறிப்பாக, சில நாள்களுக்கு முன்பாக ஹெச்.ஐ.வி தொற்று உள்ள ரத்தத்தை, கர்ப்பிணி ஒருவருக்கு ஏற்றிய சம்பவம் தமிழத்தைப் பரபரப்புக்குள்ளாக்கியது. ஆனால், இப்படி நடப்பது இது முதல்முறையல்ல. இதேபோன்று பல சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடந்துள்ளன. இதுதொடர்பான பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, வேதாரண்யத்தைச் சேர்ந்த 8 வயதுப் பெண் குழந்தைக்கு விபத்தில் கை எலும்பு உடைந்தது. அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து அந்தப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை முடிந்து வெளியே வந்த குழந்தையைப் பார்த்த பெற்றோருக்குப் பேரதிர்ச்சி. அதாவது குழந்தையின் உள்ளங்கை பகுதியை மேற்புறமாகவும், புறங்கை பகுதியை உட்புறமாகவும் வைத்து சிகிச்சை செய்திருக்கிறார்கள் மருத்துவர்கள். உடனடியாக, 5 லட்சம் ரூபாயைக் கொடுத்து நடந்த தவற்றை வெளியே சொல்லாமல் பார்த்துக் கொண்டனர். 

இதுமட்டுமல்ல, ரத்ததான முகாம் என்ற பெயரில் பல்வேறு மோசடிகள் நடக்கின்றன. தானமாகப் பெறப்பட்ட ரத்த மாதிரிகளை முறையாகப் பராமரிப்பதில்லை. ரத்த தானம் செய்பவர்களையும் முறையாகப் பராமரிப்பதில்லை. 
சமீபத்தில், காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தில் ரத்ததானம் செய்த ஒருவர், பேருந்து நிலையத்திலேயே மயக்கமடைந்து விபத்தில் சிக்கிய சம்பவம் நடந்தது. தனியார் நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்த முகாமில் அவர் ரத்ததானம் செய்திருக்கிறார். குறைந்தபட்சம் ரத்ததானம் செய்ய முன் வருபவர்களை, அவர்களது வீட்டிலிருந்து அழைத்து வருவது, மீண்டும் அவர்களைப் பத்திரமாக வீட்டில் கொண்டுபோய் சேர்ப்பது போன்ற குறைந்தபட்ச வசதிகளைச் செய்துகொடுத்து அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்.

பணமில்லாததால்தான் ஏழைப் பெண்கள் பிரசவத்துக்காக அரசு மருத்துவமனைகளுக்குச் செல்கிறார்கள். ஆனால், அங்கிருக்கும் செவிலியர்களுக்கு 500 ரூபாய் லஞ்சம் கொடுக்காவிட்டால் குழந்தையின் முகத்தைப் பார்க்கக்கூட அனுமதிக்க மாட்டார்கள். ஆபரேஷன் தியேட்டருக்கு ஸ்ட்ரெச்சரில் கூட்டிச் செல்லவேண்டும் என்றால் 100 ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் உடன் வருபவர்களே தூக்கிக் கொண்டு போகவேண்டும். அதுபோக, குழந்தை பிறந்ததும் ஆண் குழந்தை என்றால் 500 ரூபாயும், பெண் குழந்தை என்றால் 800 ரூபாயும் லஞ்சம் கொடுக்கவேண்டும். கொடுக்காவிட்டால் பிறந்த குழந்தையைக் கண்ணில் காட்டமாட்டார்கள். பணம் கொடுத்தால்தான் குழந்தையைக் கையில் கொடுப்பார்கள். இது பல அரசு மருத்துவமனைகளில் வாடிக்கை. 

குழந்தை பிறந்ததும் மருத்துவமனையில் தங்கியிருக்கும் ஒவ்வொரு நாளும் அங்குள்ள ஊழியர்களுக்குக் குறைந்தது 100 ரூபாய் லஞ்சம் தர வேண்டும். அப்போதுதான் முறையாகக் கவனிப்பார்கள். டிஸ்சார்ஜ் செய்யும்போது, ஒரு சில இடங்களில் 500 ரூபாயும், ஒரு சில இடங்களில் பணம் பெறாமலும் அனுப்புகிறார்கள். பிரசவத்துக்காக ஒருவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், 2500 முதல் 3000 ரூபாய்வரை பணம் கொடுக்காமல், பிரசவம் நடக்காது. மருத்துவமனைகள் பலவற்றில் மருத்துவர் இல்லாமலே பிரசவங்கள் நடக்கின்றன. பிரசவ வலியுடன் 10 கிலோமீட்டர் தூரத்துக்குமேல் நடந்து செல்லவேண்டிய அவலமும் நடக்கிறது. 

பெரம்பலூர் அரசு மருத்துவமனையின், நான்காவது மாடியிலிருந்து விழுந்த சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் சில மாதங்களுக்குமுன் நடந்தது. டாய்லெட்டில், எக்ஸ்ரே மெஷின் வைக்கப் பயன்படுத்தப்படும் பிளைவுட்டில் ஆணியடித்து சுவராக மாற்றி வைத்திருந்தார்கள். அதை கல்சுவர் என நினைத்து அதன்மேல் சிறுவன் சாய, அது உடைந்து கீழே விழுந்தது. மாடியிலிருந்த கீழே விழுந்ததால் சிறுவனும் தலை இரண்டாகப் பிளந்து மூளை வெளியே வந்தது. இதைவிட வேறு அலட்சியம் எதுவும் இருக்கிறதா எனத் தெரியவில்லை'' என்றபடி கண் கலங்குகிறார் சக்தி.