Published:Updated:

நோய்நாடி நோய்முதல் நாடி

நோய்நாடி நோய்முதல் நாடி
பிரீமியம் ஸ்டோரி
நோய்நாடி நோய்முதல் நாடி

வாழ்வியல் - 10வேலாயுதம், சித்த மருத்துவர்

நோய்நாடி நோய்முதல் நாடி

வாழ்வியல் - 10வேலாயுதம், சித்த மருத்துவர்

Published:Updated:
நோய்நாடி நோய்முதல் நாடி
பிரீமியம் ஸ்டோரி
நோய்நாடி நோய்முதல் நாடி

ம் தமிழ் மரபு உருவாக்கிவைத்திருக்கும் நலப் பழக்கங்களில் முக்கியமானது உணவுப்பழக்கம். ‘எதைச் சாப்பிட வேண்டும்’ என்பதை மட்டும் சொல்லாமல், ‘எப்படிச் சாப்பிட வேண்டும்’, ‘எதற்குச் சாப்பிடவேண்டும்’, ‘எப்போது சாப்பிட வேண்டும்’ என்று பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே எழுதிவைத்திருக்கிறார்கள், நம் மூதாதையர்.  சுவைகள் பற்றி மட்டும் ஏராளமான தகவல்கள் இருக்கின்றன, நம் சித்த நூல்களில். 

நோய்நாடி நோய்முதல் நாடி

ஒவ்வொரு சுவைக்கும் ஒரு மருத்துவ குணம் இருக்கிறது. அளவுக்கு மீறி உட்கொள்ளப்படும் ஒவ்வொரு சுவையும் நம் உடலை எந்தெந்த நோய்களை நோக்கி நகர்த்துகிறது என்பதைச் சித்த மருத்துவம் தெளிவாகச் சொல்கிறது. சித்த மருத்துவரிடம் சிகிச்சைக்காகச் சென்றால், `பத்தியம்’ என்ற பெயரில் எந்தெந்த உணவுகளைச் சேர்க்க வேண்டும், எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றும் தவறாமல் குறிப்பிடுவார். சித்த மருத்துவத்தின் அடிப்படையான ஆறு சுவைகளுக்கும் பின்னாலிருக்கும் நலவாழ்வுக்கான விஷயங்களை இந்த இதழில் பார்க்கலாம்.

சுவையும் ஆரோக்கியமும்!

அறுசுவை உணவு படைப்பதை தங்கள் தலையாய பண்பாடாகக்கொண்டிருந்தவர்கள் நம் முன்னோர். இது வெறும் பண்பாட்டுக்கூறாக மட்டுமல்லாமல், உயிர்த் தாதுக்களையும் தத்தம் நிலையிலிருந்து பிறழாமல்வைத்திருக்கும் மருந்தாகவும் இருக்கிறது.  `இனிப்பு, உப்பு, புளிப்பு, கார்ப்பு (காரம்), கசப்பு, துவர்ப்பு ஆகிய அறுசுவைகளிலும் ஒவ்வொரு சுவை உருவானதும் இந்தப் பிரபஞ்சத்தின் அடிப்படையாக இருக்கும் பஞ்ச பூதங்களின் கலவையால்தான்’ என்பது சித்த மருத்துவத்தின் அடிப்படை. அதன்படி ஐம்பூதங்களில், `மண்ணும் நீரும் சேர்ந்த கலவை இனிப்பு; மண்ணும் நெருப்பும் சேர்ந்த கலவை புளிப்பு; நீரும் நெருப்பும் சேர்ந்த கலவை உப்பு; காற்றும் ஆகாயமும் சேர்ந்த கலவை கசப்பு; நெருப்பும் காற்றும் சேர்ந்த கலவை காரம்; மண்ணும் காற்றும் சேர்ந்த கலவை துவர்ப்பு. இவற்றை உள்ளடக்கிய அறுசுவை உணவே, சமச்சீரான உணவு’ என்கிறது சித்த மருத்துவம். அதனால்தான், நம் முன்னோர் ஆறு சுவைகளையும் சரிவிகிதத்தில் சேர்த்துக்கொள்வதை வழக்கமாகவைத்திருந்தனர்.

`புளிதுவர்விஞ் சுங்கறியாற் பூரிக்கும் வாதம்,
ஒளியுவர்கைப் பேறில் பித்துச் சீறும்... கிளிமொழியே
கார்ப்பினிப்பு விஞ்சிற் கபம்விஞ்சுஞ் சட்டிரதச்
சேரப்புணர் நோயணு காதே’ 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நோய்நாடி நோய்முதல் நாடி

என்று ஒவ்வொரு சுவையின் முக்கியத்துவத்தையும், அது அளவோடு இல்லாவிட்டால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும் என்பதையும் உணர்த்துகிறது சித்த மருத்துவ நூலான `பதார்த்த குண சிந்தாமணி.’

இனிப்பு

தாயின் சீம்பாலில் குழந்தை உணரும் முதல் சுவை இனிப்பு. இனிப்பை முதலில் சாப்பிட்டுவிட்டுத்தான் ஆகாரத்தைத் தொடங்க வேண்டும். இனிப்புச் சுவை உடலுக்கு ஆற்றலையும் மனதுக்கு இனிமையையும் தரக்கூடியது. உடலைப் பூரிக்கச் செய்யும். எடையை அதிகரிக்கும். குறிப்பாக, சுத்திகரிக்கப்பட்ட வெள்ளைச் சர்க்கரை, இனிப்புச் சுவையின் பலனைத் தராது. இனிப்பு என்றால், பனைவெல்லம், நாட்டுச்சர்க்கரை, தேன். அதே நேரத்தில் இந்தச் சுவையை அதிகமாகச் சேர்த்துக்கொண்டால், உடலில் கபம் பெருகும். இதனால் உடல் பருமன், அஜீரணம், சர்க்கரைநோய் போன்றவை ஏற்படலாம்.

புளிப்பு

எலுமிச்சை, புளி, குடம்புளி, மாங்காய், அன்னாசிப்பழம் போன்றவற்றின் மூலம் புளிப்பைப் பெறலாம். புளியில் ஊறவைத்து காய்கறிகளைச் சமைப்பதால், அவற்றின் நுண்சத்துகள் நீங்காமலிருக்கும். மிதமாகப் புளித்த இட்லி, தோசை மாவு, மோர் போன்றவற்றைச் சாப்பிடுவதால், உணவை ஜீரணிக்கும் நொதிகள் நிறைய கிடைக்கும். இவை பித்தத்தைத் தூண்டி, செரிமானத்தைச் சீராக்கும். அதே நேரத்தில், அதிகமாகப் புளிப்பு சேர்த்தாலும், பித்தம் அதிகரிக்கும்; குறைத்தால், ஜீரண சக்தி குறையும். எனவே, புளிப்புச் சுவையுள்ள உணவுகளையும் மிதமான அளவே எடுத்துக்கொள்ள வேண்டும்.  

நோய்நாடி நோய்முதல் நாடி

உப்பு

உணவுக்குச் சுவை தருவது மட்டுமல்லாமல் எலும்புக்கும் ஊட்டமளிக்கும். ஆனால், உப்பை உணவில் மட்டுமே சேர்த்துக்கொள்வதில்லை. சிப்ஸ், துரித உணவுகள், சோடா பானங்கள் எனப் பல்வேறு வகைகளில் வயிற்றுக்குள் தள்ளுகிறோம். `உப்பை அதிகமாகச் சாப்பிட்டால், உடல் வலிமை குறையும்’ என்றும் சொல்லிவைத்திருக்கிறார்கள் சித்தர்கள். குறிப்பாக, ரத்த அழுத்தம் முதல் சிறுநீரகக் கோளாறுகள்வரை அதிக உப்பு உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும். எனவே, உப்பை அளவுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கசப்பு

பெரும்பாலானோர் விரும்பாதது, ஆனால், உடல்நலனுக்கு மிகுந்த நன்மை தரக்கூடியது, கசப்புச் சுவை. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்; ரத்தத்தைச் சுத்திகரிக்கும். நன்னாரி, வேம்பு, பாகற்காய், வெந்தயம், சுண்டைக்காய் போன்றவற்றின் மூலம் கசப்புச் சுவையைப் பெறலாம். தாய்மாருக்கு, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்; தொண்டைப்புண்களை ஆற்றும். சருமநோய்கள், குடல் புழுக்களுக்கு கசப்பு சிறந்த மருந்து. நரம்புத் தளர்ச்சி மற்றும் கைகால்களில் ஏற்படும் எரிச்சலைத் தணிக்கும். கசப்புச் சுவை அதிகரித்தால், உடலிலுள்ள தாதுக்களின் அளவு குறையும்.

காரம்

காரம் என்றாலே காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் என்பதுதான் நினைவுக்கு வரும். மிளகு, வெங்காயம், இஞ்சி, பூண்டு, கடுகு போன்றவையும்கூட காரச் சுவை கொண்டவைதான். அளவான காரம் செரிமானத்தைத் தூண்டும்; கபத்தைப் போக்கும்; உடல் வலிமையைப் பெருக்கும்; மலத்தை இளக்கும்; குடல்புழுக்களை அழிக்கும்; உணர்ச்சியைக் கூட்டும். அதிகமானால், உடல் பலவீனத்தை அதிகப்படுத்தும்; நரம்புகளை பாதிக்கும்.

துவர்ப்பு

நாம் துவர்ப்புச் சுவையை உணவில் அதிகம் சேர்ப்பதில்லை. இது உடம்புக்கு மிகவும் நன்மை பயக்கும் சுவை. நெல்லிக்காய், வாழைப்பூ, நாவல்பழம், அத்தி, கடுக்காய், சீரகம், புதினா ஆகியவற்றிலிருந்து துவர்ப்புச் சுவையைப் பெறலாம். பித்தம், கபத்தைச் சரிசெய்யும்; ரத்தத்தைச் சுத்திகரிக்கும்; அதிக ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும்; புண்களையும் ஆற்றும். இந்தச் சுவையை அதிகம் சேர்த்துக்கொண்டால் பித்தம் அதிகரிக்கும். குறைத்தால், இரும்புச்சத்தைக் கிரகிக்கும் தன்மையை உடல் இழந்து, ரத்தச்சோகை ஏற்படலாம்.

சித்த மருத்துவத்தில் காலை, மதியம், இரவு வேளைகளில் எந்த மாதிரியான உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்பது சொல்லப்பட்டிருக்கிறது. தமிழர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே எந்த உணவை, எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என வகுத்துவைத்திருக்கிறார்கள்.

காலை உணவு

காலைக்கடன்களை முடித்துவிட்டு, சூரிய உதயத்துக்குப் பிறகு காலை உணவை உட்கொள்ள வேண்டும். துவரம்பருப்பு, பாசிப்பருப்பு போன்ற பருப்பு வகைகள், கடலை, உளுந்து ஆகிய பயறு வகைகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதனால்தான், நம் முன்னோர் உணவுப் பழக்கத்தில் இட்லியில் உளுந்தும், சாம்பாரில் பருப்பும் சேர்த்தனர். பாசிப்பருப்பு சிறந்த பருப்பு என்றும், ஊட்டமளிக்கும் உணவு என்றும் சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. காலையில் இவற்றைச் சாப்பிட்டுவிட்டு உழைத்தால், உடலில் சத்துகள் நிறைந்து தங்கும். உணவும் எளிதாகச் செரிமானமடையும்.

மதிய உணவு

கிழங்குகள், பழங்கள், கீரைகள், தயிர், மோர் போன்ற உணவு வகைகளை உட்கொள்ளலாம். இவை அனைத்தும் மந்தப் பதார்த்தங்கள். எனவே, இவற்றில் பெருங்காயம், மிளகு ஆகியவற்றைச் சேர்த்துச் சமைத்தால், மந்தத் தன்மை மட்டுப்படும். மேலும், சூரிய வெப்பத்தாலும் உடல் உழைப்பாலும் எளிதாகச் செரிமானமாகும்.

இரவு உணவு

அவரைப் பிஞ்சு, முருங்கைப் பிஞ்சு, சுண்டைக்காய் பிஞ்சு உள்ளிட்ட பிஞ்சுக் காய்கறிகள் மற்றும் வேகவைத்த உணவு வகைகள் போன்ற எளிதில் செரிக்கும் உணவுகளை உண்ண வேண்டும். இந்த மூன்று வேளை உணவுகளிலும் சுக்கு, மிளகு, பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்துச் சாப்பிட வேண்டும். இவை உணவுகளிலுள்ள கடினத் தன்மையைக் குறைத்து, தேவையான செரிமான சுரப்புகளைத் தூண்டக்கூடியவை.  பழங்களை மூன்று வேளையும் எடுத்துக்கொள்ளலாம். `இது அடிப்படையாகப் பின்பற்றவேண்டிய உணவு’ என்கிறது சித்த மருத்துவம். எனவே, நம் பாரம்பர்ய மருத்துவமான சித்த மருத்துவம் உணர்த்திய உணவுப் பழக்கத்தை மேற்கொண்டு, நோய் நொடியின்றி வாழ்வோம்!

தெளிவோம்...

ஜி.லட்சுமணன் 

நோய்நாடி நோய்முதல் நாடி