
சேவை - 19ஓவியம்: பாலகிருஷ்ணன்
அது சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டம். மருத்துவராக வேண்டுமென்பது ஆரோன் யோகியின் வாழ்நாள் கனவு. ஆனால், மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காமல் நான்கு முறை தோற்றுப் போயிருந்தார். ஐந்தாவது முறை ஒரு வழியாக வாசல் திறந்தது. ஆனால், நான்கு ஆண்டுகள் படிப்பை முடிக்க, அவருக்கு ஏழு ஆண்டுகள் பிடித்தன.

உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகரில் 1937-ம் ஆண்டு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் ஆரோன் யோகி. குடும்பத்தின் முதல் மருத்துவராகத் தலைநிமிர்ந்தார். ஏதாவது ஒரு குறிப்பிட்ட மருத்துவத் துறையில் நிபுணத்துவம் பெற வேண்டுமென்று விரும்பினார். இதற்கு அவர் தேர்ந்தெடுத்தது `பிளாஸ்டிக் சர்ஜரி.’ அந்தக் காலத்தில் அதில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் மிகக் குறைவு. எனவே 1971-ம் ஆண்டு பாட்னாவின் வேல்ஸ் மருத்துவக் கல்லூரியில் பிளாஸ்டிக் சர்ஜரி துறையில் இணைந்தார்.

அன்றைய காலகட்டத்தில் பிளாஸ்டிக் சர்ஜன்களின் தேவை, இந்தியாவில் மிகவும் குறைவு. எனவே, டாக்டர் யோகிக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை. இதனால் அவர் மனம் வெறுத்தார். `பிளாஸ்டிக் சர்ஜரி துறையில் நிபுணத்துவம் பெற ஒரு பிச்சைக்காரனைப்போலத் திரிந்திருக்கிறேன். கழுதைபோல உழைத்திருக்கிறேன். பொது மருத்துவம் செய்து பிழைப்பை ஓட்டுவதில் எனக்கு விருப்பமில்லை. நான் எனது துறையில் சாதித்துக் காட்டுவேன்’ என்று கூறிய யோகி பொறுமை காத்தார்.
1982-ம் ஆண்டு டாக்டர் யோகிக்கு அமெரிக்காவிலிருந்து அழைப்பு வந்தது. அமெரிக்கா சென்றவர், அங்கே சுமார் ஒரு வருடம் பிளாஸ்டிக் சர்ஜனாகப் பயிற்சி பெற்றார். இந்தியாவில் கிடைக்காத அனுபவமும் பயிற்சியும் அங்கே கிடைத்தன. நாடு திரும்பிய அவர், டெஹ்ராடூனில் ஒரு சிறிய வாடகை வீடு எடுத்து, தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் குடியேறினார். வீட்டு ஹாலின் ஒரு பகுதியை மருத்துவமனையாக்கினார். அங்கே ஒரு கட்டிலைப்போட்டு அறுவை சிகிச்சைகள் செய்தார். அவரின் மனைவி அறுவை சிகிச்சைக்கான உபகரணங்களைக் கிருமிகளின்றி சுத்தம் செய்து கொடுத்தார். வீட்டிலிருந்த ஒரே கழிவறையை நோயாளிகளும் பயன்படுத்திக் கொண்டனர். யாரிடமும் டாக்டர் யோகி பணம் கேட்கவில்லை. அவர்கள் ஏதாவது கொடுத்தால் மட்டும் வாங்கிக்கொண்டார். இதையடுத்து தன் தந்தையிடம் கடன் வாங்கிய யோகி, டெஹ்ராடூனின் வனவிலங்குக் காப்பகமும், மான்கள் பூங்காவும் அமைந்திருக்கும் இடத்தின் அருகிலேயே நான்கு ஏக்கர் அளவில் ஒரு நிலத்தை வாங்கி, ஒரு கிளினிக் தொடங்கினார். அந்தப் பிரதேசத்தில் வனவிலங்குகளால் தாக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகம். அடிக்கடி தீ விபத்துகளும் நடக்கும். சிகிச்சை செய்ய அந்த வட்டாரத்தில் மருத்துவர்கள் யாரும் கிடையாது. யோகி, அந்த வெற்றிடத்தை நிரப்பினார்.

இமயமலை அடிவாரக் கிராமங்களில் வசிக்கும் மக்கள், விலங்குகளால் தாக்கப்பட்டாலோ அல்லது தீக்காயம் பட்டாலோ அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குச் செல்வார்கள். அப்படி பாதிக்கப்படுபவர்களில் குழந்தைகளே அதிகம். அரசு மருத்துவர்கள், டாக்டர் யோகியிடம் அனுப்பிவைப்பார்கள். முகம் சிதைந்து, உடல் கிழிந்து, கைகால்கள் எரிந்து வந்த எத்தனையோ பேருக்கு சிகிச்சை செய்து அவர்களை குணமாக்கியிருக்கிறார். யாரிடமும் எதற்கும் அவர் பணம் கேட்பதும் கிடையாது.
கரடியால் தாக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் உலகின் நம்பர் 1 மருத்துவர் யோகிதான். அப்படித்தான் ஒரு பெண், டாக்டர் யோகியிடம் வந்தார். கரடியின் தாக்குதலுக்குள்ளாகி, யோகியிடம் வந்த 13-வது நபர் அவர். அப்படித் தாக்கியதில் அவரின் இடது கண், இமை, மூக்கு, இரண்டு உதடுகள், தாடைப்பகுதி என எல்லாமே இல்லாமல் போயிருந்தன. டாக்டர் யோகி, தொடர் அறுவை சிகிச்சை செய்து அந்தப் பெண்ணின் முகத்தை மறுசீரமைப்பு செய்து கொடுத்தார். முதலில் தாடை, கண், இரண்டு உதடுகள் சரி செய்யப்பட்டன. மூக்கு மட்டும் பாக்கியிருந்தது. `டீ குடிக்க உதடுகள் இருக்கின்றன. எனக்கு அது போதும். பிழைப்பைப் பார்க்கப் போகிறேன். எனக்கு எதற்கு அநாவசியமாக மூக்கு?’ என்றபடி அந்தப் பெண் கிளம்பிச் சென்றார்.

இது போன்ற விநோதமான, அரிதான உடல் மற்றும் முகச் சீரமைப்பு அறுவை சிகிச்சைகளை தினமும் மேற்கொண்டு வருகிறார் 82 வயது யோகி. தினமும் குறைந்தது பத்து அறுவை சிகிச்சைகள் செய்கிறார். அவருக்கு உதவியாக யோகியின் மகன் டாக்டர் குஷ் இருக்கிறார். ஆயிரக்கணக்கான நோயாளிகள் யோகியிடம் சிகிச்சை பெறுவதற்காக காத்திருப்புப் பட்டியலில் இருக்கிறார்கள். இந்தப் பட்டியலின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காகவே கடந்த 13 ஆண்டுகளாக, வருடத்துக்கு இரண்டு முறை இருவார மருத்துவ முகாம் நடத்திவருகிறார். அமெரிக்காவிலிருந்து சுமார் 15 பிளாஸ்டிக் சர்ஜன்கள் யோகியின் முகாமுக்குத் தம் சொந்தச் செலவில் வருகிறார்கள். இவரது மருத்துவ முகாமில் நூற்றுக்கணக்கான மக்களுக்கு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தனது நிலத்தில் கேளிக்கைகள் நிறைந்த `அறிவியல் பூங்கா’ ஒன்றைக் குழந்தைகளுக்காக அமைக்க வேண்டுமென்பது டாக்டர் யோகியின் கனவு. அதற்கான பணிகள் அரைகுறையாக நடந்திருக்கின்றன. மக்களுக்கான மருத்துவச் சேவையிலேயே யோகியின் வாழ்நாள் கரைந்தது. `பிழைக்கத் தெரியாதவர்’ என்று சிலர் யோகியைப் பரிகாசம் செய்வதுண்டு. `என் வாழ்க்கை முறையை யாரும் பாராட்டியது கிடையாது. எவராலும் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், என்னிடம் சிகிச்சை பெற வரும் ஒரு நோயாளி தன் கண்ணை, மூக்கை, உதடுகளை, இழந்த தனது புன்னகையை மறுபடியும் பெற்றுத் திரும்பிச் செல்லும்போது எனக்குக் கிடைக்கும் சந்தோஷத்தின் அளவு மிக மிக அதிகமானது’ என்கிறார் யோகி.
சேவை தொடரும்...