Published:Updated:

'எம்.எம்.ஆர்' தடுப்பூசியால் ஆட்டிசம் வருமா?'- ஆறு லட்சம் குழந்தைகளிடம் நடத்திய ஆய்வு முடிவு

'எம்.எம்.ஆர்' தடுப்பூசியால் ஆட்டிசம் வருமா?'- ஆறு லட்சம் குழந்தைகளிடம் நடத்திய ஆய்வு முடிவு
News
'எம்.எம்.ஆர்' தடுப்பூசியால் ஆட்டிசம் வருமா?'- ஆறு லட்சம் குழந்தைகளிடம் நடத்திய ஆய்வு முடிவு

இத்தகைய நிகழ்வுகளுக்குப் பிறகும் உலகளவில் `எம்.எம்.ஆர்' தடுப்பூசியின் மீதான அச்சம் இருந்துகொண்டுதான் இருந்தது. அதைப் போக்கும் கடமை மருத்துவத்துறைக்கு இருந்தது.

டுப்பூசிகள்... விதவிதமான நோய்த் தாக்குதல்களில் இருந்து நம்மைக் காக்க வந்த அரண்கள் என ஒரு தரப்பும், பல்வேறு புதிய நோய்களுக்கெல்லாம் அதுவே தோற்றுவாய் என இன்னொரு தரப்பும்  தொடர்ந்து வாதிட்டு வருகிறார்கள். தடுப்பூசிகளுக்கு எதிரான தொடர் பிரசாரங்களால், குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடலாமா, வேண்டாமா என்ற குழப்பத்தில் நிறைய பெற்றோர் தவிக்கிறார்கள். குழந்தைப் பருவத்திலேயே பலரை முடக்கிப்போட்ட போலியோ பாதிப்பு, தொடர்ச்சியாக அளிக்கப்பட்ட தடுப்பு மருந்துகளின் காரணமாக நம் நாட்டிலிருந்து துடைத்தெறியப்பட்டது. அதனால்தான், போலியோ இல்லாத தேசமாக நம் தேசம் மிளிர்கிறது. தடுப்பு மருந்தே தேவையில்லை என்றிருந்தால் இது நிச்சயமாகச் சாத்தியமாகியிருக்காது.

இப்படியான சாதகமான அம்சங்கள் இருந்தாலும், தடுப்பூசியால் அவ்வப்போது நிகழக்கூடிய குழந்தை மரணங்கள் தடுப்பூசிகள் மீது எளிய மக்களுக்கு ஏற்படும் அச்சத்துக்கு இன்னும் வலு சேர்க்கிறது. வெளிநாடுகளில் தடுப்பூசி போடுவதற்கு முன்பாக, அதன் சாதக பாதகங்களைப் பெற்றோரிடம் விளக்கி, அவர்கள் ஒப்புதல் அளித்துக் கையொப்பமிட்ட பிறகுதான் குழந்தைகளுக்குப் போடுகிறார்கள். ஆனால், நம் நாட்டில் அதுபோன்ற நடைமுறை எதுவும் இல்லை. அதன் காரணமாகவே எப்போதாவது ஏற்படும் ஒரு சில அசம்பாவிதங்கள், ஒட்டுமொத்தமாகத் தடுப்பூசிகளுக்கு எதிரான அம்சமாக வந்து நிற்கின்றன. 

அப்படித்தான் சில ஆண்டுகளுக்கு முன்பாக விஸ்வரூபம் எடுத்த ஒரு தடுப்பூசி 'எம்.எம்.ஆர்' என அழைக்கப்படும் தட்டம்மை, தாளம்மை, மணல்வாரி அம்மைக்கு எதிராகப் போடப்படும் முத்தடுப்பூசி. இந்தத் தடுப்பூசி போடுவதால் குழந்தைகளின் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, அதன் காரணமாக 'ஆட்டிசம்' எனப்படும் 'மதியிறுக்கக் குறைபாடு' ஏற்படுகிறது என சர்ச்சைகள் கிளம்பின.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அன்றிலிருந்து, அது தொடர்பான ஆய்வுகள் உலகம் முழுவதும் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. அந்த வரிசையில் சமீபத்தில், டென்மார்க் நாட்டில், 1999-லிருந்து 2010-ம் ஆண்டு வரை பிறந்த 6,57,461  குழந்தைகளிடம் மிகப்பெரிய ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவில் `எம்.எம்.ஆர்' தடுப்பூசிக்கும், ஆட்டிசம் குறைபாட்டுக்கும் துளியளவும் சம்பந்தமில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகள், 'அன்னல்ஸ் ஆஃப் இன்டெர்னல் மெடிசின்' (Annals of Internal Medicine) என்ற தளத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பே இதே ஆய்வாளர்கள், 1991- லிருந்து 1998 வரை பிறந்த 5,37,303 குழந்தைகளை வைத்து ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வு முடிவுகள் 'இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின்' ( England Journal of Medicine) என்கிற தளத்தில் 2002-ம் ஆண்டில் பிரசுரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய இந்த பிரமாண்ட ஆய்வு மருத்துவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும், நம்பிக்கையையும் பெற்றுள்ளது. இதுகுறித்து குழந்தைகள் நல மருத்துவர் செல்வனிடம் பேசினோம்.

''அனைவருக்கும் தெரிந்த ஓர் உண்மையை, அறிவியல்ரீதியாக ஏற்கெனவே நிரூபிக்கப்பட்ட ஒரு உண்மையை இந்த ஆய்வு மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த முறை மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்டிருப்பது கூடுதல் நம்பிக்கையளிக்கிறது.`எம்.எம்.ஆர்' தடுப்பூசியால் ஆட்டிசம் பரவுகிறது என்ற தவறான தகவல்கள் தொடக்கக் காலங்களில் பரப்பப்பட்டன. முக்கியமாக, 'லேன்செட்' தளத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஓர் ஆய்வுக்கட்டுரைதான் மக்கள் மத்தியிலும், ஒரு சில மருத்துவர்கள் மத்தியிலும் பெரும் பீதியைக் கிளப்பியது. நாளடைவில் அந்த ஆய்வு, தவறான புள்ளிவிவரங்களைக் கொண்டு முறைகேடாக நடத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்தத் தளத்திலிருந்தே அந்த ஆய்வுக் கட்டுரை நீக்கப்பட்டது. அதுபோல, ஜப்பானில்  தடுப்பூசி போடுவதற்கு எதிர்ப்புக் கிளம்பி அது நிறுத்தப்பட்டது. அந்த நேரத்தில் ஏராளமான குழந்தைகள் அம்மை பாதிப்புக்கு ஆளாகி உயிரிழந்தனர். உடனடியாக ஜப்பான் அரசாங்கம் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது. இதே போன்ற சம்பவம் அமெரிக்காவிலும்  நடந்தது. 

இத்தகைய நிகழ்வுகளுக்குப் பிறகும் உலகளவில் `எம்.எம்.ஆர்' தடுப்பூசியின் மீதான அச்சம் இருந்துகொண்டுதான் இருந்தது. அதைப் போக்கும் கடமை மருத்துவத் துறைக்கு இருந்தது. அதனால், இந்தத் தடுப்பூசிக்கும், ஆட்டிசத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென பல்வேறு ஆய்வுகளின்மூலம் நிரூபிக்கப்பட்டன. 

மக்களிடம் பயம் ஏற்படுவதற்கு வேறு ஒரு காரணமும் இருக்கிறது. குழந்தைகள் நடக்க, பேச ஆரம்பிக்கும்போதுதான் ஆட்டிசம் குறைபாடு இருப்பது தெரியவரும். அந்த வயதில்தான் தடுப்பூசியும் போடப்பட்டிருகும். அதனால்தான் ஆட்டிசத்தையும், தடுப்பூசியையும் தேவையில்லாமல் குழப்பிக் கொள்கிறார்கள். `ஆட்டிசம்' என்பது மூளை நரம்பு சம்பந்தமான கோளாறு. அதற்கும் தடுப்பூசிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதே உண்மை. தடுப்பூசியின்மீது சந்தேகம், பயம் உள்ளவர்களுக்கு இந்த ஆய்வு முடிவு நிச்சயம் நம்பிக்கையளிக்கும். `எம்.எம்.ஆர்' தடுப்பூசியைத் தவிர்ப்பதால் `தட்டம்மை' பாதிப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது. 

அதனால், அனைவரும் தங்களின் குழந்தைகளுக்கு இந்தத் தடுப்பூசியைப் போடவேண்டும். அம்மை பாதிப்பிலிருந்து நம் குழந்தைகளைக் காக்கவேண்டும்'' என்கிறார் மருத்துவர் செல்வன்.

தடுப்பூசிகளின் பின்னால் உள்ள வணிகத்தையும், புதிது புதிதாக தடுப்பூசிகள் கொண்டு வரப்படுவதையும் கடுமையாக எதிர்த்து வருபவர் சித்த மருத்துவர் சிவராமன். அவரிடம் இந்த ஆய்வு குறித்துப் பேசினோம்.

'' `எம்.எம்.ஆர்' தடுப்பூசியால் ஆட்டிசம் பாதிப்பு வராது என்பது 100 சதவிகிதம் நிரூபிக்கப்பட்ட உண்மை. பல குழந்தைகள் இந்தத் தடுப்பூசியின் மூலம் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள். தொடக்கக் காலத்தில் தடுப்பூசி மருந்தைப் பாதுகாக்க 'மெர்க்குரி' பயன்படுத்தினார்கள். அதனால்தான் இந்த சந்தேகம் எழுந்தது. ஆனால், உடனடியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, 'அது பாதுகாப்பானது' என்பது நிரூபிக்கப்பட்டது. மேலும் இப்போது மெர்க்குரியும் பயன்படுத்துவதில்லை அதனால் தைரியமாக இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம் என்பதே என் கருத்து.

தடுப்பூசிகளுக்குப் பின்னால் மிகப்பெரிய வர்த்தகமும், புதிது புதிதாக பல்வேறு தடுப்பூசிகள் திணிக்கப்படுவதும் உண்மைதான். அதற்காகத் தடுப்பூசிகளே வேண்டாம் என்பது ஏற்கக்கூடியது அல்ல. முழுமையாக ஆராயப்படாமல் புதிய தடுப்பு மருந்துகளை அறிமுகப்படுத்தும்போது  நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். 

இந்த விஷயத்தில் இந்திய அரசுக்கென தனியான கொள்கை நிலைப்பாடுகள் இருக்கவேண்டும். இந்திய மருந்து தொழில்நுட்ப ஆலோசனை வாரியம், இந்தியாவில் உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி அவசியமா, பாதுகாப்பானதா என்பதை ஆய்வுசெய்து அதைக் கொண்டு வரவேண்டும். வெளிநாட்டில் இருப்பதனாலேயே இங்கேயும் கொண்டு வரக்கூடாது. அதேபோல, இந்தியாவிலேயே தடுப்பு மருந்துகள் தயாரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

அறிவியல் வளர்ச்சி மிகவும் அவசியமான ஒன்று. அது அனைவருக்கும் பொதுவானதாக, எப்போதும் பாதுகாப்பானதாக இருக்கிறதா என்பதை உறுதிசெய்யவேண்டும். அறிவியலே ஆபத்து என்பது தவறு'' என்கிறார் சித்த மருத்துவர் சிவராமன்.