
சேவை - 21ஓவியம்: பாலகிருஷ்ணன்
நேபாளத்தின் டேபிள்ஜங் மாநிலத்தின் ஒலன்சங்கோலா என்ற சிற்றூரில் 1954-ம் ஆண்டில் சந்துக் ரூயித் (Sanduk Ruit) பிறந்தார். சந்துக்கின் மூத்த சகோதரன், மூன்று வயதில் காலரா பாதித்து இறந்து போனான். சந்துக் ரூயித்தின் இரண்டு இளைய சகோதரிகளில் ஒருத்தி, எட்டாவது வயதில் கடும் காய்ச்சல் பாதித்து மாண்டு போனாள். இன்னொரு சகோதரியும் 16-வது வயதில் காசநோய் தாக்கி இறந்து போனாள். இவற்றால் சந்துக் ரூயித் மிகவும் மனமுடைந்து போனார்.

‘எல்லாம் விதி’ என்று பலரும் ஆறுதல் சொன்னார்கள். ஆனால், சந்துக்கினால் ‘விதி’ என்ற அந்த வார்த்தையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தங்கள் பகுதியில் போதுமான மருத்துவ வசதிகள் இருந்திருந்தால், சரியான நேரத்தில் தகுந்த சிகிச்சைகள் கிடைத்திருந்தால் இவையெல்லாம் நடந்திருக்காது என்று நினைத்தார். சாதாரண நோய்களுக்கான மருத்துவ சிகிச்சைகள்கூடக் கிடைக்காமல் தனது தேசத்தில் எவ்வளவு பேர் மாண்டு போகிறார்கள் என்று யோசித்தபோது, சந்துக்கின் மனதில் அந்த லட்சியம் ஆழமாக வேரூன்றியது.

‘நான் டாக்டர் சந்துக் ரூயித் ஆக வேண்டும்!’ என்ற எண்ணமே அது. சந்துக்கின் பெருங்கனவு 1978-ம் ஆண்டில் நிறைவேறியது. லக்னோவின் கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பை முடித்து, பட்டம் பெற்றார். காத்மாண்டுவின் பிர் மருத்துவமனையில் சந்துக்கின் மருத்துவப் பணி தொடங்கியது. சில மாதங்களில் நேபாள அரசு, சந்துக்கை அவரது சொந்த ஊருக்கு அருகிலேயே மருத்துவராகப் பணியில் அமர்த்தியது. அங்கு பணிக்குச் சேர்ந்த சில நாள்களிலேயே நான்கு வயதுச் சிறுவன் ஒருவனை மரணத்திலிருந்து காப்பாற்றினார். அந்தச் சிறுவனின் புன்னகையில் தன் சகோதரியை உணர்ந்தார் சந்துக். இப்படியாக ஒரு பொது மருத்துவராக அவரது மருத்துவச் சேவை தொடர்ந்தது.
நேபாளத்தில் `டிராக்கோமா’ எனப்படும் கண்நோய் பாதிப்பு அதிகமாக இருந்தது. நுண் கிருமிகளால் கண் இமைகளில் ஏற்படும் நோய்த்தொற்று அது. இதனால் பார்வை இழப்பு அதிகமாக இருந்தது. `டிராக்கோமா’ குறித்து ஆய்வுசெய்ய, ஆஸ்திரேலிய கண் மருத்துவரான ஃப்ரெட் ஹாலோஸ், 1985-ம் ஆண்டு காத்மாண்டுவுக்கு வந்தார். அவருடன் பணிபுரியும் வாய்ப்பு டாக்டர் சந்துக்குக்கு அமைந்தது. ஃப்ரெட்டின் கனிவும், எளிய மக்களுக்கு உதவ வேண்டுமென்ற முனைப்பும் சந்துக்கை ஈர்த்தன.
1987-ம் ஆண்டு டாக்டர் ஃப்ரெட்டின் அழைப்பின்பேரில், சந்துக்கும் அவரின் மனைவியும் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றார்கள். ‘நேபாளத்தில் கண்நோய்கள் அதிகம். பலரும் பார்வை இழந்துகொண்டிருக்கிறார்கள். இதைத் தவிர்க்க, உலகத்தரத்தில் கண் மருத்துவ சிகிச்சை வசதிகளை நேபாளத்துக்குக் கொண்டுவர வேண்டும்’ என்றார் ஃப்ரெட். அதற்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக டாக்டர் சந்துக் உறுதியளித்தார். ஆஸ்திரேலியவாழ் நேபாளியர்கள், `தி நேபாள் ஐ புரோக்ராம் ஆஸ்திரேலியா’ (The Nepal Eye Program Australia) என்ற இந்தத் திட்டத்துக்கு நிதி திரட்டிக் கொடுத்தார்கள். டாக்டர் சந்துக், கண் சிகிச்சை மருத்துவம்
(Ophthalmology) பயின்றார்.

கண்புரைநோய் பாதிப்பால் நேபாளியர்கள் பலரும் பார்வையிழந்துகொண்டிருந்தனர். அதற்கான பழைமையான, கடினமான அறுவை சிகிச்சை முறைதான் அங்கே மேற்கொள்ளப்பட்டு வந்தது. செலவும் அதிகம். பார்வை கிடைக்க சில நாள்கள் ஆகும். மாறாக, ஃப்ரெட்டும் சந்துக்கும் நவீன கண்புரை அறுவை சிகிச்சையை அங்கே அறிமுகப்படுத்தினர். `ஐஓஎல்’ (IOL) என்றழைக்கப்படும் ‘இன்ட்ரா ஆகுலர் லென்ஸ்’ பொருத்தும் முறை எளிமையானது. சில நிமிடங்களிலேயே பார்வை பெற்றுவிடலாம். ஆனாலும் பழைமைக்குப் பழகியிருந்த மக்கள், நவீன சிகிச்சையால் பார்வை கிடைக்காமல் போய்விடுமோ என்று பயந்தனர். சந்துக் மற்றும் ஃப்ரெட்டின் தீவிர முயற்சியால் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக நவீன கண்புரை அறுவை சிகிச்சையை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தனர்.
1989-ம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச மருத்துவக் கருத்தரங்கம் ஒன்றில், டாக்டர் ஃப்ரெட்டும் சந்துக்கும் தங்களுடைய நவீன கண்புரை அறுவை சிகிச்சை முறையைப் பற்றிப் பேசினார்கள். ‘உங்களது சிகிச்சை முறை மிகவும் சிக்கலானது; அதிக செலவாகும்’ என்று பலரும் அதை நிராகரித்தனர். கடுமையாக விமர்சித்தனர். அதை இவர்கள் இருவரும் சவாலாக ஏற்றுக்கொண்டனர். தங்கள் தொடர் ஆய்வுகளின் மூலம், 200 டாலர் செலவில் தயாரிக்கப்பட்ட இன்ட்ரா ஆகுலர் லென்ஸை, வெறும் 3 டாலர் செலவில் வெற்றிகரமாகத் தயாரித்துக் காட்டினர். அந்தக் கருத்தரங்கில் அவர்களைப் பைத்தியக்காரர்கள்போல பார்த்தவர்களின் எண்ணம் தவறு என்பதை நிரூபித்தார்கள்.

டாக்டர் ஃப்ரெட் மற்றும் சந்துக் தொடர்ந்து சேர்ந்து பணியாற்றினார்கள். 1993-ம் ஆண்டு ஃப்ரெட் புற்றுநோயால் இறந்து போனார். அவர் விட்டுச்சென்ற பணிகளை டாக்டர் சந்துக் தொடர ஆரம்பித்தார். இன்றுவரை முனைப்புடன் தொடர்ந்துகொண்டிருக்கிறார். சுமார் ஒன்றரை லட்சம் பேர் டாக்டர் சந்துக்கால் கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பார்வை பெற்றிருக்கின்றனர். காத்மாண்டுவின் தில்கங்கா கண் மையத்தைத் தலைமையகமாகக்கொண்டு சந்துக் இயங்கிவருகிறார். நேபாளத்தில் குறைந்த செலவில் தயாரிக்கப்படும் இன்ட்ரா ஆகுலர் லென்ஸ், உலகமெங்கும் 30 நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. கண்புரை சிகிச்சைக்காக இந்தியா, வட கொரியா, கானா, சூடான், எத்தியோப்பியா, மியான்மர் என்று உலகெங்கிலுமிருந்து டாக்டர் சந்துக்கை மக்கள் தேடிவருகிறார்கள்.
மிகக் குறைந்த செலவில் மிகச் சிறந்த சிகிச்சை. அதைக்கூடச் செலவுசெய்ய இயலாதவர்களுக்கு எல்லாம் இலவசம். நேபாளத்தின் கிராமம்தோறும் டாக்டர் சந்துக், கண் சிகிச்சை முகாம்களை நடத்திவருகிறார். வாகனங்கள் செல்ல முடியாத கிராமங்களுக்கெல்லாம் தன் குழுவினருடன் நடந்தே செல்கிறார். சந்துக்கின் இந்த அளப்பரிய சேவையால், இன்றைக்கு நேபாளத்தில் `டிராக்கோமா’ கண்நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டிருக்கிறது. `டிராக்கோமா’ இல்லாத தெற்காசியாவின் முதல் நாடு நேபாளமே!
டாக்டர் சந்துக்கின் வாழ்க்கை, `The Barefoot Surgeon’ என்ற பெயரில் அலி கிரிப்பர் என்பவரால் புத்தகமாக வெளியிடப்பட்டிருக்கிறது. ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா, ரமோன் மகசேசே விருது, பத்மஸ்ரீ போன்ற பல விருதுகளைப் பெற்றிருக்கிறார் சந்துக். சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து முளைத்து வந்து, இன்றைக்கு சர்வதேசத்தரத்திலான கண் சிகிச்சைக்குப் புகழ்பெற்ற இடமாக காத்மாண்டுவை மாற்றிக்காட்டியிருக்கும் டாக்டர் சந்துக் ரூயித், நேபாளத்தின் ஒளி!
சேவை தொடரும்...