Published:Updated:

`காட்டு ஆஸ்பத்திரி'க்குச் சென்ற கல்லூரி மாணவிகளுக்குக் கிடைத்த ஆச்சர்ய அனுபவம்!

`காட்டு ஆஸ்பத்திரி'க்குச் சென்ற கல்லூரி மாணவிகளுக்குக் கிடைத்த ஆச்சர்ய அனுபவம்!
`காட்டு ஆஸ்பத்திரி'க்குச் சென்ற கல்லூரி மாணவிகளுக்குக் கிடைத்த ஆச்சர்ய அனுபவம்!

ரசு மருத்துவமனையின் செயல்பாடுகள், தேவைகள், தீர்வுகள் குறித்த தெளிவைப் பெறுவதற்காக, மதுரை லேடி டோக் கல்லூரியின் சமூகப் பணித் துறை மாணவிகள் 24 பேர் தோப்பூரில் உள்ள அரசு நுரையீரல் மருத்துவமனைக்குச் சென்றிருந்தனர். மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் காசநோய்க்கான உள்நோயாளிகள் பிரிவாக இந்த மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்புவரை `காட்டு ஆஸ்பத்திரி' என்றும், மருத்துவர்கள், செவிலியர்களுக்கான தண்டனைக்கான இடம் என்று அழைக்கப்பட்ட மருத்துவமனை இது. `ஒரு நாளைக்கு மூன்று மரணங்கள் நிகழும். பெரும்பாலும் உறவினர்களும் கண்டுகொள்ளமாட்டார்கள் என்பதால் அநாதைப் பிணங்களாக அவை கிடக்கும்' என்கின்றனர் மருத்துவர்கள். தற்போது அந்த அவலநிலை முற்றிலும் மாற்றப்பட்டுவிட்டது. அழகுக் கட்டடங்கள், `பளிச்' தரைகள், நோயாளிகளுக்கான மறுவாழ்வு மையம், உள் விளையாட்டரங்கம், விளையாட்டு மைதானம், நூலகம், சலூன் என ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு இணையான சூழல் அங்கு நிலவுகிறது. 

இந்த மருத்துவமனையில் 2 ஆயிரம் மரங்களுக்குமேல் வளர்க்கப்பட்டு வருகின்றன. கைவினைத் தொழில், யோகா, மூலிகைத் தோட்டப் பராமரிப்பு என அனைத்தும் நோயாளிகளுக்கும் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. யாரிடமும் நன்கொடை வாங்காமல், அரசு நிதியிலேயே அத்தனை முன்னேற்றங்களும் நடந்துள்ளன.

இந்த மாற்றங்களுக்கு பெரும் உந்துதலாக இருக்கும் நிலைய மருத்துவர் டாக்டர் காந்திமதிநாதன் கூறுகையில், ``எய்ம்ஸ் மருத்துவமனைக்காக இந்த மருத்துவமனை கட்டடங்களின் வழியாக சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டது. எங்களது கோரிக்கையை ஏற்று பாதையை மாற்றினர். கஷ்டப்பட்டு சேர்ந்து மாற்றி உருவாக்கி வைத்திருக்கிறோம். உழைப்பும் கனவும் வீணாகிவிடக் கூடாது..." என்றார். 

மாணவிகளில் ஒருவரான மோனிகா அங்கிருந்த நோயாளி ஒருவரிடம் பேச்சுக்கொடுத்தார்,

`நுரையீரல்ல கோளாறு. வடநாட்டுல வேலை பார்த்துட்டு இருந்தேன். இப்போ இங்கே அட்மிட் ஆகியிருக்கேன். இந்த ஆஸ்பத்திரியோட பழைய கதை தெரியுங்கிறதால வர பயந்தேன். ஆனா இப்போ நான் சீக்கிரம் குணமாகிடுவேன்னு நம்பிக்கை வந்திருக்கு. எனக்கு நோயாளிங்கிற நெனப்பே இல்லை. பாசமான பராமரிப்பு, ருசியான சாப்பாடு!' என்று சொல்ல, ஒரு படுக்கை பக்கம் இருந்து சத்தம். `ஆமாங்க. இங்கே கெட்டித் தயிர் கிடைக்கும்' என்றார் மற்றொரு நோயாளி. 

`மருத்துவமனை நிர்வாகிகள், மருத்துவர்கள் எல்லோரும் இனிமையாப் பேசுறாங்க. வேலை அழுத்தம் இல்லை. அதனால நோயாளிகளை நாங்க அக்கறையா கவனிச்சிக்கிறோம்' என்கிறார் அங்கு பணியாற்றும் செவிலியர். 

மருத்துவமனையைச் சுற்றிப் பார்த்த மாணவிகள் இறுதியாக, `இந்த மருத்துவமனையின் செயல்பாடுகளைத் தெரிந்துகொண்டு அதை மக்களிடம் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம்' என்றனர்.

கடைசியாகக் கிளம்புவதற்கு முன்னர் மாணவி கீதா, `இத்தனை பெண்கள் உள்நோயாளிகளாக இருக்கின்றனர். அவர்கள் வசதிக்காக `நாப்கின்' வழங்கும் இயந்திரம் அமைக்க வேண்டும்' என்ற கோரிக்கையை வைத்தார்.  உடனே `நாப்கின்' வழங்கும் இயந்திரம் அமைக்க முயற்சிகள் எடுப்பதாக டாக்டர் காந்திமதிநாதன் தெரிவிக்க, மகிழ்ச்சியுடன் விடைபெற்றனர் மாணவிகள்.