Published:Updated:

சிறுநீரகக் கற்கள்... ஆயுர்வேதம் சொல்லும் எளிய சிகிச்சைகள்!

சிறுசிறு கற்களாக மாறும் உப்புகள் அடைப்பை ஏற்படுத்தும்போது கடுமையான வலியை உருவாக்கும். சிறுநீரகக் கற்கள் ஆண், பெண் மற்றும் அனைத்து வயதினருக்கும் ஏற்படக்கூடிய பிரச்னையாக உள்ளது. சில நேரங்களில் மிக அதிகமாக உடலில் சேரும் யூரிக் அமிலத்தாலும் கற்கள் உருவாக வாய்ப்புள்ளது. 

சிறுநீரகக் கற்கள்... ஆயுர்வேதம் சொல்லும் எளிய சிகிச்சைகள்!
சிறுநீரகக் கற்கள்... ஆயுர்வேதம் சொல்லும் எளிய சிகிச்சைகள்!

கோடைக்கால நோய்களில் பட்டியலில் சிறுநீரகம் தொடர்பான நோய்களும் உண்டு. சிறுநீரகம் உடலின் மிகமுக்கியமான உறுப்புகளில் ஒன்று.  இயற்கையாகவே நம் அனைவருக்கும் இரண்டு சிறுநீரகங்கள் உண்டு. உடலில் தினசரி ஏற்படும் வளர்சிதை மாற்றங்களில் உண்டாகும் கழிவுகளை ரத்தத்திலிருந்து பிரித்து நீராக வெளியேற்றி,  உடலைத் தூய்மையாக வைத்துக்கொள்வதுதான் சிறுநீரகத்தின் பணி. உடலுக்குத் தேவையான, தேவையற்ற உப்பின் விகிதாச்சாரத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்வதும் சிறுநீரகத்தின் தலையாய பணிகளில் ஒன்று.

சிறுநீரகம், சிறுநீர் குழல்கள், சிறுநீர்ப்பை மற்றும் உடலில் இருந்து சிறுநீரை வெளியேற்றும் குழல்களையும் உள்ளடக்கியது, நம் சிறுநீரக மண்டலம். சிறுநீரகம் உடலில் இருந்து உப்பு, சுண்ணாம்பு மற்றும் பல வேதிப்பொருள்களை வெளியே அனுப்பும்போது சிறுநீரகத்தில் படியும் தேவையற்ற உப்புகள் கற்களாகவோ, சிறு துகள்களாகவோ உருவாகிப் படிய ஆரம்பிக்கும்.

சிறுசிறு கற்களாக மாறும் உப்புகள் அடைப்பை ஏற்படுத்தும்போது கடுமையான வலியை உருவாக்கும். சிறுநீரகக் கற்கள் ஆண், பெண் மற்றும் அனைத்து வயதினருக்கும் ஏற்படக்கூடிய பிரச்னையாக உள்ளது. சில நேரங்களில் மிக அதிகமாக உடலில் சேரும் யூரிக் அமிலத்தாலும் கற்கள் உருவாக வாய்ப்புள்ளது. 

சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கான காரணங்கள்

* குறைந்த அளவு தண்ணீர் குடித்தல்

* சுண்ணாம்பு, யூரியா, அமோனியா சம்பந்தப்பட்ட உணவுகள்

* சிறுநீர் பையில் சிறுநீர் தேங்குவது 

* தைராய்டு

* அதிக உடல் எடை

* வேகமான மற்றும் முறையற்ற உடல் எடை குறைப்பு முயற்சிகள்

* எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் உண்ணுதல்

* மது, புகைப்பழக்கம்

* மரபு காரணம்

* சிறுநீர்த் தொற்றுநோய்கள்

அறிகுறிகள்:

சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்படும். இடுப்பு முதல் சிறுநீர் பாதை முழுவதிலும் விட்டுவிட்டு வலி இருக்கும். அதிக வலி ஏற்படும்போது கடுமையான வாந்தி, சிறுநீருடன் ரத்தம் வெளியேறுதல், குளிருடன் கூடிய காய்ச்சல், சிறுநீர் கழிக்கும்போது அல்லது கழித்து முடிந்த பிறகு மிக அதிகமான வலி அல்லது பொறுக்கமுடியாத அளவு எரிச்சல் ஏற்படுவது இவையெல்லாம் சிறுநீரகக் கற்கள் உருவாகியிருப்பதற்கான அறிகுறிகளாகும். சுண்ணாம்பு (கால்சியம்) கற்கள், யூரிக் அமிலக் கற்கள், மெக்னீசியம் மற்றும் அமோனியா கற்கள்,  மான்கொம்பு கற்கள் எனப் பல்வேறு வகையான கற்கள் உள்ளன.  சில வகை கற்கள் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையை கடுமையாகப் பாதிக்கக்கூடியது. உதிரப்போக்கையும் ஏற்படுத்தக்கூடியது.

பொதுவாக சிறுநீரக கற்களுக்கு அறுவை சிகிச்சைகளோ, லேசர் சிகிச்சையோ பரிந்துரைக்கப்படுகிறது. அவ்வாறு சிகிச்சை எடுத்துக்கொண்டால்கூட, மீண்டும் கற்கள் உருவாக 40 சதவிகிதம் வாய்ப்புகள் உள்ளன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சிறுநீரகக் கற்களுக்கான ஆயுர்வேத சிகிச்சை முக்கியமாக ஐந்து விஷயங்களை உள்ளடக்கியது. கற்களை நிரந்தரமாக நீக்கும் தன்மையுடையது. சிறுநீரகக் கற்கள் உருவாகும் காரணத்தை அறிந்து அதற்கான காரணங்களைத் தவிர்ப்பது, சிறுநீரகக் கற்களை கரைக்கக்கூடிய உணவுகளைச் சேர்த்துக்கொள்வது, சிறுநீரக மண்டலத்தைச் சுத்தப்படுத்தக்கூடிய ஆயுர்வேத பஞ்சகர்மா சிகிச்சைகள், மற்றும் காயகல்ப சிகிச்சைகள், யோகா, மூச்சுப்பயிற்சி மற்றும் தியானப் பயிற்சிகள் ஆகிய அம்சங்களை உள்ளடக்கியது.

சிறுநீரகக் கற்களுக்கான எளிய வீட்டு மருத்துவம் 

1. பத்து மில்லி எலுமிச்சைசாறை 200 மில்லி வெந்நீரில் கலந்து வெறும் வயிற்றில் தேனுடன் கலந்து சாப்பிட, சிறுநீரகக் கழிவுகள்

முழுமையாக நீங்கும். மீண்டும் கற்கள் உருவாவது தடுக்கப்படும். 

2. ஆப்பிள் சிடார் வினிகர், இது சிறுநீரகக் கற்களுக்கு வழங்கப்படும் முக்கியமான மருந்தாகும். 30 மில்லி ஆப்பிள் வினிகரை, 300 மில்லி  வெந்நீருடன் கலந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும். நூறு நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டால் சிறுநீரக மண்டலத்தின் செயல்பாடுகள் அனைத்தும் சீராகும்.

3. வாழைத்தண்டு மற்றும் முள்ளங்கிச்சாறு தலா 100 மில்லி எடுத்து இரண்டையும் ஒன்றாகக் கலந்தோ தனித்தனியாகத் தொடர்ந்து சாப்பிடச் சுண்ணாம்பு கற்கள் வேகமாகக் கரையும்.

4. ஐந்து கிராம் கொள்ளுப் பொடியை, 300 மில்லி தண்ணீருடன் கலந்து 100 மில்லியாக குறுகும்வரை கொதிக்கவைக்க வேண்டும். அதனை வடிகட்டி காலை மற்றும் இரவு உணவுக்கு 30 நிமிடம் முன்னால் சாப்பிட்டு வந்தால், சிறுநீரக மண்டலத்தில் ஏற்படும் வலிகள் வேகமாகக் குணமாகும்.

5. மூக்கரட்டை, சிறுபீளை, நெருஞ்சில் ஆகியவற்றை தலா 5 கிராம், பட்டை 2 கிராம் எடுத்து 300 மில்லி தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து, 100 மில்லியாக குறுக்க வேண்டும். அதனை வடிகட்டி காலை, இரவு உணவிற்கு 30 நிமிடத்துக்கு முன்னால் பருகினால் கற்கள் வேகமாகக் கரையும். கற்கள் மீண்டும் உருவாகாமலும் பாதுகாக்க முடியும்.