Published:Updated:

குதிரை முடி தொடங்கி ஆட்டின் குடல் வரை... மருத்துவத்தில் தையல் வளர்ந்த வரலாறு..!

காதற்ற ஊசிகளை தையலுடன் சேர்த்து (atraumatic sutures) முதன்முதலாகப் பயன்படுத்தியவர், எடின்பரோவைச் சேர்ந்த `ஜார்ஜ் மெர்சன்'. அவருடைய பெயரைக் கொண்டுதான், பல தையல்களும் இன்று வலம்வருகின்றன.  

குதிரை முடி தொடங்கி ஆட்டின் குடல் வரை... மருத்துவத்தில் தையல் வளர்ந்த வரலாறு..!
குதிரை முடி தொடங்கி ஆட்டின் குடல் வரை... மருத்துவத்தில் தையல் வளர்ந்த வரலாறு..!

``டாக்டர்... நீங்க சிசேரியன் ஆபரேஷனுக்கு எதை யூஸ் பண்றீங்க..? தையலா... பேஸ்ட்டா... ஸ்டேப்ளரா... எதுவா இருந்தாலும், எனக்கு தழும்பு தெரியாம இருந்தா போதும் டாக்டர்..!"

- இது சிசேரியனுக்காக தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கும் ஓர் இளம் பெண் என்னிடம் வைத்த கோரிக்கை.

``லேப்ராஸ்கோப்பில பித்தப்பை சர்ஜரி செஞ்சாலும் தழும்பு தெரியுமா டாக்டர்..?"
- இது பித்தப்பை கற்களால் அவதியுறும் ஓர் இளைஞரின் கேள்வி.

இவர்கள் மட்டுமன்றி, அறுவை சிகிச்சைக்கும், அவசர சிகிச்சைக்கும், மருத்துவமனைக்கு வரும் ஒவ்வொருவரின் அன்றாட கோரிக்கைகள் தான் `தழும்புகளற்ற காயங்கள்..!'

தழும்பே இல்லாத காயமும், வலியே இல்லாத வாழ்க்கையும் சாத்தியமா..?

தழும்புகள் வீரத்தின் அடையாளமாக இருந்த மண் இது. மார்பின் தழும்புகளை கௌரவமாகவும், முதுகின் தழும்புகளை இழுக்காகவும் கருதினார்கள் நம் வீரர்கள். போரிலும், ஏறு தழுவுதலிலும், மார்பில் தழும்புகளைத் தேடிப்போன சமூகம் இன்று, தழும்பில்லாத சிகிச்சை முறைகளைத் தேடுகிறது.

ஏன் தழும்புகளின் மீது இவ்வளவு பயம்... ஏன் தையல்கள் பற்றி இத்தனை கேள்விகள்..? எப்போது ஆரம்பித்தது காயங்களுக்கான சிகிச்சை..? யாரெல்லாம் இதைப் பயன்படுத்தினார்கள்..?

இதோ ஒரு டைம் ட்ராவல்...

மருத்துவத்தில் நோய்கள் இருவிதமாக குணப்படுத்தப்படுகின்றன. நோய்க்கான காரணம் கண்டறிந்து மருந்துகள் மூலம் குணப்படுத்தும் முறை. வேண்டிய நிலைகளில் அறுவை சிகிச்சை மூலமாகக் குணப்படுத்தும் முறை. இதில், உயிர்காக்கும் அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் `தையல்' அடைந்துள்ள பரிணாம வளர்ச்சி மட்டுமே தனியாக ஒரு புத்தகம் போடும் அளவுக்குப் பெரிது. 
இன்றைய அறுவை சிகிச்சைக்கு மட்டும் 14,000 வருட வரலாறு இருக்கிறது என்றால் வியப்பாகத்தானே இருக்கிறது!
மனிதனுக்கு முதன்முதலாகத் தையல் போடப்பட்டது, எங்கு எப்போது தெரியுமா..? எகிப்திய `மம்மி'க்களில் காணப்பட்ட தையல்தான் உலகில் மனித உடல்மீது போடப்பட்ட முதல் தையலாம்.

குதிரையின் முடிதான், இந்தத் தையலுக்கு உபயோகிக்கப்பட்ட முதல் நூலாம். ஆனால், `மம்மி'க்களில் ஆரம்பித்த தையல்களின் வரலாறு, வேர்கொண்டது எகிப்தில் அல்ல. கிரேக்க, ரோமானிய, எகிப்திய, அரேபிய, மெசபடோமிய அறுவை சிகிச்சை முறைகள் என, நாம் பெருமையாக நினைக்கும் அனைத்துக்கும் முன்னோடியாக இருந்தது, நமது இந்திய மருத்துவம்தான்..!

அனைவருக்கும் முன்பாக, அறுவை சிகிச்சை முறைகளையும், அவற்றின் தையல்களையும் வகைப்படுத்தியவர்கள் நமது இந்திய மருத்துவர்கள்தாம். உயிரிழப்பு ஏற்படுத்தாமல், உடலின் பாதிப்பை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்துவது எப்படி என்பதை உலகிற்கு முதன்முதலாகக் காட்டியது தன்வந்திரியின் சிஷ்யரும், அறுவை சிகிச்சையின் தந்தையுமான (Father of Surgery) `சுஷ்ருதா' என்ற இந்திய ஆயுர்வேத மருத்துவர்தான். 

சிசேரியன், ஹெர்னியா, டான்சில்ஸ், பைல்ஸ் எனத் தொடங்கி, இன்று புதிதாகப் பேசப்படும் பிளாஸ்டிக் சர்ஜரி வரை எதையும் விட்டுவைக்கவில்லை சுஷ்ருதா என்பதை அவரது `சுஷ்ருத சம்ஹிதை' நூல் தெளிவாகச் சொல்கிறது. 

அந்நாள்களில் தவறிழைத்தவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைகளில் ஒன்று மூக்கை அறுத்து, அவலட்சணப்படுத்துவது. அவ்வாறு மூக்கறுபடும் நபருக்கு 'ரினோபிளாஸ்டி' (Rhinoplasty) எனப்படும் மூக்கை புனரமைக்கும் அறுவைசிகிச்சைகூட சுஷ்ருதா காலத்தில் இருந்ததாக குறிப்புகள் உள்ளன.

யாருக்குத் தெரியும்..? கொஞ்சம் காலம் தள்ளி நடந்திருந்தால், இலக்குவனால் மூக்கறுப்பட்ட சூர்ப்பனகையை இராவணன், சுஷ்ருதாவிடம் அழைத்து சென்றிருக்கக் கூடும். அங்கே `ரினோபிளாஸ்டி' நடந்து, சூர்ப்பனகை நலமும் அழகும்பெற, நமக்கு இராமாயணமே கிடைக்காமல்கூட போயிருக்கலாம்.

`சுஷ்ருதா, உடலின் காயங்களுக்கு பால் மற்றும் மஞ்சள் கொண்டு கழுவி, பருத்தி நூல், செம்பு இழை, குதிரை அல்லது யானை முடியைக் கொண்டு தையலிட்டார்; தையல் நூல்கள் காயத்தின் உள்ளே வலியின்றி சுலபமாய் நுழைய மெழுகு போல வெண்ணெயை உபயோகித்தார்; வெள்ளி, செம்பு வெண்கலம் போன்ற உலோகங்களைக் கொண்டு ஊசிகளையும், கல், மரம், தந்தம் ஆகியவற்றைக் கொண்டு அறுவை சிகிச்சைக்கான துல்லியமான ஆயுதங்களையும் உருவாக்கினார் என்றும் வியப்பூட்டும் பல செய்திகளைச் சொல்லிக்கொண்டே செல்கிறது சுஷ்ருத சம்ஹிதை.

மம்மீக்களுக்கு முதன்முதலாக தையலிட்ட எகிப்தியர்கள் என்னவானார்கள் என்று சற்றே திரும்பிப் பார்க்கலாம். அறுவை சிகிச்சையின்போது நோயாளி இறக்க நேரிட்டால், அன்றைய பாபிலோனிய அரசு, மருத்துவரின் கைகளைத் துண்டித்துவிடுமாம்.  உச்சகட்டமாக, மரணதண்டனைகூட தருவார்களாம். மருத்துவர்கள் அச்சத்துடனும், தயக்கத்துடனும் பணியாற்றியிருக்கிறார்கள். 
இப்படி, எகிப்திய மருத்துவத்தில் அரசியல் விளையாடிக்கொண்டிருக்கையில், கிரேக்க மற்றும் ரோமானியர்கள் மருத்துவத்தில் புதிய புதிய எல்லைகளைத் தொட்டுக்கொண்டிருந்தார்கள். 

மருத்துவத்தின் தந்தை (Father of Medicine) ஹிப்போகிராட்டஸ், கிரேக்க மருத்துவர் கேலனிக் ஆகியோர் பல்வேறு வகையான நோய்களைப் பற்றியும், அறுவை சிகிச்சை முறைகளைப் பற்றியும் தங்களது புத்தகங்களில் குறிப்பிட்டுள்ள செய்திகள் எல்லாம் வியப்பூட்டுகின்றன. 
அதிலும் கேலனிக் எழுதியுள்ள `டி மெத்தடோ மெடன்டி' (De methodo Medendi) என்ற புத்தகத்தில், சணல், பருத்தி, ஆளி போன்ற செடிகளின் நார்களையும், முடி, நரம்பு, பட்டுநூல், மற்றும் குடல் என மிருகங்களின் பகுதிகளையும் தையலாகப் பயன்படுத்தியது பற்றிக் குறிப்புகள் உள்ளன.

எப்போதும்போல, கிரேக்கர்களைப் பின் தொடரும் ரோமானியர்கள், ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு தங்களது புதிய உத்திகளை உலகிற்கு உரைத்தனர். `கார்னீலியஸ் செல்சஸ்' என்ற ரோமானிய மருத்துவரின் `டி மெடிசினா' (De Medicina) என்ற நூல் பிரபலமானது. அதில் பல்வேறு அறுவை சிகிச்சை முறைகளையும், அதற்குப் பயன்படும் தையல் முறைகளும் விளக்கப்பட்டுள்ளன.
இவையெல்லாம் நகரங்களில் நடந்தேற, முதலுதவி வசதி எதுவுமின்றி காடுகளிலும், மலைகளிலும் போரிட்டுக் காயமடைந்த வீரர்களுக்கு எப்படி சிகிச்சை அளித்திருப்பார்கள்? 

`ஸ்பானிஷ் ஆன்ட்' எனப்படும் ஒருவகையான கட்டெறும்பு, சற்றே பெரிய வாயைக் கொண்டது. அதை, காயமடைந்த போர் வீரர்களின் காயத்தின் மீது கடிக்கச்செய்து, அதன் கடிவாய், காயத்தை இணைத்துப் பிடித்தவுடன் எறும்பின் தலையை அப்படியே விட்டுவிட்டு மிகுதி உடலைத் துண்டித்து விடுவார்களாம். காயத்தை உறுதியாகப் பிடித்திருக்கும் அந்தக் கட்டெறும்பின் தலைப்பகுதி காயம் ஆறும்வரை அதன்மீதே இருக்குமாம். 

கொடுமையான இந்தக் கட்டெறும்பு தையல் முறை, அல்ஜீரிய மற்றும் செர்பிய நாடுகளில் வசிக்கும் பழங்குடியினர் மத்தியில் இன்றும் உயிரோடிருக்கிறது. லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சையில், தற்போது பெருமளவு உபயோகிப்படும் `மைக்கேல் கிளிப்'களுக்கு இன்ஸ்பிரேஷனே இந்தத் தையல் கட்டெறும்புகள்தாம்.

இத்தனை, மாற்றங்களை மருத்துவம் சந்தித்திருந்தாலும், எந்தக் காயத்திற்கு எந்தத் தையலைப் பயன்படுத்துவது என்பதை முடிவுசெய்ய மேலும் ஒரு நூற்றாண்டு காலம் தேவைப்பட்டிருக்கிறது. பஞ்சு, பட்டு நூல், முடி, செம்பு இழை ஆகியவற்றை உடலின் உட்பகுதிகளில் உபயோகப்படுத்திய போது, அலர்ஜியால் புண்ணில் சீழ் மற்றும் கிருமிகளின் தாக்கம் ஏற்பட்டது. சமயங்களில் அதுவே உயிருக்கு ஆபத்தாகவும் முடிந்தது. இதைப் போக்க வழிமுறைகளை தேடியபோது கண்டுபிடிக்கப்பட்டதுதான் `கேட்கட்' (Catgut) எனப்படும் உட்கரையும் தையல். 

இரண்டு வாரங்களில் உடலினுள் கரைந்து விடும் இந்த `கேட்கட்', அறுவை சிகிச்சையின் அடுத்த பெரும் பாய்ச்சலாகும். 10-ம் நூற்றாண்டில், `அபுல்காசிஸ்' என்ற அரேபிய மருத்துவர், உடலின் உள் உறுப்புகளை தைப்பதற்கு இயற்கையான தையல் நரம்புகளை (Natural stitching catgut) பயன்படுத்தினால் மட்டுமே உடல் ஏற்றுக்கொள்ளும் என்பதை, அவர் வளர்த்துவந்த குரங்குகளுக்குப் பயன்படுத்திக் கண்டறிந்தார்.

`கேட்கட்' பெயரைக் கேட்டவுடன் மருத்துவர்கள் தையலை நினைவில் கொள்வதும், இசைக் கலைஞர்கள் வயலினை வருடுவதும், பூப்பந்து வீரர்கள் தங்களது ராக்கெட் மட்டையைத் தடவுவதும் இயல்பான ஒன்றாகி விட்டது..
ஆம்... 

செம்மறி ஆட்டின் குடல் பகுதியிலிருந்து எடுக்கப்படும் கேட்கட், அறுவை சிகிச்சைக்கான நூல் மட்டுமல்ல... பூப்பந்து மட்டைகளின் கட்டாகவும், வயலின்களின் இழையாகவும் பயன்படுத்தப்படுகிறது.
16-ம் நூற்றாண்டில் பிரெஞ்சு அரசர் 14-ம் லூயி, `கேட்கட்'  உபயோகத்தை சட்டபூர்வமாக்க, மருத்துவர்கள், இசைக்கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் என அனைவருக்குமே அது பேருதவியாக அமைந்தது.
ஆயினும் `கேட்கட்' தயாரிப்பு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. தென் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கொழுப்பு குறைந்த செம்மறியாடுகள் மட்டுமே, `கேட்கட்' உற்பத்திக்கு அப்போது பயன்படுத்தப்பட்டன.
`கேட்கட்' என்ற இயற்கைத் தையல் நரம்புகள் புழக்கத்துக்கு வந்தபிறகும் கிருமித்தொற்று மற்றும் மரணங்கள் சம்பவிக்க ஸ்தம்பித்தது மருத்துவ உலகம். நோய்த்தொற்று இல்லாத தையல்முறை வர, இரண்டு நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டியதாகிவிட்டது.
ஆம்... 

பதினெட்டாம் நூற்றாண்டில்தான், `ஜோசப் லிஸ்டர்' என்ற ஆங்கிலேய மருத்துவர் 'நோய்க்கிருமியற்ற தையல் நூல்'களின் (Carbolic catgut) உபயோகம் பற்றி ஆராய்ச்சி செய்தார். லிஸ்டர் தனது ஆராய்ச்சியில், `கார்பாலிக் அமிலத்தால் சுத்திகரிப்பு செய்த தையல்களைப் பயன்படுத்தினால் சீழ் ஏற்படுவது மட்டுப்படும்' என்பதை உறுதிசெய்தார். அதற்குப் பின்னர் தோன்றியவைதான் குரோமிக் அமில கேட்கட்கள். இதைப் பின்பற்றியே இன்று, தையல்கள் அனைத்தும் காமா கதிர்கள் (Gamma radiation) கொண்டு சுத்திகரிக்கப்படுகின்றன.
1894ல், பிரெஞ்சு மன்னர் சாடி கர்னாட் என்பவர் கத்தியால் குத்தப்பட, பெருக்கெடுத்த ரத்தப்போக்கை கட்டுப்படுத்த, முக்கோணத் தையல் முறையை இரத்தக் குழாய்களில் முதன்முதலாகப் பயன்படுத்தினார் அலெக்ஸ் கேரல் என்ற மருத்துவர். `வாஸ்குலர் சர்ஜரி'  (Vascular surgery) என்ற உயிர்காக்கும் சிகிச்சைக்கு முன்னோடியான அலெக்ஸ் கேரல், தனது மனைவியின் எம்பிராய்டரி தையல்களைக் கூர்ந்து கவனித்ததால்தான், அன்று மன்னரைக் காப்பாற்ற முடிந்தது என்று பதிவு செய்துள்ளார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஜெர்மனியின் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம், சுகாதாரமான கேட்கட் தயாரிப்பை முதன்முதலாக நிறுவனரீதியாக மேற்கொண்டது. அந்நிறுவனத்தின் `எதிக்கான்' (Ethicon) பிரிவு, தையல் தயாரிப்பதில் தனித்து ஈடுபட்டு உலகெங்கும் தையல்களின் முன்னோடியாக இன்றுவரை கோலோச்சுகிறது. தையல் நூலின் தடிமனும் தேவைக்கேற்ப மாறுபடுகிறது. தையல் நூலின் தடிமன் `5' ஆக இருந்தால், அது ஒரு காரை கட்டியிழுத்து செல்லும் அளவிற்கு உறுதியாக இருக்குமாம்.
`0' அளவு என்பது சிசேரியன், அப்பெண்டிக்ஸ், போன்ற பெரும்பாலான சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. 
`5-0' அளவு, சிறு நரம்புகள் அல்லது இரத்தக்குழாய்களின் தையலுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
`9-0' என்ற மிக மெல்லிய நூல், கண் அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படுகிறது.
நைலான் (Nylon), ப்ரோலென் (Prolene), எதிலான் (Ethilon) போன்ற வாழ்நாள் முழுவதும் கரையாமல் இருக்கும் தையல் வகைகள் (Non absorbable sutures) உறுதி, கரையாத தன்மை, அலர்ஜியற்ற நிலை ஆகியவற்றால் குடலிறக்கம் (Hernia) மற்றும் சிறுநீர்ப்பை இறக்கம் போன்ற சிகிச்சைகளுக்கு தையல்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.

செடிகளின் முட்களிலும், மிருகங்களின் கொம்புகளிலும் ஆரம்பித்த தையல் ஊசிகள் இரும்பு, செம்பு, வெள்ளி ஆகியவற்றில் காது கொண்ட ஊசிகளாக வளர்ந்து, தற்போது ஸ்டீலினால் ஆன காதற்ற ஊசிகளாக நிலைபெற்றுள்ளன. ஊசிமுனைகள் கூர்மையாகவோ, அல்லது மழுங்கியோ இருப்பது உபயோகிக்கப்படும் இடத்திற்கு ஏற்றபடி அமைக்கப்படுகிறது.

காதற்ற ஊசிகளைத் தையலுடன் சேர்த்து (atraumatic sutures) முதன்முதலாகப் பயன்படுத்தியவர், எடின்பரோவைச் சேர்ந்த `ஜார்ஜ் மெர்சன்'. அவருடைய பெயரைக் கொண்டுதான், பல தையல்களும் இன்று வலம்வருகின்றன.  

இவற்றுக்கிடையில், மனிதர்களுக்காக ஆடுகளைக் கொல்வதா... என ப்ளூ கிராஸ் 'கேட்கட்'டுக்கு  எதிராகப் போர்க்கொடியைத் தூக்க, அதைச் சமாளிக்கவும், `கேட்கட்'டினால் உண்டாகும் அலர்ஜியைக் குறைக்கவும் `வைக்ரில்' (Vicryl) என்ற செயற்கை நூல் உபயோகத்திற்கு வந்தது.

கடந்த இருபது வருடங்களாக, மோனோக்ரில் (Monocryl) என்ற மிக மெல்லிய செயற்கை இழை நடைமுறைக்கு வந்துள்ளது. தழும்புகளை அறவே குறைத்திடும் மோனோக்ரில், நுண்ணிய நரம்பு அறுவை சிகிச்சைகளுக்குப் (Micro vascular surgery) பயன்படுத்தப்படுகிறது.
தற்போது எளிதில் உட்கரைந்திடும் வைக்ரில் ரேப்பிட் (Vicryl Rapide) மற்றும் `ட்ரிக்லோசன்' (Triclosan) என்ற ஆன்டி பயாடிக் தடவிய வைக்ரில் ப்ளஸ் (Vicryl Plus) ஆகியன தையல்களின் அடுத்த வளர்ச்சி நிலை. 

`Surgical Stapler' எனப்படுவது, நாம் அன்றாடம் புத்தகங்களில் பயன்படுத்தும் ஸ்டேப்ளரைப் போலவே டைட்டானியத்தால் ஆன பின்களைப் பயன்படுத்துவது. விரைவான, துல்லியமான அறுவை சிகிச்சைகளுக்கு ஸ்டேப்ளர் பெரிதும் உதவுகிறது. தோலின் சிறு காயங்களுக்குப் பயன்படுத்தப்படும் Cyanoacrylate என்ற பேஸ்ட், பசை போல ஒட்டிக் கொள்வதால் காயங்களை ஆறச் செய்கிறது.
இந்த ஒரு நூற்றாண்டில் மட்டும், இயற்கை நூல் என ஆரம்பித்து செயற்கை நூல், கிளிப், பேஸ்ட் என எத்தனை மாற்றங்களைச் சந்தித்துள்ளன தையல்கள். தையல்களில் இப்படி எத்தனை புதுமைகள் தோன்றினாலும், எந்த அறுவை சிகிச்சைக்கு, எந்த வகையான தையலைப் பயன்படுத்தவேண்டும் என்பதை சர்ஜன்தான் தீர்மானிப்பார்.

மேலும், எந்தத் தையல் வகையைப் பயன்படுத்தினாலும், எவ்வளவு மெல்லிய ஊசியைப் பயன்படுத்தினாலும், இறுதியாகத் தழும்பு என்பது அவரவர் உடல்வாகைப் பொறுத்தது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

14,000 வருடத் தையல் வரலாற்றை வேகமாகவும் விவேகமாகவும் மாற்றிவிட்டது, வளர்ந்து வரும் மருத்துவ அறிவியல்..!
ஆம்..

இன்றைய காலகட்டத்தில், சிறிய துளை அறுவை சிகிச்சை (Single port Laparoscopy) மற்றும் மனித உடலின் இயற்கைத் துவாரங்கள் வழியாக மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை (NOTES என்ற Natural Orifice Endoscopic Surgery) ஆகியவை தையல்களே இல்லாத, தழும்புகளும் இல்லாத புதிய அறுவை சிகிச்சை முறைகளாகும். 

கண் அறுவை சிகிச்சையில், நானோ தையல் (nano suturing) எனப்படும் மிக நுண்ணிய அறுவை சிகிச்சைக்கு, லேசர் கதிர்கள் பயன்படுத்தப்படுகின்றன. வரலாற்றிடம் தோற்றாலும், அறிவியலிடம் வென்று, வளர்ச்சியடைந்து கொண்டேதான் வருகிறோம் என்பதில் பெருமிதம் கொள்ளலாம்!