Published:Updated:

``நாள் குறிச்சுட்டாங்க... இன்னும் ஒருமாசம்தான் உயிரோட இருப்பேன்...’’ - அதிரவைத்த `போதை’ச் சிறுவன்! #Video

``நாள் குறிச்சுட்டாங்க... இன்னும் ஒருமாசம்தான் உயிரோட இருப்பேன்...’’ - அதிரவைத்த `போதை’ச் சிறுவன்! #Video

இதுபோன்ற பொருள்களை, துணியிலோ, திறப்புள்ள பிளாஸ்டிக் பாக்கெட்டுக்குள்ளோ போட்டுக் கசக்கி ஆழ சுவாசித்து பழகுகிறார்கள். 'இந்தப் பழக்கம், நேரடியாக மூளையைப் பாதித்து விரைவிலேயே மரணத்தை ஏற்படுத்தும் 'என்கிறார்கள் மருத்துவர்கள். 

Published:Updated:

``நாள் குறிச்சுட்டாங்க... இன்னும் ஒருமாசம்தான் உயிரோட இருப்பேன்...’’ - அதிரவைத்த `போதை’ச் சிறுவன்! #Video

இதுபோன்ற பொருள்களை, துணியிலோ, திறப்புள்ள பிளாஸ்டிக் பாக்கெட்டுக்குள்ளோ போட்டுக் கசக்கி ஆழ சுவாசித்து பழகுகிறார்கள். 'இந்தப் பழக்கம், நேரடியாக மூளையைப் பாதித்து விரைவிலேயே மரணத்தை ஏற்படுத்தும் 'என்கிறார்கள் மருத்துவர்கள். 

``நாள் குறிச்சுட்டாங்க... இன்னும் ஒருமாசம்தான் உயிரோட இருப்பேன்...’’ - அதிரவைத்த `போதை’ச் சிறுவன்! #Video

சேலம் ஜங்ஷன்... வெயில் மண்டையைப் பிளக்கிறது. மக்கள் நீதி மய்ய வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்ய வருகிறார் என்ற ஒலிபெருக்கி விளம்பரம் காதைப் பிளக்கிறது. மக்கள் எதிர்பார்ப்போடு கூடி நிற்கிறார்கள். இன்னொரு பக்கம், ஆராவாரத்தோடு கட்சிக்காரர்கள் கூடிநிற்கிறார்கள். 

கூட்டத்துக்கு மத்தியில் தனித்து நிற்கிற அந்தச் சிறுவனுக்கு 18 வயது இருக்கலாம். முகம் வெளிறியிருக்கிறது. பதற்றம் முகத்தில் அப்பியிருக்கிறது. கையில் காலியான ஒரு பால் பாக்கெட் கவரை வைத்திருக்கிறான். குறிப்பிட்ட இடைவெளியில் அந்தப் பாக்கெட்டை மூக்கில் வைத்து ஆழ்ந்து இழுக்கிறார். அடுத்த 10 விநாடிகள் கண்கள் சொருகி தன்னிலை மறக்கிறார். வானத்தைப் பார்த்து புன்னகைக்கிறார். மனநலச் சிக்கலில் இருப்பாரோ என்ற சந்தேகத்தோடு அவரருகில் சென்றோம். அவரோடு நடந்த சில நிமிட உரையாடல் நம்மை அதிர்ச்சியின் உச்சத்துக்கே கொண்டுசென்றது. 

"என்ன தம்பி என்ன பண்றே?' 

"இதுக்குள்ள '..........' இருக்கு. இதை இப்படி மூக்குக்கிட்ட வச்சு இழுத்தா செம போதையா இருக்கும்' 
மிகவும் குழறலாகவும் கிறக்கமாகவும் பேசுகிறார். 

"ஏன் இப்படிப் பண்ற... உனக்கு என்ன வயசு?"

" 18..."

"இப்படிச் செய்றது உடம்புக்குக் கெடுதி இல்லையா?"

"நாள் குறிச்சுட்டாக. ஏற்கெனவே வயிறெல்லாம் வெந்து போச்சு, இன்னும் ஒரு மாசம்தான் உயிரோட இருப்பேன், பெரியாஸ்பத்திரியில சொல்லிட்டாங்க..."

"ஏன் இவ்வளவு சின்ன வயசுல இப்படிப் பண்றே, செத்துப் போயிடுவோம்னு பயமா இல்லையா?"

"போனா போகட்டும்..."

"உன் பேர் என்ன?"

"......."

"உங்க வீடு எங்க இருக்கு?"

"அஸ்தம்பட்டி..."

"உங்க அப்பா, அம்மா எங்க?"

"அப்பா வெட்டியானா இருக்காரு. அம்மா கல்யாண வீட்டுல சமையல் வேலை செய்யிது..."

"எங்க கூட வர்றியா... உங்க வீட்டுல சொல்லி ஏதாவது ஹாஸ்டல்ல சேர்த்து விடுகிறோம்."

''எங்க அப்பாவே சேர்த்துவிட்டாரு, அங்கேயிருந்து ஓடியாந்துட்டேன்.'' 

சிரிக்கிறார் அந்தச் சிறுவன். அருகில் நிற்பவர்கள், எப்பப்பாத்தாலும் கையில கவரை வச்சுக்கிட்டுச் சுத்திக்கிட்டே திரிவான்... சீக்கிரம் போய்ச்சேரப் போறான் பாருங்க..." என்று கவலையோடு பேசுகிறார்கள். 

சேலத்தில் மட்டுமல்ல, சென்னையில், மதுரையில், திருச்சியிலென தமிழகமெங்கும் இதுபோன்ற ஆயிரமாயிரம் சிறுவர்கள் கையில்

கவரோடு சுற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். இவர்கள் பயன்படுத்தும் சில பொருள்கள் எல்லாம் அதிர்ச்சியூட்டுபவை.  

'இந்தப் பழக்கம், நேரடியாக மூளையைப் பாதித்து விரைவிலேயே மரணத்தை ஏற்படுத்தும் 'என்கிறார்கள் மருத்துவர்கள். 

''சுவாசித்தலின் வழியாகப் போதைப்பொருள்களுக்கு அடிமையாவதில் மொத்தம் ஐந்து வகைகள் இருக்கின்றன. அதில், 'ஸ்னார்ட்டிங்' என்று ஒருவகை உண்டு. இவ்வகையினர் 'கோகைன்' போன்ற பொருள்களைப் பயன்படுத்துவார்கள். இரண்டாவது புகைபிடித்தல். இதில் புகையிலை, கஞ்சா போன்ற பொருள்களைப் பயன்படுத்துவார்கள். சிகரெட், பீடி போன்றவற்றுக்குள் இருக்கின்ற புகையிலையை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக கஞ்சாவை உட்புகுத்தி, புகைபிடிப்பார்கள். அடுத்ததாக 'ஸ்னிஃவ்விங்' எனப்படும் மோப்பம் பிடித்தல். துணி போன்றவற்றின் மீது போதைத் தரக்கூடிய பொருளை வைத்து மூச்சை உள்ளிழுப்பது, 'ஹஃவ்விங்'. பிளாஸ்டிக் கவர்களுக்குள் பொருள்களைப் போட்டு, மூச்சை இழுப்பது 'பேக்கிங்'. சேலம் சிறுவன் 'பேக்கிங்' வகையிலான போதைக்கு அடிமையாகியிருக்கிறான். 

இவர்கள், சாதாரணமாக நாம் வெவ்வேறு பயன்பாட்டுக்கு வைத்திருக்கும் பொருள்களை, போதைப் பொருள்களாகப் பயன்படுத்துகிறார்கள். இவர்கள் பயன்படுத்தும் எல்லாப் பொருள்களிலும் ஹைட்ரோகார்பன்கள் உள்ளன. இவர்கள் ஆழ்ந்து சுவாசிக்கும்போது, ஹைட்ரோ கார்பனானது, நுரையீரலில் உள்ள ஆக்ஸிஜனை வெளியேற்றி உடனடியாக ஒரு மயக்கத்தை ஏற்படுத்தும். அந்தக் குறுகுறுப்புக்கு அடிமைப்பட்டே இதை அடிக்கடிப் பயன்படுத்துகிறார்கள். 

இதனால் 'க்ளூ ஸ்னிஃவ்வர்ஸ் நியூரோபதி' (Glue-sniffers neuropathy) என்கிற பாதிப்பு உண்டாகும். இதனால், மூளையின் அனைத்து பாகங்களும் பாதிக்கப்படும். கை, கால் நரம்புகள் செயலிழக்கும். வாய் குளறும். தடுமாற்றம், தலைவலி போன்ற பாதிப்புகள் உண்டாகும். இதயம், நுரையீரல்கூடப் பாதிக்கப்படலாம். தொடர்ச்சியாகப் பயன்படுத்தினால் உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்பு உண்டு. 
சரியான விழிப்புணர்வு ஏற்படுத்தாவிட்டால் எதிர்காலத்தில் இது மிகப்பெரிய அச்சுறுத்தலாக வந்துநிற்கும்'' மூத்த நரம்பியல் மருத்துவர் லஷ்மி நரசிம்மன். 

இதுமாதிரியான பழக்கத்துக்கு அடிமையானவர்களை மீட்க என்ன வழி?  

மன நல ஆலோசகர் ஷீலா வில்லியம்ஸிடம் பேசினோம். 

''இதுமாதிரி பழக்கங்கள் உருவாக குடும்பச்சூழல் முக்கியக் காரணம். பெற்றோருக்குக் குடிப்பழக்கம், மாறுபட்ட உறவுகள் இருந்தால் அது குழந்தைகளைக் கண்டிப்பாகப் பாதிக்கும். அவர்களைத் தவறான வழியில் செல்ல ஊக்குவிக்கும். தாயும் தந்தையும் இல்லாமல் வளரும் குழந்தைகளும் இதுபோன்ற பழக்கங்களுக்கு எளிதில் ஆளாக வாய்ப்புண்டு.

'இதுமாதிரியான போதைப்பழக்கத்துக்கு அடிமையாகும் குழந்தைகளில் 50 சதவிகிதம் பேர் இப்படிப்பட்ட குடும்பப் பின்னணியில் இருந்து வருபவர்கள்தான்' என்கிறது தேசிய சுகாதார ஆணையம். தவிர, வீட்டிலும் சமூகத்திலும் சரியான அங்கீகாரம் கிடைக்காத குழந்தைகள் பிறரின் கவனத்தை ஈர்ப்பதற்காக இது போன்ற பழக்கங்களுக்குள் சிக்கிக்கொள்வார்கள். இவர்கள் பயன்படுத்தும் பொருள்கள் தடையில்லாமல் சர்வசாதாரணமாகக் கிடைப்பதால் விளையாட்டாகப் பயன்படுத்தத் தொடங்கி, கடைசியில் மீண்டெழ முடியாத அளவுக்குச் சிக்கிக்கொள்கிறார்கள். 

பெற்றோர் குழந்தையுடன் உரையாடினாலே இதுபோன்ற அபாயங்களில் சிக்கிக்கொள்ளாமல் குழந்தைகளைக் காப்பாற்ற முடியும். குழந்தைகள் பள்ளிக்கு சரியாகச் செல்கிறார்களா, அவர்கள் யாருடன் பழகுகிறார்கள் என்பதையெல்லாம் கவனிக்க வேண்டும். குழந்தைகள் பேசுவதற்கு வீட்டில் நல்ல வெளியை ஏற்படுத்த வேண்டும். அவர்கள் பேசுவதைக் காது கொடுத்து கேட்க வேண்டும். அவர்கள் ஏதாவது தவறு செய்தால், அடிக்காமல், கத்தாமல் அவர்களுக்குப் புரியும் வகையில் பேச வேண்டும். 

எதுவாக இருந்தாலும் முதலில் உங்களிடம் வந்து சொல்லுமளவுக்கு, குழந்தைகளிடம் ஒரு நட்புணர்வோடு பழக வேண்டும். பெற்றோருக்கும் - குழந்தைகளுக்கும் இடையிலான உறவு சரியாக இருந்தால் இது போன்ற பழக்கங்கள் உள்நுழையாது'' என்கிறார் ஷீலா வில்லியம்ஸ். 

சாலைகளில் இது போன்ற சிறுவர்கள் கண்ணில் பட்டால்  1098 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணுக்கு அழைத்து தகவல் தெரிவிக்கலாம். 

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் செயல்பட்டுவரும் சிறுவர்களுக்கான போதை மறுவாழ்வு மையத்துக்கும் அழைத்துச் செல்லலாம்.மேலும், இதுபற்ரி விரிவான தகவல்களைப் பெற கீழகண்ட எண்களுக்கு அழைக்கலாம். 
அலைபேசி : 9940270920
தொலைபேசி : 04427433475