Published:Updated:

ரத்தம் 5000, கருமுட்டை 50,000, கிட்னி 2 லட்சம், குழந்தை 4 லட்சம்... தமிழகத்தை அச்சுறுத்தும் மருத்துவ மாபிஃயா!

ரத்தம் 5000, கருமுட்டை 50,000, கிட்னி 2 லட்சம், குழந்தை 4 லட்சம்... தமிழகத்தை அச்சுறுத்தும் மருத்துவ மாபிஃயா!
ரத்தம் 5000, கருமுட்டை 50,000, கிட்னி 2 லட்சம், குழந்தை 4 லட்சம்... தமிழகத்தை அச்சுறுத்தும் மருத்துவ மாபிஃயா!

செயற்கைக் கருத்தரிப்பின் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளுதல், குழந்தைகளைத் தத்தெடுத்தல் போன்ற சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட வாய்ப்புகள் இருந்தும் இதுபோன்று முறைகேடாகக் குழந்தைகளை விலைகொடுத்து வாங்க என்ன காரணம்?

தயம், நுரையீரல், சிறுநீரகம், ரத்தம், கருமுட்டை  எனத் தமிழகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் `கருப்புச் சந்தை'யில் தற்போது குழந்தை விற்பனையும் புதிதாகச் சேர்ந்திருக்கிறது. பல ஆண்டுகளாக, திரைமறைவில் நடந்து வந்த இந்த விவகாரம், ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற செவிலியர் அமுதவள்ளி, வாடிக்கையாளர் ஒருவரிடம் பேசிய ஆடியோ வெளியான பிறகு வெட்டவெளிச்சமானது. 

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சேர்ந்தவர், செவிலியர் அமுதா. விருப்ப ஓய்வுபெற்ற இவர், கடந்த 30 ஆண்டுகளாக குழந்தைகளை வாங்கி விற்கும் இடைத்தரகராகச் செயல்பட்டு வந்திருக்கிறார். பல்வேறு தொண்டு நிறுவனங்கள், மருத்துவமனை ஊழியர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு, `எங்கே, யாரிடம் குழந்தைகள் இருக்கிறது' என்பதைத் தெரிந்துகொண்டு, அவர்களிடம் நைசாகப் பேசி குழந்தைகளை வாங்கி, குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு லட்சக்கணக்கில் விற்றுவந்ததாகக் கூறப்படுகிறது.

குழந்தையின் எடை, நிறத்துக்கேற்ப விலை நிர்ணயம் செய்யும் அமுதவள்ளியின் உரையாடல் மிகுந்த பதற்றத்தை உருவாக்குகிறது. குழந்தையின்மை பிரச்னை நாளுக்குநாள் அதிகரித்து வருவதே இதற்கு முதன்மைக் காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள். குழந்தை இல்லாத தம்பதியர் பல்வேறு துயரங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. செயற்கைக் கருத்தரிப்பின் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளுதல், குழந்தைகளைத் தத்தெடுத்தல் போன்ற சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட வாய்ப்புகள் இருந்தும் இதுபோன்று முறைகேடாகக் குழந்தைகளை விலைகொடுத்து வாங்க என்ன காரணம்?

குழந்தை பெறமுடியாத தம்பதியருக்கு செயற்கைக் கருத்தரிப்பு என்பது வரப்பிரசாதம்தான். ஆனால், செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள் செல்வம் கொழிக்கும் தொழிற்கூடங்களாக மாறிவிட்டன. நடுத்தரக் குடும்பத்தினருக்கு அது எட்டாக் கனியாகிவிட்டது. அவர்கள் சொல்லும் விதம்விதமான பேக்கேஜ்களைக் கேட்டாலே தலைசுற்றுகிறது. எட்டு லட்சம், பத்து லட்சம் செலவழித்தும் கருப்பையில் குழந்தை தங்குமா? என்ற உத்தரவாதம் இல்லாததாலே செயற்கைக் கருத்தரிப்பு மையங்களைப் புறக்கணித்து, இதுபோன்று முறைகேடாகக் குழந்தைகள் விற்பவர்களை நாடிச் செல்கின்றனர். 

சரி... சட்டப்படி குழந்தையைத் தத்தெடுக்கலாமே..? 

அதற்கு பல்வேறு நடைமுறைகள் இருக்கின்றன. 

``ஒரு குழந்தையைத் தத்தெடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வழிமுறைகளையும், வழிகாட்டுதல்களையும் வகுத்திருக்கின்றன. மத்திய தத்து ஆதரவு மையம், தத்தெடுப்பை முறையாகச் செயல்படுத்திவருகிறது. இந்த அமைப்பில் பதிவுசெய்ய ஆன் - லைன் (cara.nic.in) மூலம் விண்ணப்பிக்கலாம். மிகவும் எளிதான அடிப்படையான கேள்விகள்தான் கேட்கப்படும். அதற்கு முறையாகப் பதிலளிக்கவேண்டும்.

அத்துடன் தத்தெடுக்கும் பெற்றோரின்  பிறப்புச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், உடல்நலச் சான்றிதழ், பான் கார்டு, குடும்பப் புகைப்படம், எண் போன்றவற்றைப் பதிவேற்றினால் போதும். படிப்பறிவு இல்லாத பெற்றோர், ஊருக்கு ஊர் இருக்கிற இ-சேவை மையங்களில் உதவி கோரலாம். இதுதவிர, 1098 என்ற சைல்டு ஹெல்ப் லைன் எண்ணுக்கு அழைத்தும் உதவி கேட்கலாம். பதிவு செய்த சில நாள்களில், அதிகாரிகள் வீட்டுக்கு வந்து சோதனை மேற்கொள்வார்கள். தகவல்கள் சரியாக இருந்தால் அவர்களுக்கு ஒரு எண் கொடுக்கப்படும். அதேபோன்று ஏற்கெனவே குழந்தை பற்றிய தகவல்களும் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். பதிவு செய்த 24 நாள்களுக்குள் நீதிமன்ற உத்தரவுடன் குழந்தையைத் தத்தெடுக்க முடியும். தத்தெடுத்த குழந்தைகளை எப்படிப் பார்த்துக்கொள்கிறார்கள் என்பதும் முறையாகக் கண்காணிக்கப்படும்.  

நன்றாகப் படித்தவர்கள், பொருளாதார வசதியுடைவர்கள்தான் தத்தெடுக்க முடியும் என்ற வரைமுறை எதுவும் இல்லை. அதேநேரம் தத்தெடுக்கும் குழந்தையை வளர்க்கத் தேவையான அடிப்படையான பொருளாதார வசதியைக் கொண்டிருக்கவேண்டும். பெற்றோர் இருவரது வயதும் சேர்த்து 90 - க்குள் இருக்கவேண்டும். 

குழந்தையை சட்டப்படி தத்தெடுப்பதே சரி. அப்படிச் செய்யாமல் தங்கள் இஷ்டத்துக்குத் தத்துக் கொடுப்பது, தத்தெடுப்பது சட்டப்படி குற்றம்'' என்கிறார் குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஷீலா ஜெயந்தி.

கைவிடப்படும் குழந்தைகளைப் பாதுகாக்கவும், சட்டரீதியாக குழந்தைகளைத் தத்தெடுக்கவும் அரசு ஏற்படுத்திய திட்டம், தொட்டில் குழந்தைத் திட்டம். அது எப்படிச் செயல்படுகிறது, ஏன் அதன்மூலம் குழந்தைகள் தத்தெடுக்கப்படுவதில்லை? 

சமூக ஆர்வலர் ஷியாமளாவிடம் கேட்டோம். 

``ஆரம்பக் காலங்களில் தொட்டில் குழந்தைத் திட்டம் பற்றி மக்களிடம் போதிய விழிப்புணர்வு கிடையாது. அதனால் அதிகமாகக் குழந்தைகள் வருவதில்லை. ஆனால், இப்போது அதிக அளவில் குழந்தைகளைக் கொண்டுவந்து விட்டுச் செல்கிறார்கள். அதேநேரம், இந்தத் திட்டத்தில் நடைமுறையில் சில சிக்கல்கள் இருக்கின்றன. ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் இந்தத் தொட்டில்கள் வைக்கப்பட்டுள்ளன. அலுவலக நேரத்தில் மட்டுமே இந்தத் தொட்டில் இருக்கும் அறைகள் திறக்கப்பட்டிருக்கும். இரவுநேரங்களில் திறந்திருப்பதில்லை. ஆனால், குழந்தைகளைத் தொட்டிலில் போட நினைப்பவர்கள் இரவு நேரங்களில், யாரும் இல்லாத, பார்க்காத நேரங்களில்தான் கொண்டுவந்து போட்டுச் செல்வார்கள். ஆகவே, 24 மணி நேரமும் செயல்படும் வசதியை ஏற்படுத்தித் தரவேண்டும். இந்தத் திட்டத்தைப் பற்றி என்.ஜி.ஓக்கள்தான் மக்களிடம் எடுத்துச் சொல்லிவருகிறார்கள். அரசாங்கமும் முழுவீச்சில் இந்தத் திட்டம் பற்றி மக்களிடம் பரப்புரை செய்யவேண்டும். 

இந்தத் திட்டத்தின்கீழ் குழந்தைகளை சட்டப்படி தத்தெடுக்க முடியும். அதற்கு ஒருவருட காலம்கூட ஆகலாம். குழந்தைகள் இல்லாத தம்பதியர் அவசரப்படாமல் பொறுமை காப்பது நல்லது'' என்றார் ஷியாமளா.

`வாடகைத் தாய்' மூலம் குழந்தை பெறும் முறை நம் நாட்டில் இருக்கிறது. அதற்கான முறையான சட்டங்களும், வழிமுறைகளும்கூட வகுக்கப்பட்டுள்ளன. ஆனால், அவையும் தவறாகவே இங்குப் பயன்படுத்தப்படுகிறது. இதில் இடைத்தரகர்களின் தலையீடும் அதிகமாக இருக்கிறது. மூன்று லட்சம் ரூபாய் தருவதாகச் சொல்லி, ஒரு லட்சம் மட்டும் கொடுத்துவிட்டு ஏமாந்த வாடகைத் தாய்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். 

``என் பசங்க படிக்கறதுக்கு வாங்கின கடனை அடைக்க முடியாம நான் கஷ்டப்பட்டேன். அப்போதான் எங்க வீட்டுக்குப் பக்கத்துல இருந்த ஒரு அக்கா, வாடகைத்தாய் பத்தி சொன்னாங்க. எங்க வீட்டுக்காரர்கிட்ட பேசினேன், அவர் 'சரி'னு சொல்லிட்டார். ரெண்டு லட்சம் பணம் தரேன்னு சொன்னாங்க. ஆனா, குழந்தை பிறந்த அப்புறம் ஒன்றரை லட்சம்தான் தந்தாங்க. புரோக்கர்கிட்ட கேட்டதுக்கு சரியான பதில் இல்ல. 

அதுமட்டுமல்ல, நாங்க யாருக்கு குழந்தை பெத்துக் கொடுக்கிறோம்கிற தகவல்கூட எங்கக்கிட்ட சொல்ல மாட்டாங்க. குழந்தை ஆணா, பெண்ணான்னுகூட எங்களுக்குத் தெரியாது. குழந்தையை எங்க கண்ணுலகூட காட்டமாட்டாங்க'' என்கிறார் வாடகைத்தாய் ஒருவர்.

இப்படி வாடகைத்தாய்களின் மூலம் பெற்றெடுக்கப்படும் குழந்தைகளும் நிஜமாகவே குழந்தை இல்லாத தம்பதிகளைத்தான் போய்ச் சென்றடைகிறார்களா என்பது நிச்சயம் இல்லை. குழந்தை விற்பனை செய்பவர்கள் வாடகைத்தாய்களையும் பயன்படுத்துகிறார்கள்'' என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

அதுமட்டுமல்ல, வட சென்னைப் பகுதியில் பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களின் வறுமையைப் பயன்படுத்தி, ஒரு லட்சம், இரண்டு லட்சத்துக்கு அவர்களது கிட்னியைப் பறித்துக்கொண்ட அவலங்களும் நடந்தேறியிருக்கின்றன. ரத்தம் ஒரு பாக்கெட் 5000,  கிட்னி 2 லட்சம், கருமுட்டை 50 ஆயிரம் என்று மனித உறுப்புகள் ஒவ்வொன்றையும் பணமாகப் பார்க்கும் மாபியா கும்பல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகின்றன.

வறுமையில் வாடும் குடும்பங்களில் உள்ள குழந்தைகளை அவர்களது பெற்றோரிடம் பேரம் பேசி விலைக்கு வாங்குவது, மருத்துவமனைகளில் குழந்தைகளைத் திருடுவது, வீட்டின் வெளியே விளையாடும் குழந்தைகள் மற்றும் பள்ளி சென்றுவரும் குழந்தைகளை கடத்துவது என நேரடியான குழந்தைக் கடத்தலும் அதிகளவில் நடந்துவருகிறது. சென்னை சாலைகளில் தங்கியிருக்கும் குடும்பங்களில் தொலைந்துபோன குழந்தைகளின் எண்ணிக்கை ஏராளம். அதில் மீட்கப்பட்ட குழந்தைகள் வெகுசொற்பம்தான். 
குழந்தைகளைத் தத்தெடுப்பது, வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவது, குழந்தைகளைக் கடத்துவது என்பது குழந்தையில்லாத தம்பதியருக்கு விற்பனை செய்வதற்கு மட்டுமல்ல. உடல் உறுப்புகளுக்காக, வட மாநிலங்களில் பிச்சை எடுக்கவைக்க, பாலியல் தொழிலில் ஈடுபடுத்த எனக் காரணங்கள் நீள்கின்றன. 

``குழந்தைக் கடத்தலில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. குழந்தைகளிடமோ, அவர்களது பெற்றோரிடமோ இதமாகப் பேசி அழைத்துச் சென்று தவறான விஷயங்களுக்குப் பயன்படுத்தும் அவலங்களும் நடக்கின்றன. சட்ட ரீதியாக குழந்தைகளைத் தத்தெடுப்பதும் நாளுக்குநாள் குறைந்துகொண்டே வருகிறது. குழந்தைகளைத் தத்தெடுக்கும் வழிமுறைகள் எளிமையாக இல்லாதது இதற்கு முக்கியக் காரணம். செயற்கைக் கருத்தரிப்பு மையங்களின் கொள்ளை லாபமும் குழந்தைக் கடத்தலுக்கான மறைமுகக் காரணியாக இருக்கின்றன. இதுபோன்ற கடத்தல் சம்பவங்களுக்குப் பின்னால் ஒரு கும்பலே செயல்படுகிறது. பல்வேறு அரசுத் துறை அதிகாரிகளும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். 

கடத்தல், முறையற்ற தத்தெடுப்புகள், பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்குதல் ஆகியவற்றிலிருந்து குழந்தைகளைக் காக்கவேண்டிய அரசு அமைப்புகள், அவர்கள் பாதிக்கப்பட்ட பிறகே நடவடிக்கை எடுக்கிறார்கள். வருமுன் காப்பதற்கான எந்தவித முன்னேற்பாடுகளும் செய்யப்படுவதில்லை. இதுபோன்ற அமைப்புகள் குழந்தைகள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான் செயல்படுகின்றன. ஆனால் நடைமுறையில் அப்படி இல்லை.

மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பாளர், குழந்தைகள் நலக் குழுக்கள் என ஒரு மாவட்டத்துக்கு 45 பேர் குழந்தைகளின் பாதுகாப்புக்காக மட்டுமே அரசுப் பணியாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் முறையாகச் செயல்படுகிறார்களா என்பது கேள்விக்குறியே. அதுபோல, ஒவ்வொரு கிராமத்திலும் குழந்தைகள் பாதுகாப்பு குழு ஒன்று செயல்படவேண்டும் என மத்திய அரசாணை இருக்கிறது. அதில், பஞ்சாயத்துத் தலைவர் தலைமையில், அந்தப் பகுதி காவல்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், சுய உதவிக் குழுவினர் என அனைவரும் உறுப்பினர்களாக இருக்கவேண்டும்.

மூன்று மாதத்துக்கு ஒருமுறை இந்தக் குழு கூட்டப்பட வேண்டும். ஆண்டுக்கு இரண்டு முறை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும். அவர் அதைச் சரிபார்த்து, தலைமைச் செயலாளருக்கு அனுப்ப வேண்டும். இதுதான் பிற்காலத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், `கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழு'வாக (Village level child protection committee) மாறியது. ஆனால், எந்தக் கிராமத்திலும் இதுபோன்றதொரு குழு செயல்படுவதாகத் தெரியவில்லை.

குழந்தைகள் பாதிக்கப்பட்ட பிறகு அறிக்கை கொடுக்க மட்டுமே இந்தக் குழுக்கள் செயல்படுகின்றன. மாநில அளவில் பார்த்தால், `மாநிலக் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்' என்ற அமைப்பு செயல்படுகிறது. அதுதான் குழந்தைகளுக்கான உரிமைகளைப் பாதுகாக்கிறது. ஆனால் இந்த அமைப்புக்கு முறையான அலுவலகமோ, அலுவலர்களோ இல்லை. அரசும் முறையாக நிதி ஒதுக்குவதில்லை. பிறகு எப்படி முறையாகச் செயல்படும்..?

முதலில் குழந்தைகளுக்காகச் செயல்படும் எல்லா அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் இதுபோன்ற பாதிப்புகளைத் தடுக்கமுடியும். குடும்பத்திலும், அரசாங்கத்திலும் குழந்தைகளை மூன்றாம் தரமாகப் பார்க்கிறார்கள். அவர்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளை, வீண் செலவுகளாகப் பார்க்கிறார்கள். அந்த எண்ணத்தில் மாற்றம் உண்டாகவேண்டும்'' என்கிறார் குழந்தைகள் நலச் செயற்பாட்டாளர் தேவநேயன்.

குழந்தையின்மைதான், குழந்தைக் கடத்தலுக்கான பிரதான காரணமாக இருக்கிறது. அதைத் தடுக்க, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் இலவசக் கருத்தரிப்பு மையங்கள் (Fertility centre) ஏற்படுத்தவேண்டும். பெண்களுக்கு இலவச ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்கவேண்டும். நாளடைவில் மாவட்ட மருத்துவமனைகளுக்கும் அதை விரிவுபடுத்த வேண்டும். அப்போதுதான் தனியார் கருத்தரிப்பு மையங்களின் பிடியிலிருந்து அப்பாவி மக்களை மீட்க முடியும். 

சமூகத்தில் ஒவ்வொரு தரப்பினரும், தங்களுக்கு நேரும் துயரங்களை, அநீதிகளை எதிர்த்துக் கேள்விகேட்கிறார்கள். அதனால் அதிலிருந்து ஓரளவு தப்பிக்கிறார்கள். ஆனால், தங்களுக்கு எத்தகைய அநீதி நிகழ்கிறது என்பதைக் குழந்தைகள் அறிவதில்லை. அதிலிருந்து தப்பிக்கும் உடல் வலிமையும் அவர்களுக்குக் கிடையாது. அதனால்தான் அவர்கள்மீதான அத்துமீறல் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. குழந்தைகளைக் காக்கவேண்டிய கடமை பெற்றோர், ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல, அரசுக்கும், சமூகத்துக்கும் இருக்கிறது. 

அடுத்த கட்டுரைக்கு