Published:Updated:

தூக்க மாத்திரை கேட்டு ஒரு கைதி என்னை என்ன செஞ்சார் தெரியுமா..? - ஓர் ஆண் செவிலியரின் அனுபவம்! #WorldNurseDay

'இந்த உலகத்துல காதல், கற்பனையெல்லாம் எப்போ வரும்னு எப்படிக் கணிக்க முடியாதோ... அப்படித்தான் செவிலியர்கள், மருத்துவர்கள்கிட்ட வர நோயாளிகளையும் கணிக்க முடியாது. எந்த நேரத்துல வேணுன்னாலும் கேஸ் வரும். அப்போ நோயாளிக்கு உடனடியா சிகிச்சை கொடுக்க, நீங்களும் நானும் கட்டாயம் இருக்கணும்.

தூக்க மாத்திரை கேட்டு ஒரு கைதி என்னை என்ன செஞ்சார் தெரியுமா..? - ஓர் ஆண் செவிலியரின் அனுபவம்!  #WorldNurseDay
தூக்க மாத்திரை கேட்டு ஒரு கைதி என்னை என்ன செஞ்சார் தெரியுமா..? - ஓர் ஆண் செவிலியரின் அனுபவம்! #WorldNurseDay

ம்மாவின் அருமையையும் கருணையையும் ஏதோ இன்றுதான் உணர்ந்தவர்களைப்போல பலர் சமூகவலைதளங்களில் `அம்மாவே போற்றி... போற்றி' எனக் கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கின்றனர். அன்னையர் தினக் கொண்டாட்டத்துக்கு நடுவே 'இன்னொரு தாய்'க்கான தினமும் மறைந்திருப்பது பலருக்குத் தெரியவில்லை. ஆம், இன்று (மே 12) உலக செவிலியர் தினமும் கொண்டாடப்படுகிறது.

தூக்க மாத்திரை கேட்டு ஒரு கைதி என்னை என்ன செஞ்சார் தெரியுமா..? - ஓர் ஆண் செவிலியரின் அனுபவம்!  #WorldNurseDay

"நான் 26 வருஷமா செவிலியரா இருக்கேன். ஆனாலும் என்னை அறிமுகப்படுத்தினா 'கம்பவுண்டரா'னுதான் சிலபேர் கேப்பாங்க. ஆண்களும் செவிலியரா இருக்காங்கங்கிறது பலபேருக்குத் தெரியிறதில்ல" என்று ஆதங்கத்துடன் பேசத்தொடங்கினார் செவிலியர் மணிகண்டன். 

1959-ல் செவிலியர் படிப்பில் ஆண்களுக்கான சேர்க்கைகள் நிறுத்தப்பட்டது. 1989-ல் தமிழக அரசு அதை தளர்த்தி முதன்முறையாக ஆண்களும் செவிலியராகலாம் என்று கூறியது. அப்போது நர்ஸிங் படிக்கச் சேர்ந்த ஆறு மாணவர்களுள் ஒருவர்தான், மணிகண்டன். மூன்று வருட பி.எஸ்ஸி படிப்பும், அடுத்த ஆறு மாதகாலம் மனநல மருத்துவப் பயிற்சிப் படிப்பும் முடித்துவிட்டு 1992-ல் வேலையில் சேர்ந்துள்ளார். முதன்முதலில் கொல்கத்தாவில், தனியார் மருத்துவமனை ஒன்றின் மகப்பேறுப் பிரிவில் பணி அமர்த்தப்பட்டார். இரண்டு வருட கொல்கத்தா வாழ்க்கைக்குப் பிறகு, தமிழகம் திரும்பிய இவர் இப்போது திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் செவிலியராக இருக்கிறார். தமிழ்நாடு அரசு நர்ஸ்கள் சங்கத்தின் துணைத் தலைவராகவும் இருக்கிறார்.

"எங்களை சிலர் `கம்பவுண்டர்'னு சொல்வாங்க. ஆனா இன்னைக்கு தேதியில `கம்பவுண்டர்'ங்கிற வார்த்தை உபயோகமே தப்புதான். ஏன்னா, 1960 - 70-கள்ல மருந்தாளுநர்களை (Pharmasict) இப்படித்தான் சொல்வாங்க. அந்தக்காலத்துல மருந்து, மாத்திரை வாங்க ஆஸ்பத்திரிக்குப் போக முடியாதவங்க, மருந்தாளுநர்களை உதவிக்குக் கூப்பிடுற வழக்கம் இருந்துச்சு. நாங்க மருந்தாளுநர்கள் கிடையாது, செவிலியர். முறையா நர்ஸிங் பட்டப்படிப்பு படிச்சு, வந்தவங்க நாங்க. எங்களுக்கும் கம்பவுண்டர்களுக்கும் தொடர்பே கிடையாது" - ஆதங்கமாகச் சொல்கிறார் மணிகண்டன்.

தூக்க மாத்திரை கேட்டு ஒரு கைதி என்னை என்ன செஞ்சார் தெரியுமா..? - ஓர் ஆண் செவிலியரின் அனுபவம்!  #WorldNurseDay

"தமிழக அரசு நர்ஸிங் கல்லூரிகள்ல, 2009-ம் வருஷமே ஆண்களை சேர்க்கிறதை நிறுத்திட்டாங்க. அதற்குப் பிறகு, மாணவிகள் சேர்க்கை மட்டுமே நடந்தது. மருத்துவ சேவைகள், மகப்பேறு துறை சார்ந்தே இருக்குங்கிற அடிப்படையில அரசு இந்த முடிவுக்கு வந்திருக்கும்கிறது என்னோட கருத்து. அரசு தரப்பில, வேற எந்தக் குறிப்பிட்ட காரணத்தையும் தெளிவா சொல்லலை. சரியான காரணமில்லாம, பாலின அடிப்படையில கல்வியைப் போதிக்க நினைக்கிறது, சரியான வழிமுறை இல்லை. அதுமட்டுமில்லாம, நம்ம நாட்டுல ஆண் செவிலியர்களுக்கான தேவை நிறைய இருக்கு. குறிப்பிட்டுச் சொல்லணும்னா மனநல மருத்துவமனைகள், சிறைச்சாலைகள், பாலியல் தொற்று நோயாளிகளுக்கான கிளினிக், ஆண்களுக்கான அறுவை சிகிச்சை நடக்கக்கூடிய அறைகள், காசநோய் பாதிப்பு உள்ள ஆண்கள் தங்கியிருக்குற இடங்கள், இதய அறுவைசிகிச்சை அறைகள்ல ஆண் செவிலியர்களுக்கான தேவை அதிகமா இருக்கும்.

மனநல மருத்துவமனையிலயும் சிறைச்சாலைகள்லயும் கட்டாயம் ஆண் செவிலியர் இருக்கணும். காரணம், மனநல மருத்துவமனையில சிலபேர் குற்றச்செயல்ல ஈடுபட்டவங்களா இருப்பாங்க. பெண்களைப் பார்த்தவுடனே, அவங்களுக்குள்ள வன்முறை உணர்வு வரலாம். சில நோயாளிகள் தன்னிலை மறந்து இருப்பாங்க. சிலர் ஆடையில்லாமக்கூட இருப்பாங்க. இந்தமாதிரி இடங்கள்ல, ஆண் செவிலியர்கள் இருந்தா, மோசமான விளைவுகளைத் தவிர்க்கலாம். சிறைச்சாலைகளைப் பொறுத்தவரை அங்க இருக்குற பலபேர் இயல்பிலேயே வன்முறை உணர்வு உள்ளவங்களா இருப்பாங்க. அவங்களை, எங்களாலகூட சமாளிக்க முடியாது. 

தூக்க மாத்திரை கேட்டு ஒரு கைதி என்னை என்ன செஞ்சார் தெரியுமா..? - ஓர் ஆண் செவிலியரின் அனுபவம்!  #WorldNurseDay

உதாரணமா நான் எதிர்கொண்ட ஒரு சின்ன சம்பவத்தைச் சொல்றேன்... ஒரு கைதி திடீர்னு வந்து, 'எனக்குத் தூக்கம் வரலை, தூக்க மாத்திரை கொடுங்க'னு கேட்டார். நான் ஒரு மாத்திரை கொடுத்தேன். 'பத்து மாத்திரை கொடுங்க, நான் அப்பப்போ சாப்பிட்டுக்கிறேன்'னு சொன்னார். 'இல்லைங்க, அதெல்லாம் டாக்டர் அட்வைஸ் இல்லாம தர முடியாது'னு சொன்னேன். ஆனா அவர் கேட்கல. என்னை அடிக்க வந்துட்டார். கடைசியில, அதிகாரிகள் வந்து பிரச்னையைத் தீர்த்து வச்சாங்க. இதெல்லாம், ராத்திரி நேரத்துல நடந்தது. இதைச் சமாளிக்க ஆண்களாலதான் முடியும். பாலியல் தொற்று நோயாளிகள் உள்ள கிளினிக்ல, அவங்களோட பிரச்னைகளை பெண் செவிலியர்களைவிட ஆண் செவிலியர்கள்கிட்டதான் மனம் திறந்து சொல்வாங்க. 

பொதுவா செவிலியர்களோட வாழ்க்கையில சிரமங்கள் இருக்கும். எல்லோருக்கும் நேர ஒழுங்கு பத்தி நாங்க பாடம் எடுப்போம். ஆனா, எங்களுக்கு நேர வரைமுறையே கிடையாது. நான் வேலைக்கு வந்த புதுசுல நடந்த ஒரு சம்பவம். இரவு வேலை முடிஞ்சு கிளம்பினேன். எங்க சீஃப் டாக்டர் 'அப்புறம்பா... வேலை முடிஞ்சிடுச்சா? கேஸ்லாம் ஓவரா'னு விளையாட்டா கேட்டார். நானும், 'முடிஞ்சிடுச்சு சார், இன்னைக்கு இனிமே கேஸ் வராது'னு சொன்னேன். அதுக்கு அவர் சிரிச்சுக்கிட்டே, 'இந்த உலகத்துல காதல், கற்பனையெல்லாம் எப்போ வரும்னு எப்படிக் கணிக்க முடியாதோ... அப்படித்தான் செவிலியர்கள், மருத்துவர்கள்கிட்ட வர நோயாளிகளையும் கணிக்க முடியாது. எந்த நேரத்துல வேணுன்னாலும் கேஸ் வரும். அப்போ நோயாளிக்கு உடனடியா சிகிச்சை கொடுக்க, நீங்களும் நானும் கட்டாயம் இருக்கணும். அதனால, எப்பவும் எல்லாத்துக்கும் தயாரா இருங்க'னு சொன்னார். 24 வருஷம் ஆனாலும் எத்தனை அழைப்புகள் வந்தாலும் சளைக்காம வேலை பாக்கிறதுக்குக் காரணம், அப்போ அவர் சொன்ன வார்த்தைகள்தான். 

தூக்க மாத்திரை கேட்டு ஒரு கைதி என்னை என்ன செஞ்சார் தெரியுமா..? - ஓர் ஆண் செவிலியரின் அனுபவம்!  #WorldNurseDay

ஆணோ, பெண்ணோ... செவிலியர் வேலையில நிறைய கஷ்டங்கள் இருக்கு. அதை யார், எந்தச் சூழல்ல, எப்படி அணுகுறோம்கிறதுதான் விஷயம். சில அட்டெண்டர்ஸ், அவங்க வீட்டுல உள்ள வயசானவங்களை, ஏதாச்சும் ஒரு மாவட்ட அரசு மருத்துவமனையில எமெர்ஜென்சி அட்மிஷன் போட்டுட்டு கிளம்பிப் போயிடுவாங்க. அவங்களைப் பக்கத்துல இருந்து பார்க்க ஆள் இருக்காது. அந்தப் பெரியவங்களால பேசவும் முடியாது, நடக்கவும் முடியாது. அவங்க கையில பணமும் இருக்காது. அட்டெண்டர் இல்லாததால டிஸ்சார்ஜ் பண்ணவும் முடியாது. அரசு சார்புல, அவங்களை முதியோர் இல்லத்துல சேர்க்குறதும் சாத்தியமில்லை. கடைசியில நாங்களே சாப்பாடு வாங்கிக்கொடுத்து, இருக்கிற வரைக்கும் பத்திரமா பாத்துக்குவோம். 

தூக்க மாத்திரை கேட்டு ஒரு கைதி என்னை என்ன செஞ்சார் தெரியுமா..? - ஓர் ஆண் செவிலியரின் அனுபவம்!  #WorldNurseDay

கொஞ்சம் பேசத்தெரிஞ்ச முதியவர்னா, பேப்பர்ல விளம்பரம் கொடுத்து, அவங்க குடும்பத்தைக் கண்டுபிடிப்போம். சமீபத்துலகூட ஒரு பாட்டியை அவங்களோட ரெண்டு மருமகள்களும் அட்மிட் பண்ணிட்டுக் கிளம்பிப் போய்ட்டாங்க. அந்தப் பாட்டிகிட்ட கேட்டா அவங்களால எதையும் சொல்ல முடியலை. ஏறத்தாழ எட்டு மாசம் நாங்களும் (செவிலியர்கள்), டாக்டர்களும்தான் அவங்களைப் பாத்துக்கிட்டோம். எட்டு மாசம் முடிஞ்சதும் மகளிர் தினத்துல 'இந்த அம்மாவோட பிள்ளைகள் இவங்களைத் தவிக்கவிட்டு போய்ட்டாங்க'னு பத்திரிகையில செய்தி வெளியிட்டோம். அந்தப் பாட்டியோட உறவுக்காரங்கள்லாம் போய் பிள்ளைகள்கூட சண்டை போட்டவுடனே, அவங்கவந்து பாட்டியை அழைச்சுக்கிட்டுப் போனாங்க. இப்போவரைக்கும் நிறைய பெரியவங்களை நாங்கதான் பாத்துக்கிறோம். இப்போ, எங்களுக்கு இது பழகிடுச்சு. எப்படி அவங்களை அணுகுறதுனு எங்களுக்குத் தெரியும். ஆனா, அதனால மட்டும், நாங்க அவங்க பிள்ளைங்களா ஆகிட முடியாதே...." என்கிறார்  நெகிழ்ச்சியாக! 

Vikatan