Published:Updated:

தனியார் மருந்தகங்கள் வளர்ச்சிக்குத் துணைபோகும் அரசு மருத்துவமனைகள்: ஆர்.டி.ஐ. தகவல்கள் சொல்வது என்ன?

தனியார் மருந்தகங்கள் வளர்ச்சிக்குத் துணைபோகும் அரசு மருத்துவமனைகள்: ஆர்.டி.ஐ. தகவல்கள் சொல்வது என்ன?
தனியார் மருந்தகங்கள் வளர்ச்சிக்குத் துணைபோகும் அரசு மருத்துவமனைகள்: ஆர்.டி.ஐ. தகவல்கள் சொல்வது என்ன?

அவ்வப்போது வெளியில் வாங்காமல் ஆண்டுக்கு மொத்தமாக ஒப்பந்தப்புள்ளி மூலம் மருந்துகள் கொள்முதல் செய்தால் தற்போது மருந்துகளுக்குச் செலவிடப்படும் தொகையில் பாதியை மிச்சப்படுத்த முடியும். ஆனால் ஒருசிலரின் சுயலாபங்களுக்காக இந்த முறையில் மருந்துகள் கொள்முதல் செய்யப்படுகின்றன.

மிழகத்தில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், மாவட்டத் தலைமை மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள் என 300-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகள் செயல்பட்டுவருகின்றன. நாள் ஒன்றுக்கு 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மருந்து முதல் அறுவை சிகிச்சைவரை அனைத்துமே இலவசம் என்ற நம்பிக்கையில்தான் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய ஏழை எளிய மக்கள் அரசு மருத்துவமனைகளுக்குச் செல்கிறார்கள். அப்படி வரும் ஏழை, எளிய மக்களுக்கு சமீப காலமாக ஏமாற்றங்களே மிஞ்சுகின்றன.

சாதாரண சத்து மாத்திரைகள் முதல் உயிர்காக்கும் மருந்துகள்வரை, `இருப்பு இல்லை, தீர்ந்துவிட்டது' என்று கைவிரிக்கிறார்கள் மருத்துவமனை ஊழியர்கள். தனியார் மருந்தகங்களில், மருந்துகள் வாங்கிக்கொள்ள பரிந்துரைக்கிறார்கள். ஏற்கெனவே உடல் நலிந்து, அரசு மருத்துவமனைகளுக்கு வரும் லட்சக்கணக்கான ஏழை நோயாளிகள், இதனால் பொருளாதார ரீதியாகவும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். மறுபக்கம் ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கில் தனியார் மருந்து நிறுவனங்கள் லாபம் அடைந்து வருகின்றன. அதன் எதிரொலியாக தமிழக அரசு மருத்துவமனைகளின் அருகில் தனியார் மருந்தகங்கள் பிரமாண்டமாக வளர்ந்து வருகின்றன.

தனியார் மருந்தகங்கள் வளர்ச்சிக்குத் துணைபோகும் அரசு மருத்துவமனைகள்: ஆர்.டி.ஐ. தகவல்கள் சொல்வது என்ன?

குறிப்பாக, மதுரை ராஜாஜி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தென் தமிழக மக்களுக்கு முக்கியமான மருத்துவமனையாகச் செயல்பட்டு வருகிறது. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அடுத்தபடியாக, தமிழகத்தில் அதிக நோயாளிகள் வருகை தரும் மருத்துவமனையாக உள்ளது. நாள் ஒன்றுக்கு சுமார் 3,000 உள்நோயாளிகள், 9,000 வெளிநோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். இதயம், கல்லீரல், சிறுநீரகம், நரம்பியல், புற்றுநோய் என ஒவ்வொரு பிரிவுக்கும் சிறப்பு மருத்துவ சிகிச்சைப்பிரிவுகள் செயல்பட்டுவருகின்றன. 

தென்தமிழகத்தில் உள்ள தாலுகா அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்பச் சுகாதார நிலையங்களிலும் மருந்துத் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் மருந்து, மாத்திரைகளைப் பெறுவதற்கு மதுரை  இராசாசி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறார்கள். ஏற்கெனவே இராசாசி மருத்துவமனையில் காத்திருக்கும் பெரும் கூட்டத்தோடு சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து வருபவர்களும் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கிறார்கள். பல மணி நேரம் காத்திருந்தாலும், `மருந்து ஸ்டாக் இல்லை' என்று பதில் வருவதால் மிகுந்த ஏமாற்றத்தோடு திரும்பிச் செல்கிறார்கள். 

தனியார் மருந்தகங்கள் வளர்ச்சிக்குத் துணைபோகும் அரசு மருத்துவமனைகள்: ஆர்.டி.ஐ. தகவல்கள் சொல்வது என்ன?

மதுரை மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த லட்சுமணன் நம்மிடம் பேசும்போது, ``இதயநோயால் பாதிக்கப்பட்ட என் மனைவி மகாலட்சுமியை சில வாரத்துக்கு முன்னாடி இங்கதான் சேர்த்திருந்தேன். இதயத்துக்குப் பக்கத்துல பொருத்துறதுக்கு பேட்டரியும், சில மருந்து மாத்திரைகளையும் வெளியில வாங்கிட்டுவர சீட்டு எழுதிக் கொடுத்தாங்க. ஒரு நாளைக்கு முந்நூறு ரூபாய்க்கு மேல தொடர்ந்து பத்து நாளைக்கு மேலே வெளியிலதான் பேட்டரியும் மருந்தும் வாங்கினேன். என்னோட குடும்பம் இருக்குற நிலைமையில எனக்கு அது பெரிய தொகை. கடன் வாங்கிதான் செலவு செஞ்சேன். கடைசில என் மனைவியையும் காப்பாத்த முடியல. நான் மட்டும் இல்ல இதய நோயாளிகள் பிரிவுல இருக்க, பலபேரு வெளியிலதான் மாத்திரை, மருந்து வாங்கிட்டு வர்றாங்க. இலவசம்னு சொல்லித்தான் அரசு மருத்துவமனைக்கு வர்றோம். பணம் இருந்தாதான் மருந்து, மாத்திரை வாங்க முடியும்னா, எங்கள மாதிரி ஏழை மக்கள் எங்க போறதுன்னு தெரியல'' என்று வேதனையோடு பேசி முடித்தார் லெட்சுமணன்.

அரசு மருத்துவமனைகளுக்கு வரும் ஏழை நோயாளிகள் தினக்கூலி வேலைக்குச் செல்பவர்கள். ஒருநாள் வேலைக்குச் சென்றால்தான், மூன்று வேளையும் சாப்பிட முடியும். இந்தச் சூழ்நிலையில் வேலைக்குப் போகாமல், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் கூலி கிடைக்காது. அதனால் கடன் வாங்கவேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள். இதுபோன்ற சூழலில் மருத்துவமனையில் மருந்தும் கிடைக்கவில்லை அவர்கள் நிலை மிகவும் கவலைக்குள்ளாகும்.

தனியார் மருந்தகங்கள் வளர்ச்சிக்குத் துணைபோகும் அரசு மருத்துவமனைகள்: ஆர்.டி.ஐ. தகவல்கள் சொல்வது என்ன?

மதுரை மாவட்டம் புதுதாமரைப்பட்டியைச் சேர்ந்த 62 வயது பூமிநாதன்நம்மிடம் பேசும்போது, ``சர்க்கரை நோய்க்கு என் ரெண்டு கால்லயும் ஆபரேஷன் செஞ்சிருக்கு. கூடவே, ரத்த அழுத்தமும் இருக்கு. மாசத்துக்கு ஒருமுறை, இங்க வந்துதான் மருந்து, மாத்திரை வாங்கிட்டுப் போவேன். இந்த மாசம் இப்பவரை நாலஞ்சு முறை வந்துட்டேன். கால்வலியோட அடிக்கடி அலையவும் முடியல. கொஞ்சநாளா மாத்திரையை வெளியில காசு கொடுத்துதான் வாங்கிச் சாப்பிடுறேன். எவ்வளவு நாளைக்கு இப்படி வாங்கிச் சாப்பிட முடியும். அதிகாரிங்க உடனடியா இதுக்கு ஒரு முடிவு எடுக்கணும்'' எனக் கேட்டுக்கொண்டார் பூமிநாதன். 

ராசாசி மருத்துவமனையில் மட்டுமல்ல, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சர்க்கரை நோய்க்கான மாத்திரைத் தட்டுப்பாடு அதிகமாகக் காணப்படுகிறது. ராசாசி மருத்துவமனையில் மட்டும் ஒரு நாளைக்கு சுமார் 70 ஆயிரம் சர்க்கரை மாத்திரைகள் தேவைப்படுகின்றன. மருத்துவமனை நிர்வாகம் நாளொன்றுக்கு 30 ஆயிரம் மாத்திரைகளை வெளியில் வாங்கி விநியோகித்து வருகிறது. அதோடு, ஆன்டிபயாக்டிக் ஊசி மருந்தின் தட்டுப்பாடும் உள்ளது. அதனால், ஓர் ஊசி மருந்தின் விலை ரூ.396 என வெளியில் விலை கொடுத்து வாங்கி வருகிறது.

அதோடு, தாது உப்புகள் (சலைன்) பாட்டில் தட்டுப்பாடும் உள்ளதால், நாளொன்றுக்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாட்டில்களை வெளி மருந்தகங்களில் வாங்குகின்றனர். இதில் மட்டும் மருத்துவமனைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் வரை செலவாகிறது. சலைன் தடுப்பாடு தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் இருக்கிறது. இதுதவிர ஆஸ்துமா மாத்திரைகள், இன்ஹேலர், சிறுநீரக அறுவை சிகிச்சை செய்தவர்கள் சாப்பிடவேண்டிய மருந்துகளும் இருப்பு இல்லை. இதனால் அடித்தட்டு மக்கள் மாத்திரைகளை வெளியே காசு கொடுத்து வாங்க முடியாமல் சிகிச்சையைப் பாதியிலேயே நிறுத்தும் அவலமும் ஏற்படுகிறது. 

தனியார் மருந்தகங்கள் வளர்ச்சிக்குத் துணைபோகும் அரசு மருத்துவமனைகள்: ஆர்.டி.ஐ. தகவல்கள் சொல்வது என்ன?

அரசு மருத்துவமனைகளில் மருந்துப் பற்றாக்குறை பல ஆண்டுகளாக இருந்த வந்த நிலையில், கடந்த ஆண்டு மதுரை உயர்நீதி மன்றத்தில் சமூக ஆர்வலர்கள் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு கடந்த 24.02.2017 அன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆறு மாத காலத்துக்குள் மருந்து பற்றாக்குறை இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தனர். இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், உத்தரவை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் சுகாதாரத்துறை அலட்சியமாகச் செயல்படுகிறது. 

தனியார் வளர்ச்சிக்குத் துணைப்போகும் அரசு மருத்துவமனைகள் : 

தமிழக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் அவசரக் கொள்முதல் நிதி மூலம் மருந்துப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கு நாளொன்றுக்கு ரூபாய் 50,000 வரை செலவு செய்ய அனுமதியுள்ளது. அதைப் பயன்படுத்தி அவசரத் தேவைக்கு வெளியில் தனியார் மருந்தகங்களில் அதிக விலைக்கு மருந்துகள் வாங்கப்படுகின்றன. ஆனாலும் மொத்தமுள்ள தட்டுப்பாட்டில் 20 சதவிகித தேவைகள் மட்டுமே பூர்த்தி செய்யப்படுகின்றன. 

ஒப்பந்தப்புள்ளி மூலம் ஆண்டிற்கு மொத்தமாக மருந்துகளைக் கொள்முதல் செய்யும்போது தனியார் மருந்தகங்களில் விற்கப்படும் விலையைவிட 50 சதவிகிதம் குறைவாக வாங்க முடியும். தற்போது வாங்குவதைப் போல், ஒவ்வொரு நாளும் மாத்திரை, மருந்துகளை வெளியில் வாங்குவதால் கோடிக்கணக்கான ரூபாய் தேவையற்ற கூடுதல் செலவாகிறது. இதில் பல முறைகேடுகள் நடப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தனியார் மருந்தகங்கள் வளர்ச்சிக்குத் துணைபோகும் அரசு மருத்துவமனைகள்: ஆர்.டி.ஐ. தகவல்கள் சொல்வது என்ன?

தமிழ்நாடு மருத்துவச் சேவை கழகம் மருந்து மாத்திரைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்குக் கடந்த, 2012-13 நிதி ஆண்டு முதல் 2016-17வரை மருந்து மாத்திரைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரம் :  

வருடம் - தொகை 

2012-13 - ரூ.265.20 கோடி
2013-14 - ரூ.347. 96 கோடி
2014-15 - ரூ.493.39 கோடி
2015-16 - ரூ.608.52 கோடி 
2016-17 - ரூ.615.73 கோடி

ஒவ்வோர் ஆண்டும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை 15 சதவிகிதம் அதிகரிப்பதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில், ஒதுக்கப்படும் நிதியானது போதுமானதாக இல்லை. மருந்துகள், உபகரணங்கள் வாங்குவதற்கே வருடத்துக்கு 1,000 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இதனால் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் நிதியையும் மருந்து, மாத்திரைகளுக்கே செலவழிக்க வேண்டிய சூழலுக்கு அரசு மருத்துவமனைகள் தள்ளப்படுகின்றன.  

விரயமாகும் மருத்துவக்காப்பீட்டு நிதி : (ஆர்.டி.ஐ தகவல்) 

தனியார் மருந்தகங்கள் வளர்ச்சிக்குத் துணைபோகும் அரசு மருத்துவமனைகள்: ஆர்.டி.ஐ. தகவல்கள் சொல்வது என்ன?

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் சுமார், 167 கோடி ரூபாய் அரசு மருத்துவமனைகள் மேம்பாட்டிற்காகக் கிடைத்துள்ளது. இதில் பெரும்பகுதியை மருந்துக் கொள்முதல் செய்வதற்காக மட்டுமே பயன்படுத்தியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அரசு மருத்துவமனைகளில் இதர முக்கியத்துவம் வாய்ந்த மேம்பாட்டுப் பணிகளுக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்படுவதுடன், நோயாளிகளும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பெறப்படும் நிதியானது மருத்துவமனை மேம்பாட்டுக்காகச் செலவழிக்க வேண்டியது, அதை மருந்து மாத்திரைகள் வாங்க பயன்படுத்துவதால்தான் மருத்துவமனை மேம்பாடு மிகவும் பின் தங்கிய நிலையிலேயே இருக்கிறது. தமிழகம் முழுவதுமுள்ள அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்து மாத்திரைகளை, தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் மொத்தமாகக் கொள்முதல் செய்து அனுப்பி வைக்கிறது. பற்றாக்குறை ஏற்படும்போது. மருத்துவமனை நிர்வாகமே தனியாகக் கொள்முதல் செய்கிறது.

தனியார் மருந்தகங்கள் வளர்ச்சிக்குத் துணைபோகும் அரசு மருத்துவமனைகள்: ஆர்.டி.ஐ. தகவல்கள் சொல்வது என்ன?

அப்போது தனியார் மருந்தகங்களில் அதிகமான விலை கொடுத்து கொள்முதல் செய்யவேண்டியிருக்கிறது. இப்படி தனியார் மருந்தகங்களில் மருந்து கொள்முதல் செய்ய மட்டும் ஆண்டுக்கு 500 கோடிக்கும் மேல் செலவிட வேண்டியிருக்கிறது. மருந்து மாத்திரைகளை அவ்வப்போது வெளியில் வாங்காமல் ஆண்டுக்கு மொத்தமாக ஒப்பந்தப்புள்ளி மூலம் மருந்துகள் கொள்முதல் செய்தால் தற்போது மருந்துகளுக்குச் செலவிடப்படும் தொகையில் பாதியை மிச்சப்படுத்த முடியும். ஆனால் ஒருசிலரின் சுயலாபங்களுக்காக இந்தமுறையில் மருந்துகள் கொள்முதல் செய்யப்படுகின்றன.

அரசு மருத்துவமனைகளில், தனியார் மருத்துவமனைகளைப் போல் மருந்து மாத்திரைகளின் இருப்பு விவரங்களை, டிஜிட்டல் முறையில் பின்பற்றாத நிலையும் உள்ளது. மருந்தாளுநர்கள் பற்றாக்குறைதான் அதற்குக் காரணம். இதுவும் மருந்துத் தட்டுப்பாட்டுக்கு மிக முக்கியக் காரணமாக இருக்கிறது. மருந்துத் தட்டுப்பாட்டால் மக்கள் நேரடியாகப் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், மருத்துவமனை மேம்பாடு, தொழில்நுட்ப வளர்ச்சிகளின் தேக்கத்தால் மறைமுகமாகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதே நாம் புரிந்துகொள்ள வேண்டிய உண்மை. 

- சி.ஆனந்த்ராஜ்

Vikatan
அடுத்த கட்டுரைக்கு