`பாலைப் பொங்க விட்டுட்டேன்'
`போனா போகட்டும்'
`நெய் பாட்டில் வழுக்கிக் கொட்டிடுத்து'
`போனா போகட்டும் விடு. கைல கால்ல குத்தலையே?'
`சாவியை உள்ள வெச்சு பூட்டை அமுக்கிட்டேன்'
`போனா போறது. நா ஒரு ஆளைக் கூட்டிண்டு வரேன். திறந்துடலாம்'
`குழந்தைக்கு (கவிதாவுக்கு) கூழ் ஊட்டும்போது வளையலைக் கழற்றி விளையாடக் கொடுத்தேன். மறந்தே போய்ட்டேன். கல்யாணச்
சத்திரத்து டைனிங் ஹால்ல தேடியும் கிடைக்கல. ரெண்டரை பவுன்'.
`சரி போனா போறது விடு. இதுக்கெல்லாம் அப்ஸெட் ஆகாத'

`தி.நகர் போகும்போது பஸ்ல எவனோ பர்ஸை பிக்பாக்கெட் அடிச்சுட்டான். ரெண்டாயிரம் போச்சு'
`போனா போகட்டும். இனிமே ஜாக்கிரதையா இரும்மா'
`புத்தம்புது செருப்பை யாரோ கோயில்ல போட்டுண்டு போய்ட்டா'
`போறது விடு. வேற வாங்கிக்கலாம்'
`எல்லா மளிகைச் சாமானையும் வாங்கிண்டு ஆத்துக்கு வந்து பார்த்தா துவரம்பருப்பைக் காணல. திரும்பி போய்க்கேட்டா நாங்க பையில போட்டாச்சுன்னு சாதிக்கறான்'
`சரி போறது. நீ அங்கயே செக் பண்ணி வாங்கியிருக்கணும். பரவால்ல விடு. இன்னொரு கிலோ வாங்கிண்டு வரேன்.'
இப்படி, சின்னதும் பெரியதுமாக நான் செய்த எத்தனையோ தவறுகள். எல்லாவற்றுக்கும் அமைதியாக என் கணவர் சொல்லும் ஒரே பதில்தான். `போனா போறது விடு...'

ஆனால், என் கணவரின் மரணத்தை இப்படிப் போனால் போகிறதென்று என்னால் விடமுடியவில்லையே. ஏனெனில் அவரது மரணம் ஒரு பாழாய்ப்போன வஸ்துவால் நேரிட்டது என்பதுதான், இந்தக் கட்டுரையை நான் எழுதக் காரணம். இக்கட்டுரையை வாசிக்கும் உங்களில் ஒரு சிலரேனும் சிகரெட், மற்றும் புகையிலை போடும் பழக்கம் இருந்து அதை விட்டுவிட்டீர்கள் என்றால் அதைவிட வேறு மகிழ்ச்சி எனக்கு இருக்கமுடியாது.
திருமணத்துக்குப் பிறகுதான் என் கணவருக்குப் புகை பிடிக்கும் பழக்கம் இருப்பதே எனக்குத் தெரியும். அப்பா, அம்மா பார்த்து நடத்திவைத்த திருமணம் எங்களுடையது. என் அப்பாவுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தது. அதனால்கூட, என் கணவருக்கு அப்பழக்கம் இருந்தது தவறாகத் தோன்றியிருக்காது.
ஆனால், அதனால் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். எங்களுடைய பொருளாதார நிலை வேறாக இருந்தது. என் கணவரின் வருமானத்தில் கணிசமான ஒரு தொகை சிகரெட்டுக்குச் சென்று கொண்டிருந்தது. இதனால் மாதக் கடைசி இழுபறிகளில் ஒரு குடும்பத் தலைவியாக நான் மிகவும் கஷ்டப்பட்டேன். என் கணவரிடம் எவ்வளவோ பொறுமையாக எடுத்துச்சொல்லி இப்பழக்கத்தை விட்டுவிடுமாறு கூறினேன். அதனால் மிச்சமாகும் பணத்தில் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு எத்தனையோ விஷயங்கள் செய்யலாமே என்று கெஞ்சினேன்.

ஆனால் என் கணவரால் சிகரெட்டை மட்டும் நிறுத்தமுடியவில்லை. எக்காரணம் கொண்டும் வீட்டில் மட்டும் அவர் சிகரெட்டைத் தொடாமல் பார்த்துக் கொண்டதைத்தவிர, அதிலிருந்து விடுவிக்க நான் செய்த முயற்சிகள் எல்லாம் தோற்றன. அவரது உத்தியோகம் காரணமாக அவர் அடிக்கடி இடம் மாறிச் செல்வது வழக்கம். வேலை அழுத்தம், தனிமை என்று தனது பழக்கத்துக்கு அவர் காரணம் கூறுவார். அப்படியானால் எனக்கு வேலை அழுத்தம், குடும்ப பாரம் இதெல்லாம் இல்லையா... நான் புகைக்கிறேனா என்ன... என்று மடக்கிக் கேட்டாலும் அதுகுறித்து சிந்திக்க மாட்டார்.
இந்த ஒரு பழக்கம் தவிர, அத்தனை அன்பான மனிதர். ஊருக்கெல்லாம் உதவுபவர். நல்ல கணவர், நல்ல அப்பா... ஒரு குறையும் சொல்லமுடியாது. இருந்தாலும் அந்த வெள்ளை வஸ்து ஒரு வில்லனாக எங்கள் குடும்பத்தில் புகுந்து எங்களை ஆட்டிவைத்தது.
திருமணமாகி பதினைந்து வருடமான நிலையில் அது தன் வேலையைக் காட்ட ஆரம்பித்தது. அவரது மூளை மடிப்புகளை அது மெல்லச் சுருக்க ஆரம்பித்தது. அவர், ஒருநாள் குளியலறையில் பக்கவாதம் ஏற்பட்டு விழுந்தார். மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஒன்றிருப்பதாகக் கண்டறியப்பட்டது. உடனடியாக, வாஸ்குலர் சர்ஜரி செய்யப்படவேண்டும். சிகரெட் புகை ரத்தக் குழாயிலும் கருநிறமாகப் படியும் என அறிந்தேன். ஆபத்தான அறுவை சிகிச்சைதான். `அறுவை சிகிச்சை நடக்கும்போது ஸ்ட்ரோக் வந்தால் அது நிரந்தரமாக இருக்கும்... சரி செய்ய முடியாது' என்றார் டாக்டர். நான் வேண்டாத தெய்வமில்லை.

குறித்தநாளில் அறுவை சிகிச்சை நடந்தது. ஆண்டவன் அருளால் நல்லபடியாக கண் திறந்தார். கைகால் உடனடியாக வரவில்லை. ஆறுமாதம் வரை பிசியோதெரபி கொடுத்தோம். பிறகு சாதாரணமாக நடக்க ஆரம்பித்தார்.
அவரை டிஸ்சார்ஜ் செய்யும்போதே டாக்டர் ஒரு விஷயத்தைக் கூறி எச்சரித்துத்தான் எங்களை அனுப்பினார். அவர் சொன்ன விஷயத்தை அப்படியே இங்கே கூறுகிறேன்.
``உங்கள் கணவரின் மூளை மடிப்புகள் வெகுவாகச் சுருங்கி உள்ளன. ஒரு மனிதனின் வயதுக்கேற்ப மூளை சுருங்க ஆரம்பிக்கும். உங்கள் கணவரின் சராசரி ஆயுள் 80 என்று வைத்துக் கொள்வோம். இந்த 47 வயதிலேயே அவரது மூளையில் 70 வயதுக்குரிய சுருக்கம் ஏற்பட்டிருக்கிறது. அவரது தொடர்ச்சியான சிகரெட் பழக்கம்தான் அவரது மூளை இந்த அளவுக்குச் சுருங்கியிருப்பதற்குக் காரணம். அவரது ஆயுளில் அவர் இப்போதே 70 வருடத்தைக் கடந்து விட்டார். இனி புகைக்காமல் இருந்தால் ஒரு பத்தாண்டுகள் நன்றாக இருக்கலாம். இனி எக்காரணம் கொண்டும் அவர் சிகரெட்டைத் தொடாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது உங்கள் கடமை. என் எச்சரிக்கையை மீறி அவர் தொடும் ஒவ்வொரு சிகரெட்டும் அவரது ஆயுளில் ஒவ்வொரு நாளாகக் குறைக்கும். இதற்குமேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை. உங்களுக்குப் புரியும் என்று நம்புகிறேன்”
எனக்குப் புரியவே செய்தது. உடல்நலம் நன்கு தேறி அவர் மீண்டும் அலுவலகம் செல்ல ஆரம்பித்ததுமே இவ்விஷயத்தை அவரிடம் கூறினேன். `இல்லை... இனி நான் சிகரெட் பிடிக்க மாட்டேன்' என்றார். இரண்டாண்டுகள் அவரைக் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் கொள்ளாத குறையாக சிகரெட்டைத் தொடாமல் பார்த்துக் கொண்டேன்.

திடீரென ஒருநாள், விழுப்புரத்துக்குப் பணி மாறுதல் செய்யப்பட்டார். எனக்கு அவரை அங்கு அனுப்ப விருப்பமில்லை. மெடிக்கல் லீவு போடச்சொல்லி வற்புறுத்தினேன். அவர் கேட்கவில்லை. அங்கு சென்ற கொஞ்சநாளிலேயே அவர் மீண்டும் புகைக்க ஆரம்பித்திருந்தார். என் அடிவயிற்றில் பயம் கத்தியாக இறங்கியது. என்னைச்சுற்றி நான் கண்ட எல்லாவற்றிலும் என் அடிவயிற்றுப் பயம் படர்ந்திருந்தது. இவர் தெருவில் நடந்து செல்லும்போது உடல் நலம் குன்றி விழாமலிருக்க வேண்டுமே என்று பதறினேன். ஒவ்வொரு நிமிடமும் நான் பயத்தில்தான் கடந்தேன்.
அன்று திங்கட்கிழமை. காலையில் வேலைகள் எல்லாம் முடித்து அலுவலகம் சென்றுவிட்டு மாலை ஆறு மணிக்கு வீடு திரும்பினேன். என் பெண்கள் உள்ளே இருக்க, நான் ஹால் கதவுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு பூனை மாதிரி கத்தினேன். பெரியவள் போனில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தாள். நான் மீண்டும் பூனை மாதிரி கத்த அவள், `அம்மா இங்க வாயேன்' என்றாள். குரல் உடைந்திருந்தது. `என்னடி...' என்றபடி உள்ளே சென்றேன். அவள் கண்ணீர்மல்க என்னை அணைத்துக்கொண்டு, `அப்பா இஸ் நோ மோர் மா' என்றாள். என் அடிவயிறு கழன்றது. நான் அப்படியே சுருண்டு உட்கார்ந்தேன். மீண்டும் அவர் புகைக்க ஆரம்பித்திருக்கிறார் என்று தெரிந்ததுமே, `இனி என்னால் ஆவதொன்றுமில்லை' என நான் கடவுளைச் சரணடைந்து விட்டேன். அது இத்தனை சீக்கிரம் நிகழும் எனச் சத்தியமாக நான் எதிர்பார்க்கவில்லை. அவரது உதட்டில் அமர்ந்த ஒரு துளி நெருப்பு அவரை முழுவதும் எரித்துவிட்டுதான் ஓய்ந்தது.
என் கணவர் மட்டுமல்ல... என் தம்பியையும் இந்தப் புகைப்பழக்கம் காவு வாங்கியது. என் கணவரின் மரணத்தைப் பற்றி நன்கு தெரிந்திருந்தும்கூட அவன் தன் புகைப் பழக்கத்தை நிறுத்தாதது துரதிருஷ்டம். நான் எவ்வளவோ கெஞ்சியும் கேட்கவில்லை. தன் 56 வயதில் அவனும் மரணத்தைத் தழுவி, என் 85 வயது அம்மாவுக்குத் தாளமுடியாத புத்திர சோகத்தைக் கொடுத்தான்.

எங்கள் குடும்பத்துக்கு நெருங்கிய நண்பர் எழுத்தாளர் பாலகுமாரன். எண்பதுகளின் இறுதியில்தான் பாலகுமாரன் எனக்கு நண்பரானார். எழுத்தாளர் நட்பு என்பது போய் குடும்ப நட்பாக இறுகியது அது. என் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு அவர் குடும்பமும், அவர் வீட்டு விசேஷங்களுக்கு நாங்களும் செல்வது வழக்கம். அவருக்கும் புகைப்பிடிக்கும் பழக்கம் உண்டு. நான் சிகரெட் பிடிப்பவர்களைக் கண்டால் முகம் சுளிப்பவள். என் வீட்டுக்கு முதன்முதலில் அவர் வந்தபோது என்னிடம் அவர் முதலில் கேட்டது, 'ஆஷ் ட்ரே இருக்கா?' என்றுதான். நான், `இல்லை' என்றேன். `சரி... ஏதாவது கிண்ணம் கொண்டு வா' என்றார். நான் மிகவும் தர்ம சங்கடமாகவும், வீட்டுக்கு வந்தவரை அவமதிக்கக் கூடாது என்பதற்காகவும், ஒரு சிறிய கிண்ணம் கொண்டு வைத்தேன். என்னோடு பேசிக் கொண்டிருந்த அரைமணி நேரத்தில் சங்கிலித் தொடராக சிகரெட்டுகளை எடுத்து ஒன்றிலிருந்து ஒன்று பற்ற வைத்துக்கொண்டேயிருந்தார். ஒரு பாக்கெட் தீர்ந்திருக்கும். என் வீடு சிறியது. ஒற்றை அறைதான். எனக்கு அந்தப்புகை மிகவும் அவஸ்தையாக இருந்தது. அவர் என்ன பேசினார் என்பதில் சத்தியமாக என் கவனம் செல்லவில்லை. வாசலுக்கு வந்து வழியனுப்பும்போது `இவ்ளோ சிகரெட் பிடிக்கறேளே... உடம்புக்கு நல்லதில்லையே பாலா' என்றேன்.
`சுப்ரமணியம் எவ்ளோ பிடிப்பார்... ஒரு நாளைக்கு ரெண்டா மூணா' என்றார். என்னை மடக்கி விட்டதாக நினைத்தாரோ என்னவோ... அன்று முழுக்க நான் மிகவும் வருத்தத்தில் இருந்தேன். என் கணவர் புகைக்கும் விஷயமே திருமணத்துக்குப் பிறகுதான் எனக்குத்தெரியும். எவ்வளவு கெஞ்சியும் என்னால் அவரது அந்தப் பழக்கத்தை நிறுத்த முடியவில்லை.
அடுத்த சில வாரங்களில் மீண்டும் வீட்டுக்கு வந்தார் பாலகுமாரன். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் குழந்தைகள் வீட்டில் இருந்தார்கள். வந்ததும் `ஆஸ் ட்ரே' என்றார். `சாரி பாலா... இங்க வரும்போது நீங்க சிகரெட் பிடிக்காம இருந்தா மகிழ்வேன்' என்றேன். என்னை ஒருமாதிரி பார்த்தார். நான் இப்படிச் சொல்வேன் என்று அவர் நினைக்கவில்லை. `அப்படின்னா மறைமுகமா என்னை இங்க வராதேனு சொல்ற அப்டிதானே...'

`இல்லை. தாராளமா வரலாம். ஆனா ஏற்கெனவே இங்க ஒருவர் இதே பழக்கத்துடன் இருக்கிறார். அவர் புகை பிடிப்பதையே நான் விரும்பவில்லை. அவரை நான் வீட்டில் புகைக்க அனுமதிப்பதில்லை. என் குழந்தைகளின் உடல் நலம் எனக்கு முக்கியம். உங்களை நான் இதற்கு அனுமதித்தால், `உன் நண்பன் நம் வீட்டில் புகைக்கலாம், நான் பிடித்தால் தப்பா' என்று என் கணவர் கேட்கக்கூடும். யார் செய்தாலும் இது தவறுதான். தயவுசெய்து இந்தப் பழக்கத்தை நீங்கள் விட்டு விடலாமே... அல்லது புகைக்காமல் இருக்க முடியாது என்றால் நீங்கள் இங்கே வரவேண்டாம் என்று சொல்வதில் எனக்குத் தயக்கம் ஒன்றுமில்லை' என்றேன்.
`சுப்ரமணியம் நிறுத்தறாரா பார்ப்போம்...' மறுபடியும் கிண்டலான ஒரு பதில். ஆனால் நான் அப்படிச் சொன்னதற்கு ஒரு நல்ல பலன் இருந்தது. அதற்குப் பிறகு அவர் என் வீட்டிற்கு வரும்போது ஒரு சிகரெட்கூடப் பிடிப்பதில்லை.
ஒருமுறை சொன்னார், `கௌரிகூட எங்கிட்ட கெஞ்சறது, அப்பா இதை விட்ருப்பான்னு. கண்டிப்பா விட்டுர்றேன்னு சொல்லியிருக்கேன். விடணும்... பார்ப்போம்' என்றார். ஆனால் விடவில்லை.
என் கணவருக்கு உடல்நலம் குன்றியதுமே டாக்டர் எங்களிடம் எச்சரித்ததை நான் பாலகுமாரனிடம் சொல்லி, `நான் இதை எதுக்கு உங்ககிட்ட சொல்றேன்னு புரிஞ்சுப்பேள்னு நினைக்கறேன்' என்றேன். அவர் எந்தப் பதிலும் சொல்லவில்லை.

மேலும் ஒரு இரண்டாண்டு ஓடியிருக்கும். ஒருநாள் அவரிடமிருந்து போன்வந்தது. `உஷா சிகரெட்டை நிறுத்திட்டேன். கௌரி என் மனசை மாத்திட்டா. இதை உன்கிட்ட சொன்னா நீயும் சந்தோஷப்படுவேன்னு சொல்றேன்' என்றார். உண்மையிலேயே மிகவும் மகிழ்ந்தேன்.
என் கணவர் செய்த தவறால் என் பெண்ணுக்கு ஒரு அன்னையாக அருகிலிருந்து திருமணம் செய்யும் வாய்ப்புகூட எனக்கு கைநழுவியது. தன் பெண் குழந்தைகளை மடியில் அமர்த்தி தாரை வார்த்துக் கொடுப்பதென்பது ஒவ்வொரு தகப்பனுக்கும் எப்பேர்ப்பட்ட பரவசமான தருணம். ஆனால் சுப்பிரமணியம் அதுபற்றி யோசிக்கவில்லை. அந்தக் கொடுப்பினை அவருக்குக் கிடைக்கவில்லை. அதனால் நானும் ஒதுங்கிநிற்கவேண்டிய நிலை. நான் செய்யாத தவறுக்கு எனக்கும் சேர்த்துக் கிடைத்த தண்டனை.
இதை எதற்கு இப்போது எழுதுகிறேன் என்றால், சிகரெட் பற்றி எல்லோருக்கும் விழிப்புணர்வு வரவேண்டும். புகைப்பழக்கத்தை பாலகுமாரன் விட்டுவிட்டாலும்கூட, அவர் ஏற்கெனவே அதிகப்படியாக புகைத்திருந்த காரணத்தால் அதன் பாதிப்பு அவரது உடல்நலத்தை எப்படியெல்லாம் சீர்குலைத்தது என்பதை அவரே விவரமாக எழுதியுள்ளார். துன்பத்தை அனுபவித்தவர்களால்தான் மற்றவர்கள் அந்தத் தவறைச் செய்யாதிருக்க சரியானபடி உபதேசிக்க முடியும்.

என் கணவரின் கடைசி நாள்களைத்தான், கண்ணாமூச்சி என்று ஒரு சிறுகதையாக எழுதியிருந்தேன். அதை இப்படித்தான் முடித்திருப்பேன்.
////தொலைபேசி நீண்ட நேரம் அடித்தது. ஓடிச்சென்று எடுத்துப் பேசினேன். அவர்தான்.
`என்னம்மா என்ன விசேஷம் அங்க'
ஆமாம் விசேஷம்தான். உங்களுக்கு நாளைக்குப் பத்து. கண்டிப்பா சாப்ட வந்துடுங்கோ'
`வந்துடறேனே. என்ன மெனு?'
`உங்களுக்கு பிடிச்ச எல்லாம் இருக்கும். உப்பில்லாம'
`சிகரெட் உண்டா?'
`உண்டு. நிகோடின் இல்லாம'////
எனவே மீண்டும் சொல்கிறேன். உங்களில் எவருக்கேனும் இந்தப் பழக்கம் இருந்தால் நிறுத்தி விடுங்கள். இது மெல்லக் கொல்லும் விஷம் என்பதை உணருங்கள்.