Published:Updated:

`நம்பிக்கையிழந்தேன்; அரசு டாக்டர்கள் காப்பாற்றினர்!'- பக்கவாதத்திலிருந்து மீண்ட பாப்பா ஆனந்தக் கண்ணீர்

சி.ய.ஆனந்தகுமார்
`நம்பிக்கையிழந்தேன்; அரசு டாக்டர்கள் காப்பாற்றினர்!'- பக்கவாதத்திலிருந்து மீண்ட பாப்பா ஆனந்தக் கண்ணீர்
`நம்பிக்கையிழந்தேன்; அரசு டாக்டர்கள் காப்பாற்றினர்!'- பக்கவாதத்திலிருந்து மீண்ட பாப்பா ஆனந்தக் கண்ணீர்

``பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நாங்கள், அரசு மருத்துவமனையால் உயிர் பிழைத்தோம்'' என்கிறார்கள் திருச்சி அரசு மருத்துவமனை நோயாளிகள்.

`நம்பிக்கையிழந்தேன்; அரசு டாக்டர்கள் காப்பாற்றினர்!'- பக்கவாதத்திலிருந்து மீண்ட பாப்பா ஆனந்தக் கண்ணீர்

திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, குணமடைந்த நோயாளிகள் சகிதமாக, கல்லூரியின் முதல்வர் சாரதா பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ``ஆறு முக்கிய நோய்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கும் வகையில், தமிழகத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், தாய்த் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்தின் மூலம் மாரடைப்பு, பக்கவாதம், பாம்புக்கடி, விஷம் குடித்தால், தீக்காயம், குழந்தைகளுக்கான நோய்கள் மற்றும் விபத்து உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளான நோயாளிகளுக்குச் சிறப்பு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக சிகிச்சைப் பிரிவில் நோயாளிகள் உருவாக்கப்பட்டு, சிகிச்சை வழங்கப்படுகிறது.

இந்த நோயாளிகளுக்கு நான்கு முதல் ஐந்து மணி நேரத்திற்குள் உரிய சிகிச்சை வழங்கப்பட்டால், அவர்களை முழுமையாக நோயிலிருந்து காப்பாற்ற முடியும். திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு மாதங்களாகப் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை வழங்கி முழுமையாக நோயாளிகளைக் காப்பாற்றி உள்ளோம். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அந்த நோயாளிகள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி உள்ளார்கள். இந்த நோய்க்குச் செலுத்தப்படும் சுமார் 38 ஆயிரம் மதிப்பிலான ஊசியை ஸ்கிரிப்ட் எனும் திட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் என்பது பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, முதல் நான்கரை மணி நேரத்திற்குள் துரிதமாகச் செயல்பட்டு ஓர் ஊசி செலுத்தப்பட்டால், நோயாளி பூரண குணமடைய முடியும். முன்பெல்லாம் பக்கத்தைக் கண்டுபிடிக்க 24 மணி நேரமாகும். அதன் பிறகு நோயாளி மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறுவதும், அவரை இயல்பான நிலைக்குக் கொண்டுவருவது என்பது மிகவும் கடினமான விஷயமாக இருந்தது. ஆனால் அந்த நிலை தற்போது மாறியுள்ளது.

`நம்பிக்கையிழந்தேன்; அரசு டாக்டர்கள் காப்பாற்றினர்!'- பக்கவாதத்திலிருந்து மீண்ட பாப்பா ஆனந்தக் கண்ணீர்

குறிப்பாகப் பக்கவாத நோய் வந்தால், வாய் கோணல், நடை தடுமாற்றம், முகத்தில் மாற்றம், தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் இருக்கும். அந்த அறிகுறிகளை வைத்து பக்கவாதம் குறித்த பாதிப்பை உடனடியாக அறியலாம். ரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கும் பக்கவாத நோய் அறிகுறி உடனடியாகத் தெரிந்துகொள்ள முடியும். மேலும் புகைப் பழக்கம், மதுப் பழக்கம் உள்ளவர்களுக்கும், கொழுப்பு அதிகம் உள்ளவர்களுக்கும் பக்கவாத நோய் அதிகம் வர வாய்ப்பு உள்ளது. பெண்களைப் பொறுத்தவரை உடல் பருமன், கொழுப்பு, சர்க்கரை போன்ற நோய்கள் காரணங்களாலும் இந்த நோய் பாதிப்பு ஏற்படும். இதில் ரத்த அழுத்தத்திற்கான மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் நோயாளிகளுக்கு இரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிடி ஸ்கேன் மூலம் ரத்தக் கசிவு இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே பக்கவாதத்தை தடுப்பதற்கான ஊசியைச் செலுத்த முடியும். ரத்த ஓட்டம் அடைப்பு ஏற்பட்டால் மட்டுமே இந்த சிகிச்சையை வழங்க முடியும். முழுக்க முழுக்க பாதிப்பு ஏற்பட்ட முதல் நான்கு மணி நேரத்திற்குள் இந்த சிகிச்சையை முடித்துவிட வேண்டும். அவ்வாறு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டால் பக்கவாத நோயிலிருந்து முற்றிலுமாக குணமடையலாம்” என்றார்.

இறுதியாகப் பாதிப்பிலிருந்து மீண்ட புதுக்கோட்டை கீரனூரைச் சேர்ந்த பாப்பா, ``கடந்த சில வாரங்களுக்கு முன்பு, திடீரென கை தூக்க முடியவில்லை. தனியார் ஆஸ்பத்திரிக்குப் போக வசதியில்லை. அதனால் திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவந்து சேர்த்தார்கள். இங்கு வந்தபிறகுதான் எனக்கு வந்தது பக்கவாதம் எனத் தெரிந்தது. இது தெரிந்த சொந்தக்காரர்கள் எல்லாம், இனி நான் சரியாக மாட்டேன் என நினைத்தார்கள். அதனால் நானும் நம்பிக்கையிழந்தேன். ஆனால் மருத்துவர்கள் என்னைக் காப்பாற்றினார்கள்” என்றார்.

பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சையும், அதிலிருந்து மீண்டவர்கள் கூறும் வார்த்தைகளும் பல ஏழைக் குடும்பங்களின் கண்ணீரைத் துடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Vikatan