மருத்துவம் சார்ந்த படிப்புக்கு இந்தியாவில் எப்போதுமே கிராக்கிதான். வேலைவாய்ப்பு, அதிக சம்பளம் போன்ற பல விஷயங்கள் இருந்தாலும் அவற்றையும் தாண்டி மருத்துவம் இங்கு மதிப்பான, மரியாதையான ஒரு பணியாகவே பார்க்கப்படுகிறது. `என் பொண்ணு டாக்டருக்குப் படிக்கிறா...’, `என் பையன் வெளிநாட்டுல மெடிக்கல் படிக்கிறான்’ என்று பெருமைப் பொங்கச் சொல்லும் பல பெற்றோர்களைப் பார்த்திருப்போம். இவை எல்லாவற்றுக்கும் காரணம், நம் நாட்டில் அந்தப் படிப்புக்கு இருக்கும் மரியாதைதான்.
இதனாலேயே, தங்கள் பிள்ளைகளை எப்படியாவது மருத்துவர் ஆக்க வேண்டும் எனப் பல பெற்றோர்கள் தங்களின் வாழ்நாள் சம்பாத்தியத்தைக் கொட்டுவதோடு, கடனாளியாகவும் துணிகிறார்கள். அந்தப் பெற்றோர்களுக்குத் தங்களின் பிள்ளைகளை மருத்துவராகப் பார்ப்பதில் அவ்வளவு பெருமை. இதனால்தான் இங்கு மருத்துவம் படிக்க முடியாத மாணவர்கள், வெளிநாடுகளிலாவது மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்குமா எனத் தேடி, கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

வெளிநாட்டில் மருத்துவம் படிக்கலாமா... அதிலிருக்கும் சிக்கல்கள் என்னென்ன என்பது தொடர்பான சந்தேகங்கள், மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தொடர்ச்சியாக இருக்கத்தான் செய்கின்றன. இந்தியாவில் அரசுக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அதிக சிக்கல் இல்லை. ஆனால், தனியார் கல்லூரிகளில் மருத்துவம் படிப்பது என்பது, சாமானியர்களுக்கு எட்டாக்கனியாகத்தான் இருக்கிறது. இங்கு மருத்துவம் படிக்க இடம் கிடைக்காதது, பொருளாதாரச் சிக்கல்கள் உள்ளிட்ட பல காரணங்களால் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க மாணவர்கள் செல்கிறார்கள்.

வெளிநாடுகளில் படிக்கச் செல்லும் இந்திய மாணவர்கள், மொழி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள். அங்கு மருத்துவம் படித்து முடித்தாலும் இந்தியாவில் மருத்துவராகப் பணியாற்ற, தேர்வு ஒன்றையும் எழுத வேண்டும். இது தொடர்பாக, ரஷ்யாவில் மருத்துவம் படித்து, தற்போது இந்தியாவில் மருத்துவராகப் பணியாற்றிக்கொண்டிருக்கும் மருத்துவர் ராஜேஷ் கண்ணாவிடம் பேசினோம்.

``நான் ரஷ்யாவில் மருத்துவம் படித்தேன். இங்கு மருத்துவப் படிப்பில் சேர முடியாத பல மாணவர்கள் வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பில் சேருகிறார்கள். பல வெளிநாடுகளில் இந்தியாவில் இருப்பதுபோல மருத்துவம் ஒரு பெரிய படிப்பாக இல்லை. மாணவர்கள் விருப்பப்பட்டால் மட்டுமே மருத்துவம் படிப்பார்கள். இதன் காரணமாக அங்கு பல கல்லூரிகளில் மருத்துவ இடங்கள்

காலியாகவே இருக்கும். அவற்றை வெளிநாட்டு மாணவர்களுக்காக அவர்கள் ஒதுக்குகிறார்கள். இதனால், இந்தியாவில் இருக்கும் பல மாணவர்கள் இதுபோன்ற வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
வெளிநாட்டில் படிக்கிறபோது மொழி ஒரு சிக்கல்தான். ஆனால், அது பெரிய சிக்கல் அல்ல. காரணம், அந்த நாட்டில் வழக்கத்தில் இருக்கும் மொழிகளை நமக்குக் கற்றுக்கொடுக்கிறார்கள். அதன்மூலம் நம்மால் உரையாட முடியும். அதனால், மொழிப் பிரச்னையை பெரிய பிரச்னையாக என்னால் சொல்ல முடியாது. முக்கிய பாடப் புத்தகங்கள், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் கிடைக்கின்றன. செயல்முறை வாய்ப்பு குறைவாக இருக்கும். ஆனால், வெறும் படிப்பாக இல்லாமல் அங்கு ஆய்வாகச் சொல்லித் தருவார்கள். இதுதான் அங்கு நல்ல விஷயம். அங்கு மருத்துவம் முடித்த பிறகு, இந்தியாவில் மருத்துவராகப் பணியாற்ற, FMGE என்னும் தேர்வை எதிர்கொள்ள வேண்டும்.
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இந்தத் தேர்வு மிகக் கடினமான ஒன்று. இதில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும். ஆனால், ஆண்டுக்கு இரண்டு முறை இந்தத் தேர்வு நடத்தப்படுவதால், மாணவர்கள் தொடர்ந்து முயன்றால் தேர்வில் வெற்றிபெறலாம். தவிர, இந்த வருடம் முதல் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கவும் நீட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளிலும் பணியாற்ற இதுபோன்ற தேர்வுகள் இருக்கின்றன” என்றார்.
வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவர்கள், சரியான கல்லூரியைத் தேர்வுசெய்வது முக்கியம். கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் தொடர்பான தகவல்கள், நமது நாட்டில் இருக்கும் குறிப்பிட்ட தூதரகத்தில் கிடைக்கும். இதனால், தவறான கல்லூரிகளைத் தேர்தெடுத்து உங்கள் பணத்தையும் நேரத்தையும் வீணாக்கிக்கொள்ள வேண்டாம் என்கிறார்கள் கல்வி ஆலோசகர்கள்.