Published:Updated:

டீன்

டீன்

டீன்

டீன்

Published:Updated:

நட்பு வட்டம்.. இதுதான் டீன்-ஏஜ் பிள்ளைகளின் பட்டாம்-பூச்சி உலகம். தங்களுக்கான சந்தோஷங்கள், கொண்டாட்டங்களை மட்டுமல்ல.. தங்களின் பிரச்னை களையும்கூட அவர்கள் அள்ளிச் செல்வது தங்களின் தோழமைக் கூட்டத்திடம்தான்.

டீன்

ஆனால், அந்த நட்பு வட்டம் அவர்களை செதுக்கி செம்மையாக்கும் உளியா.. உள்ளிழுத்து உருக்குலைக்கும் புதைகுழியா.. என்பதுதான் பெற்றோர்களின் முன்னே இருக்கும் கேள்வி. அதை மனநல ஆலோசகர் சரஸ்வதி பாஸ்கர் முன் வைத்தோம். அவர் சந்தித்த சில சம்பவங்களுடன் சீரான விளக்கம் தந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டீன்

''ஆரம்பத்தில் குழந்தைகளின் உலகத்தில் பெற்றவர்களைத் தவிர்த்து வேறு எவரும் அத்தனை எளிதில் நுழைய முடியாது. ஆனால் வளர வளர, தங்களுக்கென ஒரு நட்பை அவர்கள் தேட ஆரம்பிப்பார்கள். அப்போது, ஒரு எல்லைக்கு அப்பால் நிற்கும் பெற்றோர்களை விடவும், சம வயதில் தங்களுடன் பழகும் தோழன், தோழிகளுடன்தான் அவர்கள் நெருங்க ஆரம்பிக்கிறார்கள். இதே மனநிலையில் உள்ள பிள்ளைகள் அனைவருமாகச் சேர்ந்து தங்களுக் கான ஒரு குழுவாக, நட்பு வட்டமாக உருவாகிறார்கள்.

அப்படி சேரும்போது, அங்கே தங்களுக்கான இயல்புகளைக் காப்பாற்றிக் கொண்டு தனித்து நிற்பதை விடவும், அங்கிருக்கும் பெரும்பான்மையுடன் கலக்கவே விரும்புகின்றனர். இதைத்தான் 'பியர் குரூப் மென்டாலிட்டி' (Peer Group Mentality) என்போம்'' என்று விளக்கியவர், அதனால் ஏற்படும் சாதக, பாதகங்களையும் அடுக்கினார்.

''இந்தக் குழு கலாசாரத்தால் தன் நண்பர்கள் செய்கிற காரியம் சரியா.. தவறா.. என்று புரிந்து கொள்கிற பக்குவம் அவர்களுக்கு இருப்பதில்லை. மாறாக, தானும் அதையே செய்ய வேண்டும், அவர்கள் சொல்கிறபடி நடக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் பரவுகிறது. இதனால் சில நல்ல விஷயங்களும் நடக்கின்றன.. அதற்கு எதிர்மறையான விஷயங்களும் நடக்கின்றன..'' என்றவர், அதற்கான உதாரணங்களாக சில சம்பவங்களைச் சொன்னார்..

''எட்டாவது படிக்கும் மாணவன் கார்த்திக்கை அவன் பெற்றோர் என்னிடம் அழைத்து வந்தபோது, அவனோடு பேசிய சில நொடிகளிலேயே அவனுள் இருந்த அறிவும், தெளிவும் புரிந்தது எனக்கு. ஆனால், ''ஒழுங்கா படிக்கற பையன், இப்பல்லாம் எல்லாப் பாடத்துலயும் ஃபெயில் ஆகறான். எப்பப் பார்த்தாலும் டி.வி பார்த்துட்டு, ஃப்ரெண்ட்ஸோட சுத்திட்டு.. அலட்சியமா இருக்கான்..'' என்று அவன் பெற்றோர் சொன்ன குற்றச்சாட்டுகளோடு அவனிடம் பேசிப் பார்த்தபோதுதான் விஷயம் புரிந்தது.

கார்த்திக்கின் நட்பு வட்டம் மிகப் பெரியது. அதில் அவன் மட்டும்தான் படிக்கிற பையன். மற்றவர்கள் எல்லோருமே மிகவும் சுமாராகப் படிக்கிற, படிப்பைப் பற்றிக் கவலைப்படாத பையன்கள். அவர்களின் வட்டத்தில் ஐக்கியமான கார்த்திக், ஒரு கட்டத்தில், 'இவங்க எல்லாரும் படிக்காம இவ்வளவு சந்தோஷமா இருக்கும்போது, நாம மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டுப் படிக்கணும்..' என்று விபரீதமாக யோசித்ததன் விளைவுதான் ரேங்க் கார்டில் எல்லாம் ரெட் இங்க்! பின் அவனுக்கு கவுங்சிலிங் கொடுத்து அனுப்பினேன்'' என்றவர், இந்த குழு கலாசாரத்தால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் சொன்னார்.

''இதுவே, தன்னை விட நன்றாகப் படிக்கிற ஒழுக்கமான பிள்ளைகளிடம் கார்த்திக் நட்பு வைத்திருந்தால், அதுவே அவனை இன்னும் உயர்த்தியிருக்கும். குரூப் ஸ்டடி, நட்புக் குழுவில் இருக்கும் ஆரோக்கியமான போட்டி.. இதெல்லாமே அவனை பட்டை தீட்டியிருக்கும். படிப்பிலும் பழகுவதிலும் சுமாரான மாணவர்களாக இருந்து, பின்னர் நட்பு வட்டத்தாலேயே சுடர் விட்டுப் பிரகாசித்த எத்தனையோ குழந்தைகளை நான் பார்த்திருக்கிறேன்..'' என்றவரிடம், ''இந்தக் குழு கலாசாரத்தை பெற்றோர்கள் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்? இதில் அவர்களின் அணுகுமுறை என்னவாக இருக்க வேண்டும்?'' என்ற கேள்வியையும் முன்வைத்தோம்.

''பெற்றோர் மட்டுமே குழந்தைகளுக்கு நண்பர்களாக இருந்துவிட முடியாது. அவர்களுக்கான நட்பு வட்டத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அப்படி ஏற்றுக் கொள்ளும்போது, அந்த வட்டம் ஆரோக்கியமானதுதானா என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.

அதற்காக, உங்கள் பிள்ளைகள் குரூப் ஸ்டடிக்காக நண்பர்கள் வீட்டுக்குச் சென்றால், எடுத்த எடுப்பிலேயே 'யார் வீட்டுக்குப் போற.. அது எந்த ஏரியா.. யார் யார் வருவா..' என்றெல்லாம் கேள்விகளாகக் கேட்டுத் துளைக்காதீர்கள். 'அருண் வீட்ல படிக்கப் போறீங்களா? அங்க பெரியவங்க யாராவது இருப்பாங்களா? இல்லாட்டி உங்க எல்லாருக்கும் நானே ஸ்நாக்ஸ் பண்ணித் தந்துடட்டுமா?' என்று கேட்டு, அவர்கள் எந்த சூழ்நிலையில் படிக்கப் போகிறார்கள் என்பதை சாமர்த்தியமாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

அதாவது, அவர்களுடைய நட்பு வட்டத்தைப் பற்றிய அக்கறைதான் உங்களுக்கு உள்ளதே தவிர, சந்தேகம் இல்லை என்பதை அவர்களுக்குப் பக்குவமாகப் புரியவையுங்கள்'' என்றவர் கடைசியாக சொன்னது இதுதான்.

'' 'டீன்-ஏஜ்' ஆரம்பிக்கிற அந்தப் பதின்மூன்று வயது என்பது, பின்விளைவுகளைப் பற்றிய பயமின்றி எதையும் யோசிக்காமல் செய்து பார்க்கிற பருவம். அந்த நேரத்தில் அவர்களுக்கு நல்ல நண்பர்கள் கிடைத்தால், அவர்களின் வாழ்க்கை செழுமைப்படும். சேர்க்கை சரி இல்லாமல் போனால், வாழ்க்கையும் சிக்கலாகிவிடும்!''

''படிப்பதற்கு உகந்த நேரம் எது?''

டீன்

''பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி நான். படிப்பில் நிறைய ஆர்வம். எப்போது பார்த்தாலும் புத்தகமும் கையுமாகவே இருக்கிறேன்.

என்னுடைய பிரச்னை இதுதான்.. என்னால் இரவுதான் கண் விழித்துப் படிக்க முடிகிறது. ஆனால், 'காலையில் எழுந்து படி.. அப்போதுதான் படிப்பது மனதில் நன்றாகப் பதியும்' என்றே எல்லோரும் சொல்கிறார்கள்.

நான் என்ன செய்யட்டும்? எனக்கு தெளிவான பதில் தாருங்களேன்..''

என்.ராஜ்மோகன், மனநல ஆலோசகர், சென்னை:

''அதிகாலையில் எழுந்து படிப்பதுதான் நல்லது என்று நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து வழிவழியாகச் சொல்லி வருகிறார்கள். அதற்குக் காரணம் அதிகாலை நேரம் நிசப்தமாக இருக்கும் என்பதுதான்.

ஆனால், இன்றைய வாழ்க்கை முறையில் மாணவர்கள் மட்டுமல்ல..பெரியவர்களும் கூட அதிகாலையில் எழ முடியாமல் கஷ்டப்படு கிறார்கள்தான்.

இரவு படுக்கப் போவ தற்கு மிகவும் தாமதமாவது தான் இதற்கு முக்கியமான காரணம்.

இதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டிய தில்லை. ஒவ்வொருவரின் மனதுக்கும் 'பீக் ஹவர்' என்று ஒரு நேரம் உண்டு. அந்த நேரத்தில் அவர்கள் உற்சாகமாகவும் அதிக உள்வாங்கும் சக்தியுடனும் இருப்பார்கள். இந்த 'பீக் ஹவர் நேரம்' ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.

நீங்கள் இரவு படிக்க விரும்புவதாகச் சொல்வதால், உங்களின் 'பீக் ஹவர்' அந்த நேரமாக இருக்கலாம். ஆக, எந்த நேரம் படிக்கிறோம் என்பது முக்கியமில்லை.

எப்போது படித்தால், படித்ததைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமோ, அந்த நேரம் படிப்பதுதான் முக்கியம்.''
 
 

கல்மிஷம் இல்லாத பருவம் இது!

டீன் - ஏஜ் பிள்ளைகளை சமாளிப்பது எத்தனை சிரமமானது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். எனக்கு ரொம்பவே நன்றாகத் தெரியும். காரணம், என் பிள்ளைகள் இருவருமே டீன்-ஏஜைத் தாண்டியவர்கள்.

ஐந்து வருடங்களுக்கு முன் என் மகள் பத்தாவதும் மகன் பன்னிரண்டாவதும் படித்துக் கொண்டிருந்த சமயம் அது! அப்போது நான் சரியான பதில் சொல்ல முடியாது போன ஒரு கேள்விக்கு என் மகன் மிக அழகாக பதில் சொன்னான். நடந்தது இதுதான்!

என் மகளுடைய வகுப்பில் நடந்த பள்ளி இன்ஸ்பெக்ஷனுக்காக எல்லோரையும் முப்பரிமாண வடிவத்தில் 'அமீபாவின் மாதிரி' செய்யச் சொல்லியிருந்தார்கள்.

என் பெண்ணும் ஆர்வமாகி, தெர்மகோல் ஷீட்டில் அழகாக அவுட்லைன் வரைந்து, உள்ளே இருக்கும் செல் மற்றும் நியூக்கிளியர் போன்ற பாகங்களை ரவை மற்றும் மிளகு போன்ற அஞ்சரை பெட்டி பொருட்களாலேயே வடிவமைத்து, முழு உழைப்பில் அதை உருவாக்கி உற்சாகமாக பள்ளிக்குக் கிளம்பினாள்.

மாலையில் வீடு திரும்பியவள் அழாத குறையாக முகம் வாடி அமர்ந்திருக்க, காரணம் கேட்டோம் நானும் அவள் அண்ணனும்.

''எங்க கிளாஸ் அம்மு இருக்காளே.. அமீபா சார்ட்டை அப்படியே கடையில வாங்கி, அதை தெர்மகோல் ஷீட்ல ஒட்டிக் கொடுத்துட்டா. அவளுக்கும் எட்டு மார்க்தான். இவ்வளவு மெனக்கெட்டு பண்ணின எனக்கும் எட்டு மார்க்தான்..' என்று அழுகையோடு சொல்லி முடித்தாள்.

''சரி விடு.. அவ உன்னை மாதிரி சுறுசுறுப்பு இல்ல.. நீதான் குட் கேர்ள்'' என்றும், ''உங்க மிஸ் ஏதோ அவசரத்துல கவனிக்காம விட்டிருப்பாங்க..'' என்றும் ஏதேதோ சமாதானம் சொல்லிப் பார்த்தேன் நான். ஆனால் அவளுக்கு மனது ஆறவேயில்லை.

அப்போது அவள் அருகில் சென்று உட்கார்ந்த என் மகன், ''நீ கவலைப்படாதடா.. இந்த இன்ஸ்பெக்ஷன்ல வேணும்னா நீங்க ரெண்டு பேரும் ஒரே மார்க் எடுத்திருக்கலாம். ஆனா, பப்ளிக் எக்ஸாம்ல நீதான் அவளை விட அதிக மார்க் எடுப்ப. ஏன்னா, கடையில ரெடிமேடா சார்ட் வாங்கி ஒட்டின அவளை விட, ஒவ்வொரு பாகத்தையும் கைப்பட உக்காந்து வரைஞ்ச உனக்கு அந்தப் படம் இப்போ நல்லா மனப்பாடம் ஆகியிருக்கும்ல?!' என்று சொல்ல, அதில்தான் சமாதானமானாள் அவள்.

என் பிள்ளைகளிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட பல பாடங்களில் இதுவும் ஒன்று. அவர்களின் எந்தப் பிரச்னைக்கும் லாஜிக்கான, மிகச் சரியான பதிலைச் சொன்னால் மட்டுமே அவர்கள் சமாதானம் ஆகிறார்கள். பல சமயங்களிலும் அப்படி ஒரு பதிலைச் சொல்கிற அளவுக்கு நாம் கூர்மையாக இருப்பதில்லை.. நாம் சொல்கிற நொண்டிச் சாக்குகள், சால்ஜாப்புகளெல்லாம் அவர்களுக்குப் பிடிப்பதில்லை.

கல்மிஷம் இல்லாத அந்தப் பருவத்தினரிடம் நாமும் கல்மிஷம் இல்லாமலே பேசுவோம். நான் சொல்வது சரிதானே!

- உஷா ராமகிருஷ்ணன், சென்னை

 
- ம.பிரியதர்ஷினி
(புகைப்படத்தில் இருப்பவர்கள் மாடல்களே!)

 
 
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism