Published:Updated:

இதயம் காக்கும் 'எந்திரன்'!

இதயம் காக்கும் 'எந்திரன்'!

இதயம் காக்கும் 'எந்திரன்'!

இதயம் காக்கும் 'எந்திரன்'!

Published:Updated:
இதயம் காக்கும் 'எந்திரன்'!

பிரசவத்துக்குத் தவித்தாள் அந்தப் பெண். தாயையும் அவர் வயிறு தாங்கி இருக்கும் சிசுவையும் காப்பாற்றப் போராடி வந்தார்கள் டாக்டர்கள். குழந்தையின் கழுத்துப் பகுதியில் தொப்புள்கொடி சுற்றி இருப்பதால் பிரசவமே சிரமம் என்கிற நிலையில், டாக்டர்கள் கையைப் பிசைந்தபடி நிற்பார்கள். அப்போது, அங்கே இருக்கும் ரோபோட் ஒன்று சர்வ சாதாரணமாகச் சில அசைப்புகளின் மூலமாகவே எவ்வித சிரமமும் இல்லாமல் பிரசவம் பார்த்து, தாயையும் சேயையும் காப்பாற்றும். ரஜினி நடித்த 'எந்திரன்’ படத்தில் இப்படி ஒரு காட்சி நம்மை ஆச்சர்யப்படுத்தும். ஆனால், அதைவிடப் பன்மடங்கு நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது இதய அறுவைச் சிகிச்சைகளை எளிதாகச் செய்யும் ரோபோட்!

 உடனே, சினிமாவில் பார்ப்பதுபோல மனித உருவிலான முழு ரோபோட்டை உங்களின் மனக்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதயம் காக்கும் 'எந்திரன்'!

கண்ணில் ஓட்டிப் பார்க்காதீர்கள். அசாத்திய அறுவை சிகிச்சைகளைச் செய்ய கைகள் மட்டுமே போதும் என்பதால், அவற்றை மட்டுமே ரோபோட் வடிவில் உருவாக்கி இருக்கிறார்கள்.

மருத்துவத்தின் மற்ற துறைகளில் ரோபோட்டுகள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், மிகச் சிக்கலான இதய அறுவைச் சிகிச்சையில் ரோபோட்டுகளின் பயன்பாடு 1998-க்குப் பிறகே தொடங்கியது. இதயம் உள்ளிட்ட சிக்கலான பாகங்களில் அறுவை சிகிச்சை செய்வதற்காக, டாவின்சி சர்ஜிக்கல் முறை கண்டறியப்பட்டது. இதன்படி 2001-ம் ஆண்டில் அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்தபடியே பிரான்ஸ் நாட்டில் இருந்த ஒரு பெண்மணிக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இது மருத்துவத் துறையின் மகத்தான புரட்சி!

இப்போது இந்த டாவின்சி அறுவை சிகிச்சை முறை நம் இந்தியாவுக்கும் வந்துவிட்டது. டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட இரண்டு இடங்களிலும், புனேயிலும் டாவின்சி ரோபோட் இருக்கிறது. ஆனால், அங்குகூட டாவின்சி ரோபோட்டைப் பயன்படுத்தி செய்யாத, ஏழு வகையான இதய அறுவை சிகிச்சைகளை சென்னையில் உள்ள செட்டிநாடு ஹெல்த் சிட்டியில் நடத்திக் காட்டுகிறார்கள்.

செட்டிநாடு ஹெல்த் சிட்டி இன்ஸ்டிட்யூட் ஆஃப் கார்டியோவாஸ்குலர் நோய்கள் பிரிவு இயக்குநர் டாக்டர் ஆர்.ரவிக்குமாரிடம் பேசினோம். ''ரோபோட்டிக் அறுவை சிகிச்சை என்பது ஒரு மைக்ரோ அறுவை சிகிச்சை. இதில், ரோபோட்டின் கைகளின் உதவியால் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

இதயம் காக்கும் 'எந்திரன்'!

இதன் மூலம் மிகத் துல்லியமாக அறுவை சிகிச்சை செய்ய முடியும். கரோனரி ஆர்டரி பைபாஸ் கிராஃப்ட், இதயத்தில் ஓட்டை, ஆட்ரியல் செப்டல் குறைபாடு சரிபார்ப்பு உள்பட ஏழு வகையான இதய நோய்களுக்கு இந்த ரோபோட் கைகளைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கிறோம். இந்த ரோபோட் கைகள் மூலம் அறுவை சிகிச்சை செய்ய, டாக்டர் பக்கத்தில் இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. பக்கத்து அறையில் அல்லது வெகு தொலைவில் இருந்துகூட அறுவை சிகிச்சை செய்ய முடியும். இந்தக் கருவியில் இரண்டு கைகளும், ஒரு கேமராவும் இருக்கும். இந்த இயந்திரக் கைகள் மூலம் இதயத்தில் வெட்டி, ஒட்டி, தைப்பது போன்ற பல்வேறு வேலைகளை மிகத் துல்லியமாகச் செய்ய முடியும்.

இதயப் பிரச்னைகளை நாம் ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விடுவதால் இதயத்தில் இருந்து நுரையீரல் மற்றும் உடலின் பல பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய ரத்தம் இதயத்திலேயே தங்கிவிடுகிறது. இதனால், இதயம் வீக்கமடைந்து பெரிதாகிறது. இதே போன்று நுரையீரலில் இருந்து இதயத்துக்கு வர வேண்டிய ரத்தம் நுரையீரலிலேயே தங்கிவிடுவதால், அதிகம் மூச்சுவாங்கும்; ரத்த அழுத்தமும் அதிகரிக்கும். இதனால்,  இதய அறுவை சிகிச்சை ரொம்பவே சிக்கலாகிவிடும். இவர்களுக்கு, இந்த ரோபோட்டிக் அறுவை சிகிச்சை ஒரு வரம்! இதயம் மிகவும் சிக்கலான பகுதி என்பதால், அதிகமாக ஓப்பன் சர்ஜரி செய்து அனுபவம் வாய்ந்தவர்களால் மட்டுமே இந்த ரோபோட்டிக்

இதயம் காக்கும் 'எந்திரன்'!

அறுவை சிகிச்சையை செய்ய முடியும். பாரம்பரிய அறுவை சிகிச்சையின்படி, ஒருவருக்கு 22 செ.மீ. அளவுக்கு நெஞ்சுக்கூடு பகுதியில் தழும்புகள் ஏற்படும். மேலும் நெஞ்சுக்கூடு எலும்பில் சேதம் ஏற்படும். ஆனால், ரோபோட்டிக் அறுவை சிகிச்சையில் இந்தப் பிரச்னைகள் இல்லை. வெறும் 4 முதல் 6 செ.மீ. அளவுக்குத்தான் துளையிடப்படும். இதனால், பிற்காலத்தில் அறுவை சிகிச்சை நடந்த தழும்பு பெரிய அளவில் தெரியாது. மேலும், உடல் திசுக்கள் சேதம் அடைவதும், ரத்த இழப்பும் குறைகிறது. இதனால் நோய்த் தொற்றுகளும் குறைகிறது. இந்த அறுவை சிகிச்சையில் வலியும் மிகக் குறைவு. பாரம்பரிய அறுவை சிகிச்சையின்போது அதிக நாட்கள் மருத்துவமனையில் தங்க வேண்டி இருக்கும். மூன்று மாதங்கள் வரை வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும். ஆனால், இதில் ஒரு வாரத்திலேயே வீட்டுக்குச் சென்றுவிடலாம். ஒரு மாதத்திலேயே வழக்கமான பணியில் ஈடுபட முடியும். தழும்புகளே தெரியாத அளவுக்கு மிகத் துல்லியமாகச் செய்யப்படும் இந்த சிகிச்சைக்கு, வழக்கமான சிகிச்சைக்குத் தேவையானதைக் காட்டிலும் சில ஆயிரங்கள்தான் கூடுதலாகத் தேவைப்படும்!'' என்கிறார் ரவிக்குமார்.

ஒரு இளைஞனுக்கு நடந்த இதய அறுவை சிகிச்சையைக் கவனித்தோம். டாக்டர் தனிக் கருவி ஒன்றில் அமர்ந்திருக்க, இளைஞனின் இதயத்தை ரோபோட்டின் கைகள் படுநேர்த்தியாக ஆராய்கின்றன. டாக்டரின் இயக்குதல்படி ரோபோட்டின் கைகள் செயல்பட்டாலும், இதயப் பகுதியை மிகத் துல்லியமாக அவை கையாளும் விதம் சிலிர்க்கவைக்கிறது. தகவல் தொழில்நுட்பம் இன்னும் நவீனம் எடுக்கும் நேரத்தில், இங்கு இருந்தபடியே உலகத்தின் எந்த மூலையில் இருப்பவர்களுக்கும் இதய அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்கிற தகவல் நம்மை நம்பிக்கையோடு நிமிரவைக்கிறது!

- பா.பிரவீன்குமார், படம்: வீ.நாகமணி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism