ஸ்பெஷல் -1
சினிமா
Published:Updated:

மருத்துவர்கள்... அறிவியலும் அரசியலும்!

பாரதி தம்பி

##~##

 விநோதமான ஒரு சிக்கலில் திணறிக்கொண்டிருக்கிறது, இந்திய மருத்துவத் துறை!

'இந்தியாவில் உள்ள 362 மருத்துவக் கல்லூரிகளில் ஒவ்வோர் ஆண்டும் 45,600 பேர் எம்.பி. பி.எஸ். படிக்கின்றனர். ஆனால், முதுநிலைப் பட்டப் படிப்புக்கு (Post Graduate) 22 ஆயிரம் இடங்கள் மட்டுமே ஒதுக்கப்படுகின்றன.  இளநிலை (எம்.பி.பி.எஸ்.) படிப்பவர்களின் எண்ணிக்கைக்கும், முதுநிலை (எம்.டி., எம்.எஸ்., உள்ளிட்டவை) படிப்பவர்களின் எண்ணிக்கைக்குமான இந்த இடைவெளியைக் குறைக்க வேண்டும். இல்லையெனில், இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியாவில் தகுதி வாய்ந்த மருத்துவர்கள் இல்லாமல், வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய நேரி டும்’ என்று எச்சரிக்கிறார்கள் 'மருத்துவர் களைக் காப்போம்’ என்ற அமைப்பினர். இளம் மருத்துவர்கள் ஒன்றிணைந்து www.savethedoctor.in என்ற இணையதளத்தை உருவாக்கி, இது தொடர்பாகப் பிரசாரம் செய்துவருவதுடன், இதே பெயரில் 'ஆவணப் படம்’ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

மருத்துவர்கள்... அறிவியலும் அரசியலும்!

'மருத்துவர்களைக் காப்போம்’ அமைப்பினர், பெங்களூருவைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்குகிறார்கள். தங்கள் அமைப்பு உறுப்பினர்களின் ஒருமித்தக் குரலாக, அவர் கள் தங்கள் தரப்பைப் பகிர்ந்துகொண்டார் கள். ''எம்.பி.பி.எஸ். படிப்பவர்களில் 80 முதல் 90 சதவிகிதம் பேர் அந்தந்த வருடத்திலேயே தேர்வாகிவிடுகின்றனர். இதன்படி ஒவ்வோர் ஆண்டும் 40 ஆயிரம் மருத்துவர்கள் புதிதாக உருவாகின்றனர். இன்றைய சூழலில் வெறும் எம்.பி.பி.எஸ். மட்டும் படித்துவிட்டு எதுவும் செய்ய முடியாது. மகப்பேறுவியல், நரம்பியல், இதயவியல், முடநீக்கவியல் என ஏதேனும் ஒரு துறையில் ஸ்பெஷலிஸ்ட் ஆக வேண்டும். ஆகவே, தேர்வாகும் 40 ஆயிரம் பேரும் பட்ட மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வை எழுதுகின்றனர். ஆனால், இருக்கும் கல்வியிடங்களின் எண்ணிக்கையோ வெறும் 22 ஆயிரம் மட்டுமே. அதிலும் 12 ஆயிரம் கல்வியிடங்கள் மட்டுமே அவரவர் விருப்பத்துக்கு ஏற்ற பிரிவுகளில் ஒதுக் கப்படுகின்றன. இந்த 12 ஆயிரம் இடங்களுக்காக அனைவரும் முட்டிமோதுகின்றனர். இடம் கிடைக்காதவர்கள் அடுத்த ஆண்டு மறுபடியும் முயற்சிக்கிறார்கள். இப்படி ஒவ்வோர் ஆண்டும் இடம் கிடைக்காதவர்களின் எண்ணிக்கை பெரு கிப் பெருகி, கடந்த ஆண்டு 12 ஆயிரம் இடங் களுக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் மருத்துவர்கள் நுழைவுத் தேர்வு எழுதினார்கள். உலகின் முன்னேறிய நாடுகளில் இந்தச் சூழல் இல்லை. அமெரிக்காவில் 19 ஆயிரம் இளநிலைக் கல்வி இடங்களுக்கு 32 ஆயிரம் முது நிலைக் கல்வி இடங்கள் உள்ளன. ஆகவே, ஆரோக்கியமான மருத்துவம் அனைவருக்கும் கிடைக்க, இந்த நிலையை மாற்ற வேண்டும்.  

மருத்துவர்கள்... அறிவியலும் அரசியலும்!

இந்தியாவில் ஆண்டுக்கு 2.80 கோடி பிரசவங் கள் நடக்கின்றன. ஆனால், நம்மிடம் இருப்பதோ சுமார் 40 ஆயிரம் மகப்பேறு மருத்துவர்கள் மட்டுமே. அவர்களிலும் பெரும்பாலானோர் நகரங்களிலேயே உள்ளனர். பிரசவ மரணங் களைக் குறைப்பதற்காக பணத்தைக் கொட்டித் திட்டம் தீட்டும் அரசு, தகுதியுள்ள மருத்துவர் களை உருவாக்குவதில் தொடர்ந்து பாராமுகமாக இருந்துவருகிறது. அண்மையில், தங்கள் நாட் டில் தகுதி வாய்ந்த ஸ்பெஷலிஸ்ட் மருத்துவர்கள் இல்லை என்று சொல்லி, பிரேசில் அரசு, கியூபாவில் இருந்து 6 ஆயிரம் மருத்துவர்களை இறக்குமதி செய்ய முடிவு எடுத்துள்ளது. இந்தியாவிலும் இதேபோல இறக்குமதி செய்ய வேண்டிய சூழல் விரைவில் ஏற்படும்'' என்று எச்சரிக்கிறார்கள்.

இது தொடர்பாக மூத்த மருத்துவர்களின் எண்ணம் என்ன?

''பொறியியலோ, கலைப் படிப்போ, மருத்து வமோ... எதுவாக இருந்தாலும், விரும்பிய பிரிவில் உயர் கல்வி படிக்கும் வாய்ப்பு அனைவ ருக்கும் தரப்பட வேண்டும். இதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்த அம்சத்தில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவக் கல்வி இடங்களுக்கான எண்ணிக்கையை சமமாக்க வேண்டும் என்பதை நாங்களும் ஏற்கிறோம். ஆனால், அதை சில நிபந்தனைகளுக்கு உட்பட்டுச் செயல்படுத்த வேண்டும். இல்லையெனில், திரும்பிய பக்கம் எல்லாம் அனைவரும் ஸ்பெஷலிஸ்ட் மருத்துவர்களாகவே இருப்பார்கள். தலைவலி, காய்ச்சல், லேசான காயம், சின்ன சிராய்ப்பு என எதுவாக இருந்தாலும் ஸ்பெஷலிஸ்ட் மருத்துவர்களிடம்தான் சென்றாக வேண்டிய சூழல்வரும். அவர்கள், அதிகமான கட்டணம் வசூலிப்பார்கள். ஒட்டுமொத்தமாக இப்படிக் கட்டணம் அதிகரிப்பதால், மருத்துவ வசதி பெறும் மக்களின் எண்ணிக்கை குறையும். தகுதியுள்ள 'மருத்துவர்கள்’ இருப்பார்கள்; 'தகுதியுள்ள’ நோயாளிகள் இருப்பார்கள். ஆனால், மக்களிடம் அந்தக் கட்டணத்தை செலுத்தும் பொருளாதாரத் தகுதி இருக்காது. ஆகவே, இதைச் சமூக நோக்கில் பார்க்க வேண்டும்.

மருத்துவர்கள்... அறிவியலும் அரசியலும்!

'அப்படியானால், அனைவரும் மேற்படிப்பு படிக்கக் கூடாது என்கிறீர்களா?’ என்ற கேள்வி எழும். இதற்குத்தான் நாங்கள் 'ஃபேமிலி மெடிசன்’ துறையை விரிவுபடுத்த வேண்டும் என்கிறோம். 20 வருடங்களுக்கு முன்பு 'குடும்ப மருத்துவர்’ என்பவர்கள், நம் சமூகத்தின் அங்கமாக இருந்தனர். காலமாற்றத்தில் அந்தத் துறையையே நாம் அழித்துவிட்டோம். இப்போதும் எம்.பி.பி.எஸ். முடித்ததும், 'ஃபேமிலி மெடிசன்’ என்ற பட்ட மேற்படிப்பு இருக்கிறது. ஆனால், அதற்கு ஒதுக்கப்படும் இடங்களின் எண்ணிக்கை 50-ஐ விட குறைவு. மாணவர்கள் படிக்க விரும்பினாலும் இடம் இல்லை. இந்த நிலையை மேம்படுத்தி, 'ஃபேமிலி மெடிசன்’ பிரிவை மதிப்புமிக்கதாக மாற்ற வேண்டும். மாவட்டத் தலைமை மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இந்தப் படிப்புக்கான இடங்கள் உருவாக்கப்பட வேண்டும். வருடத்துக்கு 22 ஆயிரம் முதுநிலைப் படிப்பு இடங்கள் என்றால், மேலும் 22 ஆயிரம் ஃபேமிலி மெடிசன் இடங்களை உருவாக்க வேண்டும். அப்போதுதான் ஸ்பெஷலிஸ்ட் மருத்துவர்களும், குடும்ப மருத்துவர்களுமாக இந்த விகிதம் சமமாக இருக்கும். இல்லையெனில், ஏற்றத்தாழ்வான சூழல் உருவாகிவிடும்.

'குடும்ப மருத்துவம் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது’ என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். எந்த நோயாக இருந்தாலும் மூன்றுவிதமான வைத்திய அடுக்குகள் உள்ளன. முதல் அடுக்கு, நோய் வரும்முன் தடுப்பது அல்லது நோயை ஆரம்ப நிலையிலேயே தடுப்பது (Primary Care - to Prevent the Disease). இரண்டாவது அடுக்கு, நோய்க்கு வைத்தியம் அளிப்பது. (Secondary Care - To Treat Disease)  மூன்றாவது அடுக்கு, நோயினால் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்ப்பது (Tertiary Care - To Treat Complications). இதில், முதல் அடுக்குதான் மிகவும் முக்கியமானது. 80 சதவிகித மக்களுக்கு, இந்தக் காரணத்துக்காகவே மருத்துவர்கள் தேவைப்படுகின்றனர். இதற்கு, ஃபேமிலி மெடிசன் படித்த மருத்துவர்கள்தான் தேவை. 'ஏன் எம்.டி., படித்த ஒரு டாக்டர், முதல் அடுக்கின் தேவைகளுக்கு வைத்தியம் பார்ப்பதில் என்ன தப்பு?’ என்று கேட்கலாம். ஆனால், யதார்த்தத்தில் ஒரு கத்தியைக் கூர் தீட்டாமல் பட்டறையிலேயே வைத்திருக்க முடியாது. எலும்பு முறிவு நிபுணரோ, இதய மாற்று அறுவைசிகிச்சை நிபுணரோ சளி, தலைவலிக்கு மட்டுமே மருத்துவம் பார்த்துக்கொண்டிருந்தால், அவரது திறனும் அறிவும் படிப்படியாக மங்கிவிடும். ஆகவே, சிறப்பு மருத்துவர்கள் சமூகத்துக்கு எந்த அளவுக்குத் தேவையோ... அதே அளவுக்கு குடும்ப மருத்துவர்களும் தேவை. இதை சமூகக் கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ள வேண்டும்'' என்கிறார்கள் மூத்த மருத்துவர்கள்.

இன்றைய கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு, தகுதிவாய்ந்த சிறப்பு மருத்துவர்கள் ஏராளமானோர் தேவை. ஆனால், அந்த எண்ணிக்கையிலான மருத்துவர்கள் இந்தியாவில் கிடைப்பது இல்லை. இதனால் குறைந்த எண்ணிக்கையில் உள்ள சிறப்பு மருத்துவர்களுக்கு அதிக ஊதியம் தர வேண்டியிருக்கிறது. 'ஸ்பெஷலிஸ்ட் மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்’ என்ற தற்போதைய கோரிக்கையின் பின்னணியுடன் இதை இணைத்துப் புரிந்துகொள்ளும்போது, இதற்கு வேறொரு புதிய பரிமாணம் கிடைக்கிறது.

அகில இந்திய அளவில் இந்தப் பிரச்னை தீப்பிடித்தது போல பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் போதுமான எண்ணிக்கையில் இளநிலை மருத்துவர்கள் இருக்கின்றனர். குடல் இறக்கம், மூலம், மகப்பேறு அறுவைசிகிச்சை ஆகியவற்றை செய்வ தற்கு, போதுமான சிறப்பு மருத்துவர்களும் இருக்கின்றனர். ஆனால், இதய அறுவைசிகிச்சை, சிறுநீரக அறுவைசிகிச்சை, மூளை நரம்பு அறுவை சிகிச்சை போன்ற துறைகளில் ஸ்பெஷலிஸ்ட் மருத்துவர்களின் எண்ணிக்கையில் கடும் பற்றாக் குறை நிலவுகிறது. இந்த நோய்களால் பாதிக்கப் பட்ட மக்கள், மருத்துவர்களின் தேதிக்காக வலியுடன் காத்திருக்க வேண்டியிருக்கிறது.

ஒரு பக்கம் மருத்துவ அறிவியல், மறுபக்கம் மருத்துவத் துறைக்குள் புழங்கும் கார்ப்பரேட் அரசியல்... இரண்டுக்கும் இடையில் பந்தாடப்படுகிறார்கள் ஏழை நோயாளிகள்!