மருத்துவச் செய்திகள்
Published:Updated:

'கருவறையே...சரணம் !

கேன்சர் பயத்தை விரட்டும் சாந்தா

##~##

''திங்கள் முதல் வெள்ளி வரை சென்னை அடையார் கேன்சர் மருத்துவமனையில் இருந்து மொபைல் வேன் மூலம் சென்னையைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குப் போய், அங்கிருக்கும் பெண்களை, புற்றுநோய் குறித்த டெஸ்ட்டுக்கு அழைக்கிறோம். ஆனால், 50 சதவிகித பெண்கள் வர மறுத்துவிடுகிறார்கள். டெஸ்ட்டுக்குப் போனாலே, கணவர் வீட்டினரால் ஒதுக்கப்பட்டு விடுவோமோ என்கிற பயமும், கூச்சமும்தான் அவர்களை இப்படித் தயங்க வைக்கிறது.

புற்றுநோய் மிகக் கொடியதுதான் என்றாலும், ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டால் முழுமையாக குணப்படுத்திவிட முடியும். இந்த நம்பிக்கை பெண்களுக்கு ஏற்படும்போதுதான் புற்றுநோயின் ஆபத்தில் இருந்து அவர்கள் மீளமுடியும்!''

- அக்கறையும் ஆதங்கமும் ஒருசேரச் சொல்கிறார் சென்னை, அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் வி.சாந்தா.

நவீன பரிசோதனைகளும் சிகிச்சை முறைகளும் பெருகிவிட்ட இந்தக் காலத்திலும், 'புற்றுநோய் குணப்படுத்த முடியாத ஒன்று’ என்ற கருத்தே பெரும்பாலான மக்களிடையே நிலவுகிறது. இந்தியப் பெண்களைத் தாக்கும் புற்றுநோய்களில் கர்ப்பப்பைப் புற்றுநோய் முதலிடத்தில் உள்ளதாக மருத்துவ ஆய்வுகள் அபாயம் உரைக்கும் நிலையில், பெண்களுக்கான விழிப்பு உணர்வு குறித்து மேலும் விளக்குகிறார் டாக்டர் சாந்தா.

''ஆண்டுக்கு 10 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் அந்த எண்ணிக்கை அதிகரித்துகொண்டே இருக்கிறது. 1984-ம் ஆண்டு கணக்குப்படி இந்தியாவில் ஆண்டுக்கு 4 லட்சத்து 93 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். இப்போது 10 லட்சமாக உயர்ந்திருப்பதுதான் வேதனை. அதிலும், 55 சதவிகித பெண்கள் கர்ப்பப்பை, மார்பகம், வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். குறிப்பாக, நகர்ப்புறப் பெண்கள் மார்பகப் புற்றுநோயாலும், கிராமப்புறப் பெண்கள் கர்ப்பப்பைப் புற்றுநோயாலும் பெருமளவு பாதிக்கப்படுவதும் தெரிய வந்திருக்கிறது. இதுகுறித்த விழிப்பு உணர்வு கிராம மக்களிடம் முழுமையாகச் சென்றடையவில்லை என்பதே வருத்தத்துக்குரிய விஷயம். இதற்கு கல்வி அறிவு இல்லாததும் போதிய விழிப்பு உணர்வு இல்லாததும்தான் காரணம்'' என்று தன் வருத்தத்தை வெளிப்படுத்திய டாக்டர் சாந்தா,

'கருவறையே...சரணம் !

''உடலில் உள்ள செல்களின் கட்டுப்பாடற்ற, அதீத வளர்ச்சி நிலைதான் புற்றுநோய். இது கட்டியாகவோ, ஆறாத புண்ணாகவோ இருக்கலாம். பெரும்பாலும் நாம் கடைப்பிடிக்கும் வாழ்க்கை முறையும் பழக்கவழக்கங்களுமே புற்றுநோய் ஏற்படக் காரணம். இது தொற்று நோய் கிடையாது. எந்த வயதினருக்கும் வரலாம். சில வகை புற்றுநோய்கள் பரம்பரையாகவும் வரலாம். தாய், தங்கை, சித்தி, பெரியம்மா, பாட்டி போன்ற ரத்தம் சம்பந்தப்பட்ட உறவுக்குள் புற்றுநோய் இருந்தால், அவர்களின் குழந்தைகளுக்கும் புற்றுநோய் வர வாய்ப்புகள் அதிகம். ஆரம்ப நிலையில் உள்ள ஒரு புற்றுநோயாளியைப் பார்த்த மாத்திரத்தில் கண்டுபிடித்துவிட முடியாது. நோயின் ஆரம்ப நிலையில் வலி இருக்காது. நோய் முற்றிய நிலையில் ஏற்படும் சில அறிகுறிகளை வைத்தே சொல்ல முடியும். அதனால், அவ்வப்போது முறையாகப் பரிசோதனை செய்வதுதான் உகந்தது'' என்றவர், கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான அறிகுறிகளையும் அடுக்கினார்.

''இளம் வயதிலேயே திருமணம் செய்து பல முறை கருத்தரிப்பது, கருத்தடை மாத்திரைகளை அதிக அளவில் உபயோகித்தல், பல ஆண்களுடன் உறவு வைத்துக் கொள்ளுதல், பிறப்பு உறுப்புகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ளாதது இந்த காரணங்களால் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். மேலும், மாதவிடாயின்போது அதீத ரத்தப்போக்கு, மாதவிலக்குக்கு இடையில் ரத்தப்போக்கு ஏற்படுவது, மாதவிலக்கு முழுவதும் நின்றபின் வெள்ளைப்படுதல், உடலுறவின்போதோ அல்லது பின்போ ரத்தக்கசிவு ஏற்படுவது போன்றவை இந்த நோய்க்கான அறிகுறிகள்.

'கருவறையே...சரணம் !

அதற்காக அதிக ரத்தப்போக்கு இருந்தால் உடனே, 'புற்றுநோயாக இருக்குமோ?’ என்று பயப்படவேண்டாம். என்றாலும், மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்துவிட்டால், சிகிச்சை அளிப்பதும் சுலபம். செலவும் அதிகம் ஆகாது. பக்க விளைவுகளும் தடுக்கப்படும். உரிய சிகிச்சை அளித்தால், 80 முதல் 90 சதவிகித நோயாளிகளை முற்றிலும் குணப்படுத்த முடியும்!''

- உறுதியாகச் சொல்லும் சாந்தா, அதற்கான சிகிச்சை முறைகளையும் விளக்கினார்.

''ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, ஒரு முறை ட்ரீட்மென்ட் எடுத்து குணம் அடைந்திருந்தால், அடுத்த ஐந்தாண்டுகள் வரை எந்த பாதிப்பும் வராமல் இருந்தால்தான் முழுமையாக நோயில் இருந்து அவர் மீண்டிருக்கிறார் என்று நம்ப முடியும். இப்படிப்பட்டவர்களுக்கு மீண்டும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. 10 அல்லது 20 ஆண்டுகளுக்குப் பிறகுகூட சிலவகை புற்றுநோய்கள் மீண்டும் வர சிறிது வாய்ப்பு இருக்கிறது. முற்றிலும் குணமடைந்துவிட்டாலும், இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை பரிசோதனை செய்துகொள்வது அவசியம். 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண்டுக்கு ஒரு முறையாவது இது தொடர்பான பரிசோதனைகளைச் செய்துகொள்வது அவசியம்.

பொதுவாக புற்றுநோய்க்கு கதிரியக்க மற்றும் கீமோதெரபி சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. புற்றுநோயாளிகளில் 80 சதவிகித நோயாளிகளுக்கு கதிரியக்கச் சிகிச்சை தேவைப்படுகிறது. இது அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ சிகிச்சையுடன் சேர்த்தோ அல்லது நோயின் தன்மை, அது பரவியிருக்கும் நிலைகேற்பவோ அளிக்கப்படும்!'' எனச் சொல்லும் டாக்டர் சாந்தா, நிறைவாகச் சொன்னது... ஒவ்வொரு பெண்ணும் உள்ளத்தில் ஏற்கவேண்டிய மந்திரம்.

''உடல், மன தூய்மையுடன் கோயிலுக்குள் சென்று, கடவுளை தரிசிப்பது பலருக்கும் வழக்கம். அதேபோல், உடல் பலத்தைத் தந்து காலமெல்லாம் பெண்களின் வயிற்றுக்குள் காவல் தெய்வமாக இருந்து, கருவைச் சுமக்கும் கர்பப்பையையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சந்ததி உருவாக்கத்தின் சந்நிதியாக இருக்கும் கர்ப்பப்பையின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பது போலத்தான், கடவுள் இருக்கும் அறையையே 'கருவறை' என்றார்கள். எனவே, ஒவ்வொரு பெண்ணுக்கும் முதல் கடமை... தன்னுடைய கருவறையைக் காப்பதுதான்!''

- ரேவதி,
படம்: வீ.நாகமணி