Published:Updated:

மலச்சிக்கல் நீங்க சில வழிகள்

மலம் கழிக்காமல் கட்டுப்படுத்துவதால் மலச்சிக்கல் போன்ற உபாதைகள் ஏற்பட்டு, உடல் நலனும் கெடும். மலச்சிக்கல் நீங்க சில வழிகள்

மலச்சிக்கல் நீங்க சில வழிகள்
மலச்சிக்கல் நீங்க சில வழிகள்

காலையில் எழுந்ததும், கையில் செய்தித்தாளும் சுடச்சுட காபியுமாக அமர்ந்து, அன்றைய நாளைத் தொடங்கும் மக்களில் பெரும்பாலோர் சந்திக்கும் முக்கியப் பிரச்னை - மலச்சிக்கல். பரபரப்பான காலை வேளைகளில் மலம் கழிக்கப் பத்து நிமிடங்களுக்கு மேல் நேரம் எடுத்துக்கொள்ள யாரும் விரும்புவதில்லை. இதனால் முழுதாக மலம் கழிக்காமல், அவசர அவசரமாக முடித்து, குளித்துச் சாப்பிட்டு, அலுவலகம் சென்றுவிடுகின்றனர். டீ, காபி குடித்த பின்னர்,  மதிய உணவு உண்ட பின்னர் என அன்றைய நாள் முழுவதும் அவர்களுக்கு  மலம் கழிக்கும் உணர்வு இருந்து கொண்டே இருக்கும்.  இதனால் வேலையில் முழுக் கவனம் செலுத்த முடியாமல் பல தவறுகள் செய்ய நேரிடும். வேலையில் தவறுகள் செய்வது ஒருபுறம் இருக்கட்டும்... மலம் கழிக்காமல் கட்டுப்படுத்துவதால் மலச்சிக்கல் போன்ற உபாதைகள் ஏற்பட்டு, உடல் நலனும் கெடும். 
மலச்சிக்கல் நீங்க சில வழிகள்...

மாறிவிட்ட வாழ்க்கைமுறை, தவறான உணவு பழக்கம் காரணமாக மலச்சிக்கல் என்பது இன்றைக்கு பெரும்பாலானோர் சந்திக்கும் முக்கியப் பிரச்னையாக மாறிவிட்டது. சமீபத்தில் குளோபல் மார்க்கெட்டிங் ரிசர்ச் ஏஜென்சி நடத்திய ஆய்வில், இந்தியாவில் நகர்ப்புறங்களில் வாழ்பவர்களில் 14 சதவிகிதம் பேருக்கு நீண்டகால மலச்சிக்கல் பிரச்னை உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் வேலையில் முழுக் கவனம் செலுத்த முடியாமை, மூட் ஸ்விங், அசௌகரியமான நிலை என அவதிப்படுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.  

வழக்கத்துக்கு மாறாக மலம் வெளியேறாமல் இருப்பது, மலம் இறுகிப்போவது, மலம் கழிப்பதில் சிக்கல், மலம் முழுவதுமாகப் போகவில்லை என்கிற உணர்வு, மலம் கொஞ்சம்கூடப் போகாமல் ஆசனவாயை அடைத்துக்கொள்வது போன்ற நிலைமைகளை ‘மலச்சிக்கல்’ என்று அழைக்கிறோம்.

மலச்சிக்கல் ஏன்?
நார்ச்சத்து மிகுந்த உணவை தவிர்ப்பது, அதிக ப்ராசஸ் செய்யப்பட்ட மைதா போன்ற உணவுப் பொருட்களை உட்கொள்வது, பீட்சா, பர்கர் போன்ற மேற்கத்திய உணவுகளை சாப்பிடுவது, ஆல்கஹால், புகை பழக்கம், சரியான நேரத்துக்கு உணவு உட்கொள்ளாமை, உடல்பருமன் போன்ற பல்வேறு காரணங்களால் மலச்சிக்கல் பிரச்னை ஏற்படுகிறது.

வயது ஏற ஏற, செரிமான மண்டலத்தின் செயல்திறன் குறையும். முதுமையில் உணவுமுறை மாறுவது, உடற்பயிற்சி குறைவது, தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காதது ஆகியவை மலச்சிக்கலுக்கு காரணமாகிவிடும். மூட்டுவலி, இடுப்புவலி உள்ள முதியவர்கள் அடிக்கடி மலம் கழிப்பதைத் தவிர்ப்பதால் அவர்களுக்கு மலச்சிக்கல் வருகிறது.

மலச்சிக்கல் நீங்க சில வழிகள்

பெண்கள் கர்ப்ப காலத்தில் மசக்கை காரணமாக அதிகம் தண்ணீர் குடிக்க மாட்டார்கள். இதனாலும், கருவில் வளரும் குழந்தை தாயின் குடலை அழுத்துவது, ஹார்மோன் மாற்றம், ஆசனவாய் சுருங்குதல் ஆகிய காரணங்களாலும் தற்காலிகமாக மலச்சிக்கல் உண்டாகலாம்.
காய்ச்சல், வாந்தி, பசிக் குறைவு போன்ற பொதுவான பிரச்னைகள் ஏற்படும்போதும், வெயிலில் அதிகம் அலையும்போதும் உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடும். மூலநோய், மூளைத் தண்டுவட நோய்கள், மன அழுத்தம், தூக்கமின்மை ஆகிய பாதிப்புகள் இருக்கும்போது மலச்சிக்கல் ஏற்படும்.
குழந்தைகளுக்குத் தாய்ப்பாலை நிறுத்திவிட்டு செயற்கைப் புட்டிப்பால் தரத்தொடங்கும்போது, மலச்சிக்கல் ஏற்படலாம். கழிப்பறையை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாத குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் மலச்சிக்கல் வரலாம்.

வயதுக்குத் தேவையான உடற்பயிற்சி இல்லாதது, முதுமையின் காரணமாகவோ, நோயின் காரணமாகவோ படுக்கையில் நீண்ட காலம் படுத்தே இருப்பது போன்றவையும் மலச்சிக்கலுக்குக் காரணங்களாக அமைவதுண்டு.

தீர்வு என்ன?
மலம் கழிப்பதில் சிரமம் என்பதற்காக, மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் மாத்திரைகளைச் சாப்பிடுவது சரியல்ல. இந்த செயல், பெருங்குடலில் உள்ள உணர்வு நரம்புகளை பாதிக்கும். பிறகு, சாதாரணமாக மலம் கழிப்பதும் சிரமமாகிவிடும். ‘எனிமா’ தர வேண்டிய அவசியம் ஏற்படும். அடிக்கடி `எனிமா’ தருவதும் நல்லதல்ல.

ஆரோக்கியமாக உள்ள ஒருவர் சரியான உணவு முறையைப் பின்பற்றி, தேவையான அளவுக்குத் தண்ணீர் குடித்து, தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். மலம் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு வந்ததுமே மலம் கழித்துவிடுகிற பழக்கத்தைப் பின்பற்றினாலே போதும்; தினமும் குறிப்பிட்ட நேரத்தில் மலம் கழிப்பது வழக்கமாகிவிடும்.

நாம் சாப்பிடும் உணவு வகைகளில் நார்ச்சத்து நிறைந்த பழுப்பு அல்லது சிவப்பு அரிசி, கோதுமை, கேழ்வரகு, தினை, வரகு, கொள்ளு போன்ற முழு மற்றும் சிறுதானியங்கள் மலச்சிக்கலை தவிர்க்க உதவும்.  

பச்சை நிற காய்கறிகள், வாழைத்தண்டு, பொட்டுக்கடலை, கொண்டைக்கடலை, மொச்சை போன்ற பருப்புகள், கீரைகள், ஆரஞ்சு, கொய்யா, மாதுளை, ஆப்பிள், அத்திப்பழம், பேரீச்சை, மாம்பழம் போன்ற பழங்களில் நார்ச்சத்து அதிகம். இவற்றை தினசரி உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

தினமும் இரண்டரை முதல் மூன்று லிட்டருக்குக் குறையாமல் தண்ணீர் குடிக்க வேண்டும். காலை எழுந்ததும் வெதுவெதுப்பான நீர் அருந்தலாம்.

மலச்சிக்கல் நீங்க சில வழிகள்

காபி, தேநீர், மென்பானங்கள் குடிப்பதை தவிர்த்து, இளநீர், பழச்சாறுகளை அதிகம் அருந்த வேண்டும். இனிப்பு வகைகளையும் கொழுப்பு உணவுகளையும் குறைத்துக்கொள்ள வேண்டும். விரைவு உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். இரவில் இரண்டு வாழை பழங்களைச் சாப்பிட வேண்டும்.

தினமும் நடைப்பயிற்சி செய்ய வேண்டியது மிக அவசியம். இயலாதவர்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய உடற்பயிற்சிகளைச் செய்யலாம்.  
மலம் கழிப்பதற்கென போதுமான நேரத்தை ஒதுக்க வேண்டியது மிகவும் முக்கியம்.

சில மருந்துகளை எடுத்துக்கொள்வதன் மூலமும் மலச்சிக்கல் ஏற்படலாம். உதாரணத்துக்கு இரும்புச்சத்து மாத்திரை எடுத்துக்கொண்டால் மலச்சிக்கல் ஏற்படும். இந்த சூழலில் மருத்துவரிடம் பேசி, மலச்சிக்கலை தவிர்ப்பதற்கான வழிமுறைகளைக் கேட்டறிந்து பின்பற்ற வேண்டும்.

- வி.மோ.பிரசன்ன வெங்கடேஷ்​