Published:Updated:

இதயத்துக்குள் ஒரு டாக்டர்!

உயிர் காக்கும் புதிய கருவி

இதயத்துக்குள் ஒரு டாக்டர்!

உயிர் காக்கும் புதிய கருவி

Published:Updated:
##~##

புற்று நோய்க்கு அடுத்தபடியாக அதிக அளவில் மரணங்கள் நிகழக் காரணமாக இருப்பது... அதிவேக இதயத்துடிப்பால் ஏற்படக்கூடிய அதிவேக மரணம்!

அதனால், இதயத்துடிப்பு பிரச்னை குறித்த தகவல் களை மக்களிடம் பரப்பும் வகையில், 'உலக இதயத் துடிப்பு வாரம்’ ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 6 முதல் 12 வரை கடைப் பிடிக்கப்படுகிறது. இதயப் பாதுகாப்பு மற்றும் இதயத்தைக் காக்கும் நவீன கருவிகள் குறித்து சென்னை அப்போலோ மருத்துவமனையின் கார்டியாக் எலெக்ட்ரோ ஃபிசியாலஜிஸ்ட் டாக்டர் கார்த்திகேசன் பேசுகிறார்.

''சராசரியாக மனித இதயம் ஒரு நிமிடத்துக்கு 60 முதல் 100 முறை துடிக்க வேண்டும். மனிதனின் செயல்பாடு, எண்ணத்தைப் பொறுத்து அது வித்தியாசப்படலாம். இதயத் துடிப்பு குறையும்போது அதை சீராக வைத்திருக்க, பேஸ்மேக்கர் கருவி பயன்படுத்தப்படுகிறது. இந்தக் கருவி, சின்ன தீப்பெட்டி அளவுக்கு இருக்கும். இதில் பேட்டரி, சிறிய எலெக்ட்ரானிக் சர்க்யூட், இதயத்தின் அறைகளுக்கு மின்சாரத்தைக் கொண்டுசெல்ல ஒயர்கள் போன்றவை இருக்கும். நோயாளிக்கு உணர்வு இழப்பு மருந்து கொடுத்து, சிறிய அறுவை சிகிச்சை செய்து, மார்புப் பகுதியில் ஒரு மணி நேரத்தில் இந்தக் கருவியைப் பொருத்துவோம். இதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாய் வழியாக, இந்த ஒயரை இதய அறைகளுக்குள் கொண்டுசென்று சிறிய ஸ்க்ரூ போட்டு முடுக்கிவிட்டால்... இதயத் துடிப்பு சீராகிவிடும்.

இதயத்துக்குள் ஒரு டாக்டர்!

பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டவர்கள், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்ய முடியாது. ஏனெனில், எம்.ஆர்.ஐ. ஸ்கேனில் இருந்து வரும் காந்த சக்தி பேஸ்மேக்கரில் பிரச்னையை ஏற்படுத்தலாம். இப்போது அந்தப்

இதயத்துக்குள் ஒரு டாக்டர்!

பிரச்னைக்குத் தீர்வாக, புதிய தொழில்நுட்பத்துடன் பேஸ்மேக்கர் வந்துள்ளது. இது, மனித செயல்பாட்டைக் கண்டறிந்து, அதற்கு ஏற்றாற்போல, இதயத் துடிப்பை சரிசெய்யும்.

சாதாரணமாக, இதயப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்படும், நெஞ்சில் நீர் கோத்துக் கொள்ளும். உடனே அவசர சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

இந்த நீர் கொஞ்சம் கொஞ்சமாகவே உடலில் சேரும் என்பதால், இந்த புதிய கருவி உடலில் அதிகமாக நீர் சேரும்போதே, எச்சரிக்கை செய்துவிடும். உடனே மருத்துவர்களை சந்தித்து சிகிச்சை எடுத்துக்கொண்டால், அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்ந்து பணம் செலவழிப்பதைத் தவிர்க்கலாம்.

சில நோயாளிகளுக்கு திடீரென்று எதிர்பாராத நேரத்தில் இதயத் துடிப்பு அதிகமாகி... சில மணி நேரங்களில் மரணம் ஏற்படலாம். இதை கார்டியாக் அரெஸ்ட் என்று கூறுவோம். மரபியல் ரீதியாக பிரச்னை உள்ளவர்களுக்கும், ஏற்கெனவே மாரடைப்பு வந்து இதயம் பலவீனம் ஆனவர்களுக்கும் இந்தப் பிரச்னை வர வாய்ப்பு உள்ளது. இவர்கள் முன்கூட்டியே மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, இம்பிளான்டபிள் கார்டியோவெர்டர் டெஃபிப்ரிலேட் டர் என்ற பிரத்யேகக் கருவியை பொருத்திக்கொள்வது நல்லது.

இந்தக் கருவியில் உயர் அழுத்த பேட்டரி இருக்கும். இதயத் துடிப்பு வழக்கத்துக்கு மாறாக அதிகரித்தால், சில நொடிகளில் அதைக் கண்டறிந்து இதயத்துக்கு ஷாக் கொடுத்து... மீண்டும் சகஜ நிலைக்குக் கொண்டுவரும். ஷாக் கொடுக்கும்போது கொஞ்சம் வலி இருக்கும் என்றாலும், உயிர் காப்பாற்றப் படும்.

தற்போது குறிப்பிட்ட கால இடைவெளியில், பேஸ்மேக்கர் பொருத்தப்பட்ட நோயாளிகள் மருத்துவரை சந்தித்து, பரிசோதித்துக்கொள்வது அவசியம். இப்போதைய புதிய கண்டுபிடிப்புகள் நடைமுறைக்கு வந்துவிட்டால், நோயாளிகள் மருத்துவமனைக்கு வரவேண்டிய அவசியம் இருக்காது. டாக்டர் மருத்துவமனையில் இருந்தபடி, வீட்டில் உள்ள நோயாளியின் பேஸ்மேக்கர் கருவியை, ரிமோட் மானிட்டர் மூலம் பரிசோதனை செய்து கண்காணிக்க முடியும். அரசு அனுமதி வழங்கியதும்... இந்த முறை நடைமுறைக்கு வந்துவிடும். அதேபோன்று ஒயர் ஜெனரேட்டர் எதுவும் இல்லாமல், நேரடியாக இதயத்திலேயே பொருத்தும் வகையில் சிப் போன்ற பேஸ் மேக்கர் கருவியும் நடைமுறைக்கு வர உள்ளது. இந்த சிப் நடைமுறைக்கு வந்துவிட்டால்... அறுவை சிகிச்சைகூட தேவைப்படாது!'' என்றார்.

இதயம் இனி எப்போதும் இனிதாகவே துடிக்கட்டும்!

- பா.பிரவீன்குமார், படம்: வீ.நாகமணி