
நான் ஆரோக்கியத்துடன் இருப்பதை எண்ணி மகிழ்கிறேன்... மருந்துகள் இல்லாத, நோய் இல்லாத நிலை என்பது ஒரு வரம்.. அதை நான் மகிழ்வுடன் ஏற்கிறேன்
ஹெச்.ஐ.வி வைரஸ் தொற்றால் ஏற்படும் கொடிய நோயை முழுமையாகத் தடுக்க இன்றுவரை தடுப்பூசிகளும் இல்லை, முழுமையாகக் குணப்படுத்த மருந்துகளும் இல்லை என்றுதான் இதுவரை நம்பப்பட்டு வந்தது. ஆனால் எந்தவொரு மருந்தும் இல்லாமல், சிகிச்சையும் இல்லாமல் ஹெச்ஐவி தொற்றிலிருந்து முழுமையாக குணமாகியுள்ளார் ஒரு பெண்மணி.
`இது எப்படி சாத்தியம்? யாரிந்தப் பெண்மணி? இவருக்கு இது குணமாகும் என்றால் எல்லோருக்கும் இதுபோல் மருந்தில்லாமல் குணமாக வேண்டும்தானே?’ என்று கேள்விகள் வரிசை கட்டி நிற்கின்றன.
முறையற்ற பாலுறவு, பரிசோதிக்கப்படாத ரத்தம், சுத்திகரிப்பு செய்யப்படாத ஊசிகள் மூலமாகவும், சிலசமயம் கருவுற்றிருக்கும் தாயிடமிருந்து சேய்க்கும் பரவும் ஹெச்.ஐ.வி வைரஸ், உள்ளே நுழைந்ததும் தம்மை வெள்ளை அணுக்களைப் போலவே உருமாற்றிக் கொள்வதுடன், தமக்கு உருவத்தைத் தந்த அந்த வெள்ளை அணுக்களையே அழிக்கத் தொடங்குகிறது. இதனால் உடலின் நோயெதிர்ப்பு சக்தி குறைகிறது. ஆரம்ப நாள்களில் காணப்படும் குளிர்காய்ச்சல், தொண்டை வலி, சோர்வு என்று தொடங்கும் ஹெச்.ஐ.வி அறிகுறிகள், உடலின் நோயெதிர்ப்புத் திறன் குறையும்போது, தொடர்ந்த காய்ச்சல், காரணமில்லாத சோர்வு, இரவு வியர்வை, தீராத இருமல், தொடர்ந்த வயிற்றுப்போக்கு, திடீர் எடையிழப்பு, நிணநீர் சுரப்பிகளின் வீக்கம், சருமத்தில் கரும்பிளவுகள், பிறப்புறுப்பில் புண்கள் போன்ற அறிகுறிகளுடன் நீண்டு, பின்னர் வைரஸ் ரிசர்வாயர் எனப்படும் கிடங்கிலிருந்து ஹெச்.ஐ.வி வைரஸ்கள் அவ்வப்போது வெளிப்பட்டு நோய் முற்றிய நிலையில் காசநோய், நிமோனியா, நுரையீரல், தோல் மற்றும் இரத்தப் புற்றுநோய்கள் போன்ற பல்வேறு சந்தர்ப்பவாத நோய்களை உருவாக்கி உயிரிழப்புக்குக் காரணமாகவும் மாறுகிறது.
எப்போதெல்லாம் நோயாளியின் உடல்நிலை மேம்படுகிறதோ, அப்போதெல்லாம் வைரஸ் வெளிவராமல், ஆரோக்கியம் குறையும்போது உடலே வைரஸ்களை உற்பத்தி செய்து தாக்குவதால்தான் இந்த நோய் வாழ்நாள் முழுவதும் குணப்படுத்த முடியாமல் நீடிக்கும் நோயாக உள்ளது. இந்தக் கொடிய நோயால் இதுவரை உலகளவில் இறந்தவர்களின் எண்ணிக்கை மூன்று கோடிக்கும் மேல் என்றால், சென்ற ஆண்டில் மட்டுமே எய்ட்ஸ்ஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஏழு லட்சம்.
எய்ட்ஸ் நோயை குணப்படுத்த முடியாவிட்டாலும், அதன் தாக்குதலைக் கட்டுப்படுத்த முடிகிறது என்பதுதான் இதில் நிம்மதியளிக்கும் செய்தி. இன்றும் உலகளவில் இந்த நோயுடன் இருப்பவர்களின் எண்ணிக்கை 3.7 கோடிக்கும் மேல். இவர்களில் குழந்தைகள் மட்டும் 20 லட்சம் என்றாலும், இவர்களில் 73% பேர் முறையாக ART (Anti Retroviral Therapy) எனப்படும் மருந்துகளை முறையாக உட்கொள்வதால், மரணங்கள் பாதியாகக் குறைந்துள்ளன. ஆனால் இந்த மருந்துகள், ஸ்லீப்பர் செல்களாக உறங்கும் ரிசர்வாயர் கிடங்கைக் கட்டுப்படுத்துவதில்லை.
அப்படியென்றால் ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இந்த நிலைதானா, காலம் முழுவதும் மருந்துகளுடன்தான் காலத்தைக் கடக்க வேண்டுமா, இயற்கை தந்த மனிதனின் நோயெதிர்ப்பாற்றல் இதில் சிறிதுகூட பலனளிக்காதா என்ற நமது கேள்விகளுக்கு நம்பிக்கையளிக்கின்றனர், `எலைட் குழுவினர்’ என்ற பிரிவினர்.
ஆம்... இந்த நோயாளிகளில் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவானவர்கள் உயர் நோயெதிர்ப்பு உடையவர்களாக இருப்பதை மருத்துவத்துறை கவனித்து, இவர்களை எலைட் குழுவினர் என்று வகைப்படுத்தியுள்ளது. இப்பிரிவினரின் மரபணுக்களில் உள்ள மாறுதல்களால், CD 8 என்ற மற்றொரு வகை வெள்ளை அணுக்கள் (Natural Killer Cells) உதவியுடன் இயற்கையாகவே இவர்களுக்கு ஸ்லீப்பர் செல்களின் உற்பத்தி தடுக்கப்பட, ஏ.ஆர்.டி மருந்துகளை உண்ணாமலேயே நோய் கட்டுப்பாட்டில் இருக்க உடலே இவர்களுக்கு உதவுகிறது. என்றாலும், இந்த எலைட் நோயாளிகளிடம் வைரஸ் கிடங்கு இருந்தபடி தான் உள்ளது என்பதால் மருந்துகள் உண்பதிலிருந்துதான் இவர்கள் தப்பிக்கிறார்களே தவிர நோயிடம் இருந்து அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த அறிவியல் முடிவுகளைக் கொண்டு, வைரஸ் கிடங்கை அழிக்கவும், சிடி 8 வெள்ளை அணுக்களை ஊக்குவிக்கவும் ஆராய்ச்சிகள் அனைத்தும் பயணித்துக்கொண்டிருக்கும் நிலையில்தான், புதியதொரு வெளிச்சமாக வந்துள்ளது “எஸ்பரேன்ஸா மனிதர்கள்..!”
பிரேசில் நாட்டின், எஸ்பரேன்ஸா நகரைச் சேர்ந்த ஒரு பெண்மணிக்கு 2013-ம் ஆண்டு, அவரது முப்பதாவது வயதில், ஹெச்.ஐ.வி தொற்று ஏற்பட்டு, இன்று எட்டு ஆண்டுகளுக்குப் பின், எந்தவொரு மருந்துமின்றி, முழுமையாக அவர் குணமடைந்துள்ளார்.
“நான் ஆரோக்கியத்துடன் இருப்பதை எண்ணி மகிழ்கிறேன்... மருந்துகள் இல்லாத, நோய் இல்லாத நிலை என்பது ஒரு வரம்.. அதை நான் மகிழ்வுடன் ஏற்கிறேன்” என்று கூறும் இந்த எஸ்பரேன்ஸா பெண்மணி உண்மையில் உலகில் ஹெச்.ஐ.வியிலிருந்து இயற்கையிலேயே குணமடைந்த இரண்டாவது பெண். ஏற்கெனவே, கலிபோர்னியாவைச் சேர்ந்த லோரீன் வில்லன்பெர்க் என்ற பெண்மணி 1992-ம் ஆண்டு இதேபோல ஹெச்.ஐ.வி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை எதுவுமின்றி, 2020-ல் முழுமையாக குணமடைந்ததாக அடையாளம் காணப்பட்டார். இவர்கள் இருவருக்கும் நிகழ்ந்தது, ‘sterilizing cure’, அதாவது இயற்கை தந்த நோயெதிர்ப்புத் திறன் காரணமாக முழுமையானதொரு நோயற்ற நிலை. முன்னர் சொல்லப்பட்ட எலைட் குழுவினருக்கும் ஒருபடி மேலே உள்ள இந்த இரு எஸ்பரேன்ஸா பெண்கள், உண்மையில் ஹெச்.ஐ.வி கட்டுப்பாட்டில் இன்னும் பல ஆராய்ச்சிக் கதவுகளைத் திறந்துள்ளனர்.
“எஸ்பரேன்ஸா” என்றால் ஸ்பானிஷ் மொழியில் நம்பிக்கை என்ற பொருளாம். உண்மையில் இந்த எஸ்பரேன்ஸா மனிதர்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்களுக்கும் இப்போது பெரும் நம்பிக்கையைத் தந்திருக்கிறார்கள்.